வசைகள், வசைகளினும் கொடியன மற்றும் ஆர்ஆர்ஆர்

மீப காலங்களில் மிக மோசமாக மனிதர்கள் வாயில் விழுந்து வதைபடும் வார்த்தைகள் இரண்டு. ஒன்று -  Cringe இன்னொன்று Pan-India . முதலாவது தமிழர்கள் தவிர மொத்த இந்தியர்களின் வாயிலும் விழுந்து வதைபடுகிறது. இரண்டாவது, அதாவது Pan-India என்பது திரைப்பட உலகில் இருப்பவர் வாய்களில்.

 இந்த Cringe ஐ மன்னித்து விட்டுவிடலாம். ஏனென்றால், ஒரு ஐந்தாறு வருடங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேசி மகிழ்ந்த 'கொய்யால' வும். 'வச்சு செய்றேன்' ஆகிய வார்த்தைகளை விட இது பரவாயில்லை என்பதால். இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் தெரிந்துதான் பேசுகிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஏனென்றால் -

 இங்கு இரு வருடங்களுக்கு முன்பு, அதாவது கொரோனா வருவதற்கு முன்பு, யாராவது ஒருவர் வீட்டிற்குச் சென்று குடும்பத்துடன் குதூகலமாக சாப்பிட்டுவிட்டு ஏதாவது மொக்கை சினிமா பார்ப்பது அல்லது கொஞ்ச நேரத்திற்கு Dumb Charades மாதிரி ஏதாவது விளையாடுவது. அதில் ஒரு யுவதிக்கு, அன்பர்  ஒருவர் Enact பண்ணிக் காண்பித்துக் கொண்டிருந்தார். அது என்ன என்பதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமாக இருந்ததாம், அதை எக்ஸ்ப்ரெஸ் செய்வதற்கு அந்த யுவதி அன்பரைப் பார்த்துச் சொன்னது -

  "நீங்க என்னய நல்...ல்லா வெச்சு செய்யறீங்கண்ணா..."

  அவள் புருஷன் மட்டும் அதை ஆர்வத்துடன் ரசித்தது மட்டுமில்லாமல், மற்ற அனைவரும் கூட சிரித்து, கை தட்டி, அவளது நகைச்சுவை உணர்வை மெச்சினோம். அதற்கெல்லாம் என்ன பொருள் என்று எனக்குத் தெரியாது. ஒரு வேளை தெரிந்த ஒருவன் அந்த இடத்தில் இருந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும் இல்லை?

    இப்பட்டியலில், ப்ரோ, பூமர் போன்ற வார்த்தைகளும் உள்ளன. பூமருக்குப் பதில் டோமரை எப்படத்திலாவது ஒரு நல்ல நடிகரை வைத்துப் பிரபலாமாக்கி விட்டுவிட்டால் நன்று. ஒரு மெட்றாஸ் ஸ்லாங் வார்த்தை இம்மாதிரி ஒரு பொது மொழி வழக்குக்கு வந்து புழங்கினால் மிக நன்று. அதை வைத்து வரிசையாகப் புற்றீசல் போல் வார்த்தைகள் வந்து குடும்பத்துடன் டீவி பார்க்கும் போதும், ஜாலியாகப் பேசிச்சிரிக்கும்போதும் புழங்கத்தொடங்கும்.

   "டேய் குத்விக், சவுண்டக் கொறடா அம்மா போன் பேசீட்டு இருக்கேன்ல ஒண்ணுமே கேக்க மாட்டேங்குது"

   "த்தா...இரும்மா, எப்போப்பாரு அத்த கொற இத்த கொறைன்னுகினு. ஒம்மால போட்டன்னா..."

  "இருடா உங்கப்பா வரட்டும் சொல்றேன்"

   "யாரு பாதரு பூமரா? வர்ட்டும் அந்த டோமரு. செவுள்ளயே ஒன்னு வுடறேன்"

  அப்படியே திருச்சி, மதுரை, கோவை, கன்னியாகுமரி என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலுமுள்ள பொறுக்கிகளின் வக்கிர வட்டார வழக்குகளையும் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவிலும் எதார்த்த சினிமாவிலும் சேர்க்கவேண்டும். படு அமர்க்களமாக இருக்கும். வெப் சீரீஸ்கள் இன்னும் சிறப்பு.  ஊரில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளையுமே ஓரே வரி வசனத்தில் வைத்துவிடவேண்டும் என்று வெறிப்பிடித்துப் போய் அலைகிறார்கள்.  

 இது இவ்வாறு இருக்க, நான் அடிக்கடி புனைவுகளில் சில வசை வார்த்தைகளைப்  போட்டு எழுகிறேன் என்று நண்பர் ஒருவர் போன் செய்து அறிவுரைக் கச்சேரி செய்தார். அதற்கு நான் சொன்ன பதில் - நான் சமுதாயத்தில் நடப்பதைத்தானே எழுதுகிறேன்? எனக்கு இத்தனை வயது ஆகிறது, ஆனாலும் எங்கள் வீட்டில் என் பெற்றோர்கள் இம்மாதிரி வார்த்தைகளை வீட்டுக்குள் பேசினால், சூட்டைக் காய்ச்சி வாயிலேயே இழுத்துவிடுவார்கள்.

  "கத புஸ்தகம் எளுதுனா ரொம்ப இனிமையா மகிழ்ச்சியா வீட்டுல எல்லாரும் சந்தோஷமா படிக்கற மாதிரி எளுதனும்" என்றார். சரி என்று கேட்டுக்கொண்டு வேறு ஏதோ எழுதினேன். அதிலிருந்து அவர் என் ப்லாகைப் படிப்பதையே நிறுத்திக்கொண்டுவிட்டார்.

 இவரை மறுபடி ஈர்க்க வேண்டும், அப்படி ஈர்க்க வேண்டுமென்றால், கீழ்க்கணுமாறு வசனங்கள் வருகிற மாதிரியும் அதற்குத் தகுந்த கதை ஒன்றையும் எழுத வேண்டும் என்று யோசித்து வைத்திருக்கிறேன்.

 யாரு பெரியப்பாவா? அடடே, இப்பதான் உங்களப்பத்தி நெனச்சேன், அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்களே?"

  மாமா: உஸ் என்ன வெய்யில் என்ன வெய்யில். (வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார்)

  (அடுத்த வினாடி வீட்டின் வாசலில் ஒரு குரல் கேட்கிறது. தபால்காரர் வந்து நிற்கிறார்)

  "ஸார் போஸ்ட்"

 "யாரு போஸ்ட்மேனா? அடடே , இப்பதான் உங்களப்பத்தி நெனச்சேன், அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்களே?"

 (அடுத்த வினாடி வீட்டின் வாசலில் ஒரு குரல் கேட்கிறது. பால்காரர் வந்து நிற்கிறார்)

 "அம்மா பால்"

 "யாரு பால்காரரா? அடடே, இப்பதான் உங்களப்பத்தி நெனச்சேன், அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்களே?"

இப்படியெல்லாம் எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்று நினைக்கிறேன்.

 இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஓல் என்ற வார்த்தைக்கு உருட்டு என்று பொருள். இது ஒரு Slang வார்த்தை (முதலில் Slang என்றால் என்னவென்றும் நாம் கூகிள் செய்து அறிந்துகொள்வது நலம்). இந்த வார்த்தை வேலூர், காட்பாடி பகுதிகளில் உருட்டு/ பொய் என்பதன் Slang ஆக உபயோகிக்கப்படுகிறது. அது அப்படியே பெங்களூருக்கும் பரவி, பெங்களூர் கன்னட டயலக்ட்டில் இரண்டறக்கலந்து, இந்த Slang வார்த்தை இல்லாமல் பேசவே மாட்டார்கள். Slangs don't have to be vulgar always.

  சில உதாரணங்கள் -

  "ஓல் உட்னு இருக்கறான்"

"நல்லா ஓல் வுடு"

அம்மாதிரி Pan India வும் ஒரு ஓல்தான்.

ஆர்ஆர்ஆர் பார்த்தால் அது பல்லிளித்துக்கொண்டு தெரிந்துவிடும். இப்போது இது ஒரு ஃபார்மூலாவாக மாறிவிட்டது. எண்பதுகளில் அஞ்சு பாட்டு மூணு பைட்டு என்று இருந்தது, இப்போது அது முரட்டு பிஜிஎம், காட்டுத்தனமான வீஎக்ஸ்எஃப், முன்னூறு கோடி பட்ஜெட், திசைக்கு ஒரு வீதம் என்று எந்த மூஞ்சியைக் காண்பித்தால் ஒரு பத்து டிக்கெட் அதிகம் புக் ஆகுமோ அம்மாதிரி மூஞ்சிகளை இழுத்து உள்ளே போட்டுக்கொள்வது என்று வளர்ந்து நிற்கிறது.

 ஆர்ஆர்ஆர் படத்தைப் பற்றிச் சொல்வதென்றால், பாகுபலி முதல் பாகம் பார்த்த கையோடு, பின்னங்கால் பிடறியடிக்க வீட்டிற்கு ஓடி வந்து சத்தியம் செய்தேன் இனிமேல் ராஜமௌலி படமே பார்க்கக்கூடாது என்று. ஆனால் இந்தப்படம் அதை அப்படியே மாற்றிவிடும்  என்று நினைத்தேன் கொஞ்சம் கூட மாறவில்லை மாறாக சத்தியத்தை மீறிய குற்றத்திற்காக வருத்தப் படவைத்தது. மெமரியும் கொஞ்சம் Short Lived என்பதால், நான் சத்தியம் செய்ததையே மறந்துவிட்டிருந்தேன்.

 இங்கெல்லாம் தெலுங்கு வெர்ஷன் இரவு பத்துமணிக்கு மட்டும் போடுகிறார்கள். தினமும் பகல் வேளைகளில் ஹிந்தி வெர்ஷன் சப் டைட்டிலுடன் லிப் சிங்கும் இல்லாமல் ஒரு மயிரும் இல்லாமல் ஓடுகிறது. பிறகு என்ன Pan India? அஜய் தேவ்கன் வரும் காட்சிகளில் அவர் வாய்ஸில் ஹிந்தி பேசுகிறார் அது மட்டும் சிங்க்கில் இருக்கிறது. Pan India என்பது ஒரு பக்கா ஓல் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. குறைந்தது மணி ரத்னமாவது சில வருடங்கள் முன்பு வரை நடிகர்களை மாற்றிப்போட்டு வெவ்வேறு வெர்ஷன்களை க்ளோசப் வரும்போது மட்டுமாவது சரியாக லிப் சிங்க் செய்ய வைத்திருந்தார். அப்படங்கள் அனைத்தும் மொக்கை, அது வேறு விஷயம். இப்படத்தில் வரும் அத்தனை காட்சிகளும் தெலுங்கு மொக்கை காட்சிகள்.

 அதுதான் ஐநூறு கோடி பட்ஜெட் இருக்கிறதே? அதை வைத்துக்கொண்டு இருப்பதிலேயே ரிச்சாக இருக்கும் காட்சி ஒன்றை இடைவேளைக்கு முன் காண்பித்துவிட்டு, படத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக கடைசியில் ஒரு மறுபடியும் ஒரு காட்டு வீயெஃப்எக்ஸ் வைத்திருக்கிறார் தலைவர். அடுத்த படத்திலாவது அவரது குடும்ப ம்யூசிக் டைரக்டர் கீரவாணியை மாற்றிவிடுவது நலம். ஓட்டைப்பானையில் ஈ புகுந்தது போல் பா.லி-1 இல் வந்த அதே இசை. அதன் வேரியண்ட்டுகள் மாறி மாறி வந்து வதைக்கிறது.

 கதையையும் ஸ்க்ரிப்டையும் தந்தை எழுதிக்கொடுத்து விடுகிறார், ம்யூசிக் குடும்ப இசைக்கலைஞர் போட்டு விடுகிறார், யாரோ வசனம் எழுதிவிடுகிறார்கள், இருக்கவே இருக்கிறது ஐநூறு கோடிக்கு VFX. இவ்வளவு அருமையான ஸ்க்ரிப்ட்டை வைத்துக்கொண்டு இவருக்கு இருக்கும் ஒரே வேலை நடிப்பு சொல்லிக்கொடுப்பது. மிகச்சரியாக அதில் போய் வேலையைக் காட்டிவிட்டார்.

  காட்சிக்குக் காட்சி டிராமா ட்ரூப் நடிப்பு நடிக்கிறார்கள். ஜுனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணின் க்ளோசப் காட்சிகள் ஒவ்வொன்றிலும் பழைய நாகேஸ்வர ராவ் நடிப்பெல்லாம் நடிக்கிறார்கள். இவர்கள்தான் தெலுங்கு சினிமா டெம்ப்லேட்டில் நடிக்கவேண்டும், அதுதான் முறை. ஆனால் வெள்ளைக்காரர்களுக்கெல்லாம் போய் அதிகப்பிரசங்கித்தனம் செய்து ரா.மௌ நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவர்களும் ஸ்கூல் டிராமா/ தெலுங்கு நடிப்பு நடிக்கிறார்கள்.

 ஒரு இடத்தில் ஜு.என்டிஆர்  தனிமைச்சிறையில் இருக்கும் ராம் சரணைக் காப்பாற்றும் இடத்தில், டபுள் ஆக்ட்டிங்  எம்ஜியார் படத்தில் வருவது போல் காட்சி வருகிறது. அதாவது அவரை இவர் தன் தவற்றை உணர்ந்து காப்பாற்ற வருகிறாராம், அதை ஒரு பதினைந்து நிமிடங்கள் விளக்கி, பேக்ரவுண்ட் ம்யூசிக் போட்டு மரண மொக்கை போடுகிறார்கள். அதுவரை பிரிட்டிஷ் போலீஸ் புடுங்கிக்கொண்டு இருக்கிறது. ஐநூறு கோடியில் ஒரு நூறு கோடி ஒதுக்கி ஒழுங்காக சீன்கள் வைத்து,  ஒழுங்காக நடித்திருக்கக் கூடாதா?

  இதைவிட ஒரு ஹைலைட் என்னவென்றால், Second Hand Embarrassment என்பது நடக்காமல் இருந்திருக்கும்; எப்போது? ஒரு வேளை இங்கிருக்கும் தெலுங்கு ஆட்கள் தத்தமது வெள்ளைக்கார நட்புக்களை இந்தப் படத்திற்கு கூட்டிவராமல் இருந்திருந்தால் அப்போது. ஆங்காங்கே வெள்ளைக்கார முகங்கள் தென்பட்டன, பை டீ ஃபால்ட்டாக அவர்களைக்கூட்டி வந்தது யார் என்றால், தெலுங்கு மக்கள் (அ) இந்திய மக்கள். யாராவது வாந்தியை எடுத்துவிட்டு, அதைக்கூப்பிட்டு பெருமையாக பக்கத்து வீட்டுக்காரனுக்கு காண்பிக்கவும் செய்வார்களா?

  "எங்க படம் ஒன்னு வந்துருக்குது பாரு" என்று கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள்.

 அவர்களுடைய மொக்கை ஹாலிவுட் படம் ஒன்று வந்திருக்கும்போது, சத்யம் தியேட்டரில் மொத்த ஹாலிலும் அமெரிக்கர்கள் உட்கார்ந்திருக்கும்போது அவர்கள் சில இந்தியர்களை கூட்டி வந்திருந்து, அவர்களைப் பார்த்து இதுதான் உங்க ஒலகத் தர படமாடா என்று மனதுக்குள் கேட்டால், அவர்களுக்கு எப்படியிருக்குமோ அப்படியிருந்து எனக்கு. அதுதான் Second Hand Embarrassment.

 பா.லி ஹேங் ஓவர் இன்னும் விடவில்லை போலிருக்கிறது ரா. மௌ க்கு.

மக்கள் சூழ்ந்து நிற்கும்போதெல்லாம் அதே பட ஞாபகம் வருகிறது. மக்கள் கொந்தளித்து வெள்ளையர்களைத் தாக்குமிடங்களிலெல்லாம் நமக்கும் ரத்தம் கொப்பளிக்கவேண்டாமா? எல்லாமே பிளாஸ்டிக்காக இருக்கிறது. Gandhi (1982) கலவரம் வெடித்து அதில் பிரிட்டிஷ் இந்தியப் போலீஸ் ஸ்டேஷனைத் தாக்கும் காட்சி ஒன்றைப் பார்த்துவிட்டு எடுத்திருக்கலாம். ஆனால் இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இதில் வரும் அதீத வன்முறைக்காட்சிகள் எல்லாம் ஸோ கால்டு எதார்த்த சினிமாவில் வருவது போல் குலை நடுங்கும் அளவு இல்லை. இதில் இருக்கும் செயற்கைத்தன்மை காரணமாக இருக்கலாம். ஆனாலும் குழந்தைகளுக்கு இது அதிகமே.

இன்னொரு ஆச்சர்யமான விஷயம், வெள்ளைக்காரர்களின் நடிப்புதான் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டதே ஒழிய, இதில் வரும் ஆங்கிலேய பாத்திரங்கள்  பேசும் வசனங்கள், அப்படியே இங்கிலிஷ் மக்கள் பேசும் ஆங்கிலம் போல் அருமையாக இருந்தது. வாக்கியங்களும், அதில் வரும் வார்த்தைகளில் இருக்கும் உண்மைத்தன்மையும் அருமை. உச்சரிப்பும் சுருதி சுத்தமாக பிரிட்டிஷ் உச்சரிப்பு! அதில் வரும் Edward Sonnenblick இற்கு மட்டும் பிரிட்டிஷ் உச்சரிப்பு கொஞ்சம் பிசிறு தட்டியது. ஏனென்றால் அவர் அமெரிக்கர். மற்றவர்கள் ஐரிஷ் ஆக்டர்கள். ஆனாலும் இந்தப் படத்தின் தரத்திற்கு அதுவே மிகை. தவிர, பெரிய ஹாலிவுட் நடிகர்களே பிரிட்டிஷ் அக்ஸன்ட்டில் படு சொதப்பு சொதப்புவார்கள். லகான் என்ற படத்தில், ஆங்கிலேயர்கள் ஹிந்தோஸ்தானி பேசுவதுபோல் மொக்கை போட்டிருப்பார்கள், அதில் ரொம்ப அதிகப் பிரசங்கித்தனம் செய்து, Paul Blackthorn இற்கு, இந்தியர் ஒருவரை டப்பிங் பேச வைத்திருப்பார்கள். அந்த வகையில் இந்தப்படம் பரவாயில்லை. ராம் சரணின் ஸ்க்ரீன் ப்ரெஸன்ஸ் போலீஸ் உடுப்பில் நன்றாக இருக்கிறது.

 ஆர்ட், செட்டிங்ஸ் அருமை. குறிப்பாக டெல்லி தெரு என்று ஒரு இடத்தில் சேஸிங் காட்சி ஒன்று வருமே அந்த இடம் அதி அற்புதம். இறுதிக் காட்சி வெடிக்கிடங்கு மற்றும் நடு நடுவில் வரும் ஆயுதக் கிடங்கும்  அள்ளுகிறது. ஃப்லாஷ் பேக்  அஜய் தேவ்கன் காட்சிகளில் வரும் இடங்களும், காட்சிகளும், நடிப்பும் பொய்த்துப்பாக்கிகளும் என்று அனைத்துமே உச்சபட்ச செயற்கைத் தன்மை.

 மொத்தத்தில், ஒரு நல்ல கதையைக் கையில் வைத்துக்கொண்டு, ஐநூறு கோடி-வீஎஃப்எக்ஸ், ஐநூறு கோடி- வீஎஃப்எக்ஸ் என்று ஓவாளப்பட்டுக் கொண்டு  மற்ற எல்லாவற்றையும் தூக்கி டிச்சுக்குழியில் போட்டுவிட்டார் ராஜமௌலி.  

 இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, Pan India என்று மார்தட்டிக்கொண்டு வரும் படங்களுக்கு மத்தியில், சத்தமே இல்லாமல் ஒரு கன்னடப் படம் வந்து போனது. அதுதான் உண்மையில் இந்தியப்படம், Pan India எனும் ஓல் இல்லாத இந்தியப்படம். அது குறித்து, அப்போதிருந்த மனநிலையில், சாரு எழுதிய மதிப்புரைக்கு கொஞ்சம் காட்டமாக அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதைத் தேடி எடுத்து, தூசு தட்டி நாளை வெளியிடுகிறேன்.

 படம் பார்த்துவிட்டு வந்து விரக்தியில் புலம்பிக் கொண்டிருந்தவனிடம், வீட்டிலிருக்கும் ஒரு ஜீவன்,  ஊரே உலகமே பாராட்டுது, இந்தப்படமும் புடிக்கலையா, அப்ப நீயே ஒரு படம் எடு என்றாள். எடுப்பமுல்ல என்று நினைத்துக் கொண்டேன். இங்கும் எழுதுகிறேன் - எடுப்பேன்.

Comments

Popular posts from this blog

வலியின் கதை

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

Jawan - An Inimitable Experience