Cookery Mockery
அந்தத் தலைப்பை அப்படியே தமிழில் எழுதினால் "குக்கெரி மாக்கெரி" என்று எழுதவேண்டும். படிப்பதற்கே ஒரு மார்க்கமாக இருப்பதால் அப்படி எழுதாமல் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். இந்தக்காலத்தில் எந்நேரமும் அடுப்படியில் நின்று ஆக்கி, இறக்கி, சோறு போட்டு, சோறு தின்று, சட்டி கழுவிச் சலிக்கும் பெண்களைத் தவிர, மற்ற வேலைகளிலோ தொழில்களிலோ ஈடுபடும் பெண்களாகட்டும் அல்லது ஆண்களாகட்டும், ஒரு மாறுதலுக்காகச் செய்து பார்க்க விரும்பும் ஒன்றுதான் சமையல் என்பது. எழுத்தில் உள்ள சமையற் குறிப்புகள் இனி தேவையில்லை, எது வேண்டுமானாலும் யூ ட்யூபில் வந்து கொட்டுகிறது. ஆனால் பிரச்சனையும் அங்குதான் தொடங்குகிறது.
ஒரு காலத்தில் ஆங்காங்கே மின்மினிப்பூச்சிகள் மாதிரித் தோன்றி மறைந்த சிட்டுக்குருவி வைத்தியர்கள் கொரோனா அலையில் பல்கிப் பெருகி புற்றீசல் மாதிரி வந்துகொண்டேயிருந்தார்கள். வரமிளகாயை ஊறப்போட்டு அரைத்து அதை எடுத்து மூக்கிலும் நெற்றியிலும் பற்றுப்போட்டால் கொரோனா மட்டுப்படும். 90% நுரையீரல் பழுதடைந்த கொரோனா பேஷண்ட்டை எழுப்பி அவர் மூக்கில் காய்ச்சிய கழுதைப்பாலில் சித்தரத்தையைப் பொடித்துப் போட்டு பழுக்கக் காய்ச்சிய தேனிரும்புக் கம்பியால் கலக்கி அதே கம்பியால் தொட்டு மூக்கில் மூன்று சொட்டுகள் விட, நோயாளி டக்கென்று எழுந்து உட்கார்ந்துகொண்டு ஐந்து நிமிடங்கள் தம் கட்டுவார். அவ்வாறு செய்தால் இவருக்கு குணமாவது மட்டுமின்றி ஊரில் உள்ள மொத்த கொரோனாவும் பின்னங்கால் பிடரி அடிக்க சைனாவைப் பார்த்து ஓடிவிடும். என்று சகட்டு மேனிக்கு வைத்தியம் சொல்லிக்கொண்டிருந்தனர்.
சரி அதற்கும் சமையலுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. மாறுதலை விரும்புபவர்கள் தவிர உண்மையில் உழைத்துக் களைத்து, பசி மயக்கத்தில் ஏதாவது பொங்கித் தின்னலாம், வழக்கத்தை விடக் கொஞ்சம் வேறு விதமாகச் சமைக்கலாம் என்று தொடங்கும் தனியன்கள்/ தனியைகள் யூட்யூபை இயக்கினால் -
"இந்தக் கீரையை வேகவச்சி ஒரு பத்து நாள் சாப்ட்ருந்தா, ராஜ பார்வை படமே வந்திருக்காது"
"சட்டினில இப்டி ரெண்டு கொத்து கருவேப்பிலையைச் சேர்த்தா, மசுரு நல்லா கரு கருன்னு வளரும்"
"வெண்டைக்காயை இப்பிடி வதக்கி சாப்டா, மலச்சிக்கல் ஒடனே நீங்கிரும்"
"கூட்டுல இப்புடி தேங்காப்பால அரைச்சு ஊத்துனீங்கன்னா வாயில இருந்து ___வரை எங்க புண்ணு இருந்தாலும் ஒடனே ஆறிடும்"
"சின்ன வெங்காயத்தை இப்புடி நெய்யில வதக்கீட்டு புளித்தண்ணி ஊத்துனீங்கன்னா, மூலம் அடுத்தநாளே போயிரும்"
"தாளிக்கறப்போ ஒரு ஸ்பூன் கடுகு சேத்தீங்கன்னா ப்ரெஸ்ட் கேன்சர் இருந்தா ஒடனே போயிரும். அதே வெந்தயம் போட்டீங்கன்னா சக்கரை வியாதி ஒடனே கொறஞ்சு போயி அடிக்கடி ஒன்னுக்கு அடிக்க மாட்டீங்க "
"உருளைக் கிழங்கை வறுக்கும்போது கொஞ்சம் மஞ்சள்தூள் போட்டீங்கன்னா, கேஸ் ஒடனே கார்க் வச்சி அடைச்சது மாதிரி ஆஃப் ஆயிரும். குடல் கேன்சர் பூரண குணமாயிடும்"
"ரசத்துல எவ்வளவுக்கு எவ்ளோ நீங்க சீரகத்தையும் மிளகையும் நுணுக்கிப் போட்றீங்களோ அவ்வளவுக்கவளவு, உங்க கிச்சன்ல ஒரு மூலைல நின்னு வேடிக்கை பாத்துட்டு இருக்கற கொரோனா அப்புடியே நடுநடுங்கிப் போயி, ஜட்டிலயே ஒண்ணுக்கடிச்சுட்டு ஓடிப்போயிரும். ஒங்க வீட்டுப்பக்கமே தல வச்சிப் படுக்காது"
என்று எந்நேரமும் பாட்டி வைத்தியம் சொல்லிக்கொண்டே சமைக்கின்றனர். "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று திருமூலர் சொல்லியிருக்கிறார் என்று மேற்கோள் காட்டிவிட்டு அடுப்பைப் பற்றவைத்து யூட்யூப் வீடியோ போடுகின்றனர். இவைகளையெல்லாம் கடுமையாகக் கண்டித்து, திருத்தவேண்டிய இயற்கை(!) வைத்தியர்களோ, எந்நேரமும் எழுப்புதல் கூட்டத்தில் பேசுவது போல் மாப்பிள்ளைச் சம்பா, பொண்ணு கும்பா என்று பேசி துட்டு தேத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழறிஞர்களாவது திருமூலரின் கூற்றுக்கு நல்ல பொழிப்புரை வழங்கலாம்.
இக்கருமாந்தரங்களைப் பார்த்துப் பார்த்து, தமிழ்ச் சமூகமே சீரழிந்து போய், அதன் உச்சகட்டமாக, நண்பர்களுடன் போனில் பேசும்போது கூட, இரண்டே நிமிடத்தில் உணவு வைத்தியம் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். இது தமிழ் குக்கரி ஷோக்களில் மட்டுமே நடக்கும் சமையல் தீவிரவாதம். இதையெல்லாம் நான் பார்த்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்தால், ஐயோ இன்று துவையலில் இஞ்சி போடாமல் விட்டுவிட்டோமே, அமருமிடத்தில் கேன்சர் வந்துவிடுமே என்றோ, கொத்துமல்லி ஒரு கொத்து அதிகமாகப்போட்டு, அது வராத இடத்தில் அளவுக்கதிகமாக மயிர் முளைக்க வைத்துவிடுமோ என்றோ கடும் மன அழுத்தம் கொடுக்கிறது. அந்த அழுத்தத்தில் சாப்பிடாமல் எழுந்து கையயைக் கழுவிக் கொண்டு மறுபடி யூ ட்யூபை முடுக்கினால்,
"வாதுமைப்பருப்பு என்று நம் முன்னோர்கள் சும்மா பெயர் வைக்கவில்லை. அதை நெய்யில் வறுத்து ஒரு மண்டலம் தொடர்ந்து உண்டுவர, வாதநோய் நீங்கும்" என்று ஒருவர் கொஞ்சம் கூட வெட்கமோ நாணமோ முகத்தில் காட்டாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.
இளந்தாரிகள் எல்லாம் இப்படிச் சமையல் குறிப்புகளில் சர்க்கரை வியாதிக்கும், மூலவியாதி, மலச்சிக்கலுக்கெல்லாம் சோற்று வைத்தியம் சொல்லிக்கொண்டிருந்தால், ஒரு கனிந்து, பழுத்த மாதரசி ஒருவர் கை நடுக்கத்துடன் வந்து கனிவான முகத்துடன் அடுப்புப் பற்றவைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முருங்கைக்காய், முருங்கைக் கீரை, முருங்கைப்பூ எல்லாவற்றையும் போட்டு வதக்கிக்கொண்டே வெகு ருசிகரமாக அதன் மகத்துவத்தையும் அது எப்படிக் கைமேல் பலனளிக்கும் என்றும் விலாவாரியாக விளக்கிக்கொண்டிருந்தார். இதே ரெசிபியை ஒரு கீர்த்தி சனோனையோ அல்லது சன்னி லியோனையோ வைத்துச் செய்திருந்தால், நன்கு 'தூக்கலாக' இருந்திருக்கும் (ஒருவேளை இதுவே நான் எழுதும் கடைசி பதிவாகக்கூட இருக்கலாம். ஏனென்றால் இப்பொழுதெல்லாம் வீட்டில் தேர்ந்தெடுத்த சில பதிவுகளை, வரிக்கு வரி வாசிக்க வைக்கப்படுவது மட்டுமல்ல மொழி பெயர்த்து விளக்கப்படும் போக்கு நிலவி வருகிறது)
உண்மையில் நாம் சமைப்பதற்காக அடுப்பிலிட்ட மறுகணம் சுத்தமாக மறித்துவிடுகிறது உணவு. நாம் உண்ணும் சாதம், ரசம், குழம்பு, கூட்டு, பொரியல், அவியல் என்று எதிலுமே எவ்வித சத்துக்களும் இல்லாச் சக்கைதான். சமைத்த பிறகு அசைவ உணவிலாவது சில அமினோ அமிலங்களும், புரதங்களும் உயிர்ச்சத்துக்களும் மீந்திருக்கும். சைவ உணவில் இருக்கும் ஃபிளேவோனாய்டுகள், பாலிஃபீனால்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் எல்லாம் பச்சையாகச் சாப்பிடும்போது மட்டுமே முழுமையாகக் கிட்டும். நம் ஆட்கள் சக்கையைத் தின்று தின்றுதான் டி3 மற்றும் பி12 குறைபாடுகளுடன் எந்நேரமும் மன நோயுடன் உலா வருகின்றனர். இப்படியே போனால் நான் ஊட்டச்சத்து நிபுணர் அவதாரமெடுக்க வேண்டிவரும் என்பதால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.
ஆனாலும் கடலுணவு வெகு சிறப்பு. நான் எழுதுகிறேனே ஒழிய என்னால் இந்தச் ஜென்மத்தில் அதையெல்லாம் சாப்பிட முடியாது. நான் இதை எழுதிவிட்டேன் அல்லவா, ஏற்கனவே "அய்யோ நீ முட்டை சாப்பிடுவியா? ஆடு சாப்பிடுவியா? பன்னி சாப்பிடுவியா?" என்று என் ஆட்கள் டார்ச்சர் தாள முடியவில்லை, இனிமேல் இன்னும் சிறப்பு. நான் வேறு சில மேட்டர்களையெல்லாம்தான் எழுதியிருக்கிறேன் அதையெல்லாம் இருபத்திநாலு மணிநேரமும் செய்துகொண்டேவா இருக்கிறேன்?
இதை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் ஒரு எபெக்ட்டுக்காக யூட்யூப் சமையல் வீடியோ ஒன்றைப் பார்த்துக்கொண்டே எழுதினேன் அதில் ஒரு ஆள் கோழிக் கால்களை நெருப்பில் வாட்டியதுமட்டுமல்லாமல் அதை ஒரு உரலில் இட்டுக் குத்தி எடுத்து ஒரு சட்டியில் போட்டு கொத்திக்கவைத்துக் கொண்டே-
"இதக் குடிச்சீங்கன்னா நெஞ்சுச் சளியெலாம் சட்டுனு வத்தீரும்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். எனக்குப் பொசுக்கென்று எழுதுவதற்கு விரல் வந்துவிட்டது. நான் இத்தோடு நிறுத்திக்கொள்வது நலம் என்று நினைக்கிறன்.
🤝👏👌
ReplyDelete