டான், விக்ரம் மற்றும் நான்...

துவரை ஒரு சிவகார்த்திகேயன் படம் கூட பார்த்ததில்லை. நேற்று எக்கச்சக்க வேலைகள். வழக்கம்போல கொஞ்சம் தாமதமாகவே பொட்டியைக் கட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்து, ஒரு ஷாட் ப்ளாக் காஃபி போட்டுகொண்டு வந்து உட்கார்ந்தால், நெட்ஃப்ளிக்சில் ஏதோ ம்யூட்டில் ஓடிக்கொண்டிருந்தது. எஸ்.ஜே சூர்யா கையில் கட்டுப் போட்டுகொண்டு சிவகார்த்திகேயனிடம் பேசிக்கொண்டிருந்தார். இது என்ன படம் என்று கேட்டால், தெரில புதுசா வந்துருக்குது. நான் பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ வந்து சப் டைட்டில்ல என்ன ஓடிட்டிருக்குனு பாத்துட்டு போயி வேலைய கன்டின்யூ பண்ணுவேன் என்று பதில் வந்தது. பாஸ் பண்ணிவிட்டுப்பார்த்தால், டான் என்று இருந்தது. அன் ம்யூட் பண்ணினேன். படம் முடிய இன்னும் பதினைந்து நிமிடங்கள்தான். அந்த ஒரு ஸீனிலேயே கதை என்ன என்று புரிந்துவிட்டது. அதற்கு முன்பான இரண்டரை மணிநேரங்கள் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை.

மேலும் போன வாரம்தான் ந்யூஸ் ஃபீடில்

 "வேற லெவல் வேற லெவல். சிவகார்த்திகேயன் பொழிச்சு! ஐயோ பயங்கர செண்டிமெண்டா...ஒருபாடு கரச்சலு"

என்று மலையாள தியேட்டர் வாசல் ரசிகை வீடியோ வந்திருந்தது. Thumbnail பார்த்து ரசிகை என்று தெரிந்துகொண்டு உள்ளே போய் பார்த்துவிட்டு வந்ததனால், இது என்ன படம் என்ன ஏது என்று கொஞ்சம் குன்ஸாக ஐடியா வந்திருந்ததுThumbnailல் ரசிகைக்கு பதிலாக ரசிகன் படம் இருந்திருந்தால், "போங்கடா மயிராய்ங்யலா" என்றுவிட்டு வீடியோ உள்ளேயே போயிருந்திருக்க மாட்டேன்.


அடுத்த காட்சியில் சமுத்திரக்கனி தோன்றிய அந்தக்ஷணத்திலேயே ரத்த வாந்தி மொமெண்ட் ஆரம்பம் என்று புரியத்தொடங்கிவிட்டது. க்ளைமாக்சில் ரத்த வாந்தி வரவே இல்லை, ஏனென்றால் இது முன்பே எதிர்பார்த்ததுதானே? ஆனால் இந்தப்படம் ஒரு ப்ளாக் பஸ்டர் என்று தெரிந்த அக்கணம் ரத்த வாந்தி வருவது போல் இருந்தது. தமிழ் சினிமாவில் முக்கியமான விற்பனைச் சரக்கு ஒன்று உண்டென்றால் அது சோஷியல் மெசேஜ் சொல்வது. அவைகளில் முக்கியமான ஒன்றுதான் அப்பன்-மகன், ஆத்தா-மகன், அண்ணன்-தங்கச்சி சென்டிமென்ட்டுகள். பல இன்ஸ்டன்ட் ரெசிபிக்கள் உள்ளன. கையில் யார் எடுத்தாலும் வெற்றி என்னும் அளவு பழக்கி வைத்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தை புது முயற்சியாக ஒரு FDFS ஐப் போட்டுவிடுவோம் என்று சென்றவாரம்  முப்பது மைல் சென்று பார்த்தேன். (டிக்கெட் ஃப்ரீயாக இருந்தது, உண்மையில் அதுதான் முக்கியக்காரணம்) பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை நண்பன் ரங்க்ஸுக்கு லைவ் கமெண்ட்டரி போட்டுக் கொண்டிருந்தேன்.

இடைவேளை வருவதற்குள் நாக்குத் தள்ளிவிட்டது. நடு நடுவில் ரெஃபரன்ஸ்கள் வேறு. அந்த தில்லி காட்சி வரும்போது-

"இது இங்கனம் இருக்க, பிறிதொரு தருணத்தில்..." என்று அம்புலிமாமா கதை படிப்பதுபோல் அந்த காட்சி வந்து போனது. அதுவும் அவசர அவசரமாக ரெஃபரன்ஸ் வெறி பிடித்து வைத்திருந்த மாதிரி இருந்தது. பேட்ச் ஒர்க் மாதிரி இருந்தது. இதற்கு பதில் அதே படத்தில் இருந்து ஒரு காட்சியை வெட்டி, டப்  செய்து போட்டிருக்கலாம், இன்னும் நன்றாக வந்திருக்கும்.  

தமிழ், தெலுங்கு என்று எல்லா "டைரடக்கர்களும்" படத்தில் கதை சொல்லும்போது (முதல் படம் தவிர) காட்சிக்குக் காட்சி அவர்கள் மூஞ்சிதான் கண்கள் முன் வந்துபோகின்றன. சினிமா என்பது காட்சி ஊடகம்இங்கு வசனங்களின் தேவையே மிகக் குறைச்சலாகத்தான் இருக்கவேண்டும். அப்படியே இருந்தாலும், அது மிகைத்தன்மை இல்லாமல், சாகா வரம் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு -

"Oskar Schindler: Power is when we have every justification to kill, and we don't."

"Amon Goeth: You think that's power?"

ஒரு மசாலா படத்தை இந்தளவு நுணுக்கமாக அணுக வேண்டுமா என்றால், வேண்டும். மேலும் சில உதாரணங்கள் மூலம் விளக்க முற்படுகிறேன் -

"With great power comes great responsibility"

இது கிட்டத்தட்ட பைபிள் வசனம் போன்றது. இன்னும் சொல்லப்போனால், கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பிருந்தே பலராலும் எழுதப்பட்டும் எடுத்தாளப்பட்டும் வந்திருக்கிறது. ஆனால் இதை ஸ்பைடர்மேன் என்னும் வெகுஜன படத்தில் வைக்கும்போது, உன்னிப்பாகப் பார்க்கும் ரசிகனின் மனதில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

இன்னொன்று விக்ரம் வேதா படத்தில், இதுவும் வணிகப்படம்தான். இதில் நாம் கதைக்குள் மூழ்கியிருக்கும்போது, ஒரு இடத்தில் விஜய் சேதுபதி

"புதுசா ஒண்ணுமே கத்துக்க மாட்டியா?" என்று கேட்பார்.

இங்கு இந்தப்படத்தில், நீங்க நல்லவரா கெட்டவரா என்று வசனம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருந்தேன். வந்தது. அந்த வசனம் வரவேண்டிய அவசியமே இல்லை, தேவையே இல்லாமல் வந்தது. வேறு வழியே இல்லாமல் இடைவேளை வரை ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பசி வெறியுடன் காத்துக்கொண்டிருக்கும் மிருகக் காட்சி சாலை விலங்கு போல் காத்துக்கொண்டிருந்தேன். அந்த அம்மாள்  ட்ராஸ்ன்பார்ம் ஆகும் என்று தெரியாதுதான், நல்ல ட்விஸ்ட்டுதான் அதற்காக கமலின் ஏதோ ஒரு முந்தய படத்தில், காஃபி குடித்துக்கொண்டே FBI க்கு  ஃபோன் போட்டியா, FBI க்கு  ஃபோன் போட்டியா என்று கேட்டுக்கொண்டிருப்பார். அதே போல் இருந்தது. உண்மையான ஏஜென்ட் அம்மாளாக  இருந்தால், அவனவன் அருவாள் வைத்துக்கொண்டு கதவை உடைத்துக்கொண்டிருக்கிறான், அப்போது போய் நீ போன் பண்ணு நீ போன் பண்ணு என்று சொல்லி கன்வின்ஸ் பண்ணிக்கொண்டிருக்குமா இல்லையென்றால், தானாகப் போன் செய்யுமா? இன்னொரு காட்சியில், கமலஹாஸன் நிதானமாக, இங்கு 67 அண்ணன் தம்பிகள் கொலை வெறியில் டபுள் பேரல் கன் வைத்துக்கொண்டு நிற்கும்போது. Fake Baritone voice இல் இவங்கம்மா ஏர்போட்ல காத்துகிட்டு இருக்காங்க என்று தொனத்திகொண்டு இருக்கிறார். இதையாவது போய்த் தொலையட்டும் என்று விட்டுவிடலாம், கன்டைனரைத் திறந்து இவர் திரி கொளுத்தி, பீரங்கி வெடித்து, பில்டப்பு கொடுக்கும்வரை வரை, 67 அண்ணந்தம்பி வில்லர்கள் கையில் "பிப்புக் காயி" வுளுந்து, கன்னெடுத்துச்சுடாமல், கையயைச் சொரிந்துகொண்டா இருக்கிறார்கள்? பிறகு ஒரு வழியாக கிளைமாக்ஸ் வந்து கமல் 67 அண்ணன் தம்பிகளைச் சுட்டு முடிக்கிறார். அடுத்த பாகத்தில் அவர் வெறும் கார்களை மட்டுமே சுட்டார், அண்ணன் சாவுக்கு, செத்தது போக மீந்த 47 அண்ணன் தம்பிகள் பழிவாங்க ஒரு பக்கம் துடிக்கிறார்கள் என்று எடுப்பார் என்று நினைக்கிறேன்.     

அடுத்தது  Background Score. ஆரம்பத்தில் சாதாரணமாகத்  தோன்றிக்கொண்டிருந்த, தேவையில்லாமல் மண்டைக்குள் புகுந்து குடைந்துகொண்டிருந்த பின்னணி இசை, பிற்பாடு விவரூபம் எடுத்து பின்னிப் பெடல் எடுத்தது. இடைவேளைக் காட்சியில் வரும் பாடல் என் மண்டைக்குள் எங்கோ  ஒரு மூலையில் ப்ராசஸ் ஆகி இரண்டு ரெஃபரன்ஸ்களைக் கொடுத்தது.

 ஒன்று Amunet(the hidden one) -   


 https://www.youtube.com/watch?v=T9NzNdGlv14

 இரண்டாவது ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் வந்த ஆரம்ப இடம்,


 https://www.youtube.com/watch?v=2cvkABf9jYk

 இதெல்லாம் பெரிய விஷயமில்லை. இதற்கப்புறமும் உண்மையில் படத்தின் கதாநாயகன் இவர்தான். பல இடங்களில் தொய்வடைந்து படுத்துவிடப்பார்த்த படத்தை தூக்கி நிறுத்துகிறது அனிருத்தின் அற்புதமான பின்னணி இசை. இம்மாதிரியான பின்னணிப் புத்திசையை இன்னும் பல வருடங்களுக்குள் வேறு யாராலும் நல்க முடியாது என்பது என் கருத்து.

 மற்றபடி பல இடங்களில் இப்ப என்ன நடக்குதுன்னா, ஒடனே இந்த மாதிரி நடக்குது என்று லோகேஷ் கனகராஜே திரையில் தோன்றி கதை சொல்வது போல் தோன்றுகிறது.

 இதே லோகேஷ் கனகராஜின் "கைதி" ஒரு அற்புதமான படம். ஒரு பென்ச்மார்க் என்றே சொல்லலாம். மேலே நான் சென்டிமென்டுகளுக்கு எதிராக எழுதியது போல் தோன்றலாம், ஆனால் கைதியில் அதுவே படத்தின் முதுகெலும்பாக இருக்கும், பார்க்கும் பார்வையாளனுக்கு இதயத்தில் பாச செண்டிமெண்ட் பின்புலத்தில் தடக் தடக்கென்று அடித்துக்கொண்டே இருக்கும். காரணம்? அது எந்த இடத்திலும் வலிந்து சொல்லப்படாததே! மற்றும் கார்த்தியின் மிகையில்லா அந்தப் படத்துக்கும், பாத்திரத்திற்கும் தேவையான மீட்டரிலேயே நடித்த நடிப்பும். அதுதான் ஓரளவு உண்மையான திரை மொழி.


Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15