மனநலமும் இன்றைய சவால்களும் #5
பல பாக்டீரியாக்கள் மைனஸ் ஐம்பது டிகிரி கடும் சைபீரியக் குளிருக்குத் தாக்குபிடிக்குமென்றால், வேறு பல பாக்டீரியாக்கள் ப்ளஸ் இருநூறு டிகிரியிலும் உயிர் வாழும்.
நவீன மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் ஹிபாக்ரிடஸ் (Hippocrates) என்னும் கிரேக்கர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எல்லா நோய்களும் வயிற்றிலிருந்துதான் தொடங்குகின்றன என்றார். இங்கு தமிலுலகத்திலும் உணவே மருந்து மருந்தே உணவு என்று நோய்களையும் உணவுப்பழக்கவழக்கங்களையும் வயிற்றையும் தொடர்புபடுத்தும் பல மரபுசார் மருத்துவ முறைகளும் உள்ளன. சித்த மருத்துவமும் வயிறுதான் மொத்த உடலுமே என்று வயிற்றுக்கு முக்கியத்துவம் தருகிறது. பாக்டீரியா என்று ஒன்று இருக்கிறது என்பதை டச்சு விஞ்ஞானி அந்தோனி ல்யூவேன்ஹோக் என்பவர் சொத்தைப்பல் ஒன்றின் திசுவைச் சுரண்டி சிறு கண்ணாடிச்சில்லின் மீது அப்பி, அதைத் தன் கையால் வடிவமைத்த நுண்ணோக்கி ஒன்றின் வழியாக நோக்கும்போதுதான் தெரியவந்தது. முதன் முதலில் பூதக்கண்ணாடி வழியே அவர் எட்டிப்பார்த்த உலகத்தில் தான் கண்ட உயிரினங்களுக்கு அவர் இட்ட பெயர் அனிமாகுலஸ். ரஷ்யாவில் பிறந்து நோபல் பரிசு வாங்கிய எலி மெச்நிகோவ் (Élie Mechnikov) என்பவர் நீண்ட ஆயுளுக்கும் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களுக்கும் உள்ள தொடர்பை "இறப்பு தொடங்கும் இடம் குடல்" என்று சொன்னார்.
இந்த டாபிக்கே ஒரு தனிப்புத்தகம் அல்லது வீடியோ போடுமளவு பரந்து விரிந்த ஒன்று என்பதால் ஒரே ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நம் உடலில் உள்ளும் புறமுமாக வாய், காதுகள், சுவாசப்பாதை, குடல், பிறப்புறுப்பு மற்றும் தோல்பகுதிகள் என்று அனைத்திலுமாக ஏறத்தாழ 100 ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் விருத்தியடைந்து நம்மோடு தலைமுறை தலைமுறையாக வாழ்வாங்கு வாழ்ந்து செழித்துக்கொண்டிருக்கின்றன.
மற்றவைகளைத் தற்போதைக்கு ஒதுக்கிவைத்துவிட்டு, தலைப்பை அனுசரித்துக் குடல் பாக்டீரியாக்களை மட்டும் பார்ப்போம். குடலில் மட்டும் ஒரு தனி பாக்டீரியா பிரபஞ்சமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதில் நல்ல பாக்டீரியாக்கள் கெட்ட பாக்டீரியாக்கள் இரண்டும் அடங்கும். நல்லது என்றால், நமக்கு எது நன்மை அல்லது தீமை பயக்கும் என்ற அளவில் நோக்கவேண்டும். அசுரர்கள் மற்றும் தேவர்கள் என்று வேறு விதமாகவும் நோக்கலாம்.
இந்த தேவ பாக்டீரியாக்கள்தான், அவைகளின் வகையறாக்கள்தான் நாம் 'யார்' என்பதைத் தீர்மானிக்கிறது. நமது மனத்தின்மையையும், மனத்திரஸ்தன்மையையும், மன அழுத்தம், மனப்பதட்டம் போன்றவற்றை எதிர்கொள்ளும் திறனையும், மனச்சோர்வு என்பது என்னவென்றே தெரியாவண்ணம் பாதுகாப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றன.
சுருக்கமாகச் சொன்னால் வயிற்றுக்குள் இருக்கும் நுண்ணுயிர் உலகம் எந்தளவு சமநிலை தவறாமல் குப்தர்களின் பொற்கால ஆட்சிபோல் இருக்கிறதோ, எந்தளவு டெல்லி சுல்தான் ஆட்சியாகவோ, பிரிட்டிஷ் ஆட்சியாகவோ இல்லாமல் இருக்கிறதோ அதுதான் நாம் என்னும் நாம் நலமாக, மகிழ்ச்சியாக இருக்க உதவும் முக்கியக் காரணி! (இலங்கையருக்கு நாங்கள் என்னும் நாங்கள்). உண்மையில் நாம் உண்மையான மனச் சஞ்சலமற்ற, தெளிவான நாமாக இருப்பதற்குப் பேருதவி புரிவது இந்தப் பாக்டீரியாக்கள்தான். சில மரபியல் ரீதியான கூறுகள் அவரவர் கர்ம வினைகளைப்பொறுத்து, அதாவது எவ்வகையான டி.என்.ஏ
அமைப்பைப் பெற்றிருக்கிறாரோ, அதைப்பொறுத்து அவரது நோயெதிர்ப்பு மண்டலமானது நன்மை செய்யும் பாக்டீரியாக்களையோ அல்லது தீமை செய்யும் பாக்டீரியாக்களையோ தாக்கி அழிக்கும்.
இன்னும் வெகுவாக எளிமைப்படுத்திச் சொல்வதானால், நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நிரம்பிய குடலைக்கொண்டிருக்கும் ஆள் - ஆன்மீகப் பெரியோர், புத்தர் மற்றும் ஜென் துறவிகள்.
கெட்ட பாக்டீரியாக்கள் கொண்டிருப்பவர்கள் - அசுரர்கள், சினிமாவில் வரும் வில்லன்கள் மற்றும் இத்தொடரின் ஆசிரியர்!
கெட்ட பாக்டீரியாக்களை மட்டுமே தாக்கி அழிக்கும் தன்மையைப் பெற்றிருப்பவர்கள் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பெற்றிருப்பர். அதற்கு எதிர் நிலையிலிருப்பவர்கள் அதற்கு நேரெதிரான பலன்களைப் பெறுவர்.
ரசவாதம் என்னும் alchemy ஜப் பற்றிய புத்தகங்கள் தமிழில், 'ஆனைமலைச் சித்தரின் அற்புதங்கள்', 'கானாச் சித்தர்களின் கண்கட்டு வித்தைகள்', 'ரசமணியும் மூப்பிலா வாழ்வும்' என்று தலைப்பிட்ட ஐம்பது அறுபது ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்கள் வரை புத்தகங்கள் ஆண்டுதோறும் விற்றுத்தீர்கின்றன.
அவைகளில் -
கோரோசனை, பூலாங்கிழங்கு, கரிசலாங்கண்ணி, கோரைக்கிழங்கு, ஆல் பகாராப்பழம், கழுதைக் கண் பீளை, பன்றிகுடல் ஆகியவற்றை அமாவாசை நிலவொளியில் உலர்த்திப் பொடி பண்ணி, எருமை நெய்யில் வாட்டி, தலைப் பிரட்டைக் கருவாட்டின் வாயிலிட்டு அதையெடுத்து கடைவாயில் அடக்கிக்கொண்டு, தலைச்சன் பிள்ளை பெற்றவளின் முலைப்பாலை பவுர்ணமியன்று ஒரு மிடறு அருந்தி விழுங்கிவிட்டு ரசத்தைக் கையில் எடுத்தால் அது ஸ்வர்ணமாக மாறும் அதிசயத்தைக் காணலாம் - என்று எழுதியிருக்கும்.
அதெல்லாம் நிஜ ரசவாதமா இல்லையா தெரியாது ஆனால் இவற்றுக்கெல்லாம் சற்றும் சளைத்ததல்ல நம் வயிற்று பாக்டீரியா செய்யும் அற்புதங்கள்.
நல்ல பாக்டீரியா ஸ்ட்ரெயின்கள் எந்தளவு குடலுக்குள் உள்ளனவோ அந்தளவு நம்முடைய மனநிலை மேம்படும். ஏனென்றால் நாம் முன்னமே பார்த்த Serotonin என்னும் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் உள்ளிட்ட மேலும் சில இன்றியமையா நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களை உற்பத்தி செய்வதும் அவைகள்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால், பாதரசத்தைத் தங்கமாக மாற்றும் ரசவாததில் உள்ளதுபோல், வயிற்றுக்குள் நாம் அனுப்பும் அனைத்தையும் சக்கையாக்கிச் சாறு பிழிந்து அதில் உள்ள உயிர்ச்சத்துக்களை நம் மூளை இயங்குவதற்குத் தேவையான அத்தனை நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களையும் உருவாக்கி அதை Vagus நரம்பு மூலம் கபாலத்துக்குள் பத்திரமாக மிதந்துகொண்டிருக்கும் ஒன்றரைக்கிலோ ஜெல்லி பீனான மூளைக்கு அனுப்பி வைக்கின்றன.
நியூரோ பிளாஸ்டிஸிடி (Neuro Plasticity) என்று ஒன்று உள்ளது. இதுவும் ஒரு இயல். அதில் மூளையானது தன் வாழ்நாள் முழுவதும் தான் கையாளவேண்டிய புதுச் சூழ்நிலை மற்றும் தான் சந்திக்கும் புது அனுபவத்துக்குத் தகுந்தாற்போல் இயக்கம் மற்றும் தேவைப்பட்டால் தன் வடிவத்தையே கூட எந்தளவு மாற்றித் தகவமைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்ததாக உள்ளது என்பது பற்றிய இயல். இது மெதுவாக, ஆனால் ஸ்திரமாக முன்னேறும் கலைகளைக் கற்றுக்கொள்ளுதல் முதல் அதிவேகக் கற்றுக்கொள்ளும் திறன்களான இசை, துரிதமாக கணக்குகள் போடுவது போன்ற மின்னல்வேக மூளைச் செயல்பாடுகளைக்கூட தீர்மானிக்கும் சக்தியாகும். இது சரியாக இருந்தாலே, டிப்ரெஷன் உட்பட்ட மனம் சார்ந்த எந்தப் பிரச்சனைகளும் நம்மில் இரா.
நியூரோ பிளாஸ்டிசிடி எந்தளவு வலுவாக உள்ளதோ அந்தளவு ஒரு ஆள் அட்டாவதானியாக, எதைப்பற்றியும் கவலைப்படாத, பூவுலகில் உள்ள அத்தனை இன்பங்களையும் சர்வசாதாரணமாக இடக்கையில் எடுத்து அருந்திவிட்டு, hold my beer என்று சொல்வார்கள். அப்படியே தடுக்கி விழுந்தாலும் அடுத்த நாளே டகாலென்று எழுந்து நின்று ஒரு உதறி உதறிவிட்டு வேலையைப் பார்க்கப்போய்விடுவார்கள். பயம், குழப்பம், தயக்கம் இவையெல்லாமே நியூரோ பிளாஸ்டிஸிடியில் உள்ள பாங்கு அல்லது வகைமை என்று கொள்ளலாம். இதைப்பற்றியெல்லாம் விரிவாக எழுதவேண்டும்.
இப்போதைக்கு டிப்ரெஷன் சாப்டருக்கு ஒரு முடிவு கட்டும்முன் மேற்கண்ட விஷயங்களைச் சுருக்கி ஒரு குப்பியில் அடைத்துத் தரும் பிரம்மாஸ்திரம் - இந்நேரம் வரை பாக்டீரியா பாக்டீரியா என்று சொல்லிக்கொண்டிருந்தோம் அல்லவா? அந்த வயிற்று பாக்டீரியாக்கள் சிலரில் சிறு வயது முதல் தொற்றுநோயுடன் போராடிய காரணத்தினால், அதன் காரணமாக தொடர் ஆன்டிபயாட்டிக்குகள் கொடுக்கப்பட்டதன் காரணமாகவோ வேறு சில காரணங்களுக்காகவோ மொத்தமாக அழிந்துபோயிருக்கக்கூடும். அந்த அற்புத பாக்டீரியாக்களைத் திரும்பப்பெற வழி ஒன்று உண்டு. அது என்னவென்றால், இந்த நாற்பது வருடங்களுக்குள் அழிந்தே போன வாழ்வியல் முறையான பழைய சோற்றைத் தின்பது என்பதுதான்.
சோற்றில் தண்ணீர் விட்டு, ஒரு நாள் ஊற வைத்துச் சக்கை பிழிந்து, வரும் சாற்றை இதுதான் உலகின் ஜீவாம்ருதம் (Elixir) என்று கருதி மூன்று மாதங்கள் அருந்தி வந்தால், நான்காம் மாதம் முதல் நாள், இன்றுதான் புதிதாகப் பிறந்தது போல் இருக்கும். அதில் உள்ள பாக்டீரியாக்கள் நம் மீதி வாழ்க்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும்.
(தொடரும்)
Good one.. Thanks.
ReplyDelete👍
Delete