சிறுகதை: குருவைத் தேடு

நான் இங்கு வந்ததிலிருந்து மூன்றாம் ஆண்டு முகநூலில் கண்டுபிடித்த பல வருடங்களாகத் தொலைந்து போன பள்ளித்தோழன் அரசு. சென்ற முறை அழைத்திருந்தான் செல்லவியலவில்லை.  சிகாகோ சென்று பனி கொட்டித்தீர்க்கும் நான்கு நாட்கள் என் மனைவியின் தோழி வீட்டில் தங்கி உண்டும் உறங்கியும் சீட்டாடியும் கிரிக்கெட் கண்டுகழித்தும் கழித்துவிட்டு  வந்துவிட்டிருந்தோம். இம்முறை அரசுவின் அன்பு அழைப்பை ஏற்று  அவன் சொந்தமாக வாங்கியிருக்கும் கனவு மாளிகைக்குள் அடியெடுத்து வைத்தோம். அவனது பதினோரு வருட அமெரிக்கக் கனவு இவ்வீடு. முதல் அரைமணியில் வீட்டை ஃபெசிலிட்டி டூர் போலக் காண்பித்துவிட்டு, நீ ரெஸ்ட் எடு நான் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வருகிறேன் என்று என்னைத் தவிர்த்துவிட்டு  அண்டை அயலார்  நட்புக்  கூடுகைக்குச் சென்றுவிட்டான். அவன் போக்கிடம் பற்றிக்  கிச்சன் கேபினட்டின் மூலம் பின்னால் அறிந்துகொண்டேன். இவன் வீட்டில் கீழ் தளத்தில் ஒரு டேபிள் டென்னிஸ் மேஜையும் ஹோம் தியேட்டரும் உண்டு. ஆனால்  இன்று பக்கத்து வீட்டின் கீழ் தளத்தில் கிறிஸ்துமஸ் பார்ட்டியின் ஒரு அங்கமாக  பூல் (pool) விளையாடிக்கொண்டே பீர் அருந்துவது. அதற்குத்தான் சென்றிருக்கிறான். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்குச் செல்லும் நண்பர்கள் முதலில் செய்யும் வேலை,  சமூக அந்தஸ்தில் சற்று கீழ்நிலையில் இருக்கும் நண்பர்களைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்வது  அல்லது வெட்டிவிட்டுவிடுவது. நாங்களும் ஆர்வத்தில் ஸின்ஸினாடியில்  இருந்து முதல் நாள் காலை பத்து மணிக்குப் புறப்பட்டு, மாலை ஏழரைக்கு லேக் மில்ஸில் ஒரு ஓட்டலில் தங்கி அடுத்தநாள் காலை பத்து மணிக்குப் புறப்பட்டு மாலை ஐந்தே முக்காலுக்குச் சென்றடைந்தோம் மினியாபொலிஸை. 

இங்கெல்லாம் சொந்த வீடு வாங்கியவுடன் செய்யவேண்டிய சம்பிரதாயமான சில வேலைகள் உள்ளன. முதலில் யூஎஸ்ஸில் ஏதாவது மூலையில் தேமே என்று இருக்கும் யாருக்காவது  அவ்வப்போது வீடியோ கால் செய்து வெகு இயல்பாக மாளிகை போன்று இருக்கும் வீட்டுக்குள் உலாத்திக்கொண்டே பேச வேண்டும். அடுத்த கட்டமாக  அவர்களை அங்கு வருமாறு முதலில் அழைப்பு விடுத்துவிட்டு பிறகு மெது மெதுவாக வற்புறுத்தத் தொடங்க வேண்டும். அவர்கள் வந்தவுடன் வீடுதான் இவ்வளவு பெரிதாக இருக்கிறதே, இவ்வளவு பெரிய வீட்டையெல்லாம் நீங்கள் வாழ்க்கையிலேயே கண்டிருக்கமாட்டீர்கள் உங்களுக்குத் தனி அறை தருகிறோம் நீங்கள் ஜாலியாக உங்கள் அறையில் முடங்கி இருங்கள் என்று சொல்லிவிட்டு பரபரப்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டு எங்காவது போய் விட வேண்டும். மூன்று நாட்கள் கழித்து ஊருக்குக் கிளம்பும்போது வாசல் வரை வந்து, வந்ததற்கு நன்றி, நீங்கள் எங்களுடன் இருந்த நாட்கள் மறக்க முடியாத ரம்யமான நாட்கள் என்று சொல்லி அனுப்ப வேண்டும். அவ்வப்போது விருந்தினரிடம் உங்கள் செல்வச் செழிப்பையும் வாழ்க்கை முறையையும் பிரகடனப்படுத்துவதற்கு உங்கள் சொந்த வீட்டின், நாய்க்குட்டியின், குழந்தைகளின் லீலைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளி ஆகியவற்றை இயல்பாகக் காண்பிக்க வேண்டும். அக்கம் பக்கத்தில் இருக்கும் இந்தியக்குடும்பங்களை பத்திரிகை அடித்துக் கூப்பிட்டு கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் விருந்தளிக்க வேண்டும். மற்றவர்கள் உங்களைச்  சுற்றி நின்று கரகோஷம் செய்து மகிழ்வர், பரிசளிப்பர். அவர்கள் முறை வரும்போது நீங்கள் பரிசுப்பொதிகளைச் சுமந்து செல்லவேண்டும். இவைகளைச் செய்யத்தவறினால் முதலில் சமூக ஒதுக்கம் செய்யப்படுவீர்கள் இதனால் அடிக்கடி வீட்டுக்குள் புருஷன் பெண்டாட்டிக்குள் சண்டைகள் வேறு நிகழும் எதற்கு வம்பு என்று இவைகளுக்குப் பழகிவிடவேண்டும். இதெல்லாம் எனக்கு முதலிலேயே தெரியும் என்பதால், நானும் அரசுவைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 

மினியாப்பொலிஸ் குளிர் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், கொஞ்சநேரம் வெளியில் இருந்தால் உங்கள் மூத்திரப்பையில் இருக்கும் சிறுநீரும்கூட உறைந்து பனிக்கட்டியாகிவிடும். ஆகையினால் வெளியே சென்று வருவதைத் தவிர்த்து எனக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு அறையில் முடங்கி விட்டேன். குழந்தைகள் சிறிது  நேரம் நன்கு விளையாடுவதும், பசி மற்றும் களைப்படைந்ததும் எரிச்சல்  கொண்டு சண்டையிடுவதுமாக இருந்தனர். வெளியில் சென்றால் சைபீரியக்குளிர் அளவு இருக்கும். குளிரில் விரல்களில் ஏற்படும் ஃப்ராஸ்ட் பைட்ஸை எதிர்கொள்வதிலேயே மனத்தீரம் பகுதியாய்க் குன்றிவிடும்.  இதெல்லாம் வழமைதான் ஒரு சுவாரசியமும் கிடையாது. பிறகு எதில்தான் இருக்கிறது சுவாரசியம்? 

மிஸ்ஸிஸிப்பி நதியானது வட அமெரிக்காவிலேயே இரண்டாம் பெருநதி.  யூஎஸ்ஸிற்குள் உற்பத்தியாகும் பல்வேறு கால்வாய்களைத் தவிர, கனடாவில் இருக்கும் கண்ணுக்குத்தெரியாத வலைப் பனிக்குழி உருக்கங்களின் வழி,  பல லட்சம் கண்ணுக்குத் தெரியாத சிறு குறு நீரோடைகளாக இடையறா முயற்சியுடன் ஓடி, ராக்கி மற்றும் அப்பலாச்சியன் மலைகளுக்கு இடையில் புகுந்து வெளிப்படும் போது, வெறும் காற்றிலிருந்து  பெரும் சேனை திரட்டி எதிரியை அழித்தொழிக்கப் புறப்படும் களப்பிரர் போல் காட்டுப்  பிராவாகமெடுத்து யூஎஸ்ஸில் இருக்கும் மின்னிசோட்டாவிற்குள் ப்ரளயமாக ஓடி வரும் நதிதான் மிஸ்ஸிஸிப்பி. இதற்குப் பிறகும் முதல் பெருநதி எது என்று நீங்கள் ஆர்வம் கொள்ளத்  தொடங்கிவிட்டால்  உங்களை இக்கதைக்குள் இழுத்து உட்காரவைப்பது  கடினமே.

இங்கு கிறிஸ்துமஸ் அன்று ஒரு பெட்டிக்கடை கூடத் திறந்திருக்காது. எல்லோரும் குடித்தும் உண்டும் மகிழ்ந்து திளைப்பர். அடுத்த நாள் கடைகள் திறக்கப்பட்டுவிடும். அமெரிக்கா முழுவதும் கடை கன்னிகள் மால்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்  ஒக்லஹோமாவில் இருந்தாலும் ஒன்றுதான் ஒஹையோவில் இருந்தாலும் ஒன்றுதான்.  வேறு நாடாக இருந்தால் வேறு ஏதாவது வித்தியாசமாக யோசித்து அதில் ஈடுபட்டிருக்கலாம். அதனால்தான் கூகிளில் கோவில்களைத் தேடியபோது  கிடைத்தவற்றில், இரண்டில் ஒன்று பொதுவாக இங்கு இருக்கும் கோவில்கள் மாதிரி இருந்தது அதற்கும் கிறிஸ்துமஸ் அன்று சென்று வந்தாயிற்று. 

இரண்டாவது? காங்கேஸா! எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா? அது இருக்கட்டும் முதலில் ரம் என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது என்ன? ஒரு குடிவகை? அல்ல இங்கு அது ஒரு ஒரு நதியின் பெயர்! அதன் நதிமூலத்தையெல்லாம் விட்டொழியுங்கள் அதுவா இங்கு முக்கியம்? ரம்மும் மிஸ்ஸிஸிப்பியும் கலக்குமிடமான கூடுதுறைக்குப் பெயர்? உத்தர்பஷ்சிம் சங்மேஷ்வர் அதாவது வடமேற்கு சங்கமேஸ்வரம்! தற்போதைக்கு இவ்விரு நதிகளின் கூடுதுறை உறைந்து பனிப்பாளங்களாகக் காணப்படுகிறது. யூஎஸ்ஸில் ஸ்வாமி அதுல்யானந்தாவால் தொடங்கப்பட்ட முதல் க்ஷேத்திரம். ஆம் எனக்கும் போய் இறங்கும் வரை தெரியாது.

காங்கேஸாவை நினைத்துக் குழம்பிக்கொண்டிருக்கிறீர்கள்தானே? உங்களுக்குக் கொஞ்சம் நினைவு படுத்த விரும்புகிறேன். தமிழ் நாட்டில் கொல்லிமலை அடிவாரக் கிராமம் ஒன்றில் பிறந்து மெதுமெதுவாக ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு கல்கியில் கூட ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட மனச்சட்டையைக் கழற்று என்கிற தொடர் ஒன்றை எழுதிப் பிரபலமடைந்து பிறகு விசாகப்பட்டினம் சென்று ஆசிரமம் தொடங்கி, உலகமெங்கும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்துவிட்டு, ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு  பாலியல் குற்றச் சாட்டுக்குள்ளாகி திடீரென்று காணாமல் போனாரே அதுல்யானந்தா? அவர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்த ஷேத்திரம்தான் மிஸ்ஸிஸிப்பியும் ரம்மும் கலக்கும் முக்கூடலின் கரையில் ஆரவாரமேயின்றி அமைந்திருக்கும் காங்கேஸா.

கோவிலின் உள்ளே சென்றதும் அதுல்யானந்தாவின் ரூபம் பிரதானமாக சிலையாய் வடிக்கப்பட்டிருந்தது.  மேலும்  சில அதுல்யானந்தர் சிலைகள் இருந்தன அவற்றுக்கு தினப்பூஜைகளும் உண்டு.  இடது புறத்தில் வடக்கத்தி பாணியில் வெண்பளிங்கில் மூர்த்திகள், மற்ற இடங்களில்  வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் விக்ரஹங்கள். ஒரு சிறிய கால பைரவரின் மூர்த்தி, அம்மன் சிலை என்று அருமையாக இருந்தது. நாங்கள் சென்ற அன்றைய தினம் கால பைரவருக்கென்று பிரதானமாக பூஜை உண்டென்றும் சொன்னார் கோவிலின் பட்டர் மாதிரி இருந்த ஒருவர். முதலில் பொதுவாக கோவிலைப் பற்றி பேசத்தொடங்கினார் பிறகு அதுல்யர் தற்போது பௌதீகமாக எங்கு உள்ளார் என்று தனக்குத் தெரியாது என்றும் ஆனால் தான் நித்தமும் அவருடன் ஒரு உயர் உணர்வு தளத்தில் தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்தார். புரியவில்லை என்றேன் நான். 

அப்போதுதான் அவரது ஆங்கில உச்சரிப்பை கவனித்தேன். ஆமாம் பிஹாரியா நீங்கள்? எனக்கும் ஹிந்தி ஓரளவு தெரியும் நாம் ஹிந்தியில் கூடப் பேசலாம் என்றேன். பொதுவாக வடக்கத்தியர்களுடன் எனக்கு  ஆங்கிலம் பேசுவதில் இரண்டு அசவுகரியங்கள் உண்டு. ஒன்று அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால் அந்த இங்க்லீஷ் அக்ஸன்ட் எனக்கு ஒட்டிக்கொண்டு விடும். ஆங்கிலமும் சற்று மறந்துவிடும். என்னுடைய ஆங்கிலமோ, ஓரளவு பழக்கத்தின் வழி வந்த ஆங்கிலம்தான் சிறுவயதிலேயே கற்ற மேட்டுக்குடி ஆங்கிலம் கிடையாது. ஆண்டுக்கணக்கில் பெரு முயற்சியின் பலனாக ஓரளவு சரள நடை மற்றும் கன உச்சரிப்பு நீக்கமும் பெற்றிருந்தேன். ஆனாலும் ஒரு சில வேளைகளில் என்னுடைய இயல்பான காட்டான் உச்சரிப்பு  மூக்கை நீட்டி வெளிப்பட்டுவிடும். அது தவிர இன்னொன்று உங்களுக்குத் தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை, நான் தமிழில் வலைப்பூ  (blog) ஒன்றைத் தொடங்கி சில காலமாக அதில் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு வேளை இக்கதையினை நீங்கள் வாசித்துக்கொண்டு இருப்பதே கூட அதிலாக இருக்கலாம்! என்னுடைய சமீபத்திய தொடர் தமிழ் கூர் சிந்தனைகள் காரணமாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிகளில் பேசுவது அல்லது எழுதுவது இவையெல்லாம் ரொம்பவே நீர்த்துப்போய்விட்டது. இந்த அழகில் தொடர் ரொட்டி அக்ஸன்ட்டில் யாராவது என்னிடம் பேசிக்கொண்டிருந்தால், என் ஆங்கிலம் இன்னும் படு பாதாளத்துக்குப் போய் விடும்.    

இரண்டாவது இவர்கள் பேசுவதில் பாதிக்கும் மேல் எதுவும் புரியாது. நாம் மெட்றாஸ் பாஷையில்தான் இஸ்கூல் எல்லாம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் இவர்கள் எஸ்ஸில் தொடங்கும் எந்த வார்த்தையையுமே இஸ் என்றுதான் தொடங்குவார்கள். அதே போல் ble இல் முடியும் எந்த வார்த்தையையும் பல்  பல் என்று முடிப்பார்கள். கொஞ்சம் சோஃபிஸ்டிகேஷன் வந்தபிறகு அது 'புல்' என்றோ 'பில்' என்றோ முடியும் வகையில் பேசுவார்கள் அதுவும் தவறு, யார் போய் திருத்துவது? Able, table போன்றவற்றை தமிழர்கள் நாம் எப்படி உச்சரிப்போம்? அவர்கள் 'ஏபூல்'   'டேபூல்'  என்றோ 'ஏபல்'  'டேபல்' என்றோ உச்சரிப்பார்கள். வீக்கள் எல்லாம்  பீக்களாக மாறியிருக்கும் விக்டரியை பிக்டரி என்று உச்சரிப்பார்கள். இம்மாதிரி இன்னும் பல அதனால்தான் நான் இதற்கு ஓட்டுவாரொட்டி அக்ஸன்ட் என்று பெயர் வைத்திருக்கிறேன், பிறகு அதை இன்னும் சுருக்கி ரொட்டி அக்ஸன்ட் என்று வைத்திருக்கிறேன். என் உடன் பணிபுரிபவனும் ஒருவன் இருக்கிறான் அவன் யூபியோ எம்பியோ தெரியாது. புதிதாகச் சேர்ந்திருக்கிறான் இங்கு அமெரிக்கா வந்து பதினான்கு வருடங்கள் ஆகின்றன இன்னமும் கூட நடு நடுவில் இங்கு அமெரிக்கர்களுடன் பேசும்போதுகூட, "ஐ தாட் கே",  "ஐ டோல்ட் கி", "ஐ எம் பிஜி"  என்றெல்லாம்  பேசிக்கொண்டிருக்கிறான். என்னுடனும் கூட விடாப்பிடியாக ஆங்கிலத்தில் பேசி உயிரை எடுக்கிறான். இதற்கு நேரெதிராக இங்கு வந்து போலி அமெரிக்க அக்ஸன்ட் பேசி சாகடிக்கும் ஆட்களும் உண்டு. அது இன்னும் ரத்த வாந்தி எடுக்கும் அளவுக்கு இருக்கும்.  போலி என்பதால் நகைப்புக்குரியதாக மட்டுமே இருக்கும் அதனால் பெரிய பிரச்சனை ஒன்றுமில்லை. ஆனால் நான் சொல்லிக் கொண்டிருப்பது நிஜமாகவே ஒரு சீரியஸான பிரச்சனை. ஆனால் சில பெண்கள், குறிப்பாக தென்னிந்தியப்பெண்கள் இந்த விஷயத்தில் கில்லாடிகள். கிட்டத்தட்ட துல்லியமான அமெரிக்க உச்சரிப்பை, இருபத்தைந்து வயதில் இங்கு வந்தாலும் கற்றுக்கொண்டு விடுவார்கள். உன்னிப்பாகக் கவனித்தால் ஒரு சில இடங்களில் மட்டும் பிசிறு தட்டும்; பரவாயில்லை. அதுவும் அழகான பெண்கள் என்றால் அமர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.  வடக்கத்தி பெண்கள் என்றால் பார்ப்பது ரசிப்பது என்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் வாயைத் திறந்து பேசும் முன் ஓடிப்போய்விட வேண்டும். சரி அதை விடுங்கள்.  இக்காரணங்களால்தான் அவரிடம் நீங்கள் ஹிந்தியில் பேசுங்கள் என்று கேட்டேன். ஆனால் அவரது பிடிவாதம் அதிகமாகி ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

முதலில் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது பிறகு இவருக்கு அதுல்யருடன் ஏற்பட்ட ஈர்ப்பு, இவருடைய சிறு வயது ஆன்மீக அனுபவங்கள் மற்றும் தேடல்கள் போன்றவை எதுவுமே எனக்கு நம்பும்படி இல்லை அதனால் சுவாரசியம் அதிகமாகி, உண்மையை அறியும் நோக்குடன், அவருடைய ஆங்கில உச்சரிப்பை கவனிக்காது போகலானேன். இப்போது அவரை இடை மறித்துப் பல குறுக்குக் கேள்விகளைக் கேட்கலானேன்.

மெதுவாக அவருடன் பேச ஆரம்பித்து, நேரம் போவது தெரியாமல் கிட்டத்தட்ட அவரை ஒரு பேட்டியே எடுத்த மாதிரி  சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருந்தது. மீறிப்போனால் ஒரு முப்பது வயதுதான் இருக்கும்.  ஆள் கட்டை குட்டையாய்  ஐந்தடி உயரம் இருப்பார், கருந்தாமிர நிறம். வெட வெட உருவத்துடன், விபூதி, பூணூல், பஞ்சகச்சம் சகிதம் இருந்தார். கழுத்தில் தோல் பை மாதிரி ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. இஷ்ட லிங்கமாக இருக்கலாம். லிங்காயத்துக்களின் மரபில் கூட இது உண்டு. இவருடைய  இளம் சகோதரன் ஐஎஸ் முடித்துவிட்டு போஸ்டிங் வாங்கிவிட்டான் என்றார். 

ஒரு நிமிடம், ஐஎஸ் என்றால்? என்றேன். ஐஎஸ் ஐஎஸ்...ஐஎஸ் தெரியாதா உங்களுக்கு என்றுவிட்டு, அவர் அதை ஏதேதோ சொல்லி விளக்க முயன்று தோற்றுவிட்டு பிறகு ஆன்மீகத்துக்கு வந்துவிட்டார். என் சிந்தனை முழுவதும் ஐஎஸ் என்றால் என்ன என்று வியப்பதிலேயே பின்தங்கிவிட்டது. இதற்கிடையில் என் மனைவி தன் ஆன்மீகக் கேள்விகளை கேட்கத் தொடங்கிவிட்டிருந்தாள். 

கண்டுபிடித்துவிட்டேன்! ஐஏஎஸ் ஐத்தான் இவர் ஐஎஸ் என்று குறிப்பிடுகிறார். செக்ரட்டரியை செக்ட்ரி, ஜெனரலை ஜர்னேல் என்றெல்லாம் சொல்வார்களே வடக்கர்கள் அந்தமாதிரி ஆனால் அதெல்லாம் டெல்லி மற்றும் பஞ்சாபில். இவனைப் பார்த்தால், மன்னிக்கவும் இவரைப் பார்த்தால் பிஹாரி மாதிரி இருக்கிறார், சரி வடக்கர்களுக்குள்ளுமே சில ஒற்றுமைகள் இருக்கும் என்றெண்ணிக் கொண்டு இப்போது கூர்ந்தால், என் மனைவி நேரடியாக இல்லாமல் சோற்றுக்கு என்ன செய்கிறீர்கள் என்னும் தொனியில் ஏதோ கேட்டாள். ஆன்மீகக் கேள்விகள் சிலவும் இருந்தன. அவரும் அதற்கு நேரடியாக எந்த பதிலும் கூறிய மாதிரி நினைவில்லை. அப்போதுதான் ஒன்று என் மனதில் தோன்றியது. நமக்குப் பெரிய பிரச்சனையாகத் தோன்றும் ஏதோ ஒன்று இன்னொருவருக்கு ஒரு பொருட்டே இல்லை அப்படியென்றால் என்னவென்றே புரிவதில்லை. ஏனென்றால் அவருக்கு அது ஒரு பிரச்சனையே இல்லை. என் மனைவிக்கு அவர் எப்படி வேலையை விட்டுவிட்டு ஒரு சம்பாத்தியமும் இல்லாமல் இங்கு வாழ்க்கையை ஓட்டுகிறார் என்கிற கவலை மற்றும் ஐயம். அது என் மனதிலும் இருந்தது ஆனால் அவள் கேட்டுவிட்டாள்.  மேலும் தொடர்ந்த அவர்-

தினமும் காலை ஏழு மணிக்குக் கோவில் திறக்க வேண்டும் சில சம்பிரதாய பூஜைகள் மற்றும் கைங்கரியங்கள் செய்ய வேண்டும், மிஞ்சிப்போனால் ஒரு மணி நேரம் பிடிக்கும்,  அதற்குப் பிறகு இருக்கவேண்டிய அவசியமில்லை.  ஆனால் இவர் ஞாயிறுகளில் கூட நெடு நேரம் இங்கு இருக்க விரும்புகிறார். அதுல்யரின் பாலியல் செயல்பாடுகள் குறித்து இவருடைய அணுகுமுறை குறித்தும் அவர் சொன்னவை அனைத்தும் விவேகமாகவும் நடைமுறைத்தன்மை கொண்டவையாகவும் இருந்தன. ஆரம்பத்தில் கொஞ்சம் திணறல் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தவருக்கு, அதற்குப் பிறகு ஓரளவு கருத்துக்களைக் கோர்வையாய்க் கூறும் அளவுக்கு மேம்பட்டிருந்தது. இப்போது பார்க்கையில் ஆள் கொஞ்சம் தெளிவானவராகவும் அறிவாளி மாதிரியும் தெரிந்தது.  அதுல்யரை முதன்முதலில் இவர் உணர்ந்து அணுகிய சிறிது நாட்களிலேயே அவருடைய ஸ்காண்டல் வெளிவந்துவிட்டதாகவும் உடனே அவரைப்பற்றிய பிம்பம் உடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். அப்போது சில நாட்கள் தவிப்பில் இருந்ததாகவும் பிறகுதான்  அதுல்யர்  பற்றிய ஆழ்மனப் புரிதலும் பிம்பமும் வலுப்பெற்று செக்ஸ் என்பது ஒரு பெரிய பிரச்சனையே அல்ல அதை மட்டுமே வைத்து எப்படி ஒருவரை அவ்வளவுதான் இனி எல்லாமே முடிந்துவிட்டது என்று கருதுவது என்று கேட்டார். அதே நேரத்தில் ஒரு முறை கூட அதுல்யரின் செய்கையை வக்காலத்து வாங்குவதைப்போல் பேசிய மாதிரி  தெரியவில்ல. பேச்சு வெகு தீவிரமாக அவருடைய அகவயப்புரிதல் அவருடைய தேடல்கள் என்ன மாதிரியானவை என்று போய்க்கொண்டிருந்தது. 

ஒரு முப்பது வயது யூபிஎஸ்சி தேறிய பிஹாரிக்கு, கூடவே கொஞ்சம் ஒரு நாற்பத்துச் சொச்சம் வார்த்தைகள் ஆங்கிலமும் தெரிந்துவிட்டால், லௌகீக நல்வாழ்விற்கான கோல்டன் டிக்கெட் அது. அது மட்டும் கிடைத்துவிட்டால் போதும் எங்காவது அரசு வேலையில் காலாட்டிக்கொண்டு உட்கார்ந்துகொண்டு ஏழு தலைமுறைக்குச் சொத்து சேர்க்கும் வேலையை ஆரம்பித்திருப்பான். வீட்டுப் பெண்களை தொழுவத்தில் கட்டிய மாடுகள் மாதிரி வைத்திருப்பான். அலுவலக இருக்கையில் செருப்புக்களை அவிழ்த்து விட்டுவிட்டு, சம்மணங்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு பான் மென்று துப்பிக்கொண்டு, உள்ளங்கால் பாதத்தைச் சொறிவதும் பிறகு அதே கைகளால் உள்ளங்கைகளில் புகையிலையைக் கொட்டி சுண்ணாம்பு சேர்த்துத் தேய்த்து வாயில் போட்டுக் குதப்புவான். போஜ்பூரியில் பெண்களின் அவயங்களைப் பற்றிய வக்கிர நகைச்சுவையை ஆபீசர் என்கிற மமதையில் ஜூனியர் பெண்களின் உடனிருப்பது பற்றிக் கவலைப்படாமல் சத்தமாகக் கூறிச் சிரிப்பான். தனியாரில் இருந்தாலும்  நாற்பது ஆங்கில வார்த்தைகளே போதும் அவற்றை வைத்துக்கொண்டு பிழைத்துக்கொள்வான். எதுவுமே இல்லாவிட்டாலும் கழுதை இருக்கவே இருக்கிறது டில்லியோ, புனேவோ, சண்டிகரோ உபேர் ஓட்டப் போய் விடலாம். இவன் அதற்கு நேரெதிராகத் தேடல் கீடல் என்றெல்லாம் பேசுகிறான். இதுவே ஒரு ஆச்சர்யம்தான் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். வாயில் பான் கறையோ நகக் கண்களில்  அழுக்கோ இருக்கிறதா என்று ஒரு முறை உற்றுப்பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அடிக்கடி  யூபிஎஸ்சி தேறிய பிஹாரித்தனம் மட்டும் நன்றாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. பேச்சில் நடுநடுவே இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை, பிஹாரில் அராரியா மாவட்ட கலெக்டர் பெயர், ஹிமாச்சலப்பிரதேசத்தில் எத்தனை முறைகள் சட்ட மன்றத்தேர்தல்கள் நடை பெற்றிருக்கின்றன, சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார் போன்ற விபரங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் வந்து விழுந்தவண்ணமிருந்தன. 

நான் அவரை உங்களுக்கு விபாஸனா பற்றி தெரியுமா என்று  கேட்டேன். அவர் அதற்கு ஓ தெரியுமே நான் கலிபோர்னியாவில் இருக்கும்போது ஒரு முறை போயிருந்தேன் என்றார். அப்போதுதான் முதன் முறை விபாஸனா சென்று வந்த ஒருவரை  நேரடியாகச் சந்திக்கிறேன். தொடர்ந்த அவர் - 

"முதலில் நான் விபாஸனா வைப்பற்றி ஒன்றும் அறிந்திலேன். பிறகு அதைப் பற்றிய சில காணொளிகளைக் காண நேர்ந்தது. அதில் கண்டிப்பாக ஏதோ இருக்கிறது என்று நம்பினேன் பல நாட்கள் யோசனைக்குப் பிறகுதான் சென்றேன். பத்து நாட்கள் பயிற்சி முடிந்ததும் வெளியே வந்தபோது, முதலில் எனது பார்வை கழுகு மாதிரி கூர்மை ஆகிவிட்டது. மூக்குக்கண்ணாடியைத் தூக்கி வீசிவிட்டேன். பயிற்சியில் இருந்தபோது ஆறாம் நாள் என்று நினைக்கிறேன்  அப்போது  எனக்குள் இருக்கும் பல அ-பூரணத்துவங்கள் மெதுமெதுவாக என் மனக்கண் முன்னே உயிர்பெற்று ஹை டெபினிஷன் தொலைகாட்சித்திரையில் தோன்றுவது போல் வந்து நின்றன. தியான நிலை மேம்பட மேம்பட, அது நிச்சலனமற்ற நீரைப்போல் காலவெளி பற்றிய நனவில்லா நிலையில் உறைந்து நின்றது. எத்தனை வினாடிகள் மணித்துளிகள் அல்லது மணிநேரங்கள் அந்நிலையில் கரைந்திருக்கும்    என்று என்னால் அவதானிக்கவியலவில்லை. நான் கண்திறந்து பார்த்தபோது மாலை நான்கு முப்பது என்று காட்டிக்கொண்டிருந்தது கடிகாரம். நான் கண்களை மூடியது காலை பத்துமணி! அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. என்னுள் அத்தனை வருடங்கள் புதைந்து கிடந்த முற்றிலிகள் அனைத்தும் முற்றுப் பெற்று என் அகக்கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக  அழிந்தன அவ்வாறு அழியும்போது சிறுவயதிலேயே டயாபடீக் ஆக இருந்த நான், என் கணையம் இன்சுலின் சுரப்பதை உணரத்தொடங்கினேன். என் எண்ணங்களும் எதையும் ஜட்ஜமென்டலாக அணுகுவதை அன்றிலிருந்தே நிறுத்திவிட்டது. உண்மையில் நம் வாழ்வில் ஏற்படும் பல போராட்டங்களுக்கு நமக்கு சிறுவயதில் ஆழ்மனதில் ஏற்பட்ட சில கற்பிதங்கள்தான் காரணம். அக்கற்பிதங்களுக்கும் மூல காரணம் நாம் கண்ணுற்ற சில அசவுகரியமான அனுபவங்கள் முழுமை பெறாமல் அப்படியே இருந்துவிட்டமைதான். இவற்றைத்தான் நான் அ-பூரணத்துவம் என்றும் முற்றிலி என்றும் குறிப்பிடுகிறேன்" 

அது கிட்டத்தட்ட நமக்குள் சிறுவயதில் ஏற்பட்ட ஏதேதோ மனக்கசப்புகளைத்தான் (resentments)  இவர்கள் பட்டறையில் அப்படிக்குறிப்பிடுகிறார்கள் என்று அவதானித்துக் கொண்டேன். அவை  எப்படி நம்மை அறியாமலேயே நமக்கு எதிராகச்செயல் படுகின்றன, எப்படி அன்றாட வாழ்விலும், பொதுவாக லௌகீக வாழ்க்கையில் நம்மை வெற்றியடையாமல் செய்கின்றன  என்றெல்லாம் விளக்கினார். சிலருக்கு ஒரு திறமையும் இருக்காது ஆனால் தான் சார்ந்த துறையில் சாதிப்பார்கள் ஏனென்றால் அவர்கள் முழுமை பெற்றவர்கள்.  இம்மாதிரி முழுமை அடைய வேண்டுமென்றால் அதுல்யானந்த ஸ்வாமி ஒரு  மேம்பட்ட உணர்வுத் தளத்தில் (higher conscious) இல் இருக்கிறார், அவர் கற்பவ்ருக்ஷம் என்கிற நிகழ்ச்சி ஒன்றை  எப்போதாவது வழங்குவார் அதில் நம்மில் உள்ள அ-பூரணத்துவங்களையெல்லாம் அத்தளத்தில் நம் கண்முன்னே வெளியேறி முழுமை அடையும். அவ்வாறு முழுமை அடையும்போது (பூரணத்துவம்) நாம் யாரையும் எதையும் குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நம் இலக்குகளை நோக்கி வெகு இலகுவாக மாறிப் பயணம் செய்யத்தொடங்கியிருப்போம் என்று சொல்லலானார். 

இதைப் பற்றி அவராக வலிந்து எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. பேச்சானது விபாஸனா பற்றி  நெடுநேரம் நடந்த பிறகுதான் அதற்கும்  இவைகளுக்கும் (கற்பவ்ருக்ஷம், சாம்பசிவோகம் இன்ன  பிற) உள்ள ஒற்றுமைகள் பற்றிய விவரணைகளைப் பற்றிக் குறிப்பிடும்போதுதான் சொன்னார். ஒரு ஸ்வாமி என்பவர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும், எப்படியெல்லாம் பேச வேண்டும், நடந்துகொள்ளவேண்டும் என்கிற என்னுடைய மனப்பிம்பம் காரணமாக ஒரு வித  இறுக்கத்துடனேயே இருந்தேன் ஆனால்  அந்த ஸ்கேண்டல் மேட்டர் வெளி  வந்தவுடன் அதுவும் போய் விட்டது. அவர் இப்பூவுலகில் பிறந்த எல்லா உயிரினங்களும் இயல்பாகச் செய்யும் செயல் ஒன்றைச் செய்த செய்த ஒரே காரணத்திற்காக எதற்கு நான் தேடும் ஒன்று அவரிடம் கிடைப்பதை இழக்க வேண்டும்? அதனால் நாம் எதிலுமே முன்முடிவுடன் இருப்பதை விடுத்தால்தான் மேற்கொண்டு பயணிக்க முடியும் என்கிற உறுதி எனக்குள் ஏற்பட்டது. கற்பவ்ருக்ஷம் செய்து முடிக்கையில், இறந்து போன தனது தந்தை  பற்றிய மனப்பிம்பமும் அப்படியே வேறு விதமாக, நேர் மறையாக மாறி  விட்டதாகவும் கூறினார். எனக்கு ஒரு மாதிரி மெய் சிலிர்த்தது.               

பேச்சு சுவாரஸ்யத்தில் இரண்டரை மணி நேரங்கள் கடந்துவிட்டன. நின்ற வாக்கிலேயே அத்தனை பேசியிருந்தோம். எனக்குக் கால்களும் கீழ் முதுகும் கடுகடுக்க ஆரம்பித்துவிட்டன. அத்தனை நேரம் நின்றிருந்தும் அவர் உடலில் எவ்விதத் தொய்வோ அசவுகரியமோ தென்படவில்லை.  அவர், தான் இக்கோவிலில் பணியாற்றத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை இத்தனை  நேரம் யாருடனாவது பேசியிருப்பார் என்பது சந்தேகமே. இக்கோவிலுக்குள் நுழையும்போது  ஒருவித  அதீத காந்தவீச்சுக் குட்படுவது போல் இருந்தது. வெளியில் வரும்போது எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு எழுந்தது. வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் எனக்கு ஆட்டோ பைலட் மோடில் மனசாட்சி எழுந்து உட்கார்ந்துகொண்டு, உனக்கு ஏதாவது புரிந்ததா? உன்னுடன் சிலர் நேரடியாக மலினமாக நடந்திருக்கலாம் அல்லது நல்லவன் மாதிரி நடித்துக்கொண்டே அவ்வாறு செய்திருக்கலாம் ஆனால் அதையெல்லாம் நின்று நிதானமாகப் பொருட்படுத்திக்கொண்டிருந்தால் என்னாவது? உன் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நீ மனதில் கருதிக்கொண்டிருப்பவையெல்லாம்தான் அறங்களா? அவ்வறங்கள் எப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன? உன்னுடைய அறங்கள் என்பன என்னென்ன? என்று போய்க்கொண்டிருந்தது. உனக்குள் இருக்கும் அ-பூரணத்துவங்களைக்  களைந்தால்தான் ஒரு தெளிவான பாதை  பிறக்கும். அதற்காக என்ன செய்வதாக உத்தேசம்?

பக்கத்தில் அமர்ந்திருந்த என் மனைவி, என் மனதைப் படித்துக் கொண்டிருந்தவள்போல், நான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள் - 

"நம் வாழ்க்கையில் உனக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சி அடைவதும் கெடுதல் நடந்தால் உனக்காக வருத்தப்படவும் என்னைத்தவிர யாருமே இல்லை  என்பதைத் தெரிந்துகொள். மற்றவர்களால் உண்மையில் அதற்கு நேரெதிராகத்தான் நடக்கும். அது சுற்றமோ நட்போ உடன்பிறந்தவர்களாகவே இருந்தாலும் உன்னிடம்  பணமோ, திறமையோ அல்லது செல்வாக்கோ ஏதாவது ஒன்று ஏதோ ஒரு விதத்தில் மற்றவரை விடச் சிறப்பாக இருக்கும் வரையில்தான்  உனக்குச் சிறிதேனும் மதிப்பு இருக்கும் ஆனால் பொறாமையால் வயிறெரிவார்கள் அது எப்போதாவது வெளிப்படும் அதை நீ  கண்டுகொள்ளாமல் இருக்கப் பழக வேண்டும். நீ விழும்போது உள்ளுக்குள் மகிழ்வர், எழும்போது அதைக்கண்டு  திகைப்பர் அதுவும் அவ்வப்போது வெளிப்படும் இதுதான் நிதர்சனம். ஆனால்  இதையெல்லாம் நீ அதீத நுண்ணுணர்வுடன் அணுகினால் உனக்கு மன உளைச்சல்தான் மிஞ்சும். இதைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் ஒரு உதாரணம் சொல்கிறேன் கபில் ஷர்மா ஷோவில் சதீஷ் கௌஷலும் அனுபம் கெர்ரும் தோன்றும் எபிசோட் ஒன்று உள்ளது அதில் சதீஷ் கௌஷல் அனுபம்கெரைப் பார்த்து எப்படியெல்லாம் பொறாமைப் பட்டுக்கொண்டிருந்தார் என்று கிட்டத்தட்ட ஒரு confession மாதிரி சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இவை அனைத்தையும் மீறி இன்றைக்கும் இருவரும் நண்பர்கள்தான். அவைகளை நீ மலினம், சிறுமை என்று நினைக்கிறாய் ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கான நியாய அளவுகோலின் படி செயல்படுகின்றனர். அதை பற்றி உனக்கென்ன கவலை? அதை உன்னால் ஏதாவது செய்யமுடியுமா?   ஒருவன் தனக்குத் தாற்காலிகமாகக்  கிடைத்த சிறு மேட்டிமையை   அதிகாரமாக நினைக்கிறானென்றால் அது அவன் சிறுமையைக் காட்டுகிறதுதான். ஆனால் அது நிரந்தரம் அல்ல. அவற்றைப் பற்றியெல்லாம் நீ ஏன் சிந்திக்கவேண்டும்? உனக்கான நேரம் வரும்போது பண்புள்ள, அறமுள்ள சுற்றமும் நட்பும் அமையும் அதற்கு முதலில் நீ சில தளைகளை அறுக்கத் தயாராக வேண்டும். என்ன தளைகள் என்றா கேட்கிறாய்? நானும் கவனித்துக்கொண்டே இருந்தேன். அந்தக் கோவில் பட்டருடன் பேசும்போது நுழைத்து நுழைத்து ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாய். முதலில் நீ எதையாவது உறுதியாக நம்ப வேண்டும் அனைத்திலும் அவநம்பிக்கையா?  உன் கவனம் முழுதும் அவர் உச்சரிப்பிலும் தோற்றத்திலுமே இருந்ததே ஒழிய அவர் சொன்ன ஆழமான மற்றும் நுட்பமான சில விஷயங்களைக் கோட்டை விட்டுவிட்டாய். அவர் வட இந்தியர் என்று தெரிந்ததும் உன் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடியிருக்கக்கூடும் என்பதையும் நீ சொல்லாமலேயே என்னால் கணிக்க முடியும்." 

என்று சொல்லிக்கொண்டே போனாள். அப்போது காங்கேஸா கோவில் பட்டர் கூறிய ஒன்று  நினைவுக்கு  வந்தது. 

"நம் வாழ்க்கையில் அனைவருக்கும் குரு என்று ஒருவர் வேண்டும், அவர்தான் எப்போதெல்லாம் நீ ஒரு இடத்தில் சிக்கலில் மாட்டிக்கொண்டோ, தேங்கி நின்றாலோ உன்னை விடுவிப்பார். எங்கள் ஸ்வாமி அதுல்யானந்தர் மஹாபாரதத்தை சத்சங்கங்களில் உதாரணம் காட்டிச் சொல்வதும் இதுதான். அர்ஜுனன் தன் வாழ்க்கையில் எத்தனை முறைகள் தடங்கலில் சிக்கினாலும் கிருஷ்ணர்தான் அவனுக்கு உடனிருந்து வழி காட்டினார், சிக்கலில் இருந்து விடுவித்தார். சிகண்டியை, வ்ரிஷசேனாவை, கர்ணனை மற்றும் துரியோதனனை வீழ்த்தியது போன்றவற்றை மேற்கோள் காட்டிச் சொல்வார். குருவுக்கான தேடல் ஒருவருக்கு ஏற்படும்போது அது அவரைத் தானாக அவரிடம் இட்டுச்செல்லும்" 

நான் விருட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தேன். என்ன பார்க்கிறாய்? கவனம் எப்போதும் பாதையில் இருக்கவேண்டும் இப்போது நீ இடம் திரும்பவேண்டும் என்றாள்.

(முற்றும்)

Comments

  1. மிக மிக அருமையான எழுத்து ப்ரஸன்னா....மிக மிகத் தெளிவான வரிகள்

    சபாஷ் அருமை

    I am proud to be a friend....

    ReplyDelete
  2. Arumai, manakannil ottitteenga 🙂🤝👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience