தடுப்பூசியாவது மயிராவது

ரியாக ஒரு வாரம் முன்பே லேசாக தண்டுவடத்தின் வால்ப்பகுதி முனையின் இரு பகுதிகளிலும் பிருஷ்ட்ட எலும்பின் இட மற்றும் வலப் பகுதிகளை அடக்கிய மொத்த இடுப்பெலும்பிலும் வலி மெதுவாக ஆரம்பித்து, பிறகு ஒரு கட்டத்தில் நடு முதுகும் சேர்ந்து கொண்டு நொக்கு நொக்கென்று நொக்கியது. அதற்கு முந்தைய  வாரத்தில்தான் காரின் இடப்பக்க பின் சக்கரம் அடிக்கடி அழுத்தம் குறைந்து, நெடுஞ்சாலையில் செல்கையில்  ஒரு பக்கமாக இழுத்து இழுத்து கிலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது சரி என்ன நோக்காடு என்று பார்க்கலாம் என்று Tire Discounters எடுத்துக்கொண்டு போனால் அவன் டயர்கள் நன்றாக இருக்கின்றன, வீல் பேலன்ஸிங் பண்ண வேண்டும் Shocks & Struts மாற்ற வேண்டும் என்று சொல்லி வடஇந்தியாவில் சிப்பாய் கழகம் நடந்த ஆண்டு எண்ணின் அளவு டாலர் பில் தீட்டி அதிர்ச்சி அளித்தான். சரி ஒழி, வாங்கின காசுக்கு ஏதாவது செய்திருப்பான் என்று எடுத்து ஓட்டினால், வளைவுகள் எல்லாம் ஸ்டிக்கிநெஸ் இல்லாமல் அருமையாக இருந்தாலும், வண்டி நல்ல சாலையிலேயே எகிறி எகிறி குதித்துக்கொண்டிருந்தது. கூகிள் செய்து பார்த்தால், அது சரியாவதற்கு ஒரு நூற்றைம்பது மைல்களாவது ஆகும் என்று கண்டிருந்தது. இதெல்லாம் எவர் கண்டார்? முதலில் அதுதான் குருத்தெலும்பைப் பதம் பார்த்திருக்கும் என்று நினைத்திருந்தேன். மூன்றாம் நாள் லேசாக பசித் தலைவலி மாதிரி ஒன்று வந்து ஒட்டிக்கொண்டது அதே நாளின் இறுதியில் உடற்சோர்வு! படிப்படியாக முன்னேறி ஒரு வழியாகக் கடும் தலைவலி, உடல்வலி, காய்ச்சல் என ஒவ்வொன்றாக ஒரு கல்யாணங்காச்சி என்றால்  பக்கத்து ஊரில் இருந்துகொண்டே ஆடி அசைந்து ஒவ்வொருவராக வரும் சொந்தக்காரர்கள் மாதிரி வந்தன. பிறகு நிறுத்தி நிதானமாக அல்லும் பகலும் தூக்கமில்லாமல் இன்ச் பை இன்ச் சித்தரவதை செய்து மகிழ்ந்தன. 

இந்த முதுகு வலி குருத்தெலும்பு வலியெல்லாம் எந்த வைரஸ் காய்ச்சல் வந்தாலும் சரியாக அட்டெண்டன்ஸ் கொடுத்துவிட்டு வந்து உட்கார்ந்துகொள்ளும் சமாச்சாரம்தான் மறதி காரணமாக முதலில் விளங்கவில்லை. நடு நடுவில் ஓமிக்ரான் (ஏ கூகிள், தயவுசெய்து வேகமாகக் கற்றுக்கொள்! ஓமிக்ரான் வந்து குறைந்தது ஒரு மாதம் இருக்கும். ஓமிக்ரான் என்று தட்டினால் ஒழிகிறான் என்று எழுதுகிறாய். Google Handwriting இலுமே கூட இதே தொல்லை. Transliteration இலாவது எதோ ஒரு லாஜிக் இருக்கிறது. Handwriting இல் என்ன கேடு வந்தது? அதில் நான்தானே என் கைகளால் எழுதுகிறேன்? கக்கறே முக்கறே என்று ஆட்டோ கரெக்ட் பண்ணுவதற்கு என்ன அவசியம் வந்தது உனக்கு?) 

அதாவது இதெல்லாம் மெது மெதுவாகத் தொடங்கிக் கொண்டு இருக்கும்போது  தொண்டையில் புறங்கையை வைத்து காய்ச்சல் சோதனை செய்துகொண்டே ஒரு வேளை எனக்கு ஓமிக்ரானாக இருக்குமோ என்று ராஜியை கேட்க அவள் உன் Fear Psychosis இல் தீயை வைக்க அதெல்லாம் ஒன்றும் இருக்காது என்று அடக்கி வைத்துவிட்டாள். Acetaminophen எத்தனை டோஸ்கள் போட்டாலும் தலை வலி விட்ட பாடில்லை பிறகு அதை நிறுத்திவிட்டு Ibuprofen. ம்ஹூம்! Ibuprofen இல் உடல் வலி கொஞ்சம் கேட்கிறது ஆனால் தலைவலி இரு மடங்காகிறது. கழுத்து, மற்றும் தோள்  வலியெல்லாம் இப்போது கூட சேர்ந்து ஒத்து ஊதத் தொடங்கிவிட்டன.  சரி கூகிள் நாயே என்னதான் செய்து  தொலைய என்று கேட்டால், ரெண்டையும் சேர்த்துப் போடலாமே என்று வழி கூறியது. ஓவர் டோஸ் ஆனால் ஒன்று லிவரையும் மற்றது கிட்னியையும் பாதிக்கும் என்றது. மயிரே போச்சு தலைவலி போனால் போதும் என்று ஒரு வழியாக இரண்டையும் சேர்த்து விழுங்கி நிவாரணம் பெற்றேன். பிறகு இரவில் மறுபடி காய்ச்சல் அடிக்கவே அப்போதுதான் ஞான உதயம் வந்தது போல் வீட்டில் உள்ள Binax Now Covid 19 Antigen rapid test kit வைத்து சோதித்துப் பார்த்தால், பாசிட்டிவ் என்று வந்திருந்தது. வந்தே விட்டது  பிரேக் த்ரூ இன்பெக்ஷன்! காலை ஆறு மணி வரை கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது ஒரே எரிச்சல் (அழவெல்லாம் இல்லை, ஆனால் அழ மட்டும்தான் இல்லை). பிறகு ஒரு வழியாக இரவு பதினோரு மணி டோஸ் தாமதமாக வேலை செய்து கொஞ்சம் காய்ச்சலைக் குறைத்து அருள் புரிந்தது. பிறகு ஒரு ரெண்டு மணி நேர அசதித் தூக்கம். அதற்குள் ராஜி இருவரையும் பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டிருந்தாள். நல்லவேளையாக நான் மூன்று நாட்களாகவே வீட்டு விலக்காக தனி தட்டு டம்ப்ளர் எல்லாம் வைத்துக்கொண்டு ஒரு அறையில் முடங்கி விட்டிருந்தேன். 

ஆபீசில் ஈமெயில் போட்டால், நீ உடனே அந்த டெஸ்குக்குப் போன் செய் இந்த டெஸ்குக்குப் போன் செய் என்று ஈமெயில் த்ரெட்டுகள் பல ஓடின. மேட்டர் எஸ்கலேட் ஆகி ஓடிக்கொண்டிருந்தது என்னுடைய கிளையண்ட் ரிப்போர்டிங் மேனேஜர் முதலில் ஒரு எண்ணைக் கொடுத்து நீ அந்த எண்ணில் தொடர்பு கொண்டு  கடைசியாக எப்போது கட்டிடத்திற்குள் இருந்தாய் யாரையெல்லாம் சந்தித்தாய் என்றெல்லாம் விளக்க வேண்டும். உன்னுடைய கம்பெனி ஹெல்ப் டெஸ்க்கையும் தொடர்பு கொண்டு நீ மறுபடி வேலைத்தகுதி உடையவன் என்பதை நிரூபித்து வியாதி வெக்கை ஒன்றும்  இல்லை என்பதையும் நிரூபிக்கும் ப்ராசஸ் ஒன்றையும் தொடங்கிக்கொள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அங்கு தொடர்பு கொண்டால், நீ க்ளோபல் எண்ணை முயற்சித்து நிலைமையை விளக்கு பிறகு அவர்கள் ஒரு டிக்கெட் ஓபன் செய்து எனக்கு அசைன் செய்வார்கள் பிறகு தான் எனக்கு பேச வேண்டும் என்று சொல்லவே. அந்த  எண்ணைத் தொடர்பு கொண்டு எப்போ என்ன நடந்தது, என்னென்ன நடந்தது என்றெல்லாம் விளக்கினேன் அவளும் அசுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டு முதல் நாள் எப்போது என்பதில் மற்றும் குறியாக இருந்தாள். அடியே எனக்கு என்ன மாத விலக்கா ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு மறுபடி முதலில் இருந்து ஆரம்பித்து என்று என்ன நடந்தது, கடைசியில் எப்போது அலுவலகம் சென்றேன் என்னென்ன அறிகுறிகள் இருந்தது என்றெல்லாம் விளக்கினேன். பிறகு ஒரு வழியாக ஒரு டிக்கெட் ஓபன் ஆகி அதை என் க்ளையண்ட் ரிப்போர்டிங் மேனேஜருக்கு பார்வேர்ட் செய்தேன். அதற்குள் அவர் மறுபடி போன் செய்து நீ ஏன் உன் Primary Care Provider ஐத் தொடர்பு கொண்டு PCR Test செய்து கொள்ளவில்லை என்று அடம் பிடித்தார் (இது இந்தியாவில் செய்யப்படும் RTPCR கிடையாது). PCR இல் இது என்ன வேரியண்ட் என்று தெரிந்துவிடும் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார் அதெல்லாம் ஒரு வெங்காயமும் தெரியாது ஒரு வேளை ஓமிக்ரான் அமெரிக்காவில் நுழைந்துவிட்டதா, ஒஹையோவில் நுழைந்துவிட்டதா என்றெல்லாம் என்னைவைத்துத் தெரிந்துகொள்ளலாம் என்கிற அற்ப ஆர்வம். ரொம்ப கோபித்தார். 

பிறகு வேறு வழியே இல்லாமல் Urgent Care சென்றால் அங்கு கருப்பும் வெளுப்புமாக ஒரு ஆறேழு பேர் லொக்கு லொக்கு என்று இருமிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். எங்கள் ஊர் பழனிச்சாமி டாக்டர் கிளீனிக் ஞாபகம் வந்தது. அவர்கள் இருமிய இருமலைப் பார்த்தால், கொரோனாவே பரவாயில்லை இங்கு வந்து சீசனல் ஃப்ளூவும் தொற்றிக்கொண்டால், நேராகப் போய் குழியில் படுத்துக் கொள்ளவேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டே. PCR செய்வீர்களா என்று கேட்டால், ஓ தாராளமாகச் செய்வோமே என்றுவிட்டு ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடுக்கச் சொன்னாள் பிறகு 50 டாலர் பணம் கட்டச்சொல்லிவிட்டு. ஒரு QR Code ஐ ஸ்கேன் செய்து அந்த வெப் பேஜில் போய் இன்சூரன்ஸ் விபரங்கள், அதிலேயே ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் கார்டு எல்லாம் போட்டோ பிடித்து பதிவேற்றி சப்மிட் செய்யச் சொன்னாள். முடித்துவிட்டு நோயாளிகளுடன் ஒன்றரை மணி நேரம் தேவுடு காத்தல். ஒவ்வொருவருக்கும் நிறுத்தி நிதானமாக 20 நிமிடங்கள். 

பிறகு என் முறை வந்தபோது கறுப்பினத்தவள் ஒருத்தி வந்து இருக்கையில் உட்கார்த்தி வைத்து POx ஆல் oxygen லெவல் பார்த்தாள். வெள்ளை ஒருத்தி வந்து என்ன ஏது என்று விசாரித்தாள் (நான் கொடுத்த ஃபார்ம் எதற்கு நாக்கு வழிப்பதற்கா?) பிறகு மூக்கில் விட்டுக் குடைந்து ராபிட் டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டு உனக்குப் பாசிட்டிவ் நீ போய்  ஒரு வாரம் வூடடங்கி இரு என்றாள். நானும் அதெல்லாம் சரி PCR பண்ணவில்லையா என்றால் நீ பாசிட்டிவ் தான் பண்ணத்தேவையில்லை தவிர நீ PCR பண்ணப் பணம் கட்டியிருக்கிறாயா என்று கேட்டாள். அடியே பணமும் கட்டியிருக்கிறேன் இரண்டுமுறை ஏதேதோ கேடுகெட்ட பாரங்களை வேறு பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறேன். முதலில் PCR சாம்பிள் எடு என்றேன் மறுமுறை மூக்கில் குடைய வேண்டுமென்றாள். குடை, குடைந்து தொலை என்றேன். அவளும் குடைந்தெடுக்க நான் மூஞ்சியிலேயே தும்ம ஸாரி என்று அவள் சொல்லிவிட்டு சாம்பிளை எடுத்துக்கொண்டு விடை கொடுத்து அனுப்பினாள். PCR இல் புதிதாக ஒரு மயிரும்  தெரியாது ஒரு வேளை ராபிட்டில் ஃபால்ஸ் பாசிட்டிவ் வந்திருந்தால் இதில் தெரிந்துவிடும். அதற்க்கு 72 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு வழியாக வீட்டுக்கு வந்து மற்றவர்களைச் சோதித்தால் ராஜிக்கும் சின்னவளுக்கும் நெகட்டிவ் பெரியவளுக்குப் பாசிட்டிவ் என்று வந்தது (ஒன்றுக்கு நான்காக வீட்டில் கிட்டுகள் இருந்தன. ஒன்றின் விலை பதினான்கு டாலர்கள்) 

இப்போது அவர்கள் இருவர் ஒரு அறையிலும் நாங்கள் இருவரும் ஒரு அறையிலுமாக இருக்கிறோம். இடையிடையில் அந்த மேற்கூறிய டெஸ்கில் இருந்து ஒருத்தி போன் செய்து என்ன நடந்தது சொல்லு, என்னைக்கி ஆபீஸ் போனே? என்று கேட்டுக்கொண்டிருக்கிறாள். அந்த டிக்கெட்டும் க்ளோஸ் ஆகிவிட்டது ஆனால் இன்டெர்னல் ஆக இந்த சைட்டுக்கென்று ஒரு டிக்கெட் அசைன் பண்ணி விட்டிருப்பார்கள் போலிருக்கிறது. பாத்ரூமில் இருக்கும்போது, தூங்கிக்கொண்டிருகும்போது என்று தினமும் 6 முறை போன் செய்து அதே கேள்விகள் நானும் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். கேள்விகள் அதே பதில்களும் அதே! நடுவில் ஒரே ஒரு முறை ஆமாம் நீ தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாயா? எப்போது போட்டுக்கொண்டாய் என்று கேட்டாள். நானும் சொல்லிவிட்டு மனதுக்குள் தடுப்பூசியாவது  மயிராவது என்று நினைத்துக்கொண்டேன்   


Comments

  1. அதான் ஒரு வாரமாக பதிவிறக்கம் இல்லையா? விரைவில் பூரணமாக குணமடைய என் பிரச்சனைகளை கடவுளிடம் வேண்டுகிறேன்....நீயும் ஸ்ரேயாவும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்..
    அன்பு..
    Karthik.K

    ReplyDelete
  2. மன்னிக்கவும் பிராத்தனைகளை....நீ சொன்னா கூகிள் அப்படிதான் சொல்லுது...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15