பொன்னியின் செல்வன்

ண்பன் ஒருவன் பியர் ப்ரெஷர், வேறு வழியே இல்லை பார்த்தாக வேண்டியிருக்கிறது அதனால்  பார்க்கவிருக்கிறேன் சனி மாலை என்று மெசேஜ் தட்டினான்இதுநாள் வரை பிறந்தநாளுக்கென்று ஒன்றுமே செய்துகொள்ள மாட்டேன் என்கிறாய். ஊரே சென்று பார்க்கிறது, இதையாவது செய். ஃபைண்ட்  யூவர்  மீ டைம் அண்ட் என்ஜாய் என்று வீட்டில் க்ராண்ட் கிடைத்தது! அப்படியே நெக்குருகிப்போய் டிக்கெட் போட்டுவைத்துவிட்டு காலை ஏழு முதல் மாலை  வரை பிழைப்பைப் பார்த்துவிட்டு ஏறக்கட்டி முடித்துவிட்டு மணி பார்த்தால் சரியாக ஐந்தே முக்கால். பிறந்தநாள் வழக்கம்போல், வழமைபோல் மற்றுமொரு நாளாக முடிந்தது. தியேட்டர் வெறும் பத்துநிமிட ட்ரைவ்; சரி என்று ஓடிச்சென்று அமர்ந்தால் -   

இந்தியர்கள் வெள்ளைகாரப் பொண்டாட்டியையோ, கேர்ள் ஃப்ரெண்டையோ, இந்தியப்பெண்களாக இருந்தால் வெள்ளைக்காரப் பொண்டாட்டனையோ, பாய் ஃப்ரெண்டையோ   இழுத்துக்கொண்டு வந்து அமர்ந்திருந்தனர். பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு தொணதொணவென்று படம் நெடுக விளக்கம். என்னருகில் தம்பதி சமேதராக, வெள்ளைப் பார்ட்னருடன் என்ட்ரி கொடுத்தவர், இது தமிழ் வெர்ஷன்தானா என்பதை என்னிடம் கேட்டு உறுதி செய்துகொண்டார். அடுத்த முறை இம்மாதிரி யாராவது என்னிடம் கேட்டால், இல்லை ஹிந்தி,தெலுங்கு அல்லது மலையாளம் என்று சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். எனக்கு இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், இங்கெல்லாம் படத்துக்கு நடுவே இண்டெர்வெல் விடுவதில்லை. இந்தியர்கள்தான் நொச்சு நொச்சென்று  அடிக்கடி இடையில் எழுந்துபோய் ஒன்ஸ் விட்டுவிட்டு  வருகிறார்கள். வெள்ளைக்காரர்கள் இந்தியப்படங்களை, அதில் வாந்தியே எடுத்து வைத்திருந்தாலும், நாகரிகமாக  முகத்தில் ஒரு எக்ஸ்பிரேஷனும் காட்டாமல் மூன்று மணிநேரம் இடத்தைவிட்டு அசையாமல் தம் கட்டுகிறார்கள். கூட்டி வந்தவர்கள் ஏதோ தான் காசு போட்டுப் படம் எடுத்துபோட்டுக் காட்டியதுபோல், படம் முடிந்ததும், எப்படியிருக்கிறது எப்படியிருக்கிறது என்று படம் முடிந்து லைட் போட்டதும் வெள்ளைக் கண்களில் பெருமிதத்துடன் பாராட்டுத் தேடுகின்றனர். அவர்களும் இன்ஸ்டன்ட் ஆர்கஸம் அடைந்ததுபோல் கண்கள் மின்ன வாவ் ஆஸம், எக்ஸெம்ப்லேரி, அஸ்டவுண்டிங், எக்ஸ்ட்ராடினரி, அவுட் ஆஃப் தெ வோர்ல்ட் எக்ஸ்பீரியன்ஸ் என்கிறார்கள்.

எனக்குமே பெரும்பாலும் இண்டெர்வெல்லுக்கு முன்னேயே படம் என்னதான் சுவாரசியமாக இருந்தாலும், டேங்க் நிரம்பிவிட்டால், மனம் மரத்துப்போய், படத்தில் மனமொன்றாத அளவு கண்களையும் கற்பனையையும் ஆக்கிரமித்து தியேட்டர் யூரினல் 70 எம் எம்மாக விஸ்வரூபம் எடுத்துக் கண்முன் 3D யில் தோன்றும், அதில் விதவிதமாக ஒன்றுக்கு அடிப்பதுபோல் ஃபேண்ட்ஸைஸ் செய்ய ஆரம்பித்துவிடும். அதுவே இண்டெர்வெல்லில் நீச்சல் குளக்காட்சியோ, நீர்நிலை சம்பந்தப்பட்ட காட்சியோ வந்தால், அதில் குதித்து அப்படியே சைலென்ட்டாக குழாயைத்திறந்துவிடுவதுபோலெல்லாம் கற்பனை மனக்கண்முன் விரியும். நான் அதற்கெல்லாம் இடமளிப்பதில்லை, டேங்க் சென்சாரில் இருந்து முதல் இன்புட் வந்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்து ஹன்ச் பேக் செய்துகொண்டு, சரசரவென நழுவி வெளியேறிவிடுவது. அது என்னவோ, டேங்க் நிரம்பியதும் எல்லோர் முன்னாலும் எழுந்து ஒன்ஸ் விடப்போவது என்பது கொலைக்குற்றம் செய்துவிட்டு ஜெயிலுக்குப்போவதைப்போன்ற  போன்ற குற்ற உணர்வைத் தருகிறது. ஆனால் இந்தப்படத்தில்  வரும் குந்தவையை, நந்தினியை, பூங்குழலியை, வானதியை என்று அனைவரையும் மிஞ்சும் தன்னம்பிக்கை கொண்ட  யுவதிகள் சர்வசாதாரணமாக பத்துநிமிங்களுக்கு ஒரு முறை உச்சா போய்விட்டு வந்து அமர்கிறார்கள். பாருங்கள் ஒரு வழியாக படத்தைப் பற்றிய விமர்சனத்துக்குள் வந்துவிட்டோமா?

ஆமாம் அந்த ஐநூறு கோடிக்கு முதலில் கணக்குச் சொல்லுங்கள் ஐயா பார்ப்போம். சரி ஒரு எளிய மனக்கணக்கு -

நந்தினிக்கும் குந்தவைக்கும் உண்மையில் சொக்கத்தங்கத்தில் இழைத்து நகைகள் போட்ட கணக்கு அதிக பட்சம் ஐந்து கோடி. ஏனென்றால் இங்கு அரிவாளால் கேக் வெட்டி ஃப்ளெக்ஸ் வைக்கும் ஒல்லி ரவுடிகள், குண்டு ரவுடிகள் என்று எவருமே கழுத்திலும் கைகளிலும் விரல்களிலுமாக ஐந்து கிலோ தான் அதிக பட்சம்ஏதோ தாய்லாந்து போயெல்லாம் படம் பிடித்ததாகச் சொல்கிறீர்கள். மொத்த கோர் க்ரூவில் ஐம்பது பேர் ஐம்பது நாட்களுக்குப் போனீர்கள் என்று வைத்துக்கொண்டால், தலைக்கு ஐந்து லட்சம் முதல் பத்து லட்சங்கள் வீதம் அந்த வகையில் இரண்டரையிலிருந்து ஐந்து கோடிகள்காஸ்ட்யூம், குதிரை, யானை, துணை இணை நடிகர்கள், தோட்டா தரணி இன்ன பிற - பேச்சுக்கு ஒரு ஐம்பது கோடி. நிழல்கள் ரவி, கிஷோர் மற்றும் பலரின் சம்பளம் ஒரு பத்து கோடி என்றே வைத்துக்கொள்ளலாமே? மீதிக்காசு எங்கே ஐயா போனது?

ஒரு காலத்தில் நான் ஓசி டீவி பார்க்கத் தயங்கத்தொடங்கி டீவி பார்ப்பதை நிறுத்திய காலத்தில் டி.டி யில் சந்த்ரகாந்தா என்று ஒரு ஸீரியல் வரும். அதைக்கூட  யூடியூப்பில் தேடிப்பிடித்துப் பார்த்துவிட்டு நுணுக்கமாக விமர்சனம் எழுதத் தயார். ஐநூறு கோடியில், படத்துக்கு வசனம் திரைக்கதை இதற்கெல்லாம் எவ்வளவு செலவழித்தார்கள்? படம் நெடுக யார் டிராமா ம்யூசிக் போட்டிருக்கிறார்கள்?  யார் ஸார் பின்னணி இசை? கலர் கிரேடிங் என்று ஒன்று இருக்கிறதே அவைகளெல்லாம் குறைந்தது டிஸ்கஷனின் போதாவது விவாதிக்கப்பட்டனவா?

ஒரு காட்சியில் வந்தியத்தேவன் குடித்து ஆதித்ய கரிகாலனிடம் மாட்டிக்கொண்டு கள் என்று முதலில் சொல்லிவிட்டு, அதைச் சமாளிக்கும் விதமாக இல்லை கள்ளழகர் கோவிலுக்குப் போயிருந்தேன் என்பார். ராஷ்டிரகூடர்கள் ராஜ்யத்தில் கள்ளழகர் கோவிலா? இந்தளவெல்லாம் நோண்டுமளவுவெல்லாம் வொர்த் இல்லை, டெப்த் இல்லை ஆனால் வசனம் பெருந்தலை ஜெ. மோ ஆயிற்றே?

எங்கள் ஊரில் இந்த சில்லரைக் காய்கறிக்காரர்கள் பரங்கிக்காய், பூசணிக்காய் ஆகியவற்றைக் கூறு போட்டு விற்பதற்கென பட்டறையில் உடைந்து விழும் ஹாக்ஸா பிளேடுகளை பொறுக்கிவந்து அதைச் சாணைபிடித்து, கைப்பிடி போட்டு வைத்திருப்பர்ஒரு நான்கு கூறுகள்  போட்டபிறகு, முனை மழுங்கி, சொங்கி விடும். அந்தக் கத்தியை எடுத்துக் கதறக் கதற கழுத்தை அறுத்தது போல் இருந்தன வசனங்கள். வசனங்கள் என்னதான் மொன்னையாக இருந்தாலும் அவைகளை உச்சரிப்பவர்களாவது சரியாக உச்சரித்தால், தப்பிவிட வாய்ப்பிருக்கிறது. படத்தில் வரும் பெரும்பாலோர் மேட்டுக்குடியினர், தமிழைக் கடித்துத் துப்புகின்றனர். மணி ரத்னம் படம் என்பதால், இதையெல்லாம் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்ளவேண்டும். விக்ரம் பிரபுவைக்கூட கெரகம் தொலையுது என்று விட்டுவிடலாம் ஏனென்றால் உண்மையில் அவர் ராஜா நிஜ வாழ்க்கையில் இளவரசர். சரத்குமாருக்கு என்ன வந்தது, அவரும் 'சோழ' என்பதற்கு பதில் 'ச்சோல' என்கிறார். நிழல்கள் ரவி வரும் வெகு சில இடங்களில் மட்டும் இந்த மேட்டுக்குடி ஸ்டைலுக்குச் சம்பந்தமே இல்லாமல் பழைய ரேடியோ நாடக ஹெரான் ராமசாமி மாதிரி தமிழை உச்சரிக்கிறார். ஆச்சர்யமாக மலையாள லால் கூட தனித்தமிழுடன் போராடி நன்றாக உச்சரிக்கிறார். ஜெயராமுக்கெல்லாம் யாரையாவது டப்பிங் போடலாமே? அவர் படத்தில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

இந்த நாடக ம்யூசிக், நாடக நடிப்பு இதையெல்லாம் கூடப் பொறுத்துக்கொள்ளலாம், ஏனென்றால் இதன் மூலக்கத்தையே வெட்டிப் பொழுதுபோக்குக் கதை. பல இடங்களில் கல்கியே பக்கம் பக்கமாக கதறக் கதற மொக்கை போட்டிருப்பார். அது அந்தக்கால மதிப்பீட்டின்படி ஒரு சுவாரசியமான தொடர்கதை. அந்த மட்டில் அதையும் மன்னித்து விட்டுவிடலாம். ஏனென்றால், அதே காலகட்டத்தில் புதுமைப்பித்தன் என்பவர், செம காட்டுக் காட்டிக்கொண்டிருந்தார். ஆனால் அவரை விடுத்து, தமிழ் சமூகம், பாய் ஃப்ரெண்டிடம் ஃபான்டஸிகளை டிஸ்கஸ் பண்ணாமல், தோழிகளிடம் போய் மூடு வந்து ஓலட்டும் கதாநாயகிகளைக் கொண்டாடிக்கொண்டிருந்தது.

ஆனால் அடாப்ட்டேஷன் என்று வரும்போது, இவ்வளவு பெரிய  ஸ்டார் கேஸ்டிங், இவ்வளவு பெரிய பட்ஜெட், லெஜண்டரி எழுத்தாளர்கள் இத்தனையையும் வைத்துக்கொண்டு, காசைக்கூட விடுங்க மணிரத்னம், அட நேரத்தைச் செலவு செய்து படம் பார்க்கிறோமல்லவா அதற்கு என்ன நியாயம் செய்கிறது இந்தப் படம்? ஒரு நல்ல முயற்சி என்று சும்மா சொல்லிவிட்டுபோவதற்கு நீங்கள் என்ன அறிமுக இயக்குநரா? கோவிட் தடுப்பூசி என்பதற்காக எடுத்து மூக்கில் குத்திக்கொள்ளவேண்டுமா?

குந்தவை நந்தினி, உட்பட எல்லா ஃபிகர்களுடனும் சரமாரியாக ஃப்ளிர்ட் செய்யும் வந்தியத்தேவன், வானதியை மட்டும் பல இடங்களில் ஒரே சீனில் வந்தாலும் ப்ரோடோகால் கருதியோ என்னவோ ஒன்றும் செய்யாமல் இருக்கிறார். இத்தனைக்கும் பெரிய கேன்வாஸில் சப்ப ஃபிகராகத் தெரியவைக்கப்படுகிறார். நான் மட்டும் பி. எஸ் 1-ன் வந்தியத்தேவனாக இருந்தால், அதையும் விட்டுவைக்காமல் ரூட்டு விட்டிருந்திருப்பேன். திரைக்கதை எழுதியது ஒரு பழம் என்பதால் இப்பிரச்னை.

இந்தப்படம் ரீமேக் செய்யப்படவேண்டும்சரியான ஆள் எடுத்துச்செய்தால் அற்புதமான படமாக வர வாய்பிருக்கிறது. இரண்டு காரணங்கள் - ஒன்று, மூலக்கதையில் சுவாரசியம் எந்தளவு  என்பதைக்கூட விடுங்கள், ஆனால் ஒரு வணிகப்படம் உருவாவதற்கான அத்தனை சரக்குகளும் அதில் உண்டு. துரோகம், வஞ்சம், பழி, பதவி வெறி, காதல், மர்மம். இத்தனை சரக்குகளைக் கையில் வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்யாமல் கோட்டை விட்டால் என்னவென்று சொல்வது? இரண்டாவது காரணம் - த்ரோக்கால் என்று ஒரு இந்திப்படம் அதை இருபதுவருடங்களாகப் பார்க்கவேண்டும் என்று ஏங்கிவிட்டு, சமீபத்தில் யூட்யூபில் சிக்கியது. நல்ல கதை, அனால் மேக்கிங்கில் அவ்வளவு சுவாரஸ்யமில்லாமலிருந்தது கோவிந்த் நிஹ்லானியின் படம். எடுப்பவர் கையில் எடுத்தால், குப்பையும் ஸ்வர்ணமாக மாறும் என்னும் அளவு, அடுத்த வருடமே குருதிப்புனல் என்று தமிழில் வந்தது. இதைப்பற்றித் தனியாக எழுதுமளவு ரீமேக் அல்லது தழுவுதல் ஒரு படத்தை எப்படி நூறு மடங்கு தரத்தையும் நல்ல சினிமா அனுபவத்தையும் உயர்த்திக்கொடுக்கும் என்பதற்கு அந்தப்படம் ஒரு இலக்கணம்.

Comments

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience