கிரிக்கெட் ஆயாசம்
T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இதோ நேற்று முன்தினம்தான் நடந்து முடிந்தது. அதற்குள் நியூஸிலாந்து இந்தியாவில் வந்து T20 பை லேட்டரல் ஸீரீஸ் ஆடத்தொடங்கி முதல் போட்டியில் தோற்றும் ஆகிவிட்டது! எழுதுவதற்கே இவ்வளவு ஆயாசமாக இருந்தால், தொடர்ந்து ஐபிஎல் உ.கோ மற்றும் இன்னபிற சீரீஸ்களில் ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களுக்கும் அணிகளுக்கும் எப்படி இருக்கும்? இயந்திரம் மாதிரி எப்படித்தான் ஆடித்தீர்க்கிறார்களோ தெரியவில்லை. ரசிகர்களும் கொஞ்சம்கூட அலுப்பேயில்லாமல் கண்டு களித்துத் துன்பம் துய்க்கிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு நாள் உலகக்கோப்பை முடிந்தவுடன் ஒரு மாதம் கழித்து சம்பிரதாயமாக ஒரு அணி இன்னொரு நாட்டில் போய் ஒரு தொடரில் ஆடும். அல்லது மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர், பிறகு ஒரு அணி ஊர் திரும்பிவிட மற்ற இரு அணிகள் 5 டெஸ்ட்கள் கொண்ட தொடர் ஒன்றை ஆடி முடித்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள். அவ்வளவுதான் அடுத்த உலகக்கோப்பை வரை ஈயாடும். எந்தப்போட்டிகளும் எங்கும் நடக்காது அவ்வப்போது இந்திய அணி ஷார்ஜாவில் போய் விளையாடிவிட்டு பாகிஸ்தானுடன் தோற்றுத்திரும்புவதுடன் சரி. ஸ்ரீகாந்த், கவாஸ்கர் என்று ஊர் திரும்பும் அணித்தலைவர்களை புட்டத்தில் உதைத்துப் பதவியைப் பறிப்பார்கள். பிறகு அவர்கள் காலம் முடிந்தவுடன் வெளியில் இருந்துகொண்டு பெரிய்ய புடுங்கி மாதிரி பேசுவார்கள்.
அப்போதெல்லாம் டெஸ்ட் கிட்ஸுடன் (வெண்சீருடை) செர்ரி பந்தில் (குருதி நிறப் பந்து) ஒரு நாள் போட்டி நடக்கும். கோடைகாலங்களில் கனடா மற்றும் ஷார்ஜா போன்ற அரபுநாடுகளிலும் மாலைக் கதிரொளி இன்னும் கொஞ்சம் நேரம் நீடித்து ஒளிரும் என்பதால் வெண்சீருடை ஆட்ட வசதி சாத்தியம். ஆஸ்திரேலியா நியூஸீலாந்திலும் அதேதான் ஆனால் மற்ற இடங்களில் கோடை என்றால் அங்கு குளிர்காலம், குளிர் என்றால் கோடை என்று ருதுக்கள் நேரெதிராக இருக்கும். வெண்சீருடை ஒரு நாள் ஆட்டங்கள் அங்கும் இருந்தன. தற்காலங்களில் பணவெறி காரணமாக டெஸ்ட் போட்டிகளைக்கூட பகலிரவாட்டமாக, கோமாளிச் சீருடைகளுடன் ஆட்டுவிக்கத் துணிந்துவிட்டார்கள்.
மற்றுமொருமுறை வெற்றிக்கோட்டுக்கு மிக அருகே சென்ற நியூஸீலாந்து, ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிக் கோப்பையைக் கைப்பற்றத் தவறிவிட்டது. எத்தனுக்கு எத்தன் அவனியில் உண்டு என்று நினைத்தேன், ஏமாற்றம் தந்தனர் கருப்புத்தொப்பிகள். டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர் அனல் பறக்குமென்றால், ஒருநாள் மற்றும் T20யில் இந்தியா பாகிஸ்தானின் போட்டிகளுக்கு இணையாக ஆஸி-நியூஸி போட்டிகளிலும் பொறி பறக்கும். இறுதியில் ஆஸி நியூஸியை எளிதில் ஊதித்தள்ளிவிட்டது. ஆஸ்திரேலியாவை எந்தக்கோப்பையிலும் தொடக்கத்திலேயே விரட்டியடித்து வெளியேற்றிவிடவேண்டும் இல்லையேல் தலைக்கு மேல் ஏறித் தாண்டவமாடிவிட்டுதான் ஓய்வார்கள்.
T20 போட்டிகளைப்பற்றி மேற்கொண்டு என்னவென்று எழுதுவது? எந்தப்போட்டியைக் கண்டாலும் ஏதோ டென்னிஸ் பந்தில் ஆடப்படும் உள்ளூர் போட்டி போல் வளைத்து வளைத்து சிக்ஸர்களாக வெளுத்து மாய்கிறார்கள். மட்டையாளர்கள் எஜமானர்கள் போலவும் பந்துவீசுபவர்கள் ஏவலாளிகள் போலவும் ஈவிரக்கமின்றி அடித்து ஒடுக்கப்படுகிறார்கள். இவை தவிர, தொடக்கத்தில் குறிப்பிட்டாற்போல் வரிசையாகத் தொடர்கள் வேறு. அந்தோ அடுத்த உலகக்கோப்பை மறுபடியும் 2022இல் ஆஸ்திரேலியாவில்!
-ப்ரஸன்னா
Comments
Post a Comment