Skip to main content

பூமராங்

ந்த லா ஆஃப் அட்ராக்ஷன், Law of attaction என்று ஒன்று உண்டு. 2006 இல் "தி ஸீக்ரெட்" என்னும் பெயரில் வந்து பெரும் ஹிட் அடித்த ஒரு ஆவணப் படம்.  இதற்கான தோற்றம் என்று பார்த்தால், அப்படம் வெளியான ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அதற்கான ஆதார கச்சாப் பொருள் விவேகானந்தர் மூலம் அமெரிக்கா சென்றடைந்துவிட்டது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த அரை நூற்றாண்டுகள், போர், பஞ்சம் மற்றும் பட்டினி. அதில் சாமானிய மனிதர்களுக்கு புத்தகங்கள் மற்றும் வாசிப்பு என்பது இன்றைய மதிப்பின் அடிப்படையில் ஃபீனிக்ஸ் மாலில் செக்யூரிட்டி வேலையில் இருந்துகொண்டு தீபாவளி போனஸில் லேண்ட் ரோவர் கார் வாங்க ஆசைப்படுவது போன்றது. அதனால் இது போன்ற புத்தகங்கள் நூலகங்களின் ஏதோ ஒரு மூலையில் சீந்துவாறற்று உறங்கிக்கொண்டிருந்தன. 

ஐம்பதுகளில் அறுபதுகளிலும் உலகம் முழுக்க புது வசந்தம் பிறக்க ஆரம்பித்துவிட்டது. பழைய போர்கள் முடிவுற்றன, அதிகாரத்தின் ருசி கண்ட பூனைகள் புதிய  போர்களைத் தொடங்கின . புதுப்புது சிந்தனைகளும், பெண்ணியமும் (மேற்கில், குறிப்பாக அமெரிக்காவில்),  கட்டற்ற சுதந்திரம், தரித்திரத்திற்கு எதிரான போராட்டம் என்று நூற்றாண்டுகள் அடக்கி வைக்கப்பட்ட  அனைத்து கருத்தியல்களும் பீறிட்டு எழ ஆரம்பித்தன. அதே காலகட்டத்தில்தான் இந்த சுய உதவிப் புத்தகங்கள் மினாக்ஸிடில் பட்ட சொட்டைத்தலை போல் முளைக்கத்தொடங்கின. தொழில் வளர்ச்சி ஒரு பக்கம் மேலோங்கி இருபதுகளின் தாரித்திரியம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிட்டத் தொடங்கியது. அதே சமயம் அச்சு ஊடகம் அசுர  வளர்ச்சி அடைந்து வாசிப்பு என்பது அனைவருக்கும் எளிதானது. வாசிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றானது. புத்தகங்கள் மில்லியன் கணக்கில் விற்றன. சுற்றுலாத்தலங்களில், கடற்கரைகளில், பூங்காக்களில், ஓய்வறைகளில், பேருந்துகளில், இரயில்களில் என்று எங்கு பார்த்தாலும் சாமானிய மனிதர்கள் கையில் புத்தகங்கள் தவழ்ந்தன. சமையல், விளையாட்டு, தோட்டக்கலை, குழந்தை வளர்ப்பு என்று எதைப் பற்றிய புத்தகம் வந்தாலும் குறைந்தது ஒரு லட்சம் பிரதிகள் விற்றன. குறைந்த விலைப்பதிப்பு, இரண்டாம் கை, மூன்றாம் கை என்று கைகள் மாறினாலும் புத்தகங்கள் சாமானியர்கள் கைகளில் எட்டியது மட்டுமின்றி, வாசிப்பு என்பது இன்று ஸ்மார்ட் போன்கள் போன்று அனைவருக்கும் வாய்த்த ஒன்றாகி இருந்தது. 

அங்குதான் இப்பிரச்சனை தோன்றியது. எல்லா தலைப்பிலும் புத்தகங்கள் வெளியாகி  வாசித்து வாசித்து அலுத்துப் போய்விட்டது இனிமேல் புதிதாக ஏதாவது சரக்கு வேண்டும். வாசிப்பவனுக்கு ஏதாவது அதில் லாபம் வேண்டும் என்று வருகிறபோது, பங்குச்சந்தை பற்றிய புத்தகங்கள் வந்தன. ஆனால் பல மோடு முட்டிகள் அதன் அபாயம் தெரியாமல், குந்தாங்குறையாக அதில் இறங்கி, கை, கால், மூஞ்சி, முகரை, முதற்கொண்டு சாமான் வரை அனைத்தையும் சுட்டுக்கொண்டு உள்ளதையும் இழந்தவர்கள்தான் ஏராளம். சரி வேறு என்னதான் செய்யலாம் என்றபோதுதான், சுய முன்னேற்றப் புத்தகங்கள் தலை தூக்கத் தொடங்கின. நெப்போலியன் ஹில் நார்மன் வின்சென்ட் போன்றவர்களின் புத்தகங்கள் சக்கை போடு போட,  அதே உத்தியைப் பின்பற்றி, குப்பைகள் பல வெளி வரத்தொடங்கின. இது போன்ற புத்தகங்கள் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கோலோய்ச்சின. இந்த Rich dad poor dad வகையறா புத்தகங்களும் இதில் அடக்கம். இந்த லா ஆஃப் அட்டாக்ஷன் புத்தகங்களும் இது தவிர்த்த புத்தகங்களும்  வெவ்வேறு வகைப் புத்தகங்களாகத் தோன்றினாலும் இவை இணையும் புள்ளி என்பது பெரும்பாலும் ஒன்றுதான். மைண்ட் செட் பற்றியது அது. 

இதன் தொடர்ச்சிதான் மேற்குறிப்பிட்ட 2006 இல் வெளிவந்த தி சீக்ரெட் ஆவணப்படம். புத்தகக்காலம் முடிந்து கணினிக் காலம் தொடங்கியதால் வந்ததன் விளைவு. அது அக்காலத்திய யூ ட்யூப் அல்லது  நெட்ஃப்பிளிக்ஸுக்கு இணையான புரட்சியான DVDயில் பதியப்பட்டு, அதன் மலிவு விலைப்பதிவுகள் கை மாறின. அதே சமயம் அது புதிய ஒரு பிழைப்பு நடத்துவதற்கான கடையைத் திறப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டது. அஃது யாதென்றால், இப்போது இந்தியாவுக்குள், தமிழ், தெலுங்கு , மலையாளம், ஒடிசா, போஜ்பூரி, அஸ்ஸாமிஸ், பஞ்சாபி என்று வகை தொகையில்லாமல், இயற்கையின் ஈர்ப்பு சக்தி, பிரபஞ்சத்தின் பேராற்றல், போன்ற பெயர்களில் கடை திறந்து, அவற்றில் ஆட்கள் சேர்த்துக்கொண்டும், பெரிய பெரிய டாலர் கட்டுக்கள் போட்ட போஸ்டர்களை விற்றுக்கொண்டும், இந்த எல்லையில்லா பேரண்டத்தில் எப்படி உங்களைக் கோடீஸ்வரனாக்கும் ஆக்குவதற்கான ஆற்றல் பொதிந்திருக்கிறது என்று மிஷனரி வேகத்தில் பரப்ப இன்று அது மூன்றாம் உலக நாடுகளிலும் காட்டுத்தீ போல் பரவி இன்றைக்கு அநேகர் வீட்டில் கட்டுக்கட்டாக, பேல் பேலாக அடுக்கி ரப்பர் பேண்ட் போடப்பட்ட அமெரிக்க டாலர்கள் போஸ்டர் இல்லாத வீடுகளே இல்லை என்றாகிவிட்டது. 2006 வாக்கில்  அப்படம் வந்த புதிதில் சீக்ரெட்டாக இருந்தது இப்போது worst kept secret ஆகிவிட்டது. ஆனாலும் துண்டு துக்கடா குழுக்கள் மற்றும்  இயக்கங்கள் பல்வேறு பெயர்களுடன் படு மும்மரமாக இயங்கி வருகின்றன. இதில் NLP யும் அடக்கம் (AI இல் வரும் Natural Language Processing அல்ல), இது வேறு ஒரு போலி அறிவியல், Neuro Linguistic Programming என்று அழைக்கிறார்கள். இதற்கு இலவசத்திலிருந்து ஆயிரக்கணக்கான டாலர்கள், லட்சக்கணக்கான ரூபாய்கள் வாங்கிக்கொண்டும் சொல்லிக்கொடுப்பார்கள். Joe Dispenza வின் ரெட்ரீட்டுக்கான கட்டணம் தலைக்கு பத்தாயிரம் டாலர்கள். கூட்டம் எப்போதும் அலை மோதும். என்ன சொல்லிக்கொடுப்பார்கள் என்றால் Manifestation. இதற்கு இணையான தமிழ்வார்த்தை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதாவது நீங்கள் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தாலும் கோடீஸ்வரன் என்று நீங்கள் நம்பவேண்டும், உளமார உறுதியாக, கேள்வியே கேட்காமல், சந்தேகமே படாமல் நம்ப வேண்டும். நூற்றில் ஒருவருக்கு அதிர்ஷ்ட்டம் அடித்து அவர் கோடீஸ்வரன் ஆகிவிட்டால் அவர் சரியாக manifestation செய்திருக்கிறார் என்று சொல்வார்கள். இதன் ஆபத்தே, நீங்களும் வருடக்கணக்கில்  manifest செய்கிறீர்கள் ஆனால் உங்களுக்கு ஒன்றுமே நடக்கவில்லையென்றால் அதற்கு நீங்கள்தான் காரணம், உங்களது எதிர்மறை சிந்தனைதான் காரணம் என்று குற்ற உணர்ச்சிக்குத் தள்ளிவிட்டுவிடுவார்கள். உங்களது தோல்விக்கு நீங்கள் மட்டுமே காரணம் மற்றும் பொறுப்பு என்று ஆழமாக நம்ப வைத்துவிடுவார்கள். இது போன்ற உத்திகள் ஓரளவு நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதற்கு உதவுவது வரை சரி. ஒன்றும் பழுதில்லை. அதே போல் அன்பு, நன்றியுணர்வு மற்றும் ஈகை போன்றவற்றையும் பல குழுக்களில் அவற்றின் குறிக்கோளாக வலியுறுத்துகின்றன. இனி வருவதுதான் மிக முக்கியம். இவையெல்லாம் மேற்கு நாடுகளில் யாரோ ஒரு வெள்ளைக்கார அறிஞர் தவமிருந்தது கண்டுபிடிக்கவில்லை. இங்கிருந்து சென்றதுதான். எப்படி என்று கேட்கலாம். அத்வைத வேதாந்தத்தின் வழி என்பதுதான் பதில். இந்தியாவில் எத்தனையோ அத்வைத வேத தத்துவ மரபிலிருந்து வந்த ஆனந்தாக்கள், அதன் தத்துவங்கள் கொஞ்சம் மேற்குலகையும் எட்டிபார்க்க வைப்பதற்காக லேசாக இயேசுவை ஏற்றுக்கொள்வதாகவும் , கிருத்துவத்தில் கூறுகள் வேதாந்தத்தில் இருப்பதாகவும் உருட்ட ஆரம்பித்து, இன்றைக்கு அது பேளூர் ராமகிருஷ்ண மடத்தில் வருடா வருடம் ஏசுவுக்கு கிருஸ்துமஸ் விழா எடுக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. நல்ல வேலை சங்கர மடம் வரை இந்த நோய் பரவவில்லை. அனால் பிரச்சனை அது இல்லை, இப்போது எப்படி சமஸ்க்ருதம் பாரசீகம் சென்று பார்ஸியாகத் திரிந்து திரும்ப இந்தியாவுக்குள் உருதுவாகத் திரும்பி வந்ததோ அதே போல், வேதாந்தத்தின் கூறுகள் சிலவற்றை அரைகுறையாகத் திரித்து அதை ரீ பேக்கேஜிங் செய்து, புதிய ஏற்பாட்டிலிருந்து சில கூறுகளை உருவி, கருவாட்டு சாம்பார் போல் லா ஆஃப் அட்ராக்ஷன், NLP என்று உருட்டுகிறார்கள். நான் ஒரு Agnostic என்பதால், இது பற்றி பெரிதாக நம்பிக்கையோ, அல்லது முரட்டுத்தனமான எதிர்ப்பு நிலையோ இல்லை. அக்னாஸ்டிக்குளுக்கு இறை நம்பிக்கை வரும் போகும், சில சமயங்களில் நம்பிக்கையற்றுப் போகும். பிறகு ரகசியமாக எதையாவது நம்புவார்கள். ஏதோ நல்லது நடந்தால் சரிதான் என்னும் வகையில் சரி. உண்மையில் நான் மேற்கூறிய தன்நம்பிக்கைக்குப் பாதகமாக செயல்படும் சாத்தியக்கூறு ஒன்றைத் தவிர, வேறு பிரச்சனைகள் இல்லை என்று தோன்றும். சில குழுக்கள் பத்தில் ஒரு பாகம் தானம் செய்யவேண்டும் என்றெல்லாம் வலியுறுத்துகிறார்கள் (கவனிக்க, இதுவும் கிறித்துவத்திலிருந்து tithe எனும் தசமபாகத்திலிருந்து வருகிறது. அங்கு சபைகளுக்குக் கொடுக்கவேண்டும், இங்கு தேவைப்படுபவர்களுக்கு). இதுவும் நல்லதுதானே? இப்போதுதான்  பிராதன பிரச்சனைக்கே வருகிறேன். இங்குதான் வேதங்கள், உபநிஷத்துக்கள், கீதை. இவை எல்லாவற்றுக்கும் மேல், ஈகைக்கென்றே திருக்குறளில் ஒரு தனி அதிகாரமே இருக்கிறதே?  யோகா, த்யானம்  உட்பட எல்லாவற்றையுமே நாம் அமெரிக்காவிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டுமா?  ஈகை உட்பட மற்ற நற்குணங்களையுமா? நம்மிடம் ஒன்றுமே இல்லையா? அட கர்மா? வள்ளலார்? அதுகூட அங்கு சென்று Karma is a bitch என்று நமக்கே பாடம் எடுக்கிறார்களே அது கூட தெரியவில்லையா

எல்லோரும் எதற்காகவோ பயந்துகொண்டோ அல்லது எதிர்ப்பலனை முன்னிட்டோதான் கோவில் கோசாலையில் உள்ள பசுவுக்குக்கூட ஒரு கட்டு புல் ஊட்ட வேண்டுமா? சேர்த்த பணம் போதாதது ஆனால் அது  நம் வாரிசுகளுக்கும் அதன் வாரிசுகளுக்கும்  விரையமில்லாமல் நூறு சதவிகிதம் போய்ச்சேரவேண்டுமென்றால் அதற்குப் கொஞ்சம் புண்ணியமும் சேர்க்கவேண்டும். 

இதோ வந்துவிட்டேன்! உங்கள் யாருக்குமே மனம் வருந்தவில்லையா?  உங்களுக்கெல்லாம் என்னை ஒரு வார்த்தை கேட்கத்தோன்றவில்லையா? நான் ஸ்கூல், டிப்ளமா, யுஜி, ப்பீஜி என்று இல்லாத குழுக்களே இல்லை. ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது நூறு பேர் என்றாலும், அதில் ஆகக்குறைந்தது அறுபது பேருக்கு என்னைத் தெரிந்திருக்கும். அவைகள் ஒவ்வொன்றிலும் தனிப்பட்ட முறையில் என்னைத் தெரிந்தது ஒவ்வொன்றிலும் குறைந்தது பகுதி பேர். நண்பர்களே, தோழர்களே, நான் Crowd Funding என் வயிற்றுப்பிழைப்புக்காகவா தொடங்கினேன்? இந்த ஃபண்ட் ரைஸர் வேறு வழியே இல்லாமல்தான் நானும் என் சகோதரனும் சேர்ந்து தொடங்கினோம். இதை  ஒன்றும் உடனடியாக அதிரடியாகத் தொடங்கிவிடவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக வாரா வாரம் ரத்தம், வாராவாரம் பிளாஸ்மா. மாதாமாதம்  சோதனைகள், தினசரி ஆயிரக்கணக்கில் மருந்து.  கணக்கு? கணக்கே இல்லை.  Bottomless Pit என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். செலவு செய்து மாளவே மாளாது. சொந்தத் தாய்க்கு அதுவும் நோயுற்ற தாய்க்கு அது பொருந்தவே பொருந்தாது.  ஆனால் அதற்குத்தகுந்த பொருளாதாரம் வேண்டுமே? என் உடன் பிறந்தானுக்கு இன்றைக்கு அகவை நாற்பது. தாயின் வலிப்பு நோயின் இன்றைய வயது நாற்பது. வலிப்பு நோய்க்கான நாற்பது வருடப்  பழைய மருந்து, முப்பது வருட பழைய மருந்து, போன்றவற்றை உட்கொண்டு  ஒருவர் உயிரோடு இருக்கவே வாய்ப்பில்லை. கடந்த ஒரு தசாப்தத்தில், கண்ட கண்ட பயல்களிடம் எமோஷனலாக ஏமாந்த தொகை மட்டும் இன்று இருந்திருந்திருந்தால், நான் க்ரெளவுட் பண்ட் பற்றியே சிந்தித்திருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது.  

கடந்த நான்கு  வருடங்களில் மூன்று முறை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. ஒவ்வொரு முறையும் தீவிர சிகிச்சைப்பிரிவில் பத்து நாட்கள் வைத்திருந்துவிட்டு, வெளியே சில வாரங்கள் வைத்திருந்தார்கள். பெரும் பெரும் தொகைகளைக் கட்டச்சொன்னார்கள். காப்பீட்டில் பகுதிக்கும் கீழ்தான் பணம் கொடுத்தான். மற்றவற்றைத் தட்டிக் கழித்தான்.  இங்கு நான் இந்திய காலை நேரத்துக்கு விழித்திருந்து, மணிக்கணக்கில் தொலை பேசியில் பேசி, போராடிப் போராடி, பல ஓரியாட்டங்களுக்குப் பிறகு கொஞ்சம் இறங்கி வந்து  ஒரு ஐந்து லட்சம் கொடுக்காமல் தள்ளுபடி செய்திருந்தால், அதில் ஐம்பதினாயிரம் திருப்பினான் காப்பீட்டுக்காரன். நள்ளிரவில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவன் புதிது புதிதாய் தொலைபேசியில் தோன்றி ஒன்றுமே தெரியாதது போல் கேட்பான்,  நான் முதலிலிருந்து தொடங்கி ஒவ்வொன்றாக பொறுமையாக விளக்கவேண்டும். நித்திரை போயிற்று, நிம்மதி என்பதெல்லாம் நான் வாழ்க்கையில் ஒருபோதும் கண்டே இலேன் ஆகையினால் அது பற்றிய   பேச்சுக்கே இங்கு வேலையில்லை.    

அந்த ஐந்துலட்சத்தின் பத்தில் ஒரு பங்கு ஐம்பதினாயிரத்துக்கான விலை மூன்று மாதங்கள் உறக்கமின்மை, மன உளைச்சல், சதா சர்வகாலமும் இதுவே  மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கும். வேலைப்பளுவிற்கு நடுவில் இதையும் பாரம் சுமக்கவேண்டும். மனம் சித்தரவதைப்பட்டால், உடல் யாரையும் கேட்காமல் தானாக நலிவுப்பாதையில் அடியெடுத்து வைப்பதுடன், அது எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்பதே தெரியாமலும் பார்த்துக்கொண்டு சதி செய்யும். செய்தது, செய்துகொண்டிருக்கிறது. 

ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்தாற்போல் மருத்துவர்கள் அவ்வளவுதான் இனி முடிந்தது என்று 24 மணி நேரங்கள் நேரம் குறித்தார்கள். ஒவ்வொரு முறையும் போராடி உயிர் மீண்டு வந்து எமனையும், மருத்துவனையும் ஒரு சேர ஏமாற்றினாள். 

ஒவ்வொரு முறையும் மருத்துவர்கள் -

"இது தேறாது அவ்வளவுதா', எதுக்கு வேஸ்ட்டா செலவு பண்ணீட்டு? அப்டியே வீட்டுக்கு எடுத்துட்டு போங்க நிம்மதியா மூச்சுத்  தெனறி போய்ச்சேரட்டும்" என்றார்கள்.  அய்யா மருத்துவர் மாரே, உங்களுக்கு வேண்டுமானால் இது பத்தோட ஒன்னு பதினொன்று. இருந்தால் கேஸ், செத்தால் பிணம். ஆனால் எங்களுக்கு அவள் தாய் அல்லவா? இதே நாட்டில்தானே தாய் செண்டிமெண்ட் தாலி செண்டிமெண்டுக்கெல்லாம்  திரைப்படங்கள் நூறு நாட்கள், இருநூறு நாட்கள் ஓடின? ஒன்றா வெறி நாய்களுக்கெல்லாம் முரட்டுத்தனமாக வக்காலத்து வாங்குகிறீர்கள்? குழந்தைகள் குதறப்பட்டு செத்தாலும் பரவாயில்லை, வெறி நாய்கள் காக்கப்படவேண்டும் என்று கூக்குரலிடுகிறீர்கள். அல்லது நாய்களை உலக்கையால் அடித்துக் கொன்றுவிடவேண்டும் என்கிறீர்கள்? உங்களுக்கெல்லாம் வைத்தால் குடுமி, அல்லது சிறைத்தால் மொட்டையா?  தயை, பச்சாதாபம் இதெல்லாம் இவ்வுலகில் இல்லவே இல்லையா? ஒரு தாயின் மதிப்பு அவ்வளவுதானா? சரி உங்கள் உலகம் அப்படி. நோயாளிகளை வெறும் நோய்க்கூறுகளைக் கொண்டிருக்கும் ஒரு  ஜடப்பொருளாகப் பார்க்கக் கற்பிக்கப்பட்டிருக்கலாம்.  

ஆனாலும் மருத்துவர்களை ஒரு விஷயத்தில் மெச்சத்தான் வேண்டும். தாய்க்கு இருப்பவை சாதாரண நோய்க் கூறுகளா? அனைத்தும் அம்பானி அதானி குடும்பத்தில் கூட வராத, அஜீத், விஜய் குடும்பத்தில் கூட வராத வியாதிகள்.

Myasthenia Gravis

Encephalopathy

Langerhans cell histiocytosis

இது தவிர்த்த மேலும் அரை டஜன் Co Morbidity க்கள்.

மேற்சொன்னவை  கடந்த ஐந்து வருடங்களில் என்றால், நான் பூமியில் கால் வைத்த நாள் முதல் Epilepsy. ஒரு நாள் விடாமல் Seizure அட்டாக். வலிப்பு வந்து மாடிப்படியிலிருந்து இடறி விழுந்து, மண்டையில் கட்டுப் போட்டுக்கொண்டு மருத்துவமனை. வலிப்பு வந்து, மண்டை குழம்பிப்போய், வலிப்பு மருந்து அட்டையிலிருக்கும் பத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் விழுங்கி, தனியார் மருத்துவமனையில் இது தற்கொலை கேஸ் என்று சொல்லி விரட்டிவிட, தர்மாஸ்பத்திரியில் விடிய விடிய வாயில் ட்யூப் போட்டு குடல்வரை விட்டு, மோட்டார் போட்டு உறிஞ்சி எடுத்தார்கள். நல்லவேளை தெய்வம் பக்கத்துவீட்டுக்காரர் கம்பவுண்டர் உருவில் வந்து அதே தர்மாஸ்பத்திரியில்  நைட் ட்யூட்டியில் இருந்து காப்பாற்றியது. அவர் பெயர் ராமதாஸ்.  இது நடந்தது 1995 இல். அவர் குடும்பம் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். 

ஒரு முறை நெய் காய்ச்சுகிறேன் பேர்வழி என்று வலிப்பு வந்து, எந்த ஆதாரமும் இல்லாமல் கொதிக்கும் நெய்ச் சட்டியில் விழுந்து மார்பு முழுதும் வெந்து கருகியது. சட்டியில் நெய் கொதித்துக்கொண்டிருக்க , இவள் வலிப்பு வந்து அப்படியே  குப்புற விழுந்து நெய்யோடு அக்கினியுடன் ஜுவாலையையும் மார்போடு தழுவிக்கொண்டு, தனங்கள் வெந்தாள். பூர்வ புண்ணியஸ்தானம் வலுவாக இருந்திருக்க வேண்டும், அதன் காரணமாக கண்கள் மட்டும் எப்படியோ தப்பிவிட்டன. நெய்யில் உயிருள்ள தசையும் தோலும் வெந்து கருகிய வாடை, வாரக்கணக்கில் அவ்வீட்டைச் சுற்றியது. அது இன்னும் என் நினைவில் நாறுகிறது. தெய்வாதீனமாக இது நடந்த ஓரிரு நிமிடங்களுக்குள் பள்ளியிலிருந்து நடந்து வந்தவன் அலறித்துடித்து, இழுத்துக் கிடத்திக்  காப்பாற்றினேன்.  இல்லையென்றால், யக்ஞ நெய்யில் எரியும் அக்கினியில் சாம்பலாகும் அவிசைப்போல் அவிந்து பற்பமாகியிருப்பாள். அந்த ஓட்டு வீட்டில் சமையல் அறையே தாழ்வாக இருக்கும், அதிலும் எரிவாயு அடுப்பு வைத்திருக்கும் இடம் இன்னும் சரிந்திருக்கும். சிறுவர்கள் நாங்களே குனிந்து, கூன் போட்டுக்கொண்டேதான் சமைப்போம். ஒருவேளை வலிப்பின்போது வாயில் ஒழுகும் ஸலவா நெய்யிலும் நெருப்பிலும் விழுந்திருந்தால், அது அணைந்து வீடு முழுவதும் எரிவாயு பரவி வெடித்து, மொத்த வீடுமே தரை மட்டமாகியிருக்கும். நான் இன்று இதை எழுதிக்கொண்டிருந்திருக்க மாட்டேன். அரை பாதி வெந்தவளை பதறி ஓடி  மருத்துவ மனையில் அனுமதி - இது 92 இல். ஒன்றா இரண்டா? இப்படி எத்தனையோ நூற்றுக்கணக்கான கெடுநிகழ்வுகள். கொஞ்சம் தேறி வந்தவள் உடலின் பகுதி வெந்த கொப்புளங்களுடன் வலிப்பும் சேர்ந்துகொள்ள, புழு போல் துடிதுடித்தாள். ஆகா அது காணக் கண்கொள்ளா காட்சி, ஒவ்வொரு தவப்புதல்வனும் தான் பெற்ற  தாயைக்காண வேண்டிய திருக்கோலம்! இறைவா, என்னவொரு கருணை இறைவா உனக்கு?  

இப்படி ஒரு நிலையில் இருந்தவளைத்தான் ஒரு வலிப்பு நோய் நிபுணர், மரணப்படுக்கையில், நுரையீரல் கட்டி அகற்றிய நிலையில் வலிப்பில் துடித்தவளை, தேர்ந்த நிபுணத்துவத்தால் 40 ஆண்டு கால மரண அவஸ்தையை,  நிறுத்தினார். வாழ்வின் முதன் முறை வலிப்பில்லாமல் ஒரு நாள்!  தெய்வம் அவர்! 

இத்தனை துன்பங்களை, சித்தரவதைகளை எந்தக்காரண  காரியமும் இல்லாமல், தானும் அனுபவித்து, தன்னைச் சார்ந்தவர்களுக்கும் துயரத்தை மட்டுமே அளித்தவள், ஏதோ ஒரு காரணத்திற்காக அவள் உடலில் உயிரும் ஒட்டியிருக்கிறது. அவளது ஆன்மா கேவுகிறது, அது என்னை அனுதினமும் உறக்கமில்லாமல் ஆக்குகிறது. அவளது உயிர் ஈசன் தவிர, பெருமாள் தவிர வேறொருவன் கையில் இல்லை.  இனி தேறாது, தூக்கிபோடுங்கள் என்று சொல்வதற்கு நீங்கள் யாரடா வேசையின் மகவுகளா?  

நான் மற்றும் என் குடும்பத்தினர்  ஓய்ந்துவிட்டோம். பணம் சேர்க்கவில்லை, சொத்து சேர்க்கவில்லை. உள்ளதெல்லாம் விற்றாயிற்று, ஏதோ நான்கைந்து நட்டாமுட்டி நகைகள் - என்றோ விற்றாயிற்று , பெயரளவில் உள்ள பாழடைந்த புராதான வீட்டை  ஊர் கவுண்டனுக்கு (உண்மையில் வேற்றூர் கவுண்டனுக்கு) என்று விற்றாயிற்று. கட்டிய கோவணம் மட்டுமே மீதி. பார்ப்பன பிச்சைக்காரர்களுக்கு கட்டிய கோவணமே கூடமிகுதி. என்னதான் புரண்டு புரண்டு சொத்து சேர்த்தாலும் பார்ப்பானுக்கு ஒட்டுகோவணமும் மிஞ்சாது. ஏன்? ஏனென்றால் நீ கர்மவினை தீர்க்க வேண்டும், பிச்சை எடுத்து, பிச்சை எடுத்து சரஸ்வதியின் சரணைத்தான் பற்ற வேண்டும். ஆனால் உன்னைச் சார்ந்தவர்களோ  லக்ஷ்மி கடாக்ஷம் வேண்டி நெய் தீபம் ஏற்றுகிறார்கள். கோவில் கோவிலாகப் போய் விழுந்து புரள்கிறார்கள். பிராமணர்களில் பல்வகை உண்டென்றாலும், அடேய் என் குலப் பார்பான்களா,  உறவினன்களா, உனக்கு அருளப்படும் அதிக பட்ச லக்ஷ்மீ  கடாட்ஷம் என்பதே  அறிவாற்றல் மிக்க சந்தானம்  மட்டும்தான் என்பதை உணர மறுக்கிறாயே? ப்ரம்மத்தையும், இறைவனையும் தனக்குள் தேடவேண்டும், தன்னிலும் தன்னைப்போல் உள்ள சக உயிர்களிடத்திலுமே உள் உறைகிறது பரப்பிரம்மம். இது நம் மரபல்லவா? உனக்குள் இருப்பதோ ஈனத்தனமான தற்பெருமையும், சுயநலமும், இழிகுணமும். இவற்றை வைத்துக்கொண்டிருந்தால், உன்னிடம் எத்தனை கோடிகள் இருந்தால் என்ன? இன்னும் எத்தனை நாள்?  

இக்கேடுகளை நீ களைந்தெறியும்வரை, எங்களுக்கேதடா உய்வும், நிம்மதியும்? நீ அறியாமையில் உழல்வதற்கு நாங்கள் வட்டியுடன் சேர்த்து வாதையையும் துன்பத்தையும் துயரத்தையும்  அனுபவிக்கவேண்டுமா? நான் சொல்வதை கவனமாகக்கேள், இது ஒரு மாயை, ஒரு சுழல், இன்று நீ நாளை நான் என்ற எண்ணம் கொள் . நீயும் நானும் ஒன்று. இன்று எனக்கு, அதாவது என் தாயின் ஆன்மா, என் ஆன்மா எங்கள் குடும்பத்தினரின் ஆன்மா பரிதவிக்கிறது. நினைவில் கொள் -  நீயும் நானும் ஒரே மரபு வழியினர்/ மரபுச் சங்கிலியினர். பத்து தலைமுறைகள் முன்பு பத்துத் தலைமுறைகள் முன்பு நீ எல்லாம் பஞ்சப் பாராரி. தற்போது லட்சுமி தேவி உன் மீது ஸ்வர்ண மழை பொழிகிறாள். ஒரு தமிழின் மூத்த எழுத்தாளர் நங்கநல்லூர் என்பது பிராமணர்கள் வாழும் பாழூர் என்று எழுதினார். நங்கநல்லூர் என்பது ஒரு குறியீடு. நீ நங்கநல்லூரில்தான் இல்லை,  ஆனால் உலகெங்கும் பரவிக்கிடக்கிறாய். பணம் இருக்கிறது கோடிக்கணக்கில். ஆனால் மனம்?  உனக்கு சாகக்கிடப்பவள் பற்றிய அக்கறை இல்லை, உன் விசாரிப்புகளில் உள்ளது அக்கறை இல்லை, விஷம் மற்றும் ஆணவம் என்பது எனக்குத் தெரியாதா? அவற்றில் முதல் விஷம் நாளைக்கு ஒரு பேச்சு வந்துவிடும் என்பது. இன்னொன்று, நான் செய்தேன், நீ செய்தாயோ? அவன் செய்தானா? யார் செய்யவேண்டும்?  நீ செய்திருக்க வேண்டும், எவர் செய்திருக்கவேண்டும். போன்ற சட்டாம்பிள்ளைத்தனங்கள் மற்றும் பஞ்சாயத்து செய்யும் வெறி. அவள் என் தாயடா,  நீங்களெல்லாம் யாரடா அற்பப் பிறவிகளா?   

என் இளையோன் கேட்டான். ஏன்டா அண்ணா,  நான் உன்னிலும் எத்தனை  இளையவன்? எங்கள் தலைமுறை நண்பன் கூட, நான் வேலை இல்லாமல் கஷ்டத்தில் இருந்தபோது, அவன் வேலைக்குப் போகும்  முன் கொஞ்சம் பணம் அளித்து , சாப்டுக்கோ சாப்பிடாம இருக்காதடா என்று சொல்வான். வங்கித்தேர்வுக்குத் தேவையான புத்தகங்கள் வாங்கிக்கொடுப்பான். உன் நண்பர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று கேட்டான். அவன் எவனை முன்னிட்டு இந்தக் கேள்வியைக் கேட்டான் என்றால், ஒரு ஈனப்பிறவியை. 

இளையோனுக்கு நான் பதிலிருத்துச் சொன்னதன் சுருக்கம். அடேய் நீ இப்படி பொத்தாம் பொதுவாக என் நண்பர்கள் என்று சொல்லக்கூடாது. நீ எவனைக் கருதி இவ்வாறு பகர்கிறாய் என்பது எனக்குத்தெரியும்.  உன் நட்பில் நீ பெறும் இடத்தில் இருந்தாய் ஆனால் நான் கொடுக்கும் இடத்தில் இருந்தேன்,  அல்லது சில காலம் ஈசன் அவன் பொருட்டு என்னை அந்த இடத்தில் வைத்திருந்தான். இது அவரவர் கர்மவினை. நான் என் உயிரை வருத்தி உதவி புரிந்தேன். உன் நண்பன் உனக்குச் செய்ததை நான் பல ஆண்டுகள் முன் இவனுக்குச் செய்தேன். இன்று  இக்கட்டான இடர்பாடுகள் மிகுந்த இவ்வேளையில், நாம் ஆட்பட்டிருக்கும் சூழ்நிலை அனைத்தையும் மணிக்கணக்கில் அவனிடம் தொலைபேசியில் உளறித்தள்ளினேன். அப்போது அவன் பேருந்தில் இரவு நேரம் ஒரு ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குப் பயணித்துக்கொண்டிருந்தான், எனக்கு இங்கு பகல் உண்மையில் அவன் பொழுது போவதற்காக என்னிடம் கதை கேட்டுக்கொண்டிருந்திருக்கிறான் என்பது பின்நாளிள்தான் புரிந்தது. நான் அவ்வாறு எண்ணியதற்கு இரு காரணங்கள். ஒன்று வீட்டை அடைந்ததும், செருப்பைக் கழட்டும் கையோடு உடனே போன் தொடர்பையும் துண்டித்தான். அடுத்தது ஒரு தகவல் பிச்சை கேட்டிருந்தேன், மிகவும் இன்றியமையாத உயிர் போகும் அவசரம் கொண்ட தகவல் தேவை அது. அதை அவன் அளிக்காதது கூட வருத்தம் அளிக்கவில்லை, ஆனால் நான் இவ்வளவு குண்டியடி பட்டுக்கொண்டிருக்கிறேன் அனைத்தையும் குயுக்தியுடன் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, இரு வாரங்கள் கழித்து சாகவாசமாக சென்னையில், ஒரு கேட்டட் கம்யூனிட்டியில் தொன்னூறு லட்சத்திற்கு 3 BHK போட்டிருக்கிறான் வாங்குகிறாயா? என்று குறுஞ்செய்தி வருகிறது. ஏண்டா உன்னை நம்பி இத்தனை தனிப்பட்ட விஷயம் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறேன், அதைக் கேட்ட உனக்கெல்லாம் மனம் நடுங்கிப்போக வேண்டாமா? நான் என்ன உன்னிடம் பணமா கேட்டேன், ஒரு தகவல் உதவி. அதைச் செய்வதற்கு உனக்கு புலனறிவு (இங்கு நான் மனத்தை ப் பற்றிகூட சொல்லவில்லை) இல்லை, சொரணை இல்லை. இப்படிப்பட்ட ஒரு செய்தியைக்கேட்டிருந்தால், ஒரு ஐந்தறிவு ஜீவன் கூட ஆடிப்போயிருக்கும். ஆறறிவு உள்ள நீ என்ன செய்தாய்? அந்த இழி பயலை உடனே தொடர்பினைத் துண்டித்தேன். என்று இளையோனிடம் சொல்லி விளக்கி முடித்துப் போனை வைத்த பின்தான் தோன்றியது. நான் இருபது வருடங்களுக்கு முன் அவனுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியது, அதற்குப்பின்னான சிலவருடங்களில் இளையோனே உனக்கு உன் நண்பன்  ரூபத்தில் வந்தடைந்தது என்று தோன்றியது.  ஆக, கணக்கு முடிந்தது! 

ஹாங், இன்னொரு உதாரணமும் கூடச்  சொன்னேன். இளையோனே, நமக்கு இந்த Fund Raiser இல் ஒரு நாற்பதாயிரம் சேர்ந்திருக்குமா? அதிலுமே ஒரு குறிப்பிட்ட தொகையை உன் அண்ணனின் வேறு ஒரு நட்புதான் வரிந்து கட்டிக்கொண்டு பிரதிபலன் எதிர்பாராமல் செய்தது. உண்மையில் அவனை நான்தான் தொலைபேசியில் ஆத்திரத்தில் கண்டபடி ஏசி என்னடா ஒன்றுமே தேறவில்லையே, ஒன்றுக்கும் உதவாத நாயே என்றெல்லாம் உரிமையுடன் திட்டினேன். அத்தனையையும் கேட்டுக்கொண்டு, பண்பட்ட அதே சமயம் பால் மனம் மாறாத பசுவின் குணத்துடன், அகழ்வாரைத்தாங்கும் நிலம் போல என்னைப் பொருத்தருளியது மட்டுமின்றி, எனக்குப் பேருதவியும் புரிந்தான் என்றேன். பிறகு சமாதானமடைந்தான். 

இது ஒன்று என்றால், நான் இன்னொன்று கேட்கிறேன். அமைதியாக, ஆர்பாட்டமில்லாமல் கேட்கிறேன், நான் பிச்சைப் பாத்திரம் ஏந்தியிருக்கிறேன். அதனால் என்ன தவறு?  யாருக்காக ஏந்துகிறேன் நண்பர்களே தோழர்களே? உங்களுக்கெல்லாம் எப்படிடா ஈர்ப்பு விதி வேலை செய்யும்? கட்டுக்கட்டாக டாலர் நோட்டுக்கள் போட்ட படம் உங்கள் விதியை மாற்றிவிடுமா? நாம் நட்பு நாஸ்டால்ஜியா என்று ஏங்கினாலும், எப்போது பார்த்தாலும் எவனுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் சரி, அவன்களுக்கு மட்டும் எந்நேரமும் மண்டைக்குள் ஏதோ ஒரு தேட்டைக் கணக்கு. உடுமலைப்பேட்டை - பல்லடம் ரோட்டில் பதினைந்து சென்ட் விற்பனை, அல்லது வாழ்க்கையையே மாற்றி அமைக்கக்கூடிய மல்டி லெவல் மார்க்கெட்டிங் ப்ராடு ஸ்கீம். இவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, நீ உலகில் உள்ள அனைவரையும் ஏமாற்று நண்பா, ரஷ்ய அதிபர் புடின் உட்பட. ஆனால் இதே கணக்குடன் உன் நண்பர்களிடம்   செல்லலாமா? அது உனக்குத் தொழில், பரவாயில்லை பிழைத்துப் போ. ஆனால் அதையே நட்பு வட்டத்தில் செய்ய நினைத்தால், கூடப் பிறந்த தங்கையுடன் காதல் புரிவது போன்ற அருவருப்பான காரியம் இல்லையா? அதிலும் என் போன்றவனிடம் ம்ம்? நான் யார் தெரியுமா? ஒரு குழந்தை. ஒரு குழந்தையிடம் இப்படிச் செய்யலாமா

நான் பெரும்பாலும்  fund raiser இன் இணைப்பை குழுக்களில்தான் பகிர்ந்தேன். அதில் வெகு சில விதிவிலக்குகள் உண்டு. நேரடியாகத்  தனிப்பட்ட ஓரிருவருடன் பகிர்ந்து,  இவனிடம் பல நல்ல தொடர்புகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு என்று நம்பிப்பகிர்ந்தவை. அடேய் உன்னையெல்லாம் நம்பித்தானடா  உன்னிடம் பகிர்ந்தேன். எனக்கு வந்த பதில், நான் அங்கு பகிர்ந்துவிட்டேன், வேறு ஒரு குழுவில் பகிர்ந்துவிட்டேன். வெறும் பகிர்தலுடன் கடமை முடிந்ததா? ஒரு வகையில் க்ரெளவுட் ஃபண்டிங் என்பது பெருமளவில் பகிர்தலில்தான் அது வேலை செய்யும் திறனை மேம்படுத்தும், உண்மைதான்.  இது பத்து பேர் ஒவ்வொரு  லட்சம் ஈவது அல்ல, மாறாக ஒரு லட்சம் பேர் பத்துப் பத்து  ரூபாய் ஈவது. அதற்காக வெறும் பகிர்ந்துகொண்டே இருந்துவிட்டால் வேலை எப்படி நடக்கும்

பலருக்கும் இன்னோர் குழப்பம். நாம் ஈயும் தொகை சரியாகப் போய்ச் சேருமா என்பது. நியாயமான ஐயம்தான். உங்களின் பத்து ரூபாயில் ஒன்பது ரூபாய் போய்ச்சேரட்டும், ஒரு ரூபாய் அதை நடத்துபவனுக்குப் போய்ச்சேரட்டும், அதனால் என்ன இப்போது? அதையும் மீறி இக்கவலை இருப்பவர்கள் என்ன செய்யலாம்? பத்து ரூபாய்க்கு பதில்  ஒன்பது ரூபாய் பங்களிக்கலாம், அதனால் இதை நடத்துபவனுக்குப் போகும் தொகையைக் கட்டுப்படுத்திய திருப்தியை அளிக்கும் அல்லது பதினோரு ரூபாய் செலுத்தலாம், இதனால் பயனாளிக்கு நீங்கள் அளிக்க நினைத்த பத்து ரூபாய் போய்ச்சேர்ந்துவிடும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. 

இந்த fund raiser துவங்கி இன்றோடு தோராயமாக ஒரு மாதம் முடிவடைந்தது. நாங்கள் நினைத்த மருத்துவ நிதியைத் திரட்ட முடியவில்லை என்பது ஒரு புறம் என்றால், இன்னொரு புறம் முன்பு ஓரளவு பேசிக்கொண்டிருந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் எல்லாம் என்னை தவிர்க்க ஆரம்பித்தார்கள். குழுக்களில் பகிர்ந்திருந்தேன் அல்லவா? அட பணம் போகட்டும் ஆனால் அவைகளில் இருந்து ஒரு வார்த்தை கூட  தாய் இப்போது எப்படி இருக்கிறாள் என்ற ஒற்றை வார்த்தை வரவில்லை. ஒரே ஒருவன் மட்டும் தனியாக என்ன ஆயிற்று என்று கேட்டு வினா அனுப்பினான் (எழுத்துப்பிழைகளுடன், இலக்கணப்பிழையுடன் அதுவும் ஆங்கிலத்தில்). நான் அவனை தொலைபேசியில் அழைத்து விளக்கத்தொடங்க, சடுதியில் புரிந்துகொண்டு, ஓ சரி சரி ....அப்பறம் பேசறேன் என்று அவசர அவசரமாக போனை வைத்துவிட்டான். மெதுவாகத்தான் விளங்கத்தொடங்கியது, சில பன்றிகளுக்கு ஆங்கிலம் மட்டுமல்ல தமிழைக்கூட ஒரு பத்தி எழுத்துக்கூட்டியும் கூட வாசிக்கத்தெரியாது. நிலைமை புரிந்ததும் எங்கே ஏதாவது உதவி கேட்டுவிடுவேனோ என்று அஞ்சி ஓடிவிட்டான். அது தவிர, பகிர்ந்த குழுவில் இழவு விழுந்தது போல் மாயான அமைதி. ஒரு நாற்பது நிமிடம் தான் இருக்கும் அவ்வளவுதான்  சகஜ நிலை திரும்பி வடிவேலு நகைச்சுவை மீம்ஸ்கள் பறந்தன. இதுவே இழவுச் செய்தி என்றால், எவன் வீட்டிலாவது இழவு விழுந்து, குறிப்பிட்ட குடும்ப நபர் செத்துவிட்டார் என்று அவன் சார்பாக வேறு ஒருவன் மெசேஜ் போட்டால், RIP, RIP என்று காக்கை கூட்டத்தில் பிணம் விழுந்தவுடன் காக்கைகள் கூடிக் கரையுமே அது போல் அது வரை அமைதியாக இருந்த பயல்கள் கூட RIP போடுவான்கள். அதுவே எவ்வளவு பெரிய தயாள குணம்! என் பிணம் விழுந்து கொஞ்சநேரம் மட்டும் உயிரோடு வந்து எனக்கு RIP விழுகிறதா, எத்தனை RIP கள் விழுகின்றன  என்று பார்க்க ஒரு காலத்தில் ஆசை இருந்தது. ஆனால் என் பற்றியதல்ல, ஈகோவை விட்டுக்கொடுத்துப் போவதற்கு, இது என் தாய்! எல்லா குழுக்களில் இருந்தும்  விலகினேன்.

 


இவை தவிர்த்த சில அவலங்களும் நிகழ்ந்தன. பொதுவாக நம் வலது கை  உதவுவது இடதுகைக்குகூட தெரியக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் வேறு வழியில்லை இதை நான் இங்கு சொல்லியே ஆக வேண்டும். சில வருடங்களுக்கு முன், கொரோனா காலத்தில் உறவினன் ஒருவனுக்கு இதே Fund Raiser எழுப்பியபோது, அதில் உடனடியாக என்னால் இயன்றதைச் செய்தது தவிர, நூறு இடங்களுக்கு விழுந்து மாய்ந்து அனுப்பினேன். சமீபத்தில் மூன்று மாதங்கள் முன்பு, உடன் வேலை செய்பவனின் வகுப்புத்தோழி இங்கு அவள் கணவனுடன் காரில் சென்றபோது விபத்தாகி, கணவன் ஸ்தல மரணம். இவள் கோமா, இரு குழந்தைகளுக்கும் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு. ஒன்றிற்கு வயது இரண்டு இன்னொன்று எட்டு வயது. மலையாளிகள். அவர்கள் நெட்ஒர்க் பெரிதல்லவா?  அவர்கள் Fund Raiser எழுப்பியிருந்தார்கள். நான் அவன் போனில் காட்டியது நினைவு வந்து நாள் முழுவதும் மனது கேட்காமல் அடுத்தநாள் அவனிடம் நானாக அதன் இணைப்பைக் கேட்டுப் பெற்று என்னால் முடிந்ததைச் செய்துவிட்டு, மேலும் பழையபடி அனைத்து நெட்வொர்க்குகளிலும் அனுப்பியதோடு மட்டுமின்றி, ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பி உதவி கேட்டேன். ஆனாலும் அப்போது கூட தாய் பற்றிய சிந்தனை வரவில்லை. அதற்குப் பிறகு உறக்கமின்றித் தவித்த பல இரவுகளில் திடீரென்று தோன்றிய சிந்தனைதான், இத்தனை இடரில் நாம் சொந்தத் தாய்க்கு என்று வரும்போது இது ஏன் நமக்குத் தோன்றவில்லை என்று எண்ணித்  தொடங்கினேன். இதில் அவலம் என்னவென்றால், இம்முறை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. இவன் இதே வேலையாக இதைச் செய்கிறான் என்று எண்ணிவிட்டார்கள். இம்முறை நான் என் தாய்க்காக யாசகம் செய்கிறேன் என்று யாருக்கும் தெரியவில்லை. இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் ஒன்று நடந்தது. பள்ளித்தோழி விபத்தில் சிக்கினாள் அல்லவா? அவன் நான் செய்த வேலையைச் செய்யவில்லை. மாறாக, தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால், தன் குடும்பத்தை எப்படிக் காத்துக் கொள்ளவேண்டும் என்றும் சட்ட பூர்வமாக அதற்கு என்ன செய்யவேண்டும் என்று அதில் உடனடியாக இறங்கி அதை செய்து முடித்தும் விட்டான். இதில் குறை கூறுவதற்கு ஒன்றும் இல்லை. இதயமா மூளையா என்று வந்தால், நான் மூளையைக் கழற்றி வைத்துவிடுகிறேன் பல சமயங்களில். இது ஒரு பாடம் எனக்கு.  

நெருக்கடி காரணமாக உதவி கேட்ட என்னை அனைவரும் ஒதுக்கத்தொடங்கியதை உணர்ந்தேன். ஆனாலும் இதில் சில பலன்கள்  இருக்கத்தான் செய்கின்றன. அவை - 

1. சொந்த வாழ்க்கையிலேயே ஒரு சோஷியல் எக்ஸ்பெரிமெண்ட் அவல நாடகம் நடந்தேறியது. நமக்குத் தாழ்வு என்று ஒன்று வரும்போது, உலகம் எப்படி நடந்துகொள்ளும் என்னும் படிப்பினை.  

2. க்ரெளவுட் ஃபண்டிங்கை முன்னெடுத்ததால் முதலில் கொஞ்சம் கூசியது போல் தோன்றினாலும், பிறகு நான் ஒன்றும் கொலைக்குற்றம் செய்யவில்லை, என்று உணர்த்தியது. 

3. நல்லவர்களுக்கு நண்பர்கள் என்று யாருமே இருக்கமாட்டார்கள். அல்லது வெகு சிலர் மட்டுமே இருப்பார்கள் என்று உணர்ந்தது. 

4. சுயலாபம் கருதி ஒட்டிக்கொண்டிருந்த சில ஒட்டுண்ணிகளை தோலுரித்தது. 

5. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று விளங்கியது. 

6. உயிர் உள்ளவரை, தேவை உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுதை நிறுத்தாமல் தொடர்வது என்னும் வைராக்கியத்தை உண்டாக்கியது. 

7. அதே சமயம்,  தகுதியில்லாத தருதலைகளுக்கு இனி ஒரு ரூபாய் கூட நல்கக்கூடாது. எவனுக்கும் கடன் என்று ஒரு ரூபாய் கொடுக்கக்கூடாது, பசியால் பிள்ளை சாகக்கிடக்கிறது என்றாலும் கடன் கொடுக்கக்கூடாது. தானமாகக் கொடுக்கலாம் ஆனால்  அவ்வாறு கொடுத்துக்கொண்டே இருந்தால், நாம் பிச்சைதான் எடுக்கவேண்டும் என்று என் குரு சொன்ன பாடத்தை மீண்டும் நினைவுறுத்தியது. 

8. இந்த வாட்ஸப் குழுக்களெல்லாம் நூறு பேர் இருந்தாலும் அதில் ஐந்தாறு பயல்கள் மட்டும் கூடிக் குலாவிக் கொள்வதற்கும், பரஸ்பரம் முதுகு சொரிந்துகொள்வதற்கும் ஏற்படுத்தப்பட்டவை. மற்றவர்களெல்லாம் சும்மா அல்லக்கைகள், வெறும் வேடிக்கை பார்க்க மட்டுமே. 

9. பொதுவாகவே இந்த கலப்புத் திருமணம், விவாகரத்து, விபத்து போன்றவை தனக்கு அல்லது தன் சார்ந்தவர்களுக்கு  நடக்காத வரை, மற்றவருக்கு ஏற்படும்போது அதில் ஒரு ஒவ்வாமையும் அசூசையும். இங்கு அது நோய், அதற்கான மருத்துவ நிதி உதவி கோரல். என்னையும் அதே ஒவ்வாமையுடன் அணுகுகிறார்களோ என்று நினைக்கிறேன். இன்னொரு வகையில் பார்த்தால், இப்படி ஒரு வழியையும் சாத்தியக்கூறையும் அனைவருக்கும் திறந்துவிட்டிருக்கிறேன். யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்பதுதான் வேண்டுதல் ஆனால் நடைமுறையில் ஒரு வேளை அவ்வாறு ஏற்படுமானால், இவ்வழியினை இனிமேல் தயக்கமில்லாமல் பயன்படுத்துவார்கள். எனக்கு வேறு ஒரு விஷயத்திலும் இதே போல் நடந்தது. எனக்குப் பலனளிக்காத ஒன்று பத்துப் பேருக்குப் பலனளித்தது.   அதுவும் ஒரு வெற்றிதான். இப்போது உணர்கிறேன். 

இதைச் சொல்லியே ஆகவேண்டும். நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் நாங்கள் எதிர்பார்த்த மருத்துவ நிதியில் ஒரு சதவிகிதம் கூட திரட்ட முடியவில்லை. அதனால் என்ன? தற்போது உடல்  நிலையில் பேரதிசயமாக கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. இது ஒரு நூறு கிலோ மணல் மூட்டையுடன் மலை முகட்டில்  ஏறுவது போன்றது. இருப்பினும்  என் சுற்றத்திலும் நட்பிலுமுள்ள, உதவி செய்த உயர்ந்த உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களது ஒவ்வொரு ரூபாயும் ஒரு கோடி ரூபாய்க்குச் சமம். வெறும் பணம் மட்டுமல்ல, உங்களின் நல்லெண்ணம் , அதுதான் இங்கு வேலை செய்திருக்கிறது என்று பரிபூரணமாக நம்புகிறேன். பெரியவாளின் ஆசிகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கட்டும்.  அண்ணாமலையாரும், குணசீலம் பெருமாளும் அகிலம் மொத்தத்தையும் காக்கட்டும்.  

இறுதியாக ஒன்று இந்த அமெரிக்க பிரபஞ்ச ஈர்ப்புசக்தி, ஐநூறு ரூபாய்க்கு விற்கப்படும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பான "மாயவலை"  எல்லாம் வேலை செய்யாது. வேறு ஒன்று இருக்கிறது அது 100% வேலை செய்யும், நான் அனுபவத்தில் உணர்ந்தது, அதுதான் உண்மையான "The Secret"!

Comments

  1. I am sorry Prasanna, heart felt reaction, well everything is over about wrong people wrong things wrong mindset peoples…
    you have good heart and helping others.
    Now you identify in your own way
    God bless you
    Thank you
    பேசுவோம்….

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Jawan - An Inimitable Experience

L et me lay it out straight before you get duped by the title and jump into reading with high hopes. This isn't your typical movie review. Every time I scribble about a flick, the way I've been doing in Tamil, it ain't your fancy-pants review; it's more about spilling the beans on what it's like sitting through them. It's about asking yourself, 'Was it a total pain in the ass?' or that elation when you finally drain the main vein at the nearest pee point after pounding a few mugs of draught beer right before a non-stop haul from NJ to SJ in a stormy night. I will get to that later; that's the high point of this post, which I am saving for the end.  Besides boredom, it takes valor, courage, and an immense sense of sacrifice to throw the money at this half-brewed moonshine cocktail and waste time in haste out of compulsion. Compulsion because it wasn't a single anal canal that was 'force sat' on movie hall recliners to go through this Guant...

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

கிரிக்கெட் என்னும் பொறுக்கிகளின் விளையாட்டு ---------------------------------------------------------------------------------- https://nadukal.in/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%95/ இந்திய தேசமும் கிரிக்கெட் என்னும் பெருங்கேடும் ----------------------------------------------------------------------------------  https://nadukal.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/?fbclid=IwAR04jW47K9HhTt8D8pP-oz0CfOPiNmyrbAyi28oL1RxmoZk81h15DujTn1A