க்ளோஸ் த பாட்டில்

ரு வாரமாக நானே எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அதற்கான காலமும் சூழலும் இப்போதுதான் நன்றாகப் பொருந்தி வந்திருக்கிறது. சாருவை இம்சித்த மொன்னை பிளேடுகள் மற்றும் நான் அவரிடம் போட்ட பிளேடு என்று எல்லாவற்றையும் தொகுத்து அவர் ஒரு அருமையான பத்தியைப் பதிவேற்றியிருந்தார். 

http://charuonline.com/blog/?p=11020

வழக்கமாக சாரு ஆர்மியை நோக்கி வெளியில் இருந்து வரும் தாக்குதல்கள், அவர்கள் குடிக்கிறார்கள், குடியை ஊக்குவிக்கிறார்கள் என்றெல்லாம் இருக்கும். அதற்கும் வழக்கமான எதிர்வினையாக நாங்கள்  எவ்வளவு  உயர்தரமான மது அருந்துகிறோம், என்ன மாதிரியான ரம்யமான சூழ்நிலையில் அமர்ந்து அருந்துகிறோம், என்ன விதமான  தத்துவ மற்றும் இலக்கிய விசாரணைகளில் ஈடுபட அது உதவுகிறது என்றெல்லாம் இருக்கும். நான் புரிந்துகொண்ட வரை எதுவுமே குடிவெறியையோ அல்லது indulgence-ஐ  ஆதரிக்கும் வகையிலோ இருக்காது. மாறாக அளவாக உபயோகிக்கும்வரை குடி ஒரு உணவுப்பொருள்தான், வேறு யாரையும் அது துன்பப்படுத்தாத வகையில் இருக்கும் வரை, பொறுப்பாக அதில் தேவையான அளவு மட்டும் ஈடுபட்டு வெளியேறுவது எப்படி என்று எங்களுக்குத்தெரியும் மற்றபடி நாங்கள் குடித்துவிட்டு சாக்கடையில் விழுந்து புரள்பவர்கள் அல்ல என்பதாகவும் இருக்கும். 

என்னைப் பொறுத்தவரை நான் அறிவுரை சொல்வதுபோல் இல்லாமல் ஒரு விமர்சகனாகச் சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன். 

குடி ஒரு Lifestyle கிடையாது அது வெறும் recreation மட்டுமே. தினமுமோ, வாரத்திற்கு ஒரு முறையோ, அல்லது மாதத்திற்கு ஓரிரு முறைகளோ குடிக்கும் கால இடைவெளியில்  என்ன மாதிரியான அடுக்கு நகழ்வு ஒழுங்கு முறை அல்லது திட்டமிடல் இருந்தாலும், அது Addiction தான், Indulgence தான்! சிலருக்கு  அது ஒத்து வரலாம், ஆனால் எல்லாவருக்குமானது அல்ல. குஷ்வந்த் சிங் 99 வயதுவரை இறக்கும் வரை  தினமும் ஒரு குவாட்டர் அடித்தார் என்று சொல்வார்கள் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு நாமும் அடிக்க நாம் குஷ்வந்த் சிங் அல்ல. குஷ்வந்த் சிங் ஒரு லெஜெண்ட், ஹை ப்ரொஃபையில் ஆள். அவர் நீட்டிப்படுத்துக்கொண்டுவிட்டால், செய்வதற்கு ஆள் அம்பு சேனை என்று எல்லாம் இருந்தது. நாம் படுத்துகொண்டால், நமக்கு மட்டுமல்ல கூட இருப்பவர்களுக்கும் துன்பம். நாம் போனாலும் துன்பம்தான்.  

எல்லோருடைய உடல்வாகும் எல்லோருடைய மூளைத் திறனும் ஒன்றல்ல. நாற்பது வயதிற்குப் பிறகு ஆண் பெண் என்று அனைவருக்கும் muscle mass மற்றும் density இல் ஒரு சுணக்கம் வந்துவிடும். இளமையில் இரவில் குடித்துவிட்டு, காலையில் வேலைக்குப் போய்விட்டுவந்து மீண்டும் குடித்தாலும் ஒன்றும் தெரியாது. முப்பத்தைந்து அல்லது நாற்பதில், மேற்குறிப்பிட்ட தசைச்சுணக்கம் காரணமாக உடல் தசை  ஆல்கஹாலைத் தேக்கி  வைத்து மெதுவாகக் கல்லீரலுக்குள் அனுப்பி slow synthesis செய்ய வைத்துக் காப்பாற்றும் திறனை இழந்திருக்கும். குடிக்கும் மொத்தமும் நேரடியாகக் கல்லீரலினுள் பாய்ந்து Overload செய்து அதன் செயல்திறனை பாதிக்கும். இதன் காரணமாக அதில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நுண் ஊட்டச் சத்துக்கள் மொத்தமும் போய்விடும். இதனால் மூளை சரியாக வேலை செய்யாது. எந்நேரமும் ஒரு குழப்பம் நிலவும் இதனால் ஒரு ஆரிருள் உலகில் வாழ்ந்துகொண்டு இருப்பதுபோன்ற மாயத் தோற்றத்தைத்தரும். வாழ்க்கையில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளைக் கூட சமாளிக்க முடியாது. வாழ்க்கைத் தரம் ஒரு தேக்கத்தை அடைந்து, அதிலேயே சிக்கி அங்கிருந்து மேலும் நகர முடியாது போகும். குடிக்காமல் இருந்தால், மூளை தெளிவாக வேலை செய்யும், மூளைத்திசுக்களின் இறப்பைத் தாமதப்படுத்தும். நல்ல முடிவுகளை எடுக்க முடியும். 

ஐரோப்பியக்குடி, ஆப்பிரிக்கக் குடியெல்லாம் படித்து ரசித்துவிட்டு அத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள், படைப்பாளர்களைப் பொறுத்தவரை அது அவர்கள் விருப்பம். நம்மை வந்து எழுதி, அதில் நீ போ குடி என்று போதிக்கவில்லை. அவர்கள் அறம், பண்பு பற்றியெல்லாம் கூட எழுதுகிறார்கள், நூல்கள் வாசிக்கவேண்டி வலியுறுத்துகிறார்கள் அதையெல்லாம் சிரமேற்கொண்டு செய்தா ஒழுகுகிறோம்?  வாழ்க்கையில் எல்லா வசதிகளும் வந்துவிட்ட பிறகு, எல்லா லௌகீகக் கடமைகளும் முடிந்த பிறகு, இனிமேல் ஜாலி பண்ணவேண்டியதுதான் அடித்து ஆட வேண்டியது, அவுட் ஆனாலும் கவலையில்லை என்னும் நிலைமை வந்தபிறகு வேண்டுமானால், தினமுமோ, அல்லது ஒரு குறிப்பிட்ட இடைவெளியிலோ திட்டமிட்டுக் குடிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், திருநெல்வேலிச் சொலவடையில் - "பல்லு  இருக்கவன் பக்கடா கடிக்கான்"

கடைசியாக ஒன்று:  

சாருவுக்கு நான் எழுதிய கடிதத்தின் இறுதியில் வருவது எல்லாம் சும்மா லொள்ஸ். தசமூலாரிஷ்டம் என்று ஒன்று இருக்கிறது. கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது என்று ஒரு பாட்டில் ஆர்டர் செய்து வாங்கி வைத்து வீட்டில் எல்லோரும் குடிக்கிறோம். பல பிராண்டுகள் உண்டு. அதில் ஒரு அரை லிட்டர் குப்பி என்றால், இயற்கையாக உருவான ஆல்கஹாலானது, காஃப் சிரப்பில் உள்ள பத்தில் ஒரு பங்கு அளவு உண்டு. என் மனைவி என்னை வாரியது அந்த அளவு ஆல்கஹால் கூட உன்னை ரம்பம் போடப் பண்ணுகிறது என்கிற பொருளில்தான். சாருவின் நுண்ணறிவும் சும்மா சொல்லக்கூடாது. அவ்வளவு தூரத்தில் இருந்தே நான் முப்பது மில்லி தசமூலாரிஷ்டம் கூடக் குடிக்கவில்லை என்பதை எப்படி அறிந்துகொண்டாரோ தெரியவில்லை. அதில் உள்ள டோஸ் கப்பின் அளவு 30ml தான். அவருடன் போனில் பேசும்போது சரியாக அதில் அரை மூடிதான் குடித்திருந்தேன்.

-ப்ரஸன்னா 

Comments

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience