மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஏழு)

பெண்களில் உள்ள ஒரு விஷேசம் என்னவென்றால், ஒரு பிரச்னையை சுவடு தெரியாமல் அழிக்க வேண்டும் என்று முடிவு மட்டும் கட்டிவிட்டால் போதும், எந்த எல்லைக்கும் செல்வார்கள், எவ்வகையான ஆயுதம் வேண்டுமானாலும் ஏந்தத் தயாராகிவிடுவார்கள், எந்த யுக்தியையும் கையாள்வார்கள். துக்கம் துயரம் பிரச்சனையில் உழல்வது போன்றவையெல்லாம் வெறும் பாசாங்குதான். சில பெண்களைப் பார்த்தால் மேலோட்டமாக பிரச்சனையில் உழன்று அழுது புலம்புவது போல் தோன்றும் ஆனால் அதற்குப் பின்புலத்தில் ஏதோ ஒரு தீவிரமான தயாரிப்பு நடந்துகொண்டிருக்கும். சில வகைப் பெண்கள் அதீத நுண்ணுணர்வு கொண்டவர்கள் பிரச்சனை என்று ஒன்று முளைவிடுவதற்கு முன்னதாகவே ஞான த்ருஷ்ட்டியில் தெரிந்துகொண்டு அது விதையாகப் புதையுண்டு இருக்கும்போதே கிண்டி எடுத்து எறிந்துவிடுவார்கள். முற்றும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். முடிவு மட்டும் எடுத்துவிட்டால் எந்தப் படுகுழியில் இருந்தும், பாதாளலோகத்தில் மாட்டிக்கொண்டிருந்தாலும், எல்லாவற்றையும் முறியடித்துக் கொண்டு மேலே வந்து குன்றின் மேல் ஏறி அமர்ந்து அரசாளுவார்கள். 

அவளே ஒரு குடி அடிமையாக இருந்தவள்தான், முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய வேறு காரியங்கள் வந்தவுடன் ஒரே நாளில் தூக்கிப் போட்டுவிட்டாள்.  கூப்பனின் வீட்டுக் குடியையும் தொடர் அடிகள் கொடுத்து முடிவுரை எழுதி வெற்றியும் பெற்றுவிட்டாள். ஆனாலும் ராஜாபாதருடன் சென்று ரகசியக் கள்ளக்குடி மட்டும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது கூப்பனுக்கு.

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூடிகள் கடந்ததும் என்னதான் வாசனையைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றாலும் சில சமயங்களில் சிவந்த கண்களுடன் ஒலட்டி மாட்டிக்கொண்டு அடி வாங்கினான். பேச்செல்லாம் இல்லை நேரடியாக பிரிட்டிஷ் அடக்குமுறைதான். லாடம் கட்டியெல்லாம் அடித்தாள். 

ராஜாபாதருடனான தொடர் குடி சந்திப்புகள் மற்றும் விவாதங்கள் மூலம் அவருடைய இலக்கியத்தொடர்புகள் தெரிந்தபின்தான் கூப்பனுள் புதையுண்டிருந்த இலக்கிய ஆர்வம் கல்லரைப் புழுக்கள் போல் முதலில் மெது மெதுவாக சோம்பலாக வெளியேறி, பிறகு சாரைப்பாம்பு வேகம் பிடித்து நேரடியாக எழுத்தில் இறங்கிவிடலாம் என்கிற முட்டாள்த் துணிச்சலான  யோசனை வந்தது. இலக்கியம் பற்றிய பேச்சுக்கள் வந்த போதெல்லாம் முதலில் அசுவாரஸ்யமாகத்தான் இருந்தது. கேட்டுக்கொண்டிருக்கும் கூப்பன் கொட்டாவி விட ஆரம்பித்தால் -

"சரி போலாப்பா. உனுக்கு தூக்கம் வந்துட்டுறுக்குது" 

என்று உடனடியாக நிறுத்திவிட்டு. கூப்பனின் பாட்டிலையும் தூக்கி குப்பையில் எறிந்துவிட்டு தானும் அத்தோடு நிறுத்திவிட்டு விறுவிறுவென கூட்டிக்கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு ஒன்றுமே பேசாமல் போய் விடுவார். ஒரு பதினைந்து நாட்களுக்குப் பாராமுகம். ஓசிக் குடியும் போச்சு. எதற்கு வம்பு என்று அதீத சுவாரஸ்யத்துடன் - 

"ப்ச் பாருங்க பாதர். ம்ம் கரெக்ட்டு. ஜெயமோஹெய்ங் எப்டி எளுதறாரு பாருங்க. தெறம இல்லாத அப்டீலாங் எளுத முடியுமா"

"எலக்கியங்கறது வெரூங் தெறம ஒண்டியுங் கெடையாது கூப்பா. ஞானம் வோனும். ஞானொங் இல்லாத பொஸ்தகோன்னா இன்னான்னெ தெர்யாது. பழ்ய பேப்பர் காரொங்-க்ரான் தெனக்யும் நூறு கிலோ பொஸ்தகத்த வாங்கி விக்கறான். ஊட்டுக்கு துட்டு எத்துனு போய் குஷ்ட்டு துன்ட்டு தூங்கறான். பொஸ்தகத்தோட வேல்யூவேசன் தெரிஞ்சா, அதுங்கள அப்டி தூக்கி தூக்கி போடுவானா? அதுங்கள வாங்கி வித்து துன்ட்டு வவுரு வளப்பானா?"

"என்ன பாதர் பேசறீங்க, அது அவன் தொழில் பாதர். அது மட்டுமா தெறமையும் ஞானமும் ஒண்ணுதானே? அவனோட தெறம, அவனுக்குத் தெரிஞ்ச தொழில, என்னமோ ஒரு பழமொழி மாதிரி ஒன்னு வருமே, எனக்கு அந்த அளவு அறிவு இல்ல, ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்"  

சில வினாடிகள் யோசிப்பது மாதிரி பாவ்லா செய்துவிட்டு, பிறகு அதற்கு மிகச்சரியான கவுண்டர் பன்ச் பிடித்துவிட்ட திருப்தியுடன், அதை வெளிக்காட்டாமல், அடக்கத்துடன் - 

"நான் சரியா சொல்றனா தெரில ம்ம் செய்யும் தொழிலே தெய்வம்னு நெனைச்சு எதோ பன்றான். அவனைப்போயி..." 

"என்ன நான் கரெக்ட்டா பேசுனனா பாதர்?"

அதுதான் அறிவு இல்லை என்று தெரிகிறது அல்லவா பிறகு மூடிக்கொண்டு சும்மா இருக்கவேண்டியதுதானே? அவரே கஷ்டப்பட்டு இரண்டு நாட்களாகப் புரண்டு புரண்டு படுத்து ஞானம் இருந்தால்தான் இலக்கியம் எல்லாம் வரும் எனும் நீட்ஷே தத்துவத்தை ஏதாவது குறியீட்டுடன் கூப்பனிடம் எடுத்தியம்பி தன் இலக்கிய மேதாவிலாசத்தை காண்பிக்கலாம் என்று வந்திருக்கிறார், இவன் அதில் ஒரு லோடு மண்ணை அள்ளிப் போட்டுவிட்டான். 

இப்போது மறுபடியும் ஓசிக் குடி கட். இன்னொரு பதினைந்து இருபது நாட்களுக்கு பேசாமல், போன் எடுக்காமல் மூஞ்சியைத்தூக்குவார். இந்த இடைவெளியில் கூப்பனுக்கு ஆல்கஹால் வித்ட்ராவல் சிம்ப்டம்ஸ் வந்து அது சரியாகி தெளிவாகச் சிந்திக்கும் திறன் எல்லாம் கூட வந்திருக்கும். அதற்குள் மறுபடி பழைய ஸ்ப்ளெண்டரிலோ பல்சரிலோ வந்து வீட்டுக்கு முன்பு நின்று ஹாரன் அடித்துவிட்டு முட்டுச்சந்தில் போய் திருப்பிக்கொண்டு வந்து, இவன் வந்து உட்கார்ந்ததும் மெயின் ரோட்டை நோக்கி சிட்டாகப் பாயும் வகையில் நின்று ந்யூட்ரலில் போட்டு முறுக்கிக்கொண்டு நின்றிருப்பார். அவருடன் குடி விவாதத்தில் கலந்துகொள்ளும்போது எந்த விஷயத்திலும் விவாதிக்கலாம் ஆனால் இலக்கியம் என்று வந்துவிட்டால் ஆமாம் சாமி மட்டும்தான் போடவேண்டும். மீறினால் தொலைந்தது பழைய கதைதான்.    

மீண்டுமொருமுறை குடிப்பேச்சு சுவாரஸ்யத்தில் மெய்மறந்து, அளவு மீறிவிட்டது. ஒரு அவசர வேலை காரணமாக ராஜாபாதர் இவனை மெயின் ரோட்டிலேயே இறக்கி விட்டுவிட, இவன் நடை தாளம் தப்பவே ஒரு பத்தடி தூரம் சென்றும் அதை அதை கவனிக்காது போவதை விடுத்து, வண்டியை நிறுத்தி கூப்பனிடம் - 

"வாசம் தெரிஞ்சிரப்போவுது போவ சொல்லோ கொய்யா எலய பறிச்சி துன்ட்டு போ" என்றுவிட்டுப் போய்விட்டார்    

இவனும் போகும் வழியில், தூரத்தில் போர்டிகோவில் இருட்டில் நாய் குலைத்துக் கொண்டிருக்கும் பழங்கால பங்களாவிலிருந்து    வெளியே நீண்டிருக்கும் கிளையை எம்பித்தாவி நுனி கொத்தைப் பறித்து அப்படியே வாயில் போட்டு மெல்லவே, சுரீரென்று நாக்கில் தேள் கொட்டிய மாதிரி வலித்தது ஒரு நான்கைந்து கட்டெறும்புகள் கடி பட்டிருக்கும் மீதி இருக்கும் கும்பல், பீதி அடைந்து நாக்கிலும் உதட்டிலும் தலைவன் களத்தில் இறந்ததும் அப்பதவியைப் பிடிக்கும் சந்தர்ப்பம் கிட்டிய வெறியுடன் தாக்குதல் நடத்தும் மங்கோலிய கெரில்லாக்கள் போல் மூர்க்கத் தாக்குதல் நடத்தின; ரத்தம் பீறிட்டு ஊற்றியது. வலக்கை ஆட்காட்டி விரலில் ஒன்றும் சுண்டுவிரலில் மூன்றுமாய் கடிகள் விழ, குடிவெறியில் வசைகளுடன் நடுத்ததெருவில் நின்று வலக்கையை வெறி பிடித்தது மாதிரி குதித்துக்கொண்டே உதறினான். பங்களாச் சுவற்றில் இருந்து சாலையின் அடுத்த முனை வரை தெளித்த தீற்றல் வரிகள் பத்தோ, பதினைந்தோ இருக்கும். நடுவில் கணக்கில் காணாமல் போன அறுபத்தைந்து துளிகள் அந்நேரம் பைக்கில் கடந்த ஆளின் சட்டையில்  விழுந்து கிடந்தன. வாயிலும் கையிலும் இரத்த ஒழுக்குடன் வீடடைந்த கூப்பனுக்கு எறும்புக்கடிக்கு எந்தச்சலுகையும் காட்டப்படவில்லை. கழி உடையுமளவு அடி விழுந்தது. அடுத்த நாள் காலை எழுந்த கூப்பனை நியாயமாக வலியும் வேதனையும் வாட்டியிருக்க வேண்டும். ஆனால் முதல் நாள் இரவு அவன் கண்ட கனவு, வலியை மீறி முதுகெலும்பு நிமிர்ந்து உட்கார வைத்தது. ஒரு புறம் கோதை, மறுபுறம் ராஜாபாதர் என்று தன் வாழ்க்கையை வேறு யாரோ கட்டுப்படுத்துவதன் கழிவிரக்கத்தையும் மீறி ஒரு தெளிவு ஏற்பட்டது. 

இத்துயரங்களில் இருந்தெல்லாம் விடுதலை அடையவேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி, நான் ஒரு எழுத்தாளன் ஆக வேண்டும். ஆவது என்ன ஆவது? இன்றிலிருந்தே நான் ஒரு எழுத்தாளன்தான்! 


(தொடரும்)

Comments

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience