புனீத்துக்கு ஒரு தாஸாஞ்சலி

புரந்தரதாஸர் நான்கு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கீர்த்தனைகளை எழுதியிருக்கிறாராம்! அவரைபற்றியெல்லாம் எழுதுவதற்கு குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் கீர்த்தனைகளையாவது கேட்டோ பயின்றோ இருக்கவேண்டும். அது தவிர கன்னட மொழியும் ஸமஸ்க்ருதமும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம், அவருடைய கீர்த்தனைகள் பக்தி இயக்கங்களின் தொடர்ச்சியாக நாம சங்கீர்த்தனை வகையில் வருவதால், அவைகளில் இருக்கும் சாராம்சத்தை ஓரளவு மொழிப் பரிச்சயம்  இருந்தால் கொஞ்சம் புரிந்துகொள்ள முடியும். மற்ற பாடல்களைப்பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் இந்த பாடல் கொஞ்சம் அக்காலக் கடினமான ஹளே கன்னடா மொழிவழக்கில்  இருப்பது போல் தோன்றியது.  இப்பாடலை நான் கேட்க நேர்ந்த இந்தத்தருணமும் புனீத் ராஜ்குமாரின் மறைவும் ஒரு வலிமிகு தற்செயல் என்றே குறிப்பிட வேண்டும். 

யாக்கை நிலையாமை பற்றி எத்தனையோ கேட்டும் படித்தும் இருப்போம் ஆனால் வேற்றுமொழியாக இருந்தாலும் இப்பாடல் அதை ரொம்ப உடைத்துச்சொல்வது போல் அமைந்துள்ளது. இப்பாடலின் ஒரு வரி முதலில் உண்மையை உடைத்து மென்சோகத்தை  ஏற்படுத்தி, பிறகு தொடரும் வரி அதைத் தேற்றுவதைபோல் உள்ளது. எனக்குத்தெரிந்த அளவுக்கு இப்பாடலை மொழி பெயர்த்து வழங்கி இருக்கிறேன். வேறு எங்கும் ஆங்கிலத்தில் கூட மொழி பெயர்ப்பு இல்லை. ஆகையால் இப்பதிவினைப் படிக்கும் யாராவது இன்னும் நல்ல தமிழ் அல்லது ஆங்கில பெயர்ப்பை கீழே பின்னூட்டத்தில் நல்கினால் நன்று. 



யார் வருவார் உன் பின்னால்? 

இங்கு வாவென்று எம தூதர்கள் கூப்பிட்டழைத்துச் செல்லும்போது  

யார் வருவார் உன் பின்னால்?

உன் துணையோ சுற்றமோ நட்போ வரமாட்டார்

யார் வருவார் உன் பின்னால்?

உன் சொல்லோ செல்வாக்கோ வரா

லக்ஷ்மிபதியான திருமாலை விட்டால் இங்கு கதியாருமில்லை 

யார் வருவார் உன் பின்னால்?

குதிரைகளும் யானைகளும் வாரா உன் பொருள்களோ உடமைகளோ இனி உன்னுடையவை அல்ல  

யார் வருவார் உன் பின்னால்?

நரனே நீ யாருக்கும் இனி பதியில்லை உனக்கு சேவை செய்ய இனி அவள் உன் பத்தினியும் இல்லை

யார் வருவார் உன் பின்னால்? 

நரஹரியை விட்டால் இனி ஒரு கதியொன்று இங்கில்லை 

யார் வருவார் உன் பின்னால்?

தனங்களும் தானியங்களும் பொக்கிஷங்களும்  பெட்டகங்களும் வரா,

நீ பெற்ற பெண்ணோ பிள்ளையோ வரமாட்டார் நம் ஹனுமய்யனை விட்டால் உனக்கு கதியேதுமில்லை 

யார் வருவார் உன் பின்னால்?

இத்தேகத்தை விட்ட பிறகு உன்னை தீயிட்டு எரிப்பரோ 

உன் பூதியை நீரில் கரைப்பரோ வீதியில் வந்து நின்று நீ மீண்டெழுந்து வருவாயென பார்ப்பரோ?

இன்னதென்று(மரணத்தை) தெரிந்துகொண்ட பிறகு இனி இப்பூதவுடலுடன் இவ்வாழ்க்கையில் முன் செல்ல வேறு கதியில்லை, என்னுடையவனே நீயே கதியென்று புரந்தர விட்டலா உன்னைப் பணிகின்றேன் எனை ரக்ஷித்து ஒரு நல்ல அறிவுரை சொல்        

யார் வருவார் உன் பின்னால்?

இப்பாடலைக் கேட்கும்போது கண்கள் ஒரு நொடி கலங்கத்தான் செய்கின்றன . புனீத் எனும் மனிதரின் பின்னால்  செல்வதற்கு அவர் செய்த கணக்கில்லா நற்செயல்களும் தான தருமங்களும் உள.

-ப்ரஸன்னா 



Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15