அமெரிக்க தீபாவளியும் த்ரிநாரீ நர்த்தனாவும்

 ன் முதல் ப்ளாக் எழுத உட்கார்ந்த  ஒரிரு  மணித்துளிகளுக்குள்ளாகவே இடர்பாடு ராஜி வடிவில் வந்துவிட்டது. Dayton தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்படும் அக்டோபர் 30ம் தேதி நடக்கவுள்ள  தீபாவளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாரீர்!  நுழைவுச் சீட்டிற்கு அக்டோபர் 26 ம் தேதிக்குள்ளாக பதிக, பிந்துபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த துண்டு பிரசூரத்தை வாட்ஸப்பில் எனக்கு அனுப்பப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது. உட்கார்ந்து ஒரு பதினைந்து நிமிடங்கள் கடந்தும் எழுத விரல் வரவில்லை உங்கள் முதுகுக்குப்பின் யாராவது வந்து நின்றுகொண்டு திரையை முறைத்துப்பார்த்துக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? இத்தனைக்கும் ராஜிக்கு முற்றாக தமிழ் எழுதவோ படிக்கவோ அல்லது முறையாக பேசவோகூடத் தெரியாது. என்ன என்று திரும்பிப்பார்த்தால், முறைப்புடன் தீபாவளிக்கு என்ன திட்டம் என்ற வினவல். சரி என்று நான்கு பேருக்குமாக ஐம்பது வெள்ளிகள் பணங்கட்டச் சென்றால், Zelle வேலை செய்ய மாட்டேன் என்கிறது. அதற்குள் வங்கி அலுவல் நேரம் முடிந்துவிட்டதால், என்ன செய்வது என்று தெரியாமல் ராஜியை ஏறிட்டால், அவள் போடா என்றுவிட்டு அதற்குள் நண்பர் விஷ்ணுவின் மனைவிக்குப் போன் செய்து நிலைமையை விளக்கி அவர்கள் மூலம் பதிவு செய்வித்துவிட்டாள். அவர்களுக்கு பிறகு டிரான்ஸ்பெர் செய்துகொள்ளலாம் என்று ஏற்பாடு.  

இங்கெல்லாம் ஒரு பண்டிகை சண்டிகை என்றால், அது வார நாளில் வந்தால் அதை கொஞ்சம் வார இறுதிக்கு தள்ளிப்போட்டுக்கொண்டு நிதானமாகத்தான் கொண்டாடுவார்கள். இங்கிருக்கும் இந்தியர்கள் கொஞ்சம் வேறு மாதிரி அது ஹாலோவீனோ, தீபாவளியோ எதற்கு கடைசி வரை தேவுடு காத்துகொண்டு உட்கார்ந்துகொண்டு இருக்கவேண்டும் என்று  முன்பே கொண்டாடி முடித்துவிடுவார்கள். இம்முறையும் ஹாலோவீனும் தீபாவளியும் Sandwich ஆகியிருந்தது. அந்தக் கணக்கில்தான் இங்கிருந்து ஒரு நாற்பது மைல் தொலைவுள்ள Dayton இல் போய் அங்குள்ள தமிழ்ச் சமூகத்துடன் இரண்டறக்கலந்து அக்டோபர் 30 அன்றே தீபாவளி கொண்டாடிவிட்டு வந்துவிடுவது  என்று ராஜி வகுத்திருந்த  திட்டத்தின் அடிப்படையில் போய் இறங்கினோம்.  

ஹாலோவீனில் பேய்வேடம் தரித்து பிள்ளைகள் கையில் சட்டியையோ அல்லது வாளியையோ கொடுத்து கேண்டி பிச்சை வாங்கி வருவது மரபு. சரி அது வேறு கதை.

இறங்கியவுடன் மாம்பழச் சாறுடன் வரவேற்பு.  சிறிது நேரத்தில் நண்பர் விஷ்ணுவும் அவர் குடும்பத்துடன் வருகை. ஒரு பொதுப் பாடசாலையின் உணவுக்கூடம் மற்றும் கலையரங்கம் இரண்டும் இணைந்திருந்த ஒரு அமைப்பில் க்ரூப் போட்டோ, மெஹந்தி என களை கிளை கட்டலாமா என்று பார்த்துக்கொண்டிருந்தது. நிகழ்ச்சி நிரலின் படி தமிழ்த்தாய் வாழ்த்திற்குப்பிறகு ஆடல், பாடல், பட்டிமன்றம், நாடகம்,  இரவுணவு, பிறகு பட்டாசு கொளுத்துதல் என்று இருந்தது. 

சிறிது நேரம் மேடையில் ஸ்ரீனி மற்றும் வேறு சில அன்பர்கள் அங்கிருந்த பெருந்திரளாகக் குழுமியிருந்த ஒரு பத்திருபது பேரை நோக்கி  உரையாற்றினார்கள். நடுநடுவில் இதிலிருந்து வெகு சாமார்த்தியமாகத்  தப்பி வராமல் போங்கு  கொடுத்துவிட்டு ஜாலியாக வீட்டில் இருந்துவிட்டவர்களையும்கூட, அவர் யார், எவர், Dayton தமிழ்ச் சமூகத்திற்காக அவர் ஆற்றிய தொண்டு யாது என்றெல்லாம் பின்னணி இசையுடன் ஸ்லைடு போட்டுக்காட்டிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் அவர்தம் தொண்டினடிப்படையில் பிரத்தியேக இசை!

அதற்குள் மசாலா டீ வந்துவிடவே விஷ்ணுவும் நானும் ஒன்றுக்கு இரண்டாக ஷாட்கள் அடித்தோம். யாரோ நல்ல தேர்ந்த ரசனையாளர் போலிருக்கிறது யூஸ் அண்ட் த்ரோ டக்கீலா ஷாட் கிளாஸை வாங்கி டீ குடிப்பதற்காக வைத்திருந்தார்கள். அதிலிருந்த  அழகியலால் கவரப்பட்டு வீட்டுக்கு ஐந்தாறு க்ளாஸ்களை பார்சல் கட்டிக்கொண்டு போய்விடலாம் என்று யோசனை வருவதற்கு முன்பே  தூரத்தில் நின்று ராஜி முறைத்துக்கொண்டு இருந்தாள். தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தவுடன் அதற்கு சிறிது நேரம் முன்பு வரையாவது  அடுத்து யார் என்ன மொக்கை போடுவார்கள் என்ற  ஆர்வம் இருந்தது பிறகு அதுவும் வடிந்துபோய் மேடைத் திரையை உற்றுப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால், சில நொடிகளில் திரை விலக, இந்த விஜய் டீவி கிஜை டிவியிலும் கூட இதே பிரச்சனைதான். இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கெல்லாம்  தொகுப்பாளினி மட்டும் போதாதா? ஆளன் வேறு ஒருவர் எதற்கய்யா தேவையே இல்லாமல் நடுவில்? 

தொகுப்பாளினி யுவதியைப் பார்த்ததும் அட என்று ஒரு ஆர்வத்துடன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். ழகரம்தான் கொஞ்சம் தடுமாறியது அட அதெல்லாம் ஒரு பிரச்சனையா? இவர் கணவரும் கூட பிறகு வரும் நாடகத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். அது உலகத்தரமாக இருந்ததாலும், அதைப்பற்றி வர்ணிக்க தமிழில் வார்த்தைகளே இல்லை என்பதாலும் அதை இத்தோடு விட்டுவிடுகிறேன். 

ஒரு பெண்மணி சோலோவாக "ஒன்றா இரண்டா" பாடினார் பெயர் ஐஸ்வர்யா என்று நினைவு. பின்னணி இசை குரலை மீறி ஒலித்து அமுக்கியது. பிறகு குழந்தைகள் நடனம். இதில் பல குத்துப்பாடல்களை கலந்து ஓடவிட்டு அதற்கேற்ப  குத்தாட்டுவித்தார்கள். நான் ஐயோ வந்து தொலைத்துவிடக்கூடாதே என்று பயந்துகொண்டே,    தொலைபேசி அழைப்பு சாக்கில் ஓடிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் அதற்குள் வந்தே விட்டது  வலிப்பு நடனம் வாத்தி கம்மிங் இசையுடன்! நான் செய்வதறியாது திகைத்த தருணத்தில் சூடாக ஆனியன் பக்கோடா வந்து வாயை அடைத்துவிட்டது. அதன் ருசியும் மணமும் அள்ளியது, அரங்கு முழுவதும் விரவி நிரம்பியது.

நண்பர் தாமரை மணாளன் விஷ்ணுவின் பண்பு பாருங்கள் நான் பக்கோடா உண்டு முடித்த கையோடு அவரே மறுபடியும் ஒரு ரவுண்ட் டீ கொண்டுவந்து கொடுத்து உபசரித்தார். அதுதான் எங்கள் கொங்கு மண்டலத்தின் விருந்தோம்பல் மாண்பு! 

பிறகு பட்டி மன்றம், பார்ப்பதற்கு அந்தக்கால பாரதி பாஸ்கர் மாதிரி இருந்தார் பேச்சு எடுத்த எடுப்பிலேயே "அய்...யா" என்று அரட்டை அரங்கம் பாணியில் இழுத்தார் ஒரு யுவதி. ஸ்ரீனிக்கும் நடுவருக்கும் என்ன உள்குத்து என்று தெரியவில்லை நடுவர் பேசும்போது மட்டும் ஒலிபெருக்கியின் சுரத்து குறைக்கப்படுவது போல் இருந்தது. அடுத்த அணியில் இறுதியாகப் பேசிய பெண்மணி படு அதிரடி பினிஷிங் கொடுத்தார். அவருக்கு தூத்துக்குடி (அ) நெல்லை வட்டாரம் என்பது என் அனுமானம் ஆனால் பேச்சில் அப்படித் தெரியவில்லை. எதிர் அணியில் இவர் கணவர் இருந்தாராம் இவர் அவரை தாக்குவதுபோல் ஸ்க்ரிப்ட் பண்ணியிருந்தார்கள். ஏங்க ஒரு நடுவரை இப்படியா உஷ் பேசாம இருங்க என்று பார்வையாளர்கள் முன்னேயே அதட்டி உட்கார வைப்பீர்கள்?  அவர் அப்படியென்ன அநீதி இழைத்து விட்டார் உங்களுக்கு? இரு அணியினரையுமே கேட்கிறேன். 

அடுத்து வருவதுதான் மொத்த நிகச்சியின் ஹைலைட்டே என்று சொன்னால் அது மிகையாகாது. மூன்று மங்கைகள்  நடனம்! முன்பு பாடிய ஒருவரும் இதில் அடக்கம். இதற்காகவே இதே தலைப்பில் தனியாக ஒரு பதிவு போடவேண்டும். காளிதாசர் உயிரோடு இருந்திருந்தால் "த்ரிநாரீ நர்த்தனா" என்ற  சமஸ்க்ரித தலைப்பில் ஒரு காவியம் இயற்றச் சொல்லியிருக்கலாம். அடி பொளி!  இதில் கவனிக்கத்தக்க அம்சம் ஒன்று இருந்தது சிறுவர் நடனத்திலும்  பின்னணி இசை மேற்கத்திய பாணியில் இருந்து தமிழ் குத்து பீட்டுக்கு மாறும் போது மட்டும்  கண்ணாடியை கண்ணாடியைக் கழற்றி வீசிவிடுகிறார்கள்.  ஏன் தாயி கண்ணாடியை கழற்றி விசிறியடிக்காவிட்டால் ஊடு கட்டி ஆடவே முடியாதா என்ன? இம்முப்பெரும் தேவியர்தான் குழந்தைகளுக்கான நடனப்பயிற்சியும் என்று கேள்வி. சும்மா சொல்லக்கூடாது வெகு சிறப்பாக இருந்தது. 

இரவுணவில்   எங்கள் வழமையான மரக்கறி உணவைத் தேர்ந்தெடுத்திருந்தோம். இது என்ன ராஜிம்மா என்று கேட்டால் அவள் சப்பாத்தி என்றாள். ஓ சரி என்று அதை அவளுக்கே கொடுத்துவிட்டு. நான் பாட்டுக்கு நமக்குத்தான் இருக்கவே இருக்கிறதே மசாலா டீ என்று அதன் பக்கம் போய் விட்டேன். குழந்தைகள் ஐஸ்க்ரீம்  குலாப்ஜாமூன் என்று ஜாலி பண்ணினார்கள். நமக்கு இனிப்பு கசக்கும் என்பதால் அத்துடன் முடித்துக்கொண்டேன். 

பட்டாசு வெடிக்கையில் வெளியில் ஒன்பது பாகை குளிர். ஒரு இலங்கைப் பெண்மணி தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார் அவர் "நல்ல்ல்ல குளிரு  இல்லையே?" என்று கேட்க நானும் ஆர்வ மிகுதியில் அதே பாணியில் "ஓமம் நல்ல குளிரு அல்லே?" என்று மலையாளத்தையும் யாழ் மொழி வழக்கையும் போட்டுக் குழப்பி பதிலளித்து விட்டேன். அவர் தன்னை கிண்டல் செய்வதாக நினைத்து முறைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அந்த நாடகத்தில் ஆக்டு கொடுத்த அன்பரும் அப்படித்தான் கொங்கு மொழி வழக்கில் பேசுகிறேன் பேர்வழி என்று உச்சஸ்தாயில் பேசிக்கொண்டிருந்தார், உண்மையில் இவருக்குத்தான் மைக் வால்யூம் குறைத்திருக்கவேண்டும். பரவாயில்லை 90களில் சரத்குமாரும், பொன்னம்பலமும் செய்யாத கொங்கு தமிழ்க்  கொலையா? இவருக்கு உள்ள கலையார்வத்தைப் பார்த்தால் ஒரு நல்ல எதிர்காலம் இருப்பது போல் தோன்றியது. இதே அன்பர்தான் பட்டாசு முடிந்து வெளியேறும் முன் எம்மையும், எம் மூத்த மகளையும் ஒரு படம் பிடித்தார். அதற்கு ஒரு நன்றி! 

ஒரு வழியாக தீபாவளி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உண்டு களித்து, களைத்து இனிதே நிலையம் திரும்பும் தருணத்தில்  அது ஏன் நமக்கெல்லாம் இதிலெல்லாம் ஒரு பெரிய மகிழ்ச்சியோ ஆர்வமோ இல்லாமல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தேன். தமிழ்ச் சூழலில் வளர்ந்த பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஒரு பத்தோ மீறினால் பதிமூன்று வயது வரைதான் தீபாவளி போன்ற பண்டிகைகள் மீது ஆவல் ஆர்வம் மகிழ்ச்சி எல்லாம். அதன் பிறகு ஒரு வித வெறுமை சூழ் வாழ்வில் இருப்பது போல் ஒரு ஓட்டுதல் இல்லாமல்தான் இருக்கிறோம். பணிச்சுமையும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். என் உடன் வேலை செய்பவர் ஆஃப் ஷோரிலிருந்து மறுநாள் தீபாவளியை வைத்துக்கொண்டு இரவு மூன்று மணி வரை வேலை செய்துகொண்டு இருந்தார். நியாயத்திற்கு அப்படியெல்லாம் இல்லாமல் குழந்தைகளுக்கு சிறு வயதில் நாம் அனுபவித்ததில் பத்தில் ஒரு பங்காவது அவர்களுக்கும் நாம் நல்க வேண்டும் என்கிற அடிப்படையில் இம்மாதிரி நிகழ்ச்சியை நான் ஒரு  வேடிக்கைக்காக வர்ணனை செய்து எழுதினாலும் இதை ஏற்பாடு செய்ததுடன் அதில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு பாராட்டு!

அட மறந்தேவிட்டது. இனிப்புப் பொதி! இந்தியாவில் இருந்து வரவழைக்கிறார்களாம். நிகழ்ச்சி முடிந்து நான்கைந்து நாட்கள் கழித்து பண்பாளர் ஸ்ரீனி தொலைபேசியில் அழைத்து பொறுப்புடன் இனிப்புகள் இந்தியாவில் இருந்து வந்திறங்கியாகிவிட்டது வாங்கிச்செல்லவும் என்று சொன்னார். அய்யா நாங்கள் ஒரு மூன்று குடும்பங்கள் ஷேரன்வில்லில் இருந்து வந்திருந்தோம் மெயில் செய்ய முடியுமா என்றதற்கு, நாங்கள் லாப நோக்கில்லா நிறுவனம் மாதிரி நடத்துகிறோம் அதற்கெல்லாம் வசதியில்லை என்றார். ஆனால் தினமும் ஃபேர்பீல்ட் வந்து போகிறார் பரத் அவரிடம் கொடுத்து விடுகிறேன் மாலை ஐந்துமணிக்குள் சென்று வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூற. இந்திய இனிப்பு வேறா, உடனடியாக காரில் பாய்ந்து பரத்துக்கு டெக்ஸ்ட் பண்ணினால் அவர் வேர்ஹவுஸ் போல இருக்கும் ஒரு இடத்தில் அமைந்த அலுவலகத்துக்கு அழைத்தார். சூட் நம்பர் (ஆங்கிலத்தில் Suit ஐ ஸ்வீட் என்று உச்சரிக்க வேண்டும், ஸ்வீட்டில் போய் இந்திய ஸ்வீட் வாங்கிவரும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்!)  ஸ்வீட் நம்பர் 400க்கு முன்னாடி பின்னாடி என்றெல்லாம் வழி கூறினார். ஸ்வீட் கிடைக்கப்போகும் பெருமகிழ்ச்சியில் அதெல்லாம் ஒன்றும் மண்டையில் ஏறவில்லை. அவர் இருங்க நானே வர்றேன் என்று பின் வாசலில் வந்து (ஆள் படு ஜோவியல் மாதிரி தெரிந்தார்) ஹாப்பி தீவாளி சொல்லி மூன்று குடும்பங்களுக்கான இனிப்புப் பெட்டிகளை ஒப்படைத்தார். ஒப்படைத்துவிட்டு முத்தாய்ப்பாய் ஒன்று கேட்டார்  பாருங்கள். ஏன் பரத் என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது? அவர் என்னிடம் கேட்டது - 

"படம் பாத்துட்டிங்களா?" 

"ம்ம் புரில !!??" 

"அட அண்ணாத்தே பாத்துட்டிங்களான்னு கேட்டேன்" 

வீட்டில் வந்து ஆர்வ மிகுதியில் பெட்டியைத் திறந்து பார்த்தால், அடடே என்ன ஒரு இன்ப அதிர்ச்சி, மைசூர்பாவில் கொய்யாகனிச்சுவை! எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள். உண்மையில் அதிநூதன ஃபிளேவர் அனுபவத்தைத் தந்தது. பொதுவாக எவ்வித சீனி சேர்த்த இனிப்பையும் அருந்தாத எனக்கு இது மட்டும் உவப்பாக இருந்தது. அடுத்த கூடுகையில் அந்த கேஷூ மிக்சரையும் சேருங்கள் ஸ்ரீனி. மிக்சருக்குப் பிறகு ஃபில்டர் காபி  மட்டும் வேண்டுமே வேண்டும் சொல்லிவிட்டேன் ஆமாம். இலங்கையருக்கு இஞ்சி சேர்த்த தேத்தண்ணியும்!

பெட்டியின் முகப்பில் "எத்திக்கும் தித்திக்கும்....கிருஷ்ணா ஜிலேபி கடை குஆவா மைசூர்பா உடனுறை கேஷூ மிக்ஸர்" என்று கண்டிருந்தது.

 அனைவருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்! 

-ப்ரஸன்னா  

 

Comments

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15