பிறழ்வெழுத்தின் பிதாமகர்

        முதல் முயற்சியாக ஒரு ப்ளாக் எழுதிப் பார்க்கலாம் என்று நினைத்தால் ஒன்றுக்கும் உதவாத ஐடியாக்கள் பல வந்து படு தோல்வியில் முடிந்தது. எழுதுவதற்கு என்று கணினி முன் உட்கார்ந்தால் ஒன்றும் தோன்றாது. வேறு ஏதாவது வேலைகளில்  மூழ்கி இருக்கும்போதோ அல்லது மிக முக்கியமான ஒரு சிக்கலைக் கையாண்டுகொண்டிருக்கும்போதோ மண்டைக்குள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இழைகளாக, ஒழுங்கற்ற  சிறு சிறு புள்ளிகளாக ஏதேதோ தோன்றி மறைவதுண்டு. எதையும் எங்கும் குறிப்பெடுத்து வைத்தது கிடையாது. 10 வருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. ஒன்றுமே நிகழவில்லை. இடையில் பெரிதாக எதுவும் படிக்கவில்லை தொடர் வாசிப்பும் இருந்தது இல்லை. முழுமையாக, ஒருமுகமாக, எந்த ஒரு முனைப்பான வாசிப்பையும்  மேற்கொள்ள இயலவில்லை. அதற்காக எதுவுமே படிக்காமலும் இருந்ததில்லை. ஒரு சில வருடங்களுக்கு முன்பு, 2013 வாக்கில் என்று நினைக்கிறேன், சரசரவென தமிழின் குறிப்பிடத்தக்க சில கட்டுரை மற்றும் பத்தி எழுத்தாளர்களுடைய புத்தகங்களை வாசிக்க நேர்ந்தது. சில சுவாரசியமான அரசியல் மற்றும் வரலாற்றுப் புத்தகங்கள் ஓரிரு புனைவுகள் மட்டும் என மிகக்குறைந்த வாசிப்பு மட்டுமே. ஏற்கனவே வாசித்தல் என்னும் பழக்கம் அருகிவந்துகொண்டிருந்த காலம் மெதுமெதுவாக முன்னேறி இப்போது தமிழ் என்பது வெறும் சாதாரண பேச்சுவழக்கு மற்றும் Transactional மொழியாக மட்டும் எஞ்சி நிற்கிறது. இதுதான் சாக்கு இனி நாம் என்ன வேண்டுமானாலும் பிளாக் என்ற பெயரில் கிறுக்கித் தள்ளலாம் யாரும் படிக்க மாட்டார்கள் என்று சொல்லிக்கொண்டு எழுதுவதில் குதிக்கலாம் என்று வந்துவிட்டேனா என்றால் அதுதான் இல்லை! 

    இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் ஒரு தொடர் மாற்றம், அற்புதமான ஒரு மாற்றம் மெதுமெதுவாக நிகழ்ந்து கொண்டிருந்தது, சாருவைப் பின் தொடர்தல் என்பதுதான் அது! 2009 வாக்கில் தொடங்கி கடந்த 12 வருடங்களில், வாழ்க்கையின் எல்லா இன்னல்கள் மற்றும்  இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் அவருடைய ப்ளாகில் உள்ள கிட்டத்தட்ட 85 சதவிகித பதிவுகளையும் படித்திருப்பேன் என்றே நினைக்கிறேன். அவருடைய ஜீரோ டிகிரி, தேகம், மனம் கொத்திப்பறவை, கோணல் பக்கங்கள், நிலவு தேயாத தேசம், ஒருசில பழுப்பு நிறப் பக்கங்களின் தொகுதிகள், கொஞ்சம் புனைவு மற்றும் அ-புனைவு என்று கலவையான வாசிப்பு. ஆனால் குறைவான வாசிப்புதான். அவருடைய முக்கியமான புனைவுகளில் பெரும்பாலானவை Autofiction மற்றும் Transgressive fiction என்ற வகைகளைச் சேர்ந்தவை என்று நினைக்கிறேன். இடையிடையே அவர் பரிந்துரைத்த ப.சிங்காரம் எழுதிய  புயலிலே ஒரு தோணி, அசோகமித்ரனின் 18ம் அட்சக்கோடு போன்ற நாவல்கள் அசர வைக்கக்கூடியவை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக பிஞ்ச் தமிழில் அவர் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நான்தான் அவுரங்கசீப் எனும் உலகத்தரமான நாவலை வாசிக்கத் தொடங்கியதும்தான் இப்படியும் ஒருவரால் எழுத முடியுமா என்று தோன்றியது. 

https://play.google.com/store/apps/details?id=com.bynge.story&hl=en_US&gl=US

    வரலாற்றுப் பின்னணியில் ஒரு புனைவு, புனைவில் புது யுக்தி, பல நுணுக்கங்கள் தவிர மதிப்பீடுகள் என்று இன்று நாம் கருதிக்கொண்டு இருக்கும் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு மிதிப்பதுதான் நாவலின் மைய இழை என்பது என்னுடைய அவதானம். மிக முக்கியமாக இது வரலாற்றுப் பின்னணியில் உள்ள ஒரு புனைவுதானே ஒழிய வரலாற்றுப்புனைவு மட்டுமே அல்ல. மேலோட்டமாகப் பார்த்தால் வரலாற்று நாவல் போன்று இருந்தாலும் அதில் உள்ள கிம்மிக் மற்றும் சுவாரசியம் அதன் புனைவுத்தன்மையில்தான் உள்ளது. வெறும் வரலாற்று நாவலாகவும் வாசிக்கலாம் ஸ்வாரஸ்யத்திற்கு ஒரு மாற்றுக் கூடக் குறைவில்லை என்பதற்கு நான் உத்தரவாதம். இந்த நாவலை யாரும் கல்கி, சாண்டில்யன் போன்ற so called வரலாற்றுப் புதின எழுத்தாளர்களோடு போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. அவைகள் எவையுமே வெறும் fiction கூடக் கிடையாது pulp fiction ஐயும் ஒரு சில வரலாற்று நிகழ்வுகளையும் கல்கி அல்லது சாண்டில்யனின் மண்டைக்குள் போட்டு ப்ராசஸ் செய்யவைத்து பேப்பரில் உமிழ வைத்தால் கிடைக்கும் மலினமான ஒரு பை ப்ராடக்ட் என்று வேண்டுமானால் சொல்லலாம். 

    இத்தொடர் நாவலை நான் வாசிக்கத் தொடங்கியதும் இதில் உள்ள சில நுணுக்கமான வரலாற்று விவரணைகளில் உள்ள பிரமிப்பு மற்றும் ஆர்வம் காரணமாக சாருவை ஒரு புனைப்பெயரில் தொடர்பு கொண்டு சில கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்வதும் நடந்தது. என்னுடைய அனாமதேய கடிதத்தை அவர் தன்னுடைய ப்ளாக்கில் பிரசுரித்திருந்தார். 

http://charuonline.com/blog/?p=10959

    அதில் பதிலளித்த சாரு என்னிடம் கூறிய ஒன்றுதான் எனக்கு ஒரு உந்துதலாக இருந்தது. அவர் கூறியது இதுதான்- உங்களுக்கு எழுத வருகிறது, கொஞ்சம் முயற்சிக்கலாம். உங்கள் ஐடியாக்களை பிளாகவோ, சிறு சிறு துணுக்குகளாகவோ எழுதிச் சேர்க்கலாம்  அல்லது ஒரு நாவலாகக் கூட எழுதலாம். உண்மையில் பல காலம் தயங்கிக்கொண்டிருந்த எனக்கு அவர் என்னை எழுதச்சொல்லிப் பணித்ததாகவே கருதுகிறேன். புதிதாக எழுத முயற்சிப்பவர்கள்  குறித்து சாரு தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டு வருவது என்னவோ, எழுதலாம் என்ற நினைப்பு வருவதற்கே 5 வருட தீவிர வாசிப்பு இருக்க வேண்டும் என்பதே. ஆனால் இது போல் துக்கடா ப்ளாக் எழுத்துக்களுக்கெல்லாம் அது பொருந்தாது என்றே நினைக்கிறன். 

    என்னுடைய வருத்தமெல்லாம் எழுத்திற்காகவே தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஒருவரை தமிழ்ச் சமூகம்  விமர்சித்தாலோ ஏசினாலோ கூடப் பரவாயில்லை. 30 வருடங்களாக ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்கிற கொடூர சமூக யதார்த்தம் தான் முகத்தில் அறைகிறது. சாரு அடிக்கடி நம் தமிழ்ச்  சமூகத்தை philistine society என்று குறிப்பிடுவார். இதை ஒட்டிய சிலவற்றை நானும் என் பார்வையில் எழுதலாம் என்று நினைத்து வைத்திருக்கிறேன். 

    ஜெயமோகன் சாருவை பிறழ்வெழுத்தில் திறமையானவர் என்று குறிப்பிட்டு மதிப்பீடு செய்திருந்தார். நான் இதற்குப்பிறகு தொடர்ந்து ப்ளாக் எழுதுவேனா என்பது தெரியாது, தொடக்கமோ இறுதியோ இப்பதிவின் தலைப்பை முதலிலேயே முடிவு செய்துகொண்டுதான் எழுதவே உட்கார்ந்தேன்! 


 

Comments

  1. Superb beginning.... பூவோடு சேர்ந்த நாரும் மணப்பதொடு மட்டுமல்லாமல் ஒரு மலர் வனமாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Just don't worry. Stick on to that. வசிட்டரின் வாயால் பிரம்ம ரிஷி.

    ReplyDelete
  3. welcome iyree...please write more..oru line kooda bore adikala intrestingaa irku ..charunaalaa intrestingdhaan...but charu ilamaa unga next blog padikumbothu enaku epdi irkumnu experience panipakamnu thonuthuu...congratulations for the start ..

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience