மானுடம் வெல்லுமா? #1

 ரு மனிதனால் நீருக்கடியில் தோராயமாக எத்தனை நேரம் தம் கட்டி மூச்சு விடாமல் இருக்க முடியும்? இருபது வினாடிகள்? அறுபது வினாடிகள்? நூற்று இருபதுமூன்று நிமிடங்கள்? ஐந்து நிமிடங்கள்? ஸ்பெயினைச் சேர்ந்த Aleix Segura என்னும் ஆள் 2016 இல், 24 நிமிடங்கள் தண்ணீருக்குள் சென்று தம் கட்டி அமர்ந்துவிட்டு வெளியே வந்திருக்கிறார். அதுதான் இன்று வரை உலக சாதனை. ஆனால் தலைவர் சுவாசித்தது சாதாரணக் காற்றை அல்ல, அடர்த்தியில் 99.5% உள்ள சிலிண்டரில் அடைக்கப்பட்ட சுத்தமான ஆக்சிஜனை. சாதாரணக்காற்றைச் சுவாசித்தால், ஓரிரு நிமிடங்களுக்குளேயே வெளியே வந்து ஒரு இழுப்பு இழுத்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால், தத்தமது கர்மவினைக்கேற்ப நேராக சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போக வேண்டியதுதான். அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறையில் மூர்ச்சையாகிவிட்டு, எப்படியாவது போராடி உயிர் வரவழைத்தாலும், வாழ்நாள் முழுவதும் ஏதேனும் குறைபாட்டுடனோ, உடலின் ஒரு பகுதி செயல்படாமல் போயோ, அல்லது மீளாக் கோமாவுக்கோ கூடச் செல்ல நேரிடும். நீருக்கடியில் இப்படி என்றால், நிலத்திலும் மனிதன் பூஞ்சைதான். அதிக பட்சமாக ஒரு ஐம்பது டிகிரி செல்ஷியஸில் சில நிமிடங்களிலிருந்து, சில மணிகள் வரை தாக்குப்பிடிக்கலாம். குளிராக இருந்தாலும், சைபீரியாவில் Yakutsk என்று ஒரு நகரம் உண்டு, அங்கு மைனஸ் ஐம்பது டிகிரியிலும் உயிர் வாழ்கின்றனர் ஆனால் அதுவும் தடிமனான தோலால் செய்யப்பட்ட வெம்மைதரும் ஆடைகளை அணிந்தும், வோட்கா அருந்தியும், பச்சை மீன் மற்றும் கடமான் மாமிசம் உண்டும் உயிர் பிழைத்திருக்கிறார்கள். மனிதர்களின் திறன் அவ்வளவுதான்

விலங்கினங்களைப் பொறுத்தவரை லட்சக்கணக்கான விலங்குகள் மனிதனைவிட மெல்லுடலிகளாக இருக்கும் உயிரினங்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ஒட்டகம் போன்ற அதீத சீதோஷண நிலைகளைத்  தாக்குப்பிடிக்கும் விலங்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒட்டகத்தையே எடுத்துக்கொள்வோம், பாலைவனத்தில் பகலில் ஐம்பது பாகை வெப்பத்திலும் இருக்கும் இரவில் மைனஸ் ஐந்து டிகிரியையும் தாக்குப் பிடிக்கும். இதில் பாலைவன எறும்புகள், தேள்கள் போன்றவையும் அடக்கம். அண்டார்டிகாவில் இருக்கும் பென்குவின்கள் தொடர்ச்சியாக -40 C வெப்பநிலையில் பிறந்து வளர்ந்து, ஈன்று விளையாடி வாழ்கின்றன. மரத்தவளை என்னும் உயிரினம், கடும் குளிர் காலம் வரும்போது, அதில் அப்படியே உறைந்து போய், தன்  செல்களில் குளுகோஸைத் தேக்கிவைத்துக்கொண்டு, இளவேனிற்காலம் வரும் வரை சருகுபோல் உறைந்து கிடந்துவிட்டு உயிர்பெற்றெழும். இம்மாதிரி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்

ஆனால் மனிதன் கடவுளிடம் போய் என்ன கிருத்தமம் செய்தான் என்று தெரியவில்லை. அவர் அவனிடமிருந்து, இத்திறமைகளைப் பிடுங்கிக்கொண்டுமூளை வலிமை, குயுக்தி மற்றும் தந்திரத்திறன் போன்றவற்றை அளித்த கையோடு, குளிர், வெப்பம் ஆகியவற்றைத் தாக்குப்பிடிக்கும் உடல் ரோமத்தையும் மற்றும் வால் போன்ற மிகுதி உறுப்புக்களையும் பிடுங்கிக்கொண்டுவிட்டார். அவனும் குகைகளிலும், மழைக்காடுகளிலும் சில லட்சம் வருடங்கள் வாழ்ந்துவிட்டு, அறிவுத்திறனை மேம்படுத்திக்கொண்டு, மெதுமெதுவாக இயற்கை அன்னையை அட்ஜெஸ்ட் செய்தும் மற்ற உயிரினங்களை ஏய்த்து வாழவும் பழகிக்கொண்டான். பொய், தந்திரம், ஏய்ப்பு, துரோகம் போன்றவை விலங்கினங்கள் கூடச் செய்வினம்தான் ஆனால் அது பற்றிப் பிறகு

இத்தனை சர்வ வல்லமைகள் இருந்தும், எண்ணூறு கோடி உலக மக்கட் தொகையில், ஓரிரு மனிதர்களால்தான் வளிமண்டலத்துக்கு வெளியே லேசாகத் தலைநீட்டவே முடிகிறது. சர்வேதேச விண்வெளி நிலையம் பூமிக்கு வெளியே (மேலே என்று சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது!), பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலிருந்தவாறே  பூமியைச் சுற்றி வந்துக்கொண்டிருக்கிறது. அந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கு 1500 கோடி டாலர்கள் செலவழிக்கப்பட்டிருக்கிறது (இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்கள்). அதாவது, மனிதனுக்கு, அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட  சில விண்வெளி ஆராய்ச்சியாளர்களை விண்வெளியில் தொடர்ந்து மிதக்கவிட்டு வெள்ளோட்டம் பார்ப்பதற்கும் சில ஆய்வுகளை மேற்கொள்வதற்குமான செலவு அவ்வளவு. இது வெறும் நிறுவதற்கு மட்டுமே. அதைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஒரு நாளைக்கு 1.2 மில்லியன் டாலர்கள் வீதம் செலவழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

சரி இதையெல்லாம் ஏன் சொன்னேன் என்றால், மனிதனுக்கென்று ஒரு Comfort Zone இருக்கிறது (இன்பநல மண்டலம்) அந்த Comfort Zone ஐத் தொடர் உழைப்பு மற்றும் சுயநலத்துடன் அவனே மெதுமெதுவாகக் கட்டமைத்துக்கொண்டான், பல்லாயிர வருட விடாமுயற்சியுடன். எதற்கு? இங்கிருந்து கிளம்பி வேறு உலகத்தைக் கண்டுபிடித்து அதில் குடியேறுவதற்கு! அது அவ்வளவு எளிதானதா

 (தொடரும்)


Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15