மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஆறு)

யிரத்தித் தொள்ளாயிரத்து நாற்பத்து மூன்றாம் ஆண்டு சென்னையில் அக்டோபர் மாதம் ஒரு ஆறு நாட்கள் தொடர் அடமழை விடாமல் கொட்டித் தீர்த்தது. அது பற்றி அசோகமித்திரன் கூட, தான் சிறுவனாக இருக்கும்போது செகந்தராபாத்தில் இருந்து எப்படி வண்டி மாறி மாறி சென்னை சென்ட்ரல் வந்து அங்கிருந்து சைதாப்பேட்டை போகமுடியாமல் மாம்பலத்திலேயே லோக்கல் ட்ரெயின் நின்றுவிட்டது என்பது பற்றியெல்லாம் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். மொத்த சென்னையையும்  கடற்கோள் கொண்டுவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு என்னூர், திருவொற்றியூர், எழும்பூர், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, செயின்ட் ஜார்ஜ் டவுன், சிந்தாதிரிபேட்டை, சாந்தோம் என்று மொத்த சென்னையும் நீரில் பல நாட்களுக்கு மூழ்கித் தத்தளித்ததாம். 

ஐஸ்ஹவுஸ் பாதி உயரத்துக்கு மேல் நீரில் மூழ்கியது. அதில் முன்னொரு காலத்தில் பாஸ்டனில் இருந்து கப்பலில் பல மாதங்கள்  பயணம் செய்து மதராஸ் துறைமுகம் வந்தடைந்த பனிப்பாளங்கள் காற்றோ சூரிய ஒளியோ புகா வகையில் அமைக்கப்பட்ட பல பனி மண்டபங்களில் வைக்கப்பட்டன. அம்மண்டபங்கள் கூட முற்றாக மூழ்கி விட்டன. இப்போது போலீஸ் ம்யூசியமாக இருக்கிறது அல்லவா? அது 1856 முதல் 2013 வரை சென்னை கமிஷனரேட்டாக இருந்தது. அது கமிஷனரேட்டாக இருக்கும்போதே கூட, ஆங்கிலேயர் காலத்தில், கட்டிடத்தின் ஒரு சிறு பகுதியில் இம்பீரியல் போலீஸின் வாகனங்கள், உடைகள் தடிகள் போன்றவற்றை காட்சிப் படுத்தி வைப்பதுண்டு. கூவம் உடைப்பெடுத்துக்கொள்ள, புதுப்பேட்டை, மதராஸ் கமிஷனரேட் என்று எதையும் விட்டுவைக்காமல் வெள்ளம் புகுந்துகொண்டு வஞ்சித்தது. அங்கு காட்சிக்காக கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் போலீசின் Baton ஒன்றுதான் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் கூட, பல வருடங்கள் உருண்டோடியும் அதே பகுதியில் காயலான் கடை காயலான் கடையாக மாறி மாறி கடாசி எறியப்பட்டு 1977ல் ஒரு நாள் - பள்ளிக்கூட தறி வாத்தியார், நஜீர் அஹம்மத் என்று பெயர். மகன் அஸ்லம் அஹம்மதுக்கு பரேலி மிலிட்டரி கண்டோன்மெண்ட் ஆஸ்பத்திரியில் அட்மினிஸ்ட்ரேடிவ் பிரிவில் வேலை. பெரிய மேட்டில் தன் நண்பர் கடைக்குப்போய் பேசிக்கொண்டு இருந்தவர் மூலையில் கேட்பாரற்று இருந்த இந்த பெட்டான் ஐப்பார்த்து "அட இது நல்ல இருக்கே, நா லீவுல பரேலி போக சொல்ல, எட்துனு போறேன்" என்றார் 

விடுமுறையில் இங்கிருந்து தச்சு வேலை உபகரணங்கள் மற்றும் இந்தத் தடியையும் கொண்டு சென்று அதை வைத்து செதுக்கி ஏதாவது ஒரு உபயோகமான பொருள் செய்யலாம்  என்று நினைத்திருக்கலாம். வீட்டுக்கு எடுத்துச் சென்றவரை இவரது தாயாரின் தாயார் 103 வயது பாட்டி ஐமா பேகம் பார்த்துவிட்டு  இவரைத் திட்டி -  

"வெள்ளக்கார போலீசு பெத்தான போயி யார்னா ஊட்டுக்கு எட்துனு வருவாங்களா?"  

"ஜா ரே .... ஜாகு உதரீச் டால்கு ஆஜா. புலீஸ் கா லக்டி உடாக்கு லே ஆயா கர் கு, ஆவாரா" 

என்று தக்காண உருதுவில் வைது விரட்டி விட்டார். அந்த ஒரு முறைதப்பாமலிருந்து நஜீர் பாயுடன் வண்டியில் போயிருந்தால், பரேலி போகும் வழியில் தொலைந்து போய் கை மாறி கை மாறி, அதன் மதிப்பு தெரிந்தவன் கையில் சிக்கி, பிரிட்டிஷ் மியூசியம் போயிருக்கலாம் அல்லது முகல்சாராய்  ரயில் நிலையத்துக்கு வெளியில் தீ மூட்டிக் குளிர் காயும், டெல்லி ரயிலுக்குக் காத்திருக்கும் ரிக்ஷாக்காரர்கள்  கையில் மாட்டி சுள்ளியாகி எரிந்து சாம்பல் ஆகியிருக்கலாம் அல்லது  நஜீர் அஹம்மத் பாயின் பேரப்பிள்ளை தொட்டில் கட்டையாக பரேலி கண்டோன்மெண்ட் குவாட்டர்சில் தொங்கிக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் எதுவும் ஆகாமல் ஐமா பேகம் புண்ணியத்தில்,  பெரிய மேடு, புதுப்பேட்டை ஏரியாக்களுக்குளாகவே  சுற்றிக்கொண்டு இருந்துவிட்டு பக்கத்தில் இருக்கும் மூர் மார்க்கெட் போய்ச் சேரவே எழுபது வருடங்கள் பிடித்தது. முன்பே சேர்ந்திருந்தால் இந்நேரம் ஒன்றரை லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டோ ஆஸ்திரேலிய அல்லது பிரிட்டிஷ் ம்யூஸியத்திலோ  சென்று சேர்ந்திருக்கும். ஆனால் விதி யாரை விட்டது?

காயலான் டீலர்கள் ஸ்க்ராப் டீலர்களிலிருந்து ரொம்பவே மாறுபட்டவர்கள். பொதுவாக ஒரு குத்து மதிப்பாகத்தான் குப்பல் குப்பலாகப் பொருட்களை சல்லீசு விலைக்கு வாங்குவார்கள். நகரம் முழுக்க சேரும் குப்பைகளைக்கூட விடாமல் வண்டி போட்டு எடுத்துவந்து பொடியன்களை ஆள் போட்டு பிரிப்பார்கள். முதலில் பெரிய காந்தத்தைக்கொண்டு இரும்பை மட்டும் பிரித்தெடுப்பார்கள் சட்டங்கள், குழாய்கள், குழல்கள், கார் டயர் ரிம்கள், கம்பிகள், சங்கிலித்துண்டங்கள், பட்டறைக்கழிவுகளில் இருந்து வெளியே கொட்டப்பட்ட இரும்புத்துருவல்கள், கடிகாரங்கள், சட்டுவங்கள், நட்டுகள், பூட்டுக்கள், சாவிகள், போல்ட்டுகள் கை கால் சைசில் இருந்து ஆள் சைஸ் வரை மட்டுமில்லாமல், சிறு குறு ஆணி, திருகு, ஸ்ப்ரிங், குண்டூசி, இருபுத்தாதுக்கள் என்று வகை தொகையில்லாமல் சென்று ஒட்டிக்கொள்ளும். இரும்பைப் பிரித்தெடுத்தாலே போனஸ்தான். மற்றவை எல்லாம் நொச்சு வேலை. தாமிரம் அலுமினியம் போன்றவற்றை இனங்கண்டு பிரித்ததெடுப்பது தனிக்கலை. அதில் புழங்கும் பொடியன்கள் இருபதடி தூரத்தில் இருந்தே கிடப்பது பித்தளையா, அலுமினியமா, பொன்னா என்று கண்களால் பகுப்பார்கள். காகிதம் பிளாஸ்டிக்குகளுக்குக்கூட காயலான் கடைகளில் மதிப்புண்டு ஆனால் மரத்திற்கு மதிப்பு பூஜ்யம் - அது கற்பக விருக்ஷத்தை  வெட்டிச் செய்திருந்தாலும் கூட.  

அவ்வகையில்தான் பல பத்தாண்டுகள் எங்கோ முடங்கிக்கிடந்த பிரிட்டிஷ் போலீஸ் பெட்டான் மூர் மார்க்கெட் வந்தடைந்த அரைமணிக்குள்ளாகவே கோதையின் கண்ணில் பட்டு நூறு ரூபாய்க்கு வாங்கப்பட்டுவிட்டது.  ஏனென்றால் கூப்பனின் ராசி அப்படி; கோதையிடம் சிக்கி நூற்றாண்டுப் பெருமை பெற்ற, முன்னோர்கள் அடி வாங்கிய, வைரம் பாய்ந்த வெள்ளைப் போலீஸ் தடியில் குடித்து மாட்டிக்கொண்டபோதெல்லாம் அடி வாங்கினான். 

(தொடரும்)


Comments

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15