மனநலமும் இன்றைய சவால்களும் #2

OCD யை மறந்துவிட்டாய் என்று நண்பர் ஒருவர் சுட்டினார். OCD இல்லாமலா என்று இந்த அத்தியாயம். இன்னொன்றும் எழுதவேண்டியிருக்கிறது. வேறு ஒரு நண்பன் தலைப்பில் ஃபிக்ஷன் என்று சொல்லிவிட்டு, மருத்துவக்கட்டுரை எழுதுகிறாயே என்று கோபித்துக்கொண்டான். இருக்கிறது என்று சொல்லிவிட்டு குறைவாக இருப்பதற்கு பதில், தலைப்பில் சரி செய்துவிட்டு, தேவைப்பட்ட இடத்தில் மட்டும் ஃபிக்ஷன் தரத்தில் எழுதுவோம் என்று இந்தத் திருத்தம்.

இந்த Anxiety சம்பந்தப்பட்ட கோளாறுகளில் முக்கியமான ஒன்றுதான் OCD எனப்படும் Obsessive Compulsive Disorder. உலகத்தில் இருக்கும் முக்காலே மூணு வீசம் Taboo க்களும் இவர்களில் இருக்கும். அதீத நம்பிக்கைகள், விலக்கல்கள் என்று அனைத்திலும் கொஞ்சமும் நெகிழ்வுத்தன்மையில்லாமல் இருப்பர். நம்பிக்கைகள் என்று வரும்போது பக்தி என்றால் தீவிரமான பக்தி அல்லது மூட நம்பிக்கையாக இருந்தால், அதில் வெறித்தனமான பற்றுதலுடன் இருப்பர். ஹோமோ ஃபோபிக் என்றால், கடைசி வரை ஹோமோ ஃபோபிக்தான். தெருவில் இறங்கி நடக்கும்போது தப்பித்தவறி பூனை குறுக்கே போய்விட்டால் அவ்வளவுதான், தன் சொந்தத் திருமணத்துக்கே தாலிகட்டப்போகாமல், புலம்பிக்கொண்டே இருப்பார்கள். ஒரு வேளை தரதரவென இழுத்துக்கொண்டு போய் தாலி கட்ட வைத்துவிட்டாலும், முடிந்தது கதை. அடுத்த ஆறு மாதங்களுக்குப் புலம்பிக்கொண்டே இருப்பர். ஏதாவது கிருமி தாக்கிவிடுமோ, என்று அஞ்சி சினிமாவுக்குப் போகமாட்டார்கள், பஸ்ஸிலோ, ரயிலிலோ ஏற மறுப்பார்கள். எந்நேரமும் வீட்டைத் துடைத்து விட்டுக்கொண்டே இருப்பார்கள். வீட்டில் தட்டு முட்டுச் சாமான்களை ஒழுங்கு மாறாமல் அடுக்கி வைத்துக்கொண்டே இருப்பார்கள். எந்நேரமும் கைகளைச் சோப்பு போட்டுக்கழுவிக்கொண்டே இருப்பது, கதவு ஓட்டையில் யாராவது எட்டிப்பார்க்கிறார்களா என்று அடிக்கடி எட்டிப்பார்த்துவிட்டு, தாழ்பாள் போட்டிருக்கிறதா என்று உறுதிசெய்துகொள்வது, எந்நேரமும் மின்விசிறிகளை அணைத்து வைப்பது, எதையாவது எண்ணிக்கொண்டே இருப்பது, தலை மயிற்றை ஒரு குறிப்பிட்ட முறையில் அளைந்து விட்டுக்கொண்டே (மண்டையில் மயிர் இருந்தால்) அல்லது சொறிந்துவிட்டுக்கொண்டே இருப்பது. சில தீவிர கேஸ்கள் மயிற்றை ஒவ்வொன்றாகப் பிடுங்கி அதில் இன்பம் காணும்நிறுத்தாமல் கண் சிமிட்டுவது, தலையை ஒரு விதமாக வெட்டி வெட்டி இழுப்பது. மூக்கைக் கோணலாக்குவது, நகம் கடிப்பது, உதட்டைக் கடித்து ரத்தம் வரவழைத்துக்கொள்வது, வராத ஏப்பத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்து விட்டுக்கொண்டே இருப்பது  போன்றவை கூட இதில் அடக்கம்.

  இதில் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், இவர்களுக்கு வாழ்க்கையில் வேறு எதிலும் கிடைக்காத இன்பம் Anxious ஸாக இருப்பதில் கிடைக்கும். தோசைக்கல்லில் போட்டு சூடு பண்ணி எடுத்த உப்புக்காகிதத்தை எடுத்து முகத்தில் தேய்த்துக்கொண்டு கதறிவிட்டு, அடுத்தநாள் மீண்டும் அதையே செய்யத்துணிந்தால், எப்படியிருக்கும்? அதே போல் வலுக்கட்டாயமாக அனுதினமும் Anxiety-ல் போய் மாட்டிக்கொண்டு, பீதியடைந்து நடுங்குவதில் இன்பம் காணுவர்.

 சிறு வயதில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்கள், பரம்பரையாக வருவது மற்றும் மூளையினுடைய அமைப்பு மற்றும் வடிவம் அமைவதில் ஏற்பட்ட குறைபாடு அல்லது சிக்கல் என்று பல விதக் காரணங்கள் உண்டு. இதற்கு மருத்துவம் என்ன என்று பார்த்தால், வெறும் மாத்திரை மூலமாகக் கட்டுப்படுத்த முடியாது. CBT, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை போன்றவை கலந்த, தனிப்பயனாக்கப்பட்ட ட்ரீட்மெண்ட் பிளான் மூலம் கொஞ்சம் கட்டுப்படுத்தலாமே ஒழிய, குணமாக்க முடியாது.   ஆனால் இதில் உள்ள ஒரு அனுகூலம், ஏற்கனவே சொன்ன மாதிரி, கைத்தடி அல்லது கண்ணாடியுடன் நடப்பது மாதிரி, சரியான கவனிப்பு, கொஞ்சம் மாற்றியமைக்கப்பட்ட வாழ்க்கை முறை, மற்றும் முறையான மருத்துவம் மூலம் சகஜ வாழ்க்கை வாழலாம்.

 பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பது டிப்ரெஷன். ஆனால் அதற்குப்போகும் வழியில் இருக்கும் சிறு நிறுத்தம்தான் டிப்ரெஷனின் டிஸ்ட்டன்ட் கஸினான Stress. இதைத்தான் பலர் நான் டிப்ரெஷனில் இருந்தேன் டிப்ரெஷனில் இருந்தேன் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றனர்பலரும் அவ்வப்போது வந்து போகும் தற்காலிக உளநிலையான மனஅழுத்தத்தையும், மனச்சோர்வு என்னும் மனநோயையும் போட்டுக் குழப்பிக்கொள்வதுடன்ஃபேஸ்புக் ஜி.பி முத்துக்களுக்கு (ஒருவர் தவறுதலாக, ஃபேஸ்புக் மீரா மிதுன் என்று எழுதியிருந்தார். நோக்கம் நல்லது என்றாலும், சுட்ட வேண்டியது நம் கடமையல்லவா? மீரா மிதுன் என்னும் பெயர் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. இலக்கிய மீரா மிதுன் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம், ஆனால் அது ஃபேஸ்புக் ஜி.பி முத்துவின் ஆசானின் பெயர்) கிறுக்குவதற்குத் தீனியும் கிடைத்துவிடுகிறது.

 சரி, நாம் மன அழுத்தத்திற்கான சில மூல காரணங்களைப் பார்ப்போம்.

 1. மூர்ச்சையடைந்து விழுமளவு வேலை செய்தபிறகும் மலைத்துபோகுமளவு தீரவே தீராத வேலைப்பளு. செய்த வேலைக்கு எந்த விதப் பாராட்டோ நன்றியுணர்வோ கிடைக்காதது, வேலையின் அல்லது தான் செய்துகொண்டிருக்கும் அருமையை யாரும் உணராதது. வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவிகளுக்கும் இது அப்படியே பொருந்தும்.

2. மனதுக்குப் பிடிக்காத வேலையில் வெறும் சம்பளத்துக்காக ஒட்டிக்கொண்டிருப்பது.  

 3. டார்ச்சர் செய்யும் பாஸ் அல்லது  முட்டாள் சக ஊழியர்கள். பணியிடத்தில் மரியாதையின்மை.

4. அதிகாரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு, அடிமைச்சேவகம் செய்துகொண்டு, மீளமுடியாமல் பொருமிக்கொண்டிருக்கும் நிலை. தலைவர் சாரு நிவேதிதா இதைத் தன்னுடைய ராஸலீலா நாவலில் சாறு பிழிந்து விட்டார், அதற்கும் மேல் வேறு ஒருவரால் இதைபற்றி எழுத முடியுமா என்று தெரியவில்லை (இது ஒருவித நிரந்தர மனஅழுத்தத்தில் வைத்திருக்கும், மனச்சோர்வு நோய்க்குள் இட்டுச்செல்லும்)

 5.  தொடர் தோல்விகள்.

6. சொற்பேச்சு கேட்காத குழந்தைகள், துணை மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்கள்.

7. எதிர்பார்த்த வெற்றியோ, பணமோ, பதவியோ கிடைக்காது போனதில் ஏற்பட்ட ஏமாற்ற உணர்வு.

உதாரணத்திற்கு, பணியிடத்தில் உயரதிகாரி ஏதாவது ஒரு காரணத்திற்காக தன்னை மட்டும் குறி வைத்து மட்டம் தட்டும் போதோ, மற்ற ஊழியர்களின் முன்பு திட்டுவாங்கினாலோ, அன்று இரவு ஊன் உறக்கம் இல்லாமல் புழு மாதிரி துடிப்பார்கள், குடும்பத்தினரிடம் எரிந்து எரிந்து விழுவார்கள் இளகிய மனம் படைத்தவர்கள். இதைப்பற்றிய சொரணையே இல்லாதவர்கள், ஜாலியாக வந்தோமா, தின்றோமா, டீவியைப்போட்டு ஐபிஎல் பார்த்தோமா தூங்கினோமா என்று இருப்பார்கள்.

வெகு சிலருக்கு மட்டும் ஒரு கொடுப்பினை உண்டு, குடும்பத்தினரின் ஆதரவு என்பதுதான் அது. ஒரு நண்பன் அவன், பெங்களூரில் இருக்கிறான், உறவினர் வீட்டில் தங்கி வேலை தேடிக்கொண்டு சிறு சிறு வேலைகளைச் செய்துகொண்டு இருந்த காலம். கூட்டுக்குடும்பம். ஒரே வீட்டில் மூன்று குடும்பங்கள் மற்றும் இவன். வேலை முடிந்து கூடடையும்போது யார் முகமாவது இருளடைந்து இருந்தால், அத்தனை பேரும் சேர்ந்து உற்சாகமான மனநிலைக்கு வருவதற்கு உதவி புரிவர். வேலை வேறு சொந்த வாழ்க்கை வேறு, அங்கு என்ன நடந்தாலும், செருப்பைகழற்றும்போதே, அதையும் கழற்றிவிட்டுவிட்டு உள்ளே வரவேண்டும் என்பது, எழுதப்படாத விதி.

இன்னொருவன் இருக்கிறான், அவன் சில குழந்தைகள் எப்படி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குக்கு வந்தவுடன் அங்கு என்ன நடந்தது என்று ஒப்பித்துவிடுமோ, அதே போல் வேலையிடத்தில் நடந்தது அத்தனையையும் மனைவியிடம் ஒப்பித்துவிடுவான். அவனுடைய மனைவியும் ஒன்று விடாமல் கேட்டுவிட்டு, தனக்குத் தெரிந்த ஏதாவது அறிவுரைகளை வழங்குவாள். நான் இருக்கேன் இல்ல பாத்துக்கலாம் விடு என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என்பாள், அதைக்கேட்டுவிட்டு, கொஞ்ச நேரத்தில் சகஜமடைந்துவிடுவான். பெரும்பாலான stress க்கு மருந்து அவ்வளவுதான். மூளைச்சூடு கொஞ்சம் அடங்கியதும், எப்பேர்ப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது தானாக வழி கண்டுபிடித்துவிடும்.

இந்த மன அழுத்தத்திலிருந்து, தொட்டுவிளையாட்டின் போது தொட வரும் எதிரியிடமிருந்து வளைந்து நெளிந்து தப்பிப்பதுபோல், அதன் கையில் அகப்பட்டுக்கொண்டுவிடாமல் தப்பிவிடலாம். மன அழுத்தம் நம் பக்கம் அண்டவே விடாமல் தப்பிப்பதற்கு நம் மனதைப் பழக்கலாம். Stress வென்றெடுக்க சில வழிமுறைகள்.

Stress Shield () Stress Avoidance எனப்படும் மன அழுத்த எதிர்ப்பு சக்தி 

1. சத்தான உணவுகள். அந்தந்தப் பருவத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை விடாமல் உண்பது. நல்ல உறக்கம், தேவையான அளவு ஸெக்ஸ் போன்ற வாழ்க்கை முறைச் சமாச்சாரங்கள்.

 2.  இந்த இடத்தில்தான் உடற்பயிற்சி, யோகா, நீச்சல் தியானம் போன்றவைகள் வருகின்றன. இவைகளெல்லாம் எல்லா மன நோய்களுக்குமான சர்வரோக நிவாரணி கிடையாது. தொடர் முயற்சி மற்றும் பயிற்சி மூலம் Stress நன்றாகத் தாக்குப்பிடிக்கலாம்.

 3. Stress க்கு மிக முக்கியமான காரணம், நடந்து முடிந்த கசப்பான நிகழ்வையே மீண்டும் மீண்டும் அசைபோட்டுக்கொண்டே இருப்பது. இதுவும்கூட ஒருவித OCD தான். இந்தப்பழக்கம் இருக்கும் வரை அடிக்கடி stress என்னும் பொறியில் சென்று சிக்கிவிடுவீர்கள். இந்த அடிக்ஷனிலிருந்து விடுபடுவதற்கு மனதை நினைத்த நேரத்தில் ஆன் அல்லது  ஆஃப் செய்யும் சித்து வேலைகளைத் தெரிந்துகொள்வது நலம். இது பற்றி எழுதுவதற்கு ஒரு புத்தகமே போடலாம் என்னும் அளவு விஷயங்கள் உள்ளன. நான் பிற்காலத்தில் எழுதப்போகும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதில் இன்னும் விரிவாக எழுதுவேன் (தற்காலம் அடியேன் சிறிது மகிழ்ச்சியற்று இருக்கிறேன்). இப்போதைக்கு ஒன்றே ஒன்று. வீட்டில் மீன்தொட்டி இருந்தால், அதை ஒரு அரை மணி நேரத்துக்கு, ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டே இருப்பது. ரொம்ப துக்கமாக இருந்தால், அழுதுவிடுவது! Stress இல் அழுகை வராது, மீன் தொட்டியை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தால், கொஞ்ச நேரத்தில் Stress பனி போல் உருக ஆரம்பித்து அழுகையாக வெளிப்படும், அது ஒரு நல்ல அறிகுறி.

 4. இசை. இசை. இசை. இசை! எந்த இசையாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஒரு நல்ல துள்ளல் இசையாக இருந்தால் மிகவும் நல்லது.

தொடர் Stress மற்றும் Anxiety போன்றவை பொதுவான ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. இம்மாதிரிச்  சூழ்நிலைகளை Fight or Flee என்று சொல்வார்கள். அதாவது காடுகளில் சுற்றித்திரியும் விலங்குகள் மேய்ந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று புலியையோ அல்லது சிறுத்தையையோ கண்டுவிட்டால், உடலும் மூளையும் சேர்ந்து சர்வைவல் மோட் இன் விசையை அழுத்திவிட்டுவிடும், அப்போது adrenaline முதற்கொண்டு பலவகையான வேதிப்பொருள்கள் உடலுக்குள் சுரந்து, உயிர்ப்பயத்தில் தலை தெறிக்க ஓட ஆரம்பிக்கும். மனிதர்களால் தொடர்ந்து Fight or Flee இல் இருக்கமுடியாது. ஒவ்வொரு முறை Anxiety attack அல்லது மன அழுத்தத்திற்கு உட்படும்போது, உடலில் தேவையில்லாத ரசாயனங்களான Cortisol, Ketones போன்றவை அளவுக்கதிகமாகச் சுரக்கின்றன என்று சொல்கிறார்கள். ஒரு முறை சுரந்தால், அவற்றை உடலானது ஓவர்டைம் வேலை செய்து வெளியேற்றுவதற்க்கே பல வாரங்கள் எடுத்துக்கொள்கின்றன. இவை உடலுக்குள் தேவையற்ற உள்காயங்கள் (Inflammation), சிறுநீரகப் பிரச்சனைகள், கல்லீரல் மற்றும் கணைய பாதிப்பு ஆகியவற்றை உருவாக்குகின்றன. எந்நேரமும் அதீத ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பவர்களின் வாய் நாறும் கவனித்திருக்கிறீர்களா? அதற்குக் காரணம் உடலில் அளவுக்கதிகமாக வெளியேற்றப்படாமல் சுற்றிக்கொண்டிருக்கும் Ketone கள் எனப்படும் Free Radicals தான் காரணமாம். இது உங்கள் ஸெக்ஸ் லைஃபையும் பாதிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

(தொடரும்

Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15