Genre: ஆட்டோ ஃபிக்ஷன்
Category: பின் நவீனத்துவம்
Form: சிறுகதை
**************************
பலவருடங்களுக்கு திக்கேது திசையேது என்று ஒன்றும் தெரியாமல் இருந்துவிட்டு, வாட்ஸப் என்னும் யுகப்புரட்சி வெடித்து, ஒரு மிகப்பெரிய பிஸ்னஸ் மேக்னட் நண்பன் புண்ணியத்தில் க்ரூப் அமைக்கப்பெற்றது. அதில் ஆரம்பத்தில் எந்நேரமும் நாஸ்டல்ஜியா கதைகள். மச்சான் ஹாஸ்டல்ல நாம செருப்ப எடுத்து அடிச்சிக்கிட்டமே? அப்பறம் பதினைஞ்சி யுகம் கழிச்சி அடுத்த செமஸ்ட்டர்ல கட்டிபுடிச்சிகிட்டு தூங்குனமே? நீயும் நானும் கட் அடிச்சிட்டு கில்பான்ஸோ படம் பாப்பமே? என்ற ரீதியில் இருக்கும். பலரும் வாட்ஸப்பிலேயே கட்டித்தழுவி ஆலிங்கனம் செய்துகொண்டிருந்தார்கள். நேரில் சந்தித்து, பழைய பாலமித்ரா கதைகளில் (தலைப்பு: ஆப்த மித்திரர்கள்) வருவது போல் மனக்கசப்புடன் பிரிந்த நண்பர்கள், காலம்போன கடைசியில் தத்தமது தவறுகளை உணர்ந்து இறுதியில் ஒன்று சேர்ந்து கட்டிபிடித்துக் கண்ணீர் உகுப்பார்கள்.
அம்மாதிரிக் கதைகள் என்னிடம் பெரிதாக இல்லையென்றாலும், சொல்வதற்கென்று சாஸ்திரத்துக்கென்று ஒரே ஒரு குறு நாஸ்டல்ஜியா கதை மட்டும் உண்டு. முதலாண்டில் எஞ்சினீரிங் ட்ராயிங், மூன்று மணி நேரங்கள் தொடர்ச்சியாக இருக்கும் அந்த வகுப்பு . பாடம் நடத்தும் ஆசிரியர் எந்நேரமும் குடைந்துகொண்டே இருப்பார். அவர் என்ன தென்னைமரத்தைத் தாக்கும் காண்டா மிருக வண்டா, இரண்டு செல்பாஸ் மாத்திரைகளைப்போட்டு களிமண் கொண்டு மூடுவதற்கு? வேண்டுமானால் குறியீடாக காண்டாமிருக வண்டு என்று சொல்லலாம். அதனால் நாங்கள் என்ன செய்வோம் என்றால், கட்டடித்துவிட்டு சைக்கிளில்தான் போவோம்.
'அந்தத்' தியேட்டரில் போடும் முட்டை போண்டா போல் வேறு எந்தத் தியேட்டரிலும் போடுவார்களா என்பது சந்தேகமே. காலைக்காட்சி பதினோரு மணிக்கு பெல் அடித்து முட்டை போண்டாவுக்காகப் பாய்ந்து வெளியேறி மூன்றைக் கவ்விக்கொண்டுவந்து, அதில் ஒன்றைத் தின்றுமுடித்துவிட்டுத் திரும்பிப் பார்த்தால், பின் வரிசையில் காண்டாமிருக வண்டு! முதலில் வண்டு மூஞ்சியைத் திருப்பிக்கொண்டது. நான் பார்ட்னர் இன் க்ரைமிடம் தகவல் தெரிவித்தேன், கூனிக் குறுகினேன். அவன் ஆர்வமிகுதியில் திரும்பிப்பார்த்தான்.
நான் - "அடத் திலும்பி பாக்காதைடான்னா, என்ன வெங்காயத்துக்குடா பாக்கற?" அவன் மறுபடி லொள்ளு வெங்காயத்துக்கென்றே மீண்டும் மீண்டும் திரும்பிப்பார்ப்பது. அந்தாளும் முதலில் மோட்டுவளையைப் பார்ப்பது, பிறகு வெறும் திரை, பிறகு வெளியில் ஈக்கள் மொய்க்கும் மு. போ ஸ்டால், அதற்கும் பிறகு போர் அடித்துப் போய் மெதுவாகச் சலனமேயில்லாமல் இருவரையும் கண்ணோடு கண்ணோக்க ஆரம்பித்துவிட்டார்.
க்ரூபில் எந்நேரமும் அதுதான்- "பார்ப்பானின் பிரித்தாளும் மூளை... பாப்பான் புத்தி பின் புத்தி, பாப்பான் காட்டியும் குடுப்பான் கூட்டியும் குடுப்பான், பாம்புக் குஞ்சையும் பாப்பான் குஞ்சையும் கண்டால், பாம்புக்குஞ்சை விட்டுவிட்டுப் பாப்பான் குஞ்சை... " என்கிற ரீதியில் நாளுக்கு நூறு நூற்றைம்பது என்கிற கணக்கில் மெசேஜுகள் கொட்டிக்குவிந்தன. அப்போதெல்லாம் குழுவில் உள்ள அனைவரும் விக்கெட், விண்டோ, கேட், ஷட்டர் என்று எல்லாவற்றையும் சாத்திக்கொண்டிருந்துவிட்டு, மாப்ள, அடுத்த மாசம் பொள்ளாச்சி வர்றேன் அப்ப நாம கட்டித்தழுவி கிஸ் அடிச்சுக்கலாமா என்றார்கள். எல்லா குரூப்பிலும் சில மெசேஜ் கிறுக்கர்கள் இருப்பார்கள் அல்லவா? அவர்கள் அவ்வப்போது கேனத்தனமாக மேற்படி மெசேஜுக்கு கவுண்ட்டராக வேறு ஏதாவது போட்டுவிட்டால் போதும், அவ்வளவுதான் அவனை மல்லாக்கப்போட்டு மிதிப்பது மட்டுமல்லாமல், குரல்வளையையும் நெரித்தார்கள்.
"இந்தக் குழுவின் நோக்கம் பழைய நட்பைப் புதுப்பித்துக்கொண்டு, நெஞ்சை நக்குவது மட்டுமே ஆகும். இங்கு மற்றவர்கள் மனம் புண்படுவது போல் தயவு செய்து எழுதாதீர்கள் நண்பர்களே ப்ளீஸ்" என்றார்கள் அட்மின்கள்.
சிலர் அதற்கும் கடும் எதிர் வினையாக "பார்ப்பனர்களின் குயுக்தி" என்ற தலைப்பில் வெறி கொண்டு, மெண்டல் ஆகிப் போய், நூறு போஸ்ட்டுகள் போட்டார்கள். வழக்கம்போல் ஷட்டர் க்ளோஸ்!
நானும் - "சரி நாம கொருலு குட்த்துப் பாப்போம், நாம குட்த்தாக்கா வேற யார்னா ஆட்டோமேட்டிக்கா குடுப்பாங்கோ" என்றுவிட்டுக் கொருலு கொடுத்தால், அத்தனை பயலும் ஷட்டரைச் சாத்திக்கொண்டது மட்டுமல்ல, அதில் உள்ளே போய் உட்கார்ந்துகொண்டு ஸீலும் வைத்துக் கொண்டார்கள். இப்போதுமட்டும் வசதியாக மறுபடி அதே ஸ்டக் ஆன டேப்:
"இந்தக் குழுவின் நோக்கம் பழைய நட்பைப் புதுப்பித்துக்கொண்டு, நெஞ்சை நக்குவது மட்டுமே ஆகும். இங்கு மற்றவர்கள் மனம் புண்படுவதுபோல் தயவு செய்து எழுதாதீர்கள் நண்பர்களே ப்ளீஸ்"
உடனே வெகுண்டு போய் வெளியேறினேன்.
இத்தனைக்கும் எனக்கு பிராமண பாஷை இது நம்ம ஆளு பாக்யராஜ் அளவுக்குக் கூட வராது. இவர்கள் சொல்வது போல் மந்திரமும் வராது தந்திரமும் வராது. பாக்யராஜ் கூட படத்தில் பாதி படம் வரை மாட்டிக்கொள்ளாமல் ஒலட்டிக்கொண்டிருப்பார்.
நான் எங்கள் வீட்டு விஷேசத்துக்காக முறுக்கும் பருப்பு கோபுரமும் ஆர்டர் கொடுப்பதற்காக அக்ராஹாரத்துக்குச் செல்வேன். நான் பேச ஆரம்பித்தால் இவனுக்கு பிராமண பாஷை வராது என்று இரண்டே நிமிடங்களில் தெரிந்துபோய்விடும்.
"மாமி...நன்னா இருக்கேளா? அப்பா ஆடர் குடுத்துட்டு வரச்சொன்னா. அம்பது கைச்சுத்து முறுக்கு, ரெட்ட வரி முறுக்கு இருவது, பருப்பு கோபுரம் ஒத்தப் படையா ரெட்டை படையான்னு தெரீலீங் மாமி, தாலுகாபீஸுக்கு வரைல எட்டுப் போறம்னு எங்கய்யஞ்ஜொல்லிவுட்டாப்டிங் மாமி" என்று ஸ்லாங்கை மெயின்டெயின் பண்ண முடியாமல் ஒலட்டி மாட்டிக்கொள்வேன்.
அந்த மாமியும், இரண்டே நிமிடத்தில் கண்டுகொண்டுவிட்டு,
"ச்சேரி கண்ணு...நீ போகைல.... (ஐ போனில் ஆர்டர் ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டு...) வரைல நீக்கிப்போட்டு மூடாத வந்தையல்ல? அந்த க்கேட்ட (Gate) சாத்திபோட்டுப் போ கண்ணு. அங்கவாரு சொறி நாயி கேட்டுக்குள்ள வந்து எப்புடி எட்டிப்பாத்து முறுக்கு மாவ நக்கியுட்டுபோட்டுப் போகுதுவாரு"
வருடங்கள் சில கடந்தன. சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது எனக்கென்ன புதிதா? நாஸ்டல்ஜியா அரிப்புத் தாளமுடியாமல் தேடிப்பிடித்து, குட்டிக்காரணங்கள் பல அடித்து, பள்ளி வாட்ஸப் க்ரூபில் போய் இணைந்தேன்.
உலகம் முழுவதும் கொரோனா பீக்கில் போய்க்கொண்டிருக்கும்போது, கரும சிரத்தையாக அனுதினமும் ஆபீஸ் போயே ஆகவேண்டும் என்பதுபோல் ஒரு ப்ராஜெக்ட். தினமும் ஒரு 'ஆப்' பில் போய் மண்டை வலி தொண்டை வலி காய்ச்சல் இருமல் எதுவுமே இல்லை என்பது உட்பட இருபத்தைந்து கேள்விகளுக்கு விடையளித்து கையொப்பமிட்டு 'க்ரீன்' காண்பிக்கும்; அதை ஸ்நாப்ஷாட் எடுத்து கொண்டுபோய், செக்யூரிட்டியில் காண்பிக்கவேண்டும். வீட்டில் இதையெல்லாம் செய்துமுடித்து ஸ்நாப்ஷாட் எடுத்துக்கொண்டு ஆபீஸ் போய்ச் சேர்வதற்குள், பள்ளி க்ரூபில் நூறு இமேஜுகள் வந்து விழுந்திருக்கும். ஒருவன் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டது, தூக்கில் தொங்கியது, ஏடிஎம் கொள்ளையர்கள் கழுத்தறுத்துப்போட்டுவிட்டு கொள்ளையடிக்கமுடியாமல் விட்டுவிட்டுச்சென்ற இயந்திரத்தின் படத்துக்கருகில் கோரமாக உயிர்விட்ட செக்யூரிட்டியின் உடல், லாக் டவுனில் வெளியில் சென்று போலீசிடம் அடிவாங்கி கோடுகள் விழுந்த புட்டங்களின் படங்கள். வீட்டிலிருந்து வேலைக்குச் செல்லும் அந்த சின்ன இடைவெளிக்குள் விழுந்துவிட்ட இத்தனை படங்களில் நமக்குத் தேவையான ஸ்நாப்ஷாட்டைத் தேடி எடுப்பதற்குள் மனப்பதட்டம். ஸ்நாப்ஷாட் எடுத்தோமா எடுக்கவில்லையா!?
இங்கு வந்து எடுக்காமல் நின்றால், இன்ஸ்டன்ட் கோவிட் டெஸ்ட் எடுத்துத் தொலைவான். மீட்டிங்குக்கு லேட் ஆகித் தொலையும். இது ஒரு பிரச்சனை. தவிர, என்னுடைய ஃபோன் எப்போதுமே கற்காலத்து மினிமலிஸ்டிக் ஃபோன்தான். அனுதினமும் ஆண்டிராய்டு செட்டிங்கில் நோண்டி, நோண்டி மெமரியைக் க்ளீன் பண்ணிக்கொண்டே இருக்கவேண்டும். நியாண்டர் செல்வன் என்பவரின் பதிவுகளைப்படித்துப் படித்து, அனைத்திலும் மினிமலிஸ்டிக் என்று ஆகிவிட்டது.
அந்த க்ரூப்பிலிருந்தும் வெளியேறினேன். சிலருக்கு ஈகோ அடி வாங்கியது. அதிலிருந்து எப்போது ஃபோன் செய்தாலும் கட் செய்துவிட்டு, பேரெண்ட்ஸ் வந்துருக்காங்க, அவுங்குளுக்கு பாத பூஜை செஞ்சு விருந்து வெச்சுகிட்டு இருக்கேன் அடுத்த வாரம் பேசலாம் என்றார்கள். அடுத்த வாரமும் அதையே சொன்னார்கள். நானும் பதினாறு வாரங்கள் கேனத்தனமாக அதை உண்மை என்று நினைத்து, மெசேஜ் போட்டுப் போட்டு, இப்பப் பேசலாமா நண்பா? என்று கேட்டுக்கொன்டிருந்தேன்.
வேறு சிலருடன் பேசும்போது எனக்கு நாஸ்டல்ஜியா கிளப்பி விடுவதற்கு எதுவுமே இல்லாமல் போனது.
பல வருடங்களுக்கு முன்னால் வார இதழில் வாசித்த கதை ஒன்று ஞாபகம் வந்தது. அதில் ஒரு க்ராக்கு மாமா ஐந்து வயது குழந்தையிடம் சென்று, என்ன படிக்கறே? தச்சி மம்மு ஷாப்டியா? யாரு கூட தாச்சிப்பே? அம்மா கூடயா அப்பா கூடயா? மாமா பாரு எப்படி ஆனே மாதிரி முட்டி போடறேன் பாரு என்பார். குழந்தை பொறுத்துப் பொறுத்து பார்த்துவிட்டு, அம்மா அந்த அங்கிள பாரேன் ஒரு மாதிரி பன்றாரு, பாக்க கேனத்தனமா இருக்கு என்று சொல்லும்.
என்னிடம் மீறி மீறிப்போனால் நாஸ்டல்ஜியா கிளப்புவதற்கு -
"டேய் அந்த வாத்தியாரு உன்னைய செவுனியச் சேத்தி உட்டாரு பாரு ஒன்னு. காது உனக்கு சொய்யிங்னுருச்சு. அப்பறோ(ங்) உன்னைய தாய் தகப்பனப் போயி கூட்டீட்டு வரச்சொன்னா, சந்தைக்கடைல போயி ஒரு பொம்பளயக் கூட்டிட்டு வந்தயே?"
நானும் இன்றளவிலும் பேக்கன்தான். நாஸ்டல்ஜியா என்றால் அவன் மூக்குச்சளி ஒழுக்கிக்கொண்டு டவுசரில் பொத்தான் போடாமல் போய் வாத்தியார் கையிலோ டீச்சர் கையிலோ சிக்கி கைமா ஆனது, நான் அவன் வீட்டுக்குச்செல்லும்போது எந்நேரமும் தொண்டு சுற்றிக்கொண்டிருந்துவிட்டு, டிஸிப்ளிண்டாக இல்லாமல் இருப்பதற்காக அப்பன் ஆத்தாவிடம் மாட்டி லாடம் வாங்கியது, அதற்கு நான் நேர் சாட்சியாக இருந்தது ஆகியவற்றை தொண்ணூறுகளின் லூசு ஹீரோயின் கேரக்டர் மாதிரி உளறி; அவர்களும் பேச்சு ஆரம்பித்த ஆரம்ப எக்ஸைட்மென்ட் காரணமாக கொஞ்சம் இன்வால்வ்மெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவர்களுடைய ரீடிஃபைன்டு ஈகோ மற்றும் Stature conciousness பிடித்து இழுக்க, சட்டென்று உரைத்து, மெச்சூரிட்டி காண்பிப்பதாக எண்ணிக்கொண்டு, வெட்டிவிட்டுவிடுவார்கள். போனை வைத்துவிட்டு, ஐயோ ச்சை என்று தலையில் கையை வைத்து யோசித்துவிட்டு, மொத்தமாக விலக்குவார்கள்.
Budding Romance என்று ஒன்று உண்டு, பதின் பருவங்களில் சிறுவன் மற்றும் சிறுமிகளில் மெதுவாகக் கிளர்ச்சி ஏற்பட்டு, முத்தம் வரைக்கும் போகும். அது முடிந்த பின் ஐயோ தூ என்று அதை நினைத்து நினைத்துக் குமைந்து விலகி ஓடி, அந்த நிகழ்வையே Undo செய்யப்பார்ப்பார்கள் பெண் குழந்தைகள். ஆண் குழந்தைகள் அதைத்தான் முதல் காதல், இரண்டாம் காதல் என்று கிடா மாடு மாதிரி வளர்ந்த பிறகும் லூசுத்தனமாக ஒலட்டிக்கொண்டு திரிவார்கள். அது மாதிரி.
நம்முடையது அமெச்சூரிஷ் தனமான, அருக்குத்தனமான ஒருவித பார்ட்டி மிங்க்லிங் மாதிரி; பார்ட்டி முடிந்ததும் அவரவர் வேலைகளைப்பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருப்பது. கொஞ்சம் நையாண்டி செய்து அதன்மூலம் பழைய சமனுக்கு எடுத்துச் செல்வது. ஆனால் அவர்கள் அப்படி இருப்பதில்லை. பெரும்பாலும் அவர்கள் வசதிக்கேற்ப முதுகு சொறிதல் மற்றும் அவர்களது உள்ளக்கிடக்கைக்கு உகந்த நாஸ்டல்ஜியா பேசினால் நாம் சரி! அல்லது குறைந்த பட்சம் எப்போதாவது Encash செய்யமுடியுமளவு ஏதாவது பொருளியல் ரீதியான அனுகூலம் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள்.
இவர்களுக்கு ஒன்று மட்டும் புரிவதில்லை, அது என்னவென்றால், நான் அப்போதே வேறு மாதிரி என்பது! இவைகளில் ஒன்றுகூட இல்லாவிட்டாலும் குறைந்தது அவர்கள் பதினேழு வயதில் ரூட்டு விட்ட தமிழ்ச்செல்வி, கலைச்செல்வி என்று எந்தக் கதையையாவது நினைவு வைத்துக்கொண்டு அதைச்சொல்லி, அவர்களது ஈகோவை உருவிவிடவேண்டும். அட நாய்களா என்னுடைய வேலையே நீ அமெரிக்க அதிபராகவே இருந்தாலும் உன் கோவணத்தை உருவி, புட்டத்தில் சும்மா விளையாட்டுக்கு நாலு சாத்து சாத்திவிடுவதுதானே? அதற்குப் பெயர்தானே நட்பு? அடங்கோ... இது ஒரு புனைவு என்பதே சுத்தமாக மறந்தேவிட்டது. பின்நவீனத்துவம் என்பதை Trial & Error இல் பயிலும்போது இப்படித்தான் கொஞ்சம் நடையே மாறிவிடும்.
வேறு ஒரு வாட்ஸாப் குறுங்குழுவில் (ஐ!!! இலக்கிய நடை எனக்கும் வருகிறது!) ஒரு பத்து பேர் இருந்திருப்போம், பல வருடங்களுக்குப்பிறகு மீண்டும் இணையும் தருணம். ஓரிரு வரிகளை எழுதி, அவரவரை சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொள்வது என்பது திட்டம். செய்யும் தொழில் பற்றி அறவே பேசக்கூடாது, குடும்பத்தினர் பற்றியும் சமீபத்திய நட்பு சார்ந்த நடவடிக்கைகள் பற்றியும் ஓரிரு வரிகளுடன் அறிமுகப்படுத்திக்கொள்வது என்பதும் விதி. பலர் பலதும் எழுத,
நான்: I am married with kids.
அடுத்த நொடி அட்மின் பிளாக் பண்ணித் தூக்கியெறிந்துவிட்டு, நான்கு நாட்கள் கழித்து ஃபோன் செய்து விளக்கம்- அட வக்கிரம் புடிச்சவனே, கொழந்தைகளப் போயி எவனாலு கெட்டுவானா?
இன்னொருவன், கனடாவில் பன்னிரண்டு வருடங்கள் வசித்துவிட்டு வந்து, பல வருடங்கள் கழித்து மறு கனெக்ட் செய்ய விரும்பும் நாஸ்டல்ஜியா முதுகு சொறி வெறியன்.
கொரோனா வந்த புதிதில் வாட்ஸாப் சாட்-
ஆரம்பித்த சில வரிகளிலேயே, நான் தமிழ் லிபிக்கு மாறிக்கொண்டேன். நான் தமிழுக்கு மாறியதால் ஈகோ அடி வாங்கி, ஒரு வாரத்துக்கு ஒன்றும் இல்லை. பிறகு நான் மாடு செக்கை நக்குவதுபோல் நக்கியதும்,-
நாஸ். வெறி நண்பன்: 'hai'..."
அடியேன் தங்க்லீஷ்" "yepdi irukke nanbaa?"
நாஸ். வெறி நண்பன்: I am fine. Just bying store ...😆😆😆😆
நான்: Veetla yellarum yepdi irukkaanga?
நாஸ். வெறி. நண்பன்: All going to palani maountain. They born cannada no? not seen muntain. Kids are english only very difficult local culture no? 😄🤣🤣👍
பிறகு டாபிக் மாறி வெகு நேரம் கோவிட் பிரச்சனை பற்றிய கவலைகள். பெருச்சாளிக் குடலில் இருந்து ஊசியில் உறிஞ்சி எடுத்து மருந்து கண்டு பிடிக்கிறார்கள் அதனால் நாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளமாட்டோம் என்று அவன் எனக்கு மெசேஜ்.
நான்: ச்சே ச்சே. என்ன நண்பா பேசறே? Don't be silly... அப்படியெல்லாம் பாத்தா, நமக்கு பொறந்ததுல இருந்து எத்தன தடுப்பூசி போட்டிருப்பாங்க?
அடுத்த நொடியே நான் Blocked! ஏனென்றால், Don't be silly என்பது அஃபென்ஸிவாம்!
இந்தக்கதை பின் நவீனத்துவத்தை அனுசரித்து இத்தோடு நிறைவு பெறுகிறது.
இதை
இப்படியே நீட்டி முழக்கிக்கொண்டே போனால், எனக்கு முதுகில் ஆசிட் ஊற்றிய 'கப்பிங்க்ஸை' வைத்துச் சூடு பண்ணி இழுப்பார்கள்.
நானும் காத்திருக்கிறேன்; எவனாவது இழுங்கடா...நானும் கொரில்லா மாதிரி மார் தட்டிக்கொண்டு தனிமையில்தானே
நிற்கிறேன்?
Comments
Post a Comment