மனநலமும் இன்றைய சவால்களும் #6

ந்த வயிற்றுப்பாக்டீரியாக்களுக்கும் மன நலத்துக்கும் உள்ள தொடர்ப்பைப் பற்றிப் பார்த்தோமா? ஆனால் இதெல்லாம் டிப்ரெஷன் போன்ற மன நோய்களுக்குப் பின்னாலுள்ள ஒன்றுக்கொன்று சிக்கலான தொடர்புகளைக்கொண்டுள்ள சங்கதிகள். ஒரேயடியாக வயிற்று பாக்டீரியாக்களை அதிகப்படுத்துவது மூலம் டிப்ரஷனைத் துரத்திவிடமுடியும் என்று சொல்ல முடியாது. இது மிகவும் இயற்கையாக, நேரம் எடுத்துக்கொண்டு நடக்கும் ஒன்று.

சந்தையில் பல ப்ரோ பயாட்டிக்குகள் (Pro Biotics) விற்கின்றன.  Bifidobacterium longum, Lactobacillus acidophilus, Lactobacillus rhamnosus GG, Saccharomyces boulardii உட்பட இன்னும் அரை டஜன் ப்ரோ பையோட்டிக்குகள் உள்ளன. அவைகளில் எவை நமக்குத்தேவை, எவை நம் குடலுக்குள் சென்று நன்மை பயக்கும் என்றெல்லாம் நமக்குகந்த, நம் நன்மை நாடும் மருத்துவர் உதவியில்லாமல் அறிந்துகொள்வது கடினம். ஒரு வேளை நம் குடும்பத்துக்குள்ளேயே மருத்துவர்கள் இருந்தால், அதுவும் வாய் முதல் ஆசனவாய் வரையுள்ள துறையில் விற்பன்னராக இருந்தால் அவர் உதவ வழியுண்டு. ஆனால் குடும்பத்திலுள்ளவர்களே சீரியல் வில்லி மாதிரி விஷம் வைக்கும் இந்தக்காலத்தில், நலம் நாடும் ஒருவர்  குடும்பத்துக்குள்ளேயே இருப்பதென்பது அரிது.

தவிர, நீங்களாகவே கண்டபடி ஏதாவது ஒரு ப்ரோபையோட்டிக்கை எடுத்து விழுங்கி வைத்தால், SIBO என்று சொல்வார்கள். அதாவது Small Intestine Bacterial Overgrowth. கட்டுக்கடங்காமல் சிறுகுடலில் பாக்டீரியாக்கள் பெருகிவிடுவது, அதற்குள் தள்ளப்பட்டுவிடுவீர்கள். எந்நேரமும் அபான வாயு பிரிந்துகொண்டே இருக்கும். Bloating எனப்படும் வயிற்று உப்புசத்திற்கு ஆளாகிவிடுவீர்கள். வயிறு பலூன் மாதிரி வீங்கிவிடும். சிறு குடல் என்பது ஐடியாலாக 100/100 Sterile ஆக இருக்கவேண்டிய ஒரு குழாய். ஆனால் இதையும் மீறி E. coli, Enterobacter போன்ற சில அயோக்கிய பாக்டீரியாக்கள் சிறு குடலுக்குள் தங்கி குட்டி போட்டுக் குடும்பம் நடத்தும். போகவே போகாது.  

வாயிலிருந்து வயிறு மற்றும் உணவுக்குழாய் வரை பாக்டீரியாக்கள் இருக்கலாம். சிறு குடலில் ஒன்று கூட இருக்கக்கூடாது, பிறகு பெருங்குடலில் கட்டாயம் பாக்டீரியாக்கள் வேண்டும். வயிறு என்னும் உறுப்பு எவ்வளவு சிக்கல் நிறைந்தது என்பதை இத்துறையில் உள்ளவர்கள் இதைப் Pandora Box என்று குறிப்பிடுவார்கள்இந்தளவு சிக்கல்கள் நிறைந்த வயிற்றுடன் சகட்டுமேனிக்கெல்லாம் ப்ரோ பயாட்டிக்குகளைப் போட முடியாது. அந்த வகையில் மரபு ரீதியான பழைய சோற்று பாக்டீரியாக்கள் நம்முடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருவன, எந்தப்பிரச்சனையும் தாரா.

பிறந்தது முதல் இறக்கும்வரையிலான Gut Microbiome Definition ஒருவரில் எப்படியிருக்கிறதோ, குடலுக்குள் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் நடக்கும் ஓயாச்சண்டையில் எந்தளவு தேவர்களின் கை ஓங்கியிருக்கிறதோ அந்தளவு அவரது நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள் என்ன பிரச்சனை வந்தாலும் அவைகளை சிலிர்த்தெழும்பி எதிர்கொள்ளும். 1997 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு கிரிக்கெட் போட்டியில் ஷார்ஜாவில் மணற்புயல் வீசும்போது எல்லோரும் கண் காதுகளைப் பொத்திக்கொண்டு மைதானத்தில் படுத்துவிடுவர். சச்சின் ஒருவர் மட்டும் மட்டையைக் கிரீஸில் ஊன்றிக்கொண்டு புயல் எப்போது ஓயும் நான் மறுபடி எப்போது ஆடுவேன் என்று நிற்பார், அதுபோல் நிமிர்த்திக்கொண்டு நிற்பார் குடல் பாக்டீரியாக்களின் சமநிலையைப்  பரம்பரையாகக்  கொண்ட ஒருவர்.

சரி Bipolar Disorder க்கு வருவோம். பைபோலார் என்றால் பலரும் காலையில் கடவுள், மாலையில் சாத்தான் போல நடந்துகொள்வதாகக்  கற்பனை செய்துகொள்வர். சினிமாக் காரர்களுக்கு வேண்டுமானால் இம்மாதிரி Catchy யாக ஏதாவது இருந்தால் அதை வைத்துக்கொண்டு 'முட்டை கலக்கிமாதிரி ஒரு கதையை  எழுதிக்கொண்டு வருவர். ஆனால் உண்மை அதுவல்ல. பை போலார் டிஸார்டர் என்றால்  ஒருவர் கொஞ்சகாலம் டிப்ரெஷனிலும் பிறகு கொஞ்சகாலம் மேனியாக்காகவும் இருப்பார் என்று பொருள். எத்தனை காலம் Depression எத்தனைக்காலம் Maniac என்று எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது. எனக்குத் தெரிந்த Bipolar ஆட்கள் சிலர் முதல் வரியில் சொன்னது போல் அச்சு அசலாகக் காலையில் கடவுளாகவும் மாலையில் சாத்தானாகவும், வேறு ஒரு ஆசாமி அதற்கு அப்படியே நேரெதிராக காலைகளில் மிருகமாகவும் மாலைகளில் தேவதூதனாகவும் மாறி பூமாரி பொழிபவராக இருக்கிறார்கள். வேறு சிலர் மாதக்கணக்கில் வாட்ஸப் க்ரூப்புகளில் வந்து,

"போதும் இந்தப் பிறப்பு,

புண்களும் வலிகளும் பழகிவிட்டன

ஆனால் வாழ்க்கையை மட்டும் பழக மறுக்கிறது

இப்பாழாய்ப் போன மனது"

அல்லது

"நாடிச்செல்கிறேன், அன்பைப்பொழிகிறேன்

அனால் நாற்றமுறச்செய்கிறது அவர்தம் பண்பு"

என்று ஏதாவது போட்டுக்கொண்டே இருப்பர். திடீரென்று அப்படியே யூ டர்ன் எடுத்து,

"ஒதுங்கிச் சென்று வழிவிட நானென்ன வாயில்லா வாய்க்காலா?

தடை அதை உடை என்று தகர்த்தெறியும் காட்டாறு"

என்று மாறி, ஒரு வாரம் அதில் இருந்துவிட்டு, மீண்டும் பழைய டோனுக்குப் போய்விடுவார்கள்.

இதில் மணிக்கு மணி, நிமிடத்துக்கு நிமிடம், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை Maniac அல்லது டிப்ரெஷன், என்று வகை தொகையோ கணக்கு வழக்கோ இல்லாமல் மாறுவர். வெகு சுருக்கமாக அதுதான் Bipolar Disorder. இதெல்லாம் சாதாரணம்தானே? நானே அப்படித்தானே? இதில் என்ன எட்டாவது அதிசயம், ஒன்பதாவது அதிசயம் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்? பொறுங்கள். புதுப்புது அர்த்தங்கள் படம் பார்த்திருக்கிறீர்களா? அதெல்லாம் சும்மா சப்ப மேட்டரு. கோடியில் ஒரு பங்கு

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலியின் கதை

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

Jawan - An Inimitable Experience