மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஐந்து)

ந்த மூடிக்குடியே கூட மணங்களைப் பகுத்தறியவியலா கோதையின்  நுகர்சிப்  புலன் சார்ந்த ஒரு குறைபாடு காரணமாகத்தான் சாத்தியப்படுகிறது. வயிற்றினுள் மெதுவான வன்கோரத்துடன் விரவிப்பரவுகின்ற கச்சைச் சாராயம் விருவிருவென உட்கிரகிக்கப்பட்டு குருதியில் கலந்து நாசிவழியே கசிந்து நாறிக்கொண்டிருந்தாலும் வீட்டிற்குள் சத்தமில்லாமல் போய்ப்  புழங்க முடிகிறது. சில மூடிகள் அதிகமானால் அதற்கும் வினை. 

வீட்டில் குடிக்கத்தொடங்கியவனை சில முறை எச்சரித்தும் கேட்கவில்லை. உனக்கு என்னடி தெரியும் ஆபீசுல எவ்ளோ ப்ரச்சன தெரியுமா? சரக்கடிச்சா எவ்ளோ ரிலாக்சா இருக்கு தெரியுமா? என்றுவிட்டு நடு நடுவில் எமொஷனல் ரொமான்ஸ் கொடுத்தான். அது அவளுக்குப் புரியவே இல்லை. 


ஆனால் அதில் ஒருவித  ஒருவித கிக் இருந்தது. அட இது புது மாதிரி இருக்கிறதே என்று முதலில் ரசித்தவள், இவன் ரொம்ப ஓவராகப்போகவே, ஊரில் உள்ள சில அக்காள்களிடம் போன் செய்து கேட்டிருக்கிறாள். அவர்களே குடி கிராஜுவேட் ஆகிப் பலவருடங்கள் ஆகின்றன. குடல் கறியுடன் ஊறுகாய் நக்கிகொண்டே ஒன்றரை குவாட்டர் அடித்துவிட்டுப் புருஷனுடன் ஜாலி பண்ணும் சீனியர்கள். இவளிடம் மட்டும் குயுக்தியாக, பழைய விஜய நிர்மலா-சிவாஜி பாணி டெக்னிக்கை முயலுமாறு யோசனை சொல்ல, இவள் கூப்பன் குடிக்கும்போது, டீ கிளாஸை சபீனா கூட  போட்டுக்கழுவாமல் வெறும் போர் தண்ணியில் ஒரு அலசு அலசி எடுத்துச் சென்று- 

"எனக்கும் கொஞ்சம் ஊத்துங்களேன், நானும்தான் குடிச்சுப்பாக்கறேன்" என்று நீட்டினாள். 

அவன் வசந்தமாளிகை சிவாஜி மாதிரி பாட்டிலை சுவற்றில் அடித்துவிட்டு. 

"உம்மேல சத்தியம் இனிமே நான் இந்தக் கண்றாவியை கனவிலும் நெனச்சிப் பாக்கமாட்டேன்" என்று சொல்லாமல்-  

"பொண்டாட்டிங்கன்னா இப்புடிதான் புருஷன் மனச புரிஞ்சு நடந்துக்கணும். இது சரக்கில்ல, மருந்து...மனசு வலிக்கு மருந்து" 

என்று வீட்டுக்குள்ளேயே கம்பெனி கிடைத்த உற்சாகத்தில் ஐந்து மூடிகள் அளந்து ஊற்றினான். இப்படித்தான்  தொடங்கிற்று.  

ஒரு முறை ராஜாபாதருடன் குடித்துவிட்டுப் போய் வீட்டில் இறங்கி ஐந்தே நிமிடங்களுக்குள் எப்படியோ அவளின் மட்டமான மோப்ப சக்தியையும் மீறி ஓல்ட் சீக்ரெட் ரம்மின் மணம் அவள் நாசிக்குள் புகுந்துவிட்டது. திருமணத்தின் போது பார்ப்பதற்கு  உயிருள்ளவரை உஷா நளினி மாதிரி இருந்த கோதை அதற்குள் செம்பருத்தி நளினி மாதிரி ஆகிவிட்டிருந்தாள். கூப்பனோ பொன் மாணிக்கவேல் பிரபுதேவா மாதிரி இருந்தவன் இந்து பிரபுதேவா மாதிரி ஆகிப்போயிருந்தான். இந்த நிலைமையில் கர்லாகட்டையை ஒத்த கரங்களால் ஏந்திய உருட்டுகட்டையால் கோதையிடம் அடி வாங்கிய கூப்பனின் நிலமை எப்படி இருந்திருக்கும்? 

இத்தனைக்கும் ஆரம்பத்தில் வெகு ஆர்வத்துடன் குடி கூத்துகளில் பங்கேற்று  நெடு நேரம் இன்புற்றுத் திளைத்தவள்தான். இரவில் கூப்பனுடன் நிலைத்து நின்று ஆடியவள்தான். காலப்போக்கில்  சுவாரசியம் போய் வெறுப்பு மிஞ்சியது. காரணமில்லாமல்  இல்லை; குடி கூத்து என்று எல்லாம் முடிந்து காலையில் கூப்பன் மட்டும் படுக்கையில் புரண்டுகொண்டு எழுந்திருக்காமல் அராஜகம் செய்துகொண்டு இருந்தான், ரெண்டாம் ஆட்டம் மூன்றாம் ஆட்டம் எல்லாம் முடிந்து ஏறக்கட்டிவிட்டு, இவன் முயங்கி, அடங்கி மட்டையானதும், எழுந்து ஏனம் கழுவி வைத்துவிட்டு, தயிருக்கு உரை குத்திவிட்டு, இருவரின் உள்ளாடைகளை அலசி துவைத்துக் காயப்போட்டுவிட்டுப் படுத்தாள்.  பிறகு முதலில்  எழுந்து செக்கு மாடு மாதிரி காலை முதல் இரவு வரை அதே வேலைகள், அதே களைப்பு, அதே அலுப்பு தவிர  வயிற்றில் கூப்பனின் வாரிசு. கூப்பனை விட இரு மடங்கு குடித்தும் மிகச்சரியாக கம்பெனி கொடுத்ததுடன் ஒரு முறை கூட குடி ஒல் மட்டும் விடவே இல்லை, மாறாக கூப்பனின் குடி ஸ்டேட்மெண்ட்டுகள், தாழ்வு மனப்பான்மை, "குடிஉயர்வு" மனப்பான்மை, போன்ற அனைத்தையும் அவள் மூளை இனங்கண்டு தனித்தனியாகப் பிரித்தடுக்கிகொண்டது.  

"நீ வேணா  பாருடி.. ஒரு நா... ஒம்புருஷெங்... அந்த மேனேஜர் தேவிடியால...எல்லாரு முன்னாலயும் நிக்க வச்சி..." 

"நான் எவ்ளோ நல்லவன் தெரியுமா"

"எனக்கு என்ன தெறம இல்லனு நெனச்சியா?"

"பாசத்துக்கு ஏங்குனவண்டி நா , பாசம்னா என்னானு தெரியுமா?"

"நா ஒன்ன எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா? லவ்வுன்னா என்னானு தெரியுமாடி ஒனக்கு? தேவ்டியா..."

"மூளன்னு ஒன்னு இருக்கு தெரியுமா? மூள மூள...எனக்கு இருக்கற மூளைக்கி நா எங்க இருக்கனும் தெரியுமா? அறிவுன்னா என்னனு தெரியுமா? எனக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு நெனச்சியா? என் இங்கிலீஷ எடுத்து வுட்டன்னா உனக்கும் புரியாது அந்த தேவுடியாளுக்கும் புரியாது"

தரமான குடி ஓல்கள். பிறகு படுத்து உருண்டு கொண்டே மேலதிக குடி ஓல்கள். படுத்துகொண்டே விடும் குடி ஒல்களில் மட்டும் காதலும் கழிவிரக்கமும் பிற  உயிரினங்களின் மீதான மற்றும்  சக மனிதர்கள் மீதான அன்பும் அக்கறையும் அறமும் பீறிட்டு ஊற்றும். ஒரு வேளை தூங்கும்போது குரவளை நசுக்கப்பட்டோ அல்லது தலை மீது அம்மிக்கல் எறிந்து சிதைக்கப்பட்டோ இறப்பதில் கூப்பனுக்கு அக்கடும் போதையிலும்கூட ஒரு ஒவ்வாமை. இம்மாதிரி மென்னிரக்கக் குடி ஓல்கள் விடுவதன் மூலம், முன் விட்ட வக்கிர குடி ஓல்கள் சமண் படுத்தப்பட்டு கொஞ்சம் பரிதாபம் பிறக்கலாம். அம்மிக்கல்லோ, குரல்வளை நெரிப்போ இராது. மறுநாள் எழுந்ததும் பார்த்துக்கொள்ளலாம். படுத்து மட்டையாவதுடன் சரி காலையில் எழுவதில்லை. எழுந்தால் தானே, எழுந்து வேலைக்குப் போனால்தானே  அவன் குறிப்பிட்ட மானேஜர் தேவிடியாளை குடி ஓலில் சொன்னது மாதிரி செய்ய முடியும்?

நாளாக ஆக, இவன் சேட்டைகள் அதிகமாகவே இவள் சர்வைவல் இன்ஸ்டிங்க்ட் விழித்துக்கொண்டுவிட்டது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு குடி கம்பெனியை ஒரே நாளில் தூக்கி எறிந்துவிட்டு கையில் அதை எடுத்துக் கொண்டுவிட்டாள். 

கூப்பனுடன் மூர் மார்க்கெட் சென்ற கோதைக்கு எதுவுமே பிடிக்கவில்லை. முதலில் ஒரு பழைய புத்தகக்கடையில், ஒரு கையில் பாலகுமாரன் மறு கையில் ஜெயகாந்தன் என்று இரு மொந்தை புத்தகங்களைக் கையில் வைத்துத் துலாபாரம் போட்டுப்பார்த்தாள். எடுத்துப் பார்த்து ஒருரிரு நிமிடங்கள் எடை பார்த்தவள், பிறகு இறுதியாகவும் உறுதியாகவும் இரண்டையும் தூக்கிக் கடாசிவிட்டாள். 

கடை ஆள் -  

"மேடம், மேடம் சொல்லுங்க மேடம் நானும் பாலகுமாரன் ரசிகன்தான் மேடம்-"   

"எவ்ளோன்னாலும் சரி நல்ல ரேட்டு தர்றேன் மேடம். பரவால்ல மேடம்"

"இப்போ இல்லேன்னாலும் பரவால்ல அடுத்த வாரம் வாங்க மேடம். இப்போ ஒங்க  மனசு ஒரு நிலைல இல்ல நெஞ்சு கெடந்து அடிச்சிக்குது பாருங்க" 

"நாம நெனைக்கறது சரியா தவறானு தெரியாது"

"நான் உங்குளுக்கு போதனை பன்றேன்னு  தோணலாம். தோணனும் "

"நீங்க எங்கிட்ட இருந்து கத்துகிட்டு என்ன பண்ணப்போறேன்னு நெனைக்கலாம்.  ரெண்டுமே ஈசிதான், ஆனா வாழ்க்க?  கஷ்டமானது!"

"கத்துக்கிட்டதெல்லாம்  மறந்து போற மாதிரியான சந்தர்பங்கள வாழ்க்க அடிக்கடி ஏற்படுத்தித் தரும்."

"மனசுக்கு இதுதான் நல்லதுன்னு தெரிஞ்சிருக்கும் ஆனா கரெக்ட்டா கெட்ட விஷயத்த பச்சக்குனு புடிச்சுக்கும் புத்தி."

"அதுதான் மனசு! அதுதான் புத்தி! நல்லா இழுத்து மூச்சு விடுங்க!" 

"ஒங்க தோளுங்க ஏறி எறங்கும், உங்க மார் பாருங்க எப்புடி ஏறி ஏறி எறங்குது. ஆனா மனசு ஒரு நெலப்படும். மனசு சொல்றத புத்தி கேக்கும்"

"ஒங்க மனசு ஒங்ககிட்ட  தேவதூதன் மாதிரி எறங்கி வந்து கடைக்காரன்   சொல்றத கேளேன்னு ஏங்கும்."

கூப்பனைக் கைகாட்டி -

"ஒங்கள இங்க இட்னு வந்துருக்கற ஒங்க அண்ணன் பேச்ச மட்டும்  கேக்காதீங்க, ஆனா என் நம்பர நோட் பண்ணிக்குங்க...நைன் ஃபைவ் டூ ஃபைவ்..."

மூன்று மணி நேரம் அலைந்து திரிந்து, பஜ்ஜி உண்டு, டீ குடித்து, வெய்யிலில் அரைச்சாவு செத்து, பிறகு தாகத்திற்காக பாய் கடையில் பிரிஜ்ஜில் இருந்து எடுத்த ஃபாண்டா குடித்தும் மூர் மார்க்கெட்டில் ஒன்றும் பிடிக்கவில்லை. அங்கேயே குமட்டிக் குமட்டி வாந்தி எடுத்தாள் கோதை.

பிஸ்லரி தெளிக்கப்பட்டு, கொஞ்சம் அருந்தி எல்லாம் முடிந்து சரி என்று என்றுதிரும்பும்போது, சென்ட்ரல் ஸ்டேஷன் வாயிலருகில் உள்ள ஒரு சிறு பையனின் குப்பல் கடையில் உள்ள பொருள் ஒன்று இவளை ஈர்த்தது.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience