மார்ட்டின் க்ரோ, மார்க் க்ரேட்பேட்ச் மட்டை இரட்டையர் மற்றும் கெவின் லார்சன், டேனி மோரிஸன் பந்துவீச்சு இரட்டையர் என்று அந்தகாலத்திலிருந்தே யாம் நியூஸீலாந்து அணியின் தொடர் விசிறி. 90களில் இங்கு வந்து சுழற்பந்தில் திணறி அடிவாங்கித் தோற்று ஊர் சென்று, பிறகு துணைக்கண்ட அணியினரை நீங்கள் இங்கு வாருங்களடா என்று அழைத்து அப்போதுதான் அறுவடை முடிந்த நெல்வயல் மாதிரி இருக்கும் ஆடுகளங்களில் விட்டு பந்துக்கிண்ண மூட்டுகளையும் விலாக்களையும் வேலை பார்த்து அனுப்புவார்கள்.
இந்தியாவின் மிக முக்கிய ஒருநாள் உலகக்கோப்பை எதிரி! 99 இல் சூப்பர் சிக்ஸில் ஜிம்பாவேவுடன் தோற்ற குற்ற உணர்வுடன் குமுறிக்கொண்டிருந்த இந்திய அணியை சூப்பர் சிக்ஸிஸ் 250+ ஓட்டங்களை அனாசயமாக அடித்து வெளியேற்றியது. இருபது வருடங்கள் கழித்து வரலாறு திரும்பவுது போல், 2019 இல் மறுபடி அரையிறுதியில் இருந்து அடித்து விரட்டியது. 2003 இல் ஜாகீர் கான் திடீர் வாசிம் அக்ரமாக அவதாரம் எடுத்து நியூஸிலாந்தை மிரட்டி வெளியேற்றி ஆறுதல் அளித்தார்.
என் வாழ்நாள் கனவே நியூஸீலாந்து ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வது என்பதுதான். சென்ற முறையும் துரதிர்ஷ்டம் துரத்தியது. 2019 இல் இங்கிலாந்திடம் கோப்பையை, போட்டியை டை செய்தும் கூடத் தோற்றது. என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. இப்படியெல்லாம் கூட நிகழுமா என்ற அளவுக்கு நாடகம் போல் இருந்தது அப்போட்டி.
அசகாய சூரன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை செவிட்டில் அறைந்து வெளியேற்றியது குறித்து மகிழ்ச்சி! உள்ளிருந்து ஆடும் வீரர்களை விட ஓய்வு மாமாக்களின் மங்கானித்தனம் தாளமுடியாமல் இருந்தது. அனுமதித்த அளவை மீறி கட்டைச்சுவர் மீது அமர்ந்துகொண்டு காவடிச்சிந்து பாடிக்கொண்டிருந்தனர். செமி முடியும்வரை தேவையில்லா துவாரங்களை மூடிவைத்துகொண்டு காத்திருந்திருக்கலாம். ஆஸி வழக்கமான ரவுடித்தனத்துடன் இடதுகையால் பாக். ஐக் கையாண்டு இறுதிப் போட்டி ஏகியது. மாத்யூ வேய்ட் அடித்த அடியில் ஷோயிப் அக்தர் உள்ளிட்ட சிலருக்கு எங்கெல்லாம் பிய்ந்து தொங்கியது என்று ஹிந்தி மீடியாக்கள் கேட்டறிந்து உலகுக்குச் சொல்லவேண்டும்.
டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றுப் பெருமைகள் மற்றும் க்ரோனிக்குகளில் பொதுவாக மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் கதைகளே சொல்லி மாயப்படும். எந்தக்கதைகளிலும் இடம் பிடிக்கா நியூஸீலாந்து டெஸ்ட் சாம்பியன் ஆனது. மூன்று ஆண்டுகளில், மூன்று வெவ்வேறு போட்டி வடிவங்களில், இறுதிப்போட்டியில் பங்கு பெறுகிறது. கிரிக்கெட்டின் உச்ச பட்ச பெருமையான டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் பட்டத்தை வென்ற கையோடு இப்போது T20 இறுதியில். மூன்றுமே கேன் வில்லியம்ஸின் தலைமையில்!
எம் கனவுகள் நனவாகும் காலமிது!
Comments
Post a Comment