வெல்வது எப்படி?

தென் ஆப்பிரிக்காவுடன் தொன்னூற்று இரண்டில் இருந்து இதுவரை எட்டு தொடர்களில் ஆடிய இந்தியா, ஒரே ஒரு தொடரில் சமன் செய்தது தவிர  இதுவரை வெல்ல முடியவில்லை. முடிந்த தொடரை எப்படியாவது வெல்ல முடியுமா என்று ஆலோசனையில் இருப்பதாகக் கேள்வி. ஒரு வேளை பயிற்சி போதாதோ என்று புதிதாக ஒரு நவீனச்சிந்தனை ஒன்று உதித்திருக்கிறதாம். அடுத்த முறை கண்டிப்பாக இந்தியா வெல்ல வேண்டுமென்றால், சில யோசனைகள் என்னிடம் உள்ளன அவையாவன - 

1) புஜாரா, ரஹானே போன்ற மூத்த வீரர்களுக்கு மட்டும் அவர்களது சீனியாரிட்டி அடிப்படையின் படி மூன்று அவுட்டுகள் கொடுக்கலாம். அதாவது மூன்று முறை அவர்கள் அவுட்டானதும்தான் ஆட்டமிழந்ததாகக் கருதப்படும். அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்றால், அவர்களது கடந்த இருபது இன்னிங்ஸ்களின் ரன்களைக் கூட்டி, கூட ஒரு ஐந்து ரன்கள் சேர்த்துப் போட்டு அவர்களின் ஸ்கோருடன் சேர்ப்பதற்கு ஐஸிஸி விதிகளின்படி ஏதாவது வழியிருக்கிறதா என்று அலசலாம். இம்முறையில் தேவைப்பட்டால், அவர்கள் மீது கேஸ் கூடப் போட்டு தோற்ற தொடரையே கூட வெல்ல வாய்ப்பிருக்கிறது. 

2) பவுலிங் போடும்போது நாமும் ஸ்லெட்ஜ் பண்ணி தெ. ஆ  மட்டையாளர்களை சரியான விதத்தில் கடுப்பேற்ற முடியவில்லை. காரணம்? ரிஷப் பண்ட் பேசும் ஆங்கிலம் அவர்களுக்கு நல்ல நகைச்சுவையும் நக்கலுமாக இருக்கிறது. அதில்  இன்னும் உற்சாகம் ஆகி, இவன் பேசறது செம காமெடியா இருக்கு, நின்னு கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு என்று அவுட் ஆகாமல் அடம் சாதிக்கின்றனர். ஸ்லெட்ஜ் பண்ணும்போது கூட "ஆக்சுவலி ஐயாம் சபரிங் ப்ரம் பீவர்" ரேஞ்சில் ஆங்கிலம் பேசினால் எப்படி எடுபடும்? களத்திலேயே பண்ட்டுக்காக ஒரு இன்டெர்ப்ரெட்டர் வைத்துக்கொள்ளலாம். இவர் என்ன ஸ்லெட்ஜ் செய்ய வேண்டும் என்று அவரிடம் இந்தியில் கூறிவிட்டால், அவர் அதை சரியாக மொழிபெயர்த்து ஸ்லெட்ஜ் செய்துவிடுவார். இல்லையென்றால் இதற்கென்றே அஷ்வினை டீப் மிட் விக்கட்டிலிருந்து எடுத்து சில்லி பாயிண்டில் போட வேண்டும். பும்ரா பவுலிங் போடும்போது சில்லி பாய்ண்ட் போட்டால் சில்லி மூக்கு உடைந்துவிடும். அஸ்வின் ஸ்லெட்ஜ் செய்யும்போது நீ ரெண்டாயிரத்தி பத்துல அந்த சீரிஸ்ல, மூணாவது மேட்ச்ல நாப்பதாவது ஓவர்ல எப்புடி கிழிச்சேனு தெரியும் என்று சொல்லி மட்டையாளரை, சிந்தனையாளராக்கி, கவனக்குறைவேற்படுத்தி  களத்தில் வீழ்த்துவார். அந்தளவு திறமையாக ஸ்லெட்ஜ் பண்ணுவார். அவர் தரும் சில உள்குத்து ஸ்லெட்ஜ்கள் அடுத்த முறை இந்தியா ஹோம் சீரீஸ் போகும்போதுதான் புரியும்.

3) பொழுதன்னிக்கும் இந்த டிஆர்எஸ் அம்ப்பயர்களுடன் ஒரே அக்கப்போராகப் போய்விட்டது. எப்படியிருந்தாலும் இங்கு விக்கெட் விழாது. அவர்களும் கொடுப்பதாக இல்லை.  இங்கு பீல்டில் இருந்து கோலி என்ன சாதித்தார்? அஸ்வினை ஜோடிபோட்டுக் கொண்டு ஸ்டெம்ப் மைக் அருகில் போய் லொள்ளு பேசுவதற்கு பதில், பேசாமல் டிராவிட் கோலியைக் கூப்பிட்டு - 

"கண்ணு, நீ கம்முனு அங்கவோய் கோந்துகிட்டு ஓரியாண்டுக்கிட்டு இரு கண்ணு. உம் பேச்ச கேக்குலைன்னா தூக்கி போட்டு முதிச்சுட்ரு" என்று டிவி அம்பயர் தலை மேல் போய் உட்கார்ந்துகொள்ளப் பணிக்கலாம்.  இல்லையென்றால் ரிவ்வியூ போவதற்கு முன்பே, விக்கெட் கீப்பரை விட்டு டீன் எல்கரின் கையயைப்பிடித்து முறுக்க ஏதாவது புது ரூல்ஸ் கொண்டு வர வேண்டும். இம்முறையில் மேட்டர் டிஆர்எஸ் வரை முற்றாமல் பார்த்துக்கொள்ள உதவும்

4) ஒரு வேளை தெ. ஆ பீல்டர்கள் வாயைபிடுங்கினால், ரிஷப் பண்ட் அதற்குக் கோபித்துக்கொண்டு,  உணர்ச்சிவசப்பட்டு ரபாடாவின் வேகப்பந்தை இறங்கி அடித்து அவுட் ஆகி விட்டால், அவரை சின்னப் பையன் என்று மன்னித்து மறுபடி ஆட விடவேண்டும். தெ. ஆ அணித்தலைவர், ரபாடாவிடம் சென்று - 

"அடப் போயி பொட்டாட்ட பவுலிங் போடு போ. ஏண்டா கொழந்தப் பையங்கோடப் போயி யாராச்சி எசிலி போடுவாங்களா?  ஓங்கி காதோட அப்புனன்னாச் சேரி" என்று சொல்லிவிட்டு ரிஷப் பண்ட்டிடம் சென்று - 

"கண்ணு, நீவோயி பேட்டிங் புடி சாமி. நல்லா வெளையாடோனுங்கண்ணு. சாயங்காலம் ஊட்டுக்கு வந்ததையும் ஐய்யங்கிட்டச் சொல்லி அப்புச்சி வாங்கீட்டு வரச்சொல்றேன். என்ர மடில கோர வெச்சு நெய்ச்சோறு ஊட்டி உடறேன்" என்று சொல்லலாம். ரிஷப் பண்ட் அதற்கும் மசியாமல் முதிர்ச்சியின்மை காட்டினால், சாங்யாலம் டாடா கூட்டீட் போயி முட்டாய் வாய்ங்குடுக்கறேன்  என்று திராவிடை விட்டுக் கூறவைக்க வேண்டும். 

Comments

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15