ஊர்ப்பெருமையும் ஊரின் பெருமையும்
சொந்த ஊருடனான பற்றுதலும் பெருமையும் இல்லாமலா நான் என் அகவையில் பாதிக்கும் மேலான வாழ்நாளை தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலங்களில் பராரியாகச் சுற்றித்திரிந்தும் மொழி மறவாமலிருப்பேன்? அதுவும் சாதாரண ஊரா? கொங்கு மண்டலத்தின் இருதயப்பகுதியிலிருக்கும் ஓர் ஊர். எம் பாட்டனார் பெயரால் ஒரு தெரு கூட அமைந்திருக்கும் ஊர். அனைத்திற்கும் மேலாக நாகேஷ் பிறந்து வளர்ந்த ஊர். அவரைப்போலவே அதே சமூகத்தில் பிறந்து அதே தெருக்களில் வளர்ந்து கனவை வளர்த்துக்கொண்ட சீனி, இப்போது அவர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் கூட வெளியீட்டுக்குத் தயாராகி விட்டது.
ரங்கநாதன் என்ற ஒரு நண்பன் பற்றி முன்பே சொல்லியிருந்தேன் அல்லவா? அவன் வீட்டிற்குப் பக்கத்து வீடு சீனிக்கு. ஒரே கிணறு, ஒரே சுவர்! அப்போதைய சீனிக்கு இப்படி ஒரு தேடுதல் உண்டு என்பதெல்லாம் எனக்கெல்லாம் வெறும் கூறக் கேள்வி மட்டும்தான். எனக்குத் தெரிந்த சீனியிடம் நான் கண்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கும் அமர்த்தலான நகைச்சுவை உணர்வு. இரண்டாவது இசை மீதான ஆர்வம். கிண்டலும் கேலியும் அவர் முகத்தில் புள்ளி ஒன்று வீதத்திற்குக் குறைவாகக்கூட வெளிப்படா. அவருடைய நகைச்சுவை உணர்வு என்பது எப்படியென்றால், Second Nature என்று சொல்வார்களில்லையா அந்த மாதிரி அவரில் இயல்பாக இருக்கும் ஒன்று. மிக முக்கியமாக இசை மற்றும் இசைக்கோர்வைகளின் மீதான பேரார்வமும் மிக உன்னிப்பான கூர்நோக்கும்தான் இவரை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துருக்கிறது என்பது என் அவதானம். 90களில் இவரின் மூத்த சகோதரர் திரு. பிந்து மாதவன் அவர்கள் கூட சுஜாதாவின் சிறுகதை ஒன்று தொலைக்காட்சித் தொடராக வெளிவந்திருந்தது, அதில் தோன்றியிருந்தார்.
சீனியிடம் நான் கண்ட இசையார்வத்தின் ஒரு சாயல்தான் "மயக்காதே மாயக்கண்ணா" எனும் பாடல்! ஸாம் சி. எஸ் மிக அற்புதமாக இசைக்கோர்வை செய்ய, ஸ்ரீநிஷா பாடியிருக்கும் இப்பாடலில், சீனியின் பங்கு கண்டிப்பாக இல்லாமல் இராது.
பல வருடங்களுக்குப் பிறகு, சென்ற முறை அவரை சந்தித்தது ரங்கநாதன் வீட்டில் வைத்து 2014 இல், நான் மும்பையிலிருந்து வந்து ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்துவிட்டுச் சென்றேன். அப்போது விளம்பரப்படங்களில் வெகு முனைப்புடன் இருந்தார் சீனி.
அவர்தான் இப்போது சபாபதியை இயக்கியிருக்கிறார். ட்ரைலர் பார்த்தபோது நான் அவர் பற்றி மேலே குறிப்பிட்ட இரு விஷயங்களும் உண்மை என்று மெய்ப்பிப்பது போல் இருந்தது. நண்பர் சீனிக்கு என் மனமார்ந்த வெற்றி வாழ்த்துக்கள்!
மிக அருமை ப்ரசன்னா... இது வரை எனக்கு தெரியாது நமது ஸ்ரீனி உடைய கலை பயணம்....என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்... மேலும் மேலும் வளர தாராபுரம் ஆஞ்சநேயர் கூட இருந்து அருள வேண்டுகிறேன்...
ReplyDeleteநட்புடன்..
என்றென்றும் உங்கள்
கார்த்திக்...
இனி ஒரு விதி செய்வோம்....
ReplyDelete