மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் மூன்று)

ரு பெயருக்காக சிறுவயதில் இரு வேறு கட்டங்களில் ஆசிரியர்கள் விளம்பிய அடிகள் மூலம் இரு விஷயங்கள் நடந்தன. ஒன்று வன்முறையில் அவனுக்கு நம்பிக்கையற்றுப்போனது. இரண்டாவது கூப்பன் என்ற பெயருடனான ஒட்டுறவு. பள்ளிக்குப்பிறகு உள்ளூரிலேயே பிஎஸ்சி கணிதம் பயின்றவனுக்கு அங்கும் பெயர் காரணமாக, பாடி ஷேமிங் மாதிரி நேம் ஷேமிங்குகளைக் கடந்து வரும் சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்டியிருந்தும் பணங்கட்டி பெயர் மாற்றிக் கொள்ளாத அளவுக்கு கூப்பன் என்ற மருவுப்பெயருடன் ஒரு வித Stockholm Syndrome ஏற்பட்டுவிட்டது. வேலை தேடி சென்னை வந்து சில வருடங்களுக்குப் பிறகுதான் தன் பிற்கால இலக்கிய வாழ்க்கைக்கு மட்டுமல்ல லௌகீக வாழ்க்கைக்குமான காட்பாதரான ராஜாபாதர்ஐக் கண்டடைந்தான். 

ராஜாபாதர் குடும்பத்துடன் 90களில் வட சென்னையில் இருந்து வேளச்சேரிக்குப் புலம் பெயர்ந்தவர். சரி இவருக்கு யார் இப்படிப் பெயர் வைத்தார்கள் என்ன ஏது என்று நோண்டப்போனால், பிறகு  கதைக்குள் போவது கடினம். ஆகவே அதைப்பற்றின inquisitiveness ஐக் கைவிட்டுவிட்டு மேற்கொண்டு தொடர்வதே நலன் பயக்கும். பார்ட்டிக்கு ஆல் ஓவர் சென்னையில் நடக்கும் எல்லா அஃபயர்ஸும் அத்துப்படி. இதில் ஸ்ரேஷ்ட்டமான விஷயம் என்னவென்றால், இலக்கிய உலகம் படு அத்துப்படி. சாருவின் வெளிவட்டத்தில் இணைந்து மிகக்குறுகிய காலத்திற்குள்ளாகவே உள்  வட்டத்திற்குள் ஊடுருவியவர். இலக்கியம் மட்டும் என்று இல்லை. சினிமா, ம்யூசிக் அகாடமி, தியேட்டர் என்று எல்லா இடங்களிலும் நல்ல கனெக்ட் உண்டு.  ரியல் எஸ்டேட், எலக்ட்ரிகல் வயரிங், வட்டித்தொழில் என்று பல பட்டறையான வேலை. திடீரென்று சம்மந்தமே இல்லாமல் புத்தம் புது எலுமிச்சை நிற வெஸ்பாவில் வந்து 

எப்படிப்பா க்குது? நல்லாக் தா? என்று சொல்லிக்கொண்டே ஒக்கார் பா போலாம் 

என்று டாஸ்மாக் கூட்டிப்போவார். கால் முதல் தலை வரை சட்டை பேண்ட் என்று ஒரு இடம் விடாமல் பெயின்ட் தெறித்திருக்கும். தலையில் டை பாதி காய்ந்திருக்கும், போகும் வழியில் நின்று மட்டன் வாங்கிக்கொண்டு வீட்டில் போய் குளித்துவிட்டு மேலும் ஒரு கட்டிங். சாப்பாடு, தூக்கம் பிறகு சாயந்திரம் புல்லட்டில் வந்து. 

"இன்னாபா காசி தியேட்டர்ல வடொ சென்னை போலாமா? ஏர்யா படம்ப்பா" என்பார். 

குடி விஷயத்தில் படு டிசிப்பிளீன்ட் நேரத்தைப் பொறுத்து சிக்னேச்சர் ரேர் அல்லது பவர் ஆப்பிள் வோட்கா அல்லது ஆன்டிக்விட்டி ப்ளூ அல்லது பேக் பைப்பர் பிராண்டி அல்லது பக்கார்டி லெமென் என்று நேரம் பார்த்துதான் வாங்குவார். காலை எட்டா, பதினொன்றா அல்லது மதியம் மூன்றா என்பதைப்பொறுத்து தான் பிராண்டும் லிக்கரும் மாறும்.  

"யாரு வண்டி பாதர், யாருனா பார்ட்டி வண்டியா?"

இன்னாபா இப்டி கேட்டுட்ட? நம்ப்ள்துதாம்பா என்பார். எட்த்து ஒட்டி பாக்கிறீயா என்று ஆஃபர் பண்ணுவார். கூப்பன் அவசரமாக மறுத்துவிடுவான்.  வண்டி வாகனங்களில் படு வீக் சைக்கிளே காலேஜ் போய்தான் கற்றுக்கொண்டான். அதற்குள் அவரே -

"வானாபா யங்கனா போய் இஷ்டினா போச்"

என்றுவிட்டு சாவியை பாக்கெட்டில் போட்டுக்கொள்வார். சரக்கு எதுவாக இருந்தாலும் ஸிப்பிங் பழக்கம் மட்டும் அறவே கிடையாது. மதுவும் நீரும் 50:50 விகிதாச்சாரம். கல்பிங்த்தான். ஒரு கல்ப், கொஞ்சம் பேச்சு, ரெண்டாம் கல்பில் குப்பி காலி கொஞ்சம் மேலதிக பேச்சு. அவ்ளவுதான் அதற்குள் ஏதாவது ஒரு போன் வந்து விடும் எடுத்துப்பேசிக்கொண்டே பில் செட்டில் செய்து சப்ளை ஆளுக்கு டிப்ஸ் கொடுத்துக்கொண்டே சைகையால் வா என்று வண்டியில் உட்கார்த்தி வீட்டில் விட்டுவிடுவார். கூப்பனை ரொம்ப அதிசயமாகத்தான், வெகு சில   சந்தர்ப்பங்களில்தான் ஒரு முழு குடி குடிக்க விட்டிருக்கிறார்.

கூப்பனின் குடியும் ஒரு வித்தியாசமான குடி. எல்லாமே நீட்தான், தண்ணீர் சோடா ஐஸ் எதுவும் இல்லை. ஆனால் காஃப் சிரப் குடிப்பதுபோல் ஒரு ஐந்தைந்து எம்மெல்களாக மூடிமூடியாக ஊற்றி சப்பிக்குடிப்பது. அளந்து டிஸ்போஸபிள் க்ளாசில் ஊற்றி, ஸ்மெல், ஃபிளேவர் கலர் போன்றவற்றை அனுபவித்துக்கொண்டே குடிப்பது. எந்த அயிட்டமாக இருந்தாலும் சரி அதில் உள்ள சிந்தெடிக் கலரிங் ஏஜென்ட்டுகளை மட்டும் எப்படியோ கூப்பனின் மூக்கு, சுவை மொட்டுக்கள் போன்ற நுண் புலன்கள் சரியாகப் பிரித்தறியும் ஆற்றல் கொண்டவையாக விளங்கின. 

ஓரிரு சமயங்களில் அட ஆல்கஹாலை கூட விடு கூப்பா இத்தனை வெரைட்டியாக குடிக்கும் ராஜாபதரின் லிவரை அதில் உள்ள டாக்சிக் டை மெடீரியல்களை கண்டால் லிவர் குழம்பி கதி கலங்கி விடாதா? அவைகளை மட்டும் வெளியேற்ற வேண்டுமானால் கூட முதலில் லிவரை Evisceration பண்ணி எடுத்து வாட்டர் வாஷ் தானே பண்ண வேண்டும்?  என்று மனசாட்சி கேள்வி கேட்கும். என் குடிக்கு மனசாட்சிக்கு பதில் சொல்லலாம் அடுத்தவன் குடிக்கும் குடிக்குக்கூட நான்தானா பிணை என்று சமாதானம் அடைந்து விடுவான்.  

தவிர அப்படிச் செய்வதற்கு அவர் என்ன செத்த மாடா? உயிருள்ள மனிதன்.  ஆளைப்பார்த்தால் இப்போதைக்கு ஹெல்தியாகத் தெரிகிறார். எவர்  கண்டார்? இவருக்கு நோக்காடு வரும்போது அவர் மகனோ மகளோ கொஞ்சம் வளர்ந்து பெரிதானதும் ஒரு கால் பாகம் கல்லீரலை தானமாகக் கொடுக்கலாம். அதுவும்கூட  அவர் அவர்களை வளர்த்தெடுத்திருப்பதைப் பொறுத்துதான். ஒரு பதினாறு பதினேழு வயது வரும் வரைதான் இவர் செய்யும் இந்த அட்ராசிட்டிகளை பொறுத்துக்கொள்வார்கள். பன்னிரண்டு பதிமூன்று வயதிற்குள் இவர் கைகால் வலிக்குது பூல் வலிக்குது, வேலைல ஒரே பேஜாருக்குது அதுனாலதான் டெய்லி சரக்கட்சினு இருக்கேன் என்று சொல்வதெல்லாம் ஓல் என்று தெரிந்துகொண்டுவிடுவார்கள். ஆனால் ஒன்றும் செய்ய மாட்டார்கள் அவ்வப்போது அப்பன் குடிகாரனாக இருப்பது பெரிய்ய இஷ்யூ மாதிரி ஓவர் ரியாக்ட் பண்ணி ஆப்பிள் வாட்ச், எக்ஸ் பாக்ஸுக்கு கோல்ட் சப்ஸ்க்ரிப்ஷன்  என வேண்டுவன சாதித்துக்கொள்வார்கள். இவரது ஹாங் ஓவர் கில்ட்டி கான்ஷியஸ்தான் அவர்களுக்கு மூலதனம். 

குடித்துவிட்டு மூடிக்கொண்டு தூங்காமல் பொண்டாட்டியிடம் வாயளந்தாலோ, அல்லது டொமஸ்டிக் வயலென்ஸில் இறங்கி அவளைப்போட்டு  சனக்கினாலோ  அல்லது 

"நா ரொம்ப நல்லவன்  என்ன ஆரும் புர்ஞ்சுக்க மாட்ராங்கோ" 

"நா ஒன்னியும் அடிக்டெல்லாம் கடியாது" 

என்று ஸிம்பதி ஸீன் போட்டு அழுது குடி ஓல் விடுவது என்று இருந்தாலோ, நன்கு நோட் பண்ணிக்கொண்டு இருந்துவிட்டு அவர்களுக்கான நேரம் வந்ததும் போடா மயிறு என்று விட்டுப்போய் விடுவார்கள். பிறகு ஏதாவது அவர்கள் வாழ்க்கையில் சில தடங்கல்களோ சோதனைகளோ வந்தால் மட்டும் அப்பன் மீது இன்ஃபாச்சுவாசன்  மாதிரி ஒரு பாசம் வரும். அந்தப் பாசமும் அவர்களுக்கு இவர் தலையைத் தடவிக் கொடுக்கவேண்டும் என்பதற்கான சுயநலம் காரணமாக செலெக்டிவாக வரும். தேவை தீர்ந்ததும் மறுபடி ஓடிப்போய்விடுவார்கள். சில காலம் கழித்து வயோதிகம் வரும்போதுதான் மறுபடியும் மிஸ் பண்ணுவார்கள். அதையெல்லாம் பார்ப்பதற்கு ஆள் உயிரோடு இருக்கவேண்டுமே?

சில சமயங்களில் ராஜாபாதரைக் கேப்பதும் உண்டு. கொறஞ்சிக்குங்க பாதர் என்று சொன்னால் - 

வுடுபா டெய்லி காலைல எய்ன்சிக்க சொல்லோ கீயாநெல்லி ஜூஸ் குடிக்கறேன் என்பார். லிவ் ஃபிப்டி ட்டூ எடுத்துக்கறேன் என்பார். அதெல்லாம் வெறும் ப்ளஸீபோ என்று யார் போய்ச்சொல்வது? ப்ளஸீபோ என்றால் என்னவென்று கூப்பனுக்கே தெரியாது. Evisceration பற்றியெல்லாம் தெரிந்தது கூட வேலையின்றி சுற்றிய தொடக்க காலத்தில் அலிகாரில் ஒரு ஸ்லாட்டர் ஹவுசில் மானேஜர் என்று வேலை என்று சொல்லி கூட்டிப் போய்விட்டார்கள். முதலில் ஸ்லாட்டர் ஹவுஸ் என்றாலே என்னவென்று தெரியாது. எதோ மானேஜர் என்றதும் எதுவுமே கேட்காமல் வண்டியேறிவிட்டான் நம்மை தினமும் கேப் வைத்து கூட்டிக்கொண்டு போய் கோப்புகளில் கையெழுத்துப் போடச்சொல்லி சம்பளம் கொடுத்து பார்த்துக்கொள்வார்கள். கூட கேபில் பயணிக்கும் சப் ஆர்டினேட் கம் சப்பை ஃபிகருக்கு கடைசியில் இறங்கும்போது ரொம்ப chivalrous ஆக இருக்கிறமாதிரி ஸீன் போட்டு கதவு திறந்துவிட்டு ரூட் விட்டு கவுத்து வாட்சப்பிலேயே கடலை போட்டு கசமுசா பண்ணி பிறகு நன்றாக இருந்தால் கல்யாணம் வரை போவதற்குக்கூட பிளான் வைத்திருந்தான். அங்கு போனால் முதலில் ஒரு வாரம் ஏசி  ரூமில் Compliance, Sanity audit என்று என்னென்னவோ ட்ரெயினிங் கொடுத்தார்கள். நேராக போய் சீட்டில்  மண்டையைச் சொரிந்துகொண்டு உட்கார்ந்துகொண்டு என்ன வேலை செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தான். கொஞ்சநேரம் யாரும் எதுவும் கேட்கவில்லை லைனில் ஏதோ ஒரு compliance பிரச்சனை காரணமாக லைனுக்குள் சென்று இன்ஸ்பெக்ஷன் செய்து எதோ இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட்டு ஆபீசுக்குள் வந்த  மலையாளி ஏஜிஎம், தமிழ் நன்கு தெரியும்,  இவனைப் பார்த்துவிட்டு -

"நீ இங்க என்ன புடுங்குது? லயனிலு போயிட்டு வேலஎய்யடா மயிரே" 

என்று பிளாண்டுக்குள் போய் வருவதற்கு அக்சஸ் கார்டில் எநேபிள் பண்ணிவிட்டு  உள்ளே விரட்டி அனுப்பினார். அடுத்த முறை உன்னை சீட்டில் பார்த்தால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டி அனுப்பினார். அவருடைய அசிஸ்டன்ட் தமிழச்சி. புருஷனுக்கு அலிகார் முஸ்லீம் யூனிவெர்சிடியில் வேலை, அதற்கும் நன்கு மலையாளம் தெரியும் Cold Case என்னும் மலையாள படத்தில் நம் திருடா திருடா ஆனந்த் பேசுவாரில்லையா அந்த மாதிரி. இவனுக்கு ஒரு வாரம் வாந்தி நிற்கவே இல்லை டைஸிக்ளோமைன் போட்டுகொள்ளச் சொன்னார்கள். தலை வலி உயிர் போனது ஆஸ்பிரின் போட்டுகொண்டு வேலை செய்யச் சொன்னார்கள். ஒரு வாரத்திற்குள்ளாகவே உடலும் மனமும் குவாண்டனாமோ சிறைக்கைதி மாதிரி ஆகிவிட்டது. முதல் மாதம் சம்பளம் வாங்கியதும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துவிட்டான். 

ஒரு மூன்று மூடிகள் குடித்து  முடிப்பதற்குள் ராஜபாதர் அவதிப்படுத்தத் தொடங்கிவிடுவார்.

"போலா வாபா. பார்சல் கட்டினு போறியா. வூட்ல போய் குடி" என்பார். 

என்னது வீட்டிலா? அதுவும் கோதையின் முன்பா!?

(தொடரும்) 


Comments

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience