மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் இரண்டு)

குப்பனின் குல வழக்கப்படி குப்புசாமி என்ற நாமகரணம் கூட சகஜம்தான் ஆனால் குப்பன் என்று பெயர் வைப்பதற்கு ஒரு பழைய ஃபேமிலி ஹிஸ்டரியின் தொல் எச்சங்கள் காரணமான கம்பல்ஷன் இருக்க வேண்டும். எதோ ஒரு Jinx breaking கிற்காக முதல் ஆண் பிள்ளைக்கு குப்பன் என்று பெயர் வைப்பார்கள். அடுத்த தலைமுறையில் தேவையில்லை அதற்கடுத்த தலைமுறையில் தேவை. இப்படி எதோ ஒரு பாடாவதி லாஜிக் காரணமாக குப்பன் என்ற பெயர் நாளடைவில் மருவி கூப்பன் ஆனது.  அது காரண காரியமில்லாமல் நடக்கவில்லை. அதற்கும் ஒரு தனி மனிதன் தான் காரணம்.

குப்பனுக்கு Coupon என்று அவன் பெயருக்கு ஸ்பெல்லிங் எழுதுவிக்கப்பட்ட அந்தக் காலகட்டங்களில் வத்தலகுண்டு அரசு ஆரம்பப்பள்ளி ஹெட் மாஸ்டர்தான் அப்பள்ளியின் ஆங்கிலப்  புலவரும் கூட. நம்மிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு  எல்லாம் ஸ்பெல்லிங் எழுதச் சொல்லித்தருவது என்பது  நானாக எனக்கு வரித்துக்கொண்ட கடமை. அக்கடமையிலிருந்து வழுவவேண்டுமானால் பிணமாகித்தான் வழுவுவேன் என்று வலியப்போய் வம்படியாக ஆங்கிலத்தில் படு வினோதமாக ஸ்பெல்லிங் எழுதப் பழக்குவார். அப்படி எக்ஸ்ஸாக்ட்டாக எப்போது நினைத்தார் என்பது தெரியாது ஆனால் குப்பனுக்குக் கூப்பன் என்று பெயர் எழுதுவித்த மறு வாரமே ஹார்ட் அட்டாக் வந்து             போய்ச் சேர்ந்துவிட்டார். மேற்குறிப்பிட்ட குப்பனின் குடும்பத் தொல் எச்ச சாபம் காரணமோ என்னவோ தெரியவில்லை. 

பிரிட்டீஷார் எப்படி திருநெல்வேலிக்கு டின்னவேலி , உதகமண்டலத்துக்கு ஊட்டக்கமண்ட்  மதுரைக்கு மெஜுரா கண்ணனூருக்கு கேனனோர்  என்றெல்லாம் ஸ்பெல்லிங் எழுதினார்களோ அதே போல் தமிழ்ப் பெயர்களும் Anglicization பண்ணப் படவேண்டும். அவருக்கே அறியாத வண்ணம் ஒருவித neo colonial hangover க்கு இலக்கணமாக  விளங்குபவராக இருந்தார். ஆங்கிலம் என்று வந்துவிட்டால் அதில் சமரசமே கிடையாது என்பது அவர் நோக்கு. ராமசாமிக்கு Raymasmy, குப்புசாமிக்கு Coopasmey. கந்தசாமிக்கு Candasmay. பெரியகுளம் தமிழ் வாத்தியார் மகன் இங்குதான் படித்தான் அவனும் தப்பவில்லை அவன் பெயர் அஞ்சாநெஞ்சன் அதை Annjanjan என்று படு ஸ்டைலிஷாக ஸ்பெல் பண்ணிவிட்டார். அவரைப்பொறுத்த வரை, தமிழ்ப்    பெயர்களை ஆங்கிலத்தில் Transliterate பண்ணவே கூடாது, அவராக ஒரு இலக்கணம் வகுத்துக்கொண்டு பெயர்களுக்கு விஷமமான  ஸ்பெல்லிங்களை எழுதிப் பயிற்றுவித்து உயர்நிலைப்பள்ளி அனுப்பிவைத்துக் கொண்டிருந்தார். அப்பெயர்களும் தமிழில் சரியாக reverse transliterate ஆகி காலப்போக்கில் ஆங்கில ஸ்பெல்லிங்கின் உச்சரிப்பின்படியே  நிலைத்து வழங்கலாயின. 

அதாவது பரவாயில்லை ஆனால் பயிற்சியின் போது, சாதாரணமாகவே எக்காலத்திலும் சமரசம் செய்துகொள்ளாத ஆங்கிலப் புலவராக இருப்பவர், ஃபாசிஸ்ட்டாக மாறி, மாணாக்கர்கள் மீது கடும் ஒடுக்குமுறையைக் கையாள்வார். 3ம் வகுப்பு வாக்கில்தான் ஏபிசிடி யே சொல்லித்தரப்படும். நான்கில் அப்படியே ஓசி காச் அடித்து பரீட்சையில் டீச்சரே கரும்பலகையில் எழுதிப்போடுவதை நகலெடுக்கத் தெரிந்திருந்தால் போதும். ஐந்தாவதிலும் அதே கதைதான் பிப்ரவரி, மார்ச் என்று ஆண்டு முடியும் தருவாயில்தான் ஆண்டுவிழா வரும் அதில் மதுரை வீரன் எங்கசாமி தெற்குத்தெரு மச்சான் என்ற எதாவது ஒரு திரையிசைக்கு   இரண்டாம் வகுப்பு ஆசிரியை தாளகதியுடன் நடனம் பயிற்றுவிக்க  அழைத்துக்கொண்டு போனது போக மீந்து வெட்டியாய் இருக்கும் மாணாக்கர்கள் தொலைந்தார்கள்.  எந்த போட்டியிலும் பங்கேற்காமல்  பராக்கு பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் எல்லா குழந்தைகளுக்கும், திடீர் ஞானோதயம் வந்து வன்முறைப் பிரயோகத்துடன் ஸ்பெல்லிங் ப்ராக்டிஸ் நடத்தப்படும்.

அடுத்தநாள் காலை கூப்பனின் அம்மாச்சி சுடுதண்ணியில் குளிப்பாட்டி விடுகையில் புட்டத்தில் கண்ட விளாரல்களை அம்மாவிடம் இதென்னடி குண்டில கரண கரணையா இருக்கு? என்று போட்டுக் கொடுத்துவிட்டது. அது போய் அப்பாவிடம் சொல்ல, அவர் அதெல்லாம் ஒரு  பெரிய மேட்டரே இல்லை என்று சைபால் தடவிவிட்டுவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விட்டார். எங்க காலத்துல எல்லாம் வாத்தியார் அடிச்சா ரத்தம் வந்துரும் மக்யா நாளு கட்டு போட்டுவிட்டு ஸ்கூலுக்கு பத்தி விட்றுவாய்ங்ய இது என்ன பெரிய விஷயம் என்பார். 

இங்கிருந்து ஹைஸ்கூல் போனால் அங்கு ஒரு மெண்டல் வாத்தியார், பெயரில் கோக்கு மாக்கு ஸ்பெல்லிங் உள்ள பிள்ளைகளை எல்லாம் தேடித்தேடி அடித்து ரசித்து லயித்தார். ஸ்பெல்லிங்கை  சரி செய்து விடலாமே என்பது  பற்றியெல்லாம் பெரிதாக சிரத்தை இல்லை. அவருக்கு மாணவர்களை டெரெரைஸ் பண்ணிப் பார்த்து ரசிக்க வேண்டும் அவ்வளவுதான். ஏதாவது ஒரு சாக்கில் கூப்பிட்டனுப்பி அடித்து ரசித்து என்ஜாய் பண்ணிக்கொண்டிருந்தார். 

அவர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார் என்பதற்கு  நியூமராலஜி பயித்தியம் பிடித்த அப்பன் ஆத்தாள்கள்தான் பையன்களின் பெயர்களுக்கு இப்படி ஸ்பெல் பண்ணி சமூக சீர்கேட்டை உருவாக்குகிறார்கள் என்கிற ஒரு முற்போக்கு சிந்தனை அவருக்கு இருப்பது  மாதிரியான இன்னொரு வெர்ஷன் ஆஃப் ஸ்டோரியும் உண்டு. பயல்களை அடிக்கிற அடியில் அப்பன்களும் ஆத்தாள்களும் காலில் வந்து விழுந்து கெஞ்ச வேண்டும். கூப்பன் ஒரு முறை ஒன்பதாவதில் அவரிடம் மாட்டி கண் மண் தெரியாமல் அடி வாங்கினான் தகப்பனுக்கு Summon கொடுக்கப்பட்டது. 

அவரைக் கூட்டிக்கொண்டு போய்நிறுத்திவிட்டு கெத்தாக டீல் பண்ணுவார் என்று பார்த்தால், வழ வாழா கொழ கொழா வென்று அவர் அந்தக்காலத்தில் தான் அடிவாங்கிய கதை, ஆசிரியர்களைப் பார்த்தால் கால் நடுங்கும், பூல் நடுங்கும், எங்களயெல்லாம் அந்தக்காலத்துல ஹோம் வொர்க் கொடுத்து கையை ஒடச்சிவிட்ருவாய்ங்ய என்றெல்லாம் கோயான் மாதிரி ஏதேதோ  உளறிக் கொண்டிருந்துவிட்டு, என்ன பஞ்சாயத்து எதற்கு அடித்தார் என்ற  நியாயத்தைப் பேசுவார் என்று பார்த்தால் திடீரென்று ஏதோ படு சத்தியவந்தன் போல், ஈஸ்ட்மேன் கலர் சிவாஜி ஓவர் ஆக்டிங் மாடுலேஷனுடன் நா தழுதழுக்க  - 

சார் இனி நான் என் பையன முழுசா உங்ககிட்ட ஒப்படைக்கறேன் இவன நல்லா அடிச்சி திருத்தி நல்ல வழிக்குக் கொண்டு வர்றதுக்கு என் முழு ஒத்துழைப்பும் உண்டு. கண்ண மட்டும் விட்டு வச்சிட்டு தோல உறிச்சு விட்ருங்க சார், வீட்ல நாஞ்ஜொன்னா கேக்க மாட்ரியா(ங்)  என்று சைக் வாத்தியாரை மிஞ்சும் வகையில் அவருக்கே ஐடியா கொடுத்து விட்டு  சைக்கிளை ரோட்டு முனை வரைக்கும் தொய்வு நடையுடன் தள்ளிக் கொண்டே சென்று, ஸ்கூல் முக்குத் திரும்பியதும் ஒரே அடியில் பெடல் அடித்து காலைதூக்கிப் போட்டு விரைந்து விட்டார். 

அந்த ஒரு கணத்தில் அப்பனே ஃபுல் லைசென்ஸ் கொடுத்துவிட்ட மகிழ்ச்சியை  கூப்பனை ரஞ்சிதாவைப் பார்க்கிற நித்தி மாதிரி பார்த்து வெளிப்படுத்தினார். அவர் கண்ணில் தெரிந்த எக்ஸ்டசியை கண்ணுற்ற  கூப்பனுக்கு மட்டும் கருக் கருக் என்று இருந்தது.

அது என்ன சைக்காலஜி என்று தெரியவில்லை அந்தக் காலத்துப் பேரண்ட்டிங்கில் இது ஒரு மைண்ட் கேம் என்றே நினைக்கிறேன். அடுத்த நாளில் இருந்தே கூப்பனை வாத்சல்யத்துடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார் சைக்கர். அடி விழுவது அடியோடு நின்று போனது. அப்பேர்ப்பட்ட இடி அமீன் வாத்யாரையே மன மாற்றம் செய்யும் வித்தை அந்த டெக்கினிக்கிற்கு இருந்தது. அக்கால சைக்கர்கள் அதை உள்ளூர ரசித்தார்கள் என்றே சொல்ல வேண்டும். தவிர அந்த அளவு டோட்டல் சப்மிஷன் இருந்தால் யார்தான் கொஞ்சம் பிடியைத் தளர்த்திக்கொள்ள மாட்டார்கள்? 

(தொடரும்)



Comments

Popular posts from this blog

வலியின் கதை

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

Jawan - An Inimitable Experience