என் வயது இருபது
கால
எந்திரம் என்பது அறிவியல் ரீதியில் சாத்தியமான ஒன்றா
என்று தெரியாது. நம்மால் ஏறித்தான் பயணிக்க முடியாதே ஒழிய, சில வரம்பெல்லைகளுக்குட்பட்டு, காலச் சாளரத்தின் வழியே எட்டிப்பார்க்கும் உணர்வை அளிக்கவல்ல ஒன்றுதான் யூட்யூப் என்று தயங்காமல் சொல்லலாம்.
ஒரு காலத்தில், திரை அரங்குகளில் ஃபில்ம்
டிவிஷனின் ஆவணப்படம் பார்க்காமல் படத்தைப் பார்த்தால், படம் பார்த்த திருப்தியே
இராது என்று சொல்லும் ஆட்கள் உண்டு. நான் கொஞ்சம் கொஞ்சமாக
நாஸ்டால்ஜியா என்னும் வெற்றுப் போதையை
விட்டு விலகி வெறும் பதிவு செய்பவனாக மட்டும் இருக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறேன். இறந்தகாலம் என்பது எவ்விதக் கொண்டாட்டமும் இல்லாத ஒன்று என்று கொஞ்சம் கொஞ்சமாக ஞானமடைந்து வருவதால் கூட அவ்வாறு இருக்கலாம்.
யோசித்துப்
பார்க்கும்போது, எனக்கு இருபது வயது இருக்கும்போது எனக்கும், என்
வயதை ஒத்த இளைஞர்களுக்கும்
இந்த வீடியோவில் வரும் இளைஞர்களைவிட, எதிர்பார்ப்புக்கள்
மற்றும் ஆசை நிராசைகள் எல்லாம்
பல மடங்குகள் கூடியிருந்தன. எங்கும் கடும் போட்டி, வேலை வாய்ப்பின்மை. இவை
தவிர, எனக்கு மிக
முக்கியமாக குழந்தைப் பருவம் நல்கிய கசப்புகள் காரணமாக வாழ்க்கையை
எதிர்கொள்ள முடியுமா? எதிர்கொண்டு வெல்ல முடியுமா என்னும் ஐயம் கலந்த அச்சம்
மற்றும் பாதுகாப்புணர்வின்மை. சொந்த ஊருக்கே பல முறைகள் தோற்றுத்திரும்பும்
நிலை, பிறகு அங்கும் திரும்பவே முடியாத நிலை. அதன் காரணமாகத் தொடர்
பட்டினி, அவமானம், அதனால் ஏற்பட்ட உடல் நலிவு என்று
எல்லாமும் கண் முன் வந்து
போனது.
இம்மாதிரி ஆவணப்படம் ஒவ்வொரு தசாப்தத்துக்கு ஒரு முறை அல்லது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை எடுக்கப் படவேண்டும் என்று நினைக்கிறேன். இருபது மட்டுமல்ல, முப்பது நாற்பது ஐம்பது அறுபது என்று ஒவ்வொரு வயதினரும் ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கடந்த பிறகு அப்போதைய மனநிலையில் அவர்கள் சொல்லவருவது என்ன என்பது பற்றி ஆவணப்படுத்தப்படவேண்டும் என்று கருதுகிறேன்.
இன்றைய இருபதின் மனதில் உள்ள மேற்சொன்ன அதே ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புக்கள், பிரச்சனைகள், கனவுகள் மற்றும் ஆசைகள், நிராசைகள் மற்றும் புகார்கள் என்னென்ன?
வீடியோவைப் பார்க்கும்போது, அக்கால இருபதிடம் இருந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் வெகு இயல்பாகவும், எளிமையாகவும், நியாயமாகவும் இருப்பதாகப் படுகிறது. இந்தக் காணொளியில் 10m :11s இல் வருபவர் ஒரு தமிழர், அவர் பேசுவதைக் கேட்டால், இன்றைய இளைஞர் பேசுவதைபோல் இருந்தது. பெரும்பாலும் IIT Bombay மாணவர்களைப் பிடித்து பேச வைத்திருப்பார்கள் போலும். இதை ஆராந்து, சமீபத்திய IIT Bombay மாணவர் ஒருவர் தனிக் காணொளி ஒன்று போட்டிருக்கிறார். அது பற்றியும் பிறகு எழுதுவேன். ஆங்கிலத்தில் பேசுபவர்கள் அனைவரும் நல்ல ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஹிந்தி பேசும் பெண்ணின் கண்கள் அற்புதம்! 1m: 17s இல் ஆங்கிலத்தில் பேசும் பெண்ணெல்லாம் Alpha Girl ஆக இருந்திருக்கக்கூடும் (மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை, அடக்கி வாசிக்கிறேன்)
Comments
Post a Comment