Catch you on the rebound

ரியாகப் பதினோரு மாதங்கள். சென்ற வருடம் அக்டோபர் 26 தொடக்கம் இதுகாறும் பலதையும் கிறுக்கியாயிற்று. இன்னும் ஒரு வருடம் முழுமையாக முடியவில்லை. அதனால் என்ன? தவிர்க்க முடியாதவைக்கு இந்த ஆண்டு நிறைவுகளையெல்லாம் அனுசரிக்காமல் இருக்க முடியாது அவைகளைத்தவிரஇந்தப் பிறந்தநாள் கிறந்தநாள் இதையெல்லாம் நினைவும் வைத்துக்கொள்வதில்லை, கொண்டாடுவதும் இல்லை. அதே போல் இந்த விஷயத்திலும் இதுவே ஒரு பெரிய சாதனைதான் என்று தோன்றியது. தொடரத்தான் வேண்டும், எழுத்து உட்பட்ட பல நுண்கலைகளில் ஈடுபடுபவருக்கு சோர்வு என்பதே வராது, வரக்கூடாது. வாழ்வில் வேறு விஷயங்களுக்கு முன்னுரிமைகள் மிக அதிகமாக இருக்கும்போது, இது போன்ற முனைப்பான, அர்ப்பணிப்பையும் கடும் உழைப்பையும் கோரும் விஷயத்தையும் சேர்த்து இழுத்துக்கொண்டு செல்வது என்பது கொஞ்சம் சிலிர்ப்பூட்டும் விஷயம்தான்

 சில வருடங்களுக்கு முன் சென்னையில் தக்ஷின் சித்ரா என்னும் ஒரு அற்புதமான பாரம்பரியத்தைப்  பாடம் போட்டுக் காட்சிப்படுத்தும் இடத்துக்குச் சென்றிருந்தேன். இந்தியாவில் உள்ள பெரும்பாலான பழங்காலத்துக் கட்டிடக்கலையை ஒட்டிக் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கலைப்பொருட்கள் தவிர ஒரு சில நிகழ்த்துக்கலைகள் கூட நடந்தது. தினமும் ஒருவர் வந்து தோல் பாவை ஆட்டம் நடத்துகிறார். வேறு ஒருவர் களிமண் பிசைந்து பழைய முறைப்படியே உயிரைக்கொடுத்து சக்கரத்தைச் சுற்றிச் சுற்றி பானைகள் செய்துகொண்டிருந்தார். இந்தக்காலத்தில் யாராவது அவரிடம் பானை வாங்குவார்களா? மரபுசார் வாழ்க்கை முறையில் ஆர்வமுள்ளவர் எவரேனும் ஓரிரு பானைகள் வாங்கலாம். அவ்வளவுதான். தக்ஷின் சிற்றாவை விட்டு வெளியே வந்தால் தோல்பாவை ஆட்டத்தை யார் பார்ப்பார்கள்? அவர் ஏதோ சில படங்களைக்காட்டினார். காமராஜர் கையில் விருது வாங்கியிருக்கிறேன், ஜெயலலிதா பாராட்டினார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். இவர்களுக்கெல்லாம் பாவம் என்ன சம்பாத்தியம் இருக்கும்? இவர்கள் வீட்டிலெல்லாம் எத்தனை பேர் இருப்பார்கள், இது மட்டும்தான் இவர்களுக்குப் பிழைப்பா என்று நினைத்துவிட்டு, இருவருக்கும் என்னால் இயன்ற ஒரு சிறு தொகையைக் கையளித்தேன். அதற்கு முன் பானைக்காரரை இப்பானைகள் சுடப்படுகின்றனவா? அல்லது சும்மா வெறுமனே காட்சிக்காக பச்சைப் பானைகள் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டுத் திட்டு வாங்கினேன். நெருப்பு பத்த வைக்காம, சுடாம சோறு திங்க  முடியுமா? என்று ஏதோ சொல்லி திட்டினார். தொகையை அளிக்கும்போது கண்கள் மின்ன அதே சமயம் தயக்கத்துடனும்  வாங்கிக்கொண்டார். அதற்கு முன் தக்ஷின் சித்திராவுக்கு சுற்றுலா வரும்  யாரும் நின்று அவரிடம் பேசியதாவது இருப்பார்களா என்று தோன்றியது. ஒரு பானையை எடுத்துக்கொண்டு போகுமாறு கேட்டுக்கொண்டார், அதெல்லாம் வேண்டாம் வேற எடத்துக்கு போகனுங்க, போற வழில ஒடஞ்சி  கிடைஞ்சி போச்சுன்னா வம்பு என்று அதை எடுத்துக்கொண்டு போவதற்கு சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு மறுதலித்துவிட்டேன். இப்போதுதான் தோன்றுகிறது, அந்தப் பானையை எடுத்துக்கொண்டு செல்லாமல் அவரை அவமதித்ததாக உணர்கிறேன். இதுதான் ஒரு எழுத்தாளனுக்கு உள்ள மன நிலை என்று நினைக்கிறேன். அல்லது இம்மனநிலை உள்ளதனால்தான் எழுத நினைத்தேனா தெரியாது. எந்த விஷயத்திலும் முரட்டுத்தனமாக ஒரே கருத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கவும் தெரியாது, ஆனால் சிந்திக்க முடிகிறது

ஒரு காலத்தில் பானைகள் வனைவது, அலங்காரப்பைகள் முடைவது, ஓவியம் வரைவது, தோல்பாவைக்கூத்து என்பதெல்லாம் சமூகத்தில் தவிர்க்கமுடியாத அங்கங்கள். அதுபோன்ற கலைஞர்கள் இல்லாத சமூகம் ஒன்றைக் கற்பனை கூடச் செய்ய முடியாததாக ஒன்றாக இருந்திருக்கவேண்டும்.   

இன்றைய தமிழ் எழுத்தாளர்களும் தக்ஷின் சித்ராவில் பானை செய்பவர்கள் போல்தான். அவர்கள் சொல்லும் வகையில் பானைகள் சுட வேண்டும். இஷ்டத்துக்குச் சுட முடியாது. அவ்வாறு அவர்கள் இடத்துக்குச் சென்று சுடும்போது அதில் ஜிகினாக் காகிதங்கள் ஓட்டச் சொல்லலாம், பொருட்காட்சியின் கதவு திறக்கும் வரை வெளியில் காத்திருக்கவேண்டும். இதையெல்லாம் செய்தே ஆகவேண்டும் இல்லையென்றால் சோற்றுக்கு வழி? எழுத்தாளர்களும் அந்நிலையில்தான் இருக்கிறார்கள். சோற்றுக்குக் குட்டிக்கரணம் அடிக்கும் குரங்கு மாதிரி ஆட்டுவிக்கிறார்கள். நான் என்னைச்சொல்லவில்லை, நான் ஆட்டத்துக்கு வராமலேயே வெளியேறுவது பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் வருடக்கணக்கில் யாருக்காக எழுதுகிறோம் என்றே தெரியாமல் அரை நூற்றாண்டாக பிழைப்பை விட்டுவிட்டு, குடும்பத்தை விட்டுவிட்டு வந்து எழுதி உயிர்விட்டவர்கள்தான் அதிகம். ஏனென்றால் வாசித்தல் என்பது கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ள  ஒரு வாழ்க்கைமுறையாகிவிட்டது. அறுதிச் சிறுபான்மையாக எஞ்சியிருக்கும் வாசிப்பவர்களில் கூடக் கடும் வாசிப்பாளர்கள் பகுதிப் பேர் எழுத்தாளர்கள் ஆகிவிட்டனர். மிகுந்தவர்கள் பழைய 'இலக்கிய' நடையில் உள்ள பாசாங்குத்தனமான எழுத்துக்களை விரும்புகின்றனர். இலக்கிய ஒவ்வாமை உள்ளவர்கள் வரலாறு மற்றும் அரசியல் புத்தகங்களின் வாசிப்பில் திளைக்கின்றனர். இன்று வாசிப்பவர்களைக் காட்டிலும் எழுத முனைபவர்கள் அதிகமாகிவிட்டனர். வாசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் கையில் ஒரு புத்தகத்தை முன்னூறு ரூபாய் கொடுத்து வாங்கப் பொருளாதாரம் அனுமதிக்காத நிலையில் உள்ளனர். பணம் படைத்தவர்களுக்கு மனமில்லை. ஆயிரம் பேர் ஆளுக்கு ஒரு புத்தகம் எழுதினால், ஆயிரம் எழுத்தாளர்களுக்கும் சேர்த்து, நூறு புத்தகங்கள் விற்கின்றன. பதிப்பகங்களின் நிலையும் கிட்டத்தட்ட antiquity பொருட்களை விற்கும் கடைக்காரர்கள் போல் ஆகிவிட்டன. ஏதோ ஒரு கதை வாசிப்பு மற்றும் கேள்வி பதில் நேரத்தில் கேட்ட மாதிரி ஞாபகம். இத்தனை புத்தகங்கள் விற்றால்தான் குறைந்தது Break Even ஆவது ஆகும் என்ற ஒரு நிலையில் புத்தகங்களை யாராவது சில புரவலர்கள் புண்ணியத்தில் Premium விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த நிலையில் நாம் எழுதி, அதை வேறு பதிப்பித்து...

இப்படிப்பட்ட அவலநிலையிலிருக்கும் ஒரு உலகில் நியாயத்திற்கு நான் யாராக இருக்கவேண்டும்? ஒரு  நல்ல வாசகனாக இருக்கவேண்டும். அதிகப்பிரசங்கித்தனம்தான் நம் பிறவிக்குணமாயிற்றே? ஆனாலும் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதல்லவா? அது ஒன்றை மட்டும் ஒரு கல்லை எடுத்து நசுக்கியிருந்தால், என்றைக்கோ உருப்பட்டிருப்பேன்.  

என் ப்லாகில் இருப்பவற்றில் சிலவற்றை மறுபடியும் ரேண்டமாக எடுத்து வாசித்துப்பார்த்தால் பரவாயில்லை தேறும்போல்தான் இருக்கிறது என்று தோன்றியது. கிண்டிலில் புத்தகமெல்லாம் போடுவேனா என்று தெரியாது, செய்தேன். இதுவரை எண்பது பதிவுகள், அதில் ஒன்று தொகுதியாகத் தொகுக்கவும்பட்டு கிண்டிலுக்குச் சென்றது. ஒரு வகையில் பயிற்சி எழுத்து என்றும் சொல்லலாம். அதுவே என்னைப்பொறுத்தவரை ஒரு சாதனை. இடையில் சில நல்ல நட்புக்கள். பெரிய எழுத்தாளருடன் நேரடியாகப் பழகவும், சில உதவிகள் செய்யவும் வாய்ப்பு. அதன்மூலம் சில த்ரில் அனுபவங்கள்! வருங்காலத்தில் வாழ்க்கைப் பக்கத்திலிருந்து உருவிப் பார்ப்பதற்கென்று.

எழுதுவதற்கு எக்கச்சக்கமாக இருக்கிறது, இல்லாமல் இல்லை. அய்யன் கதைகளே இன்னும் நான்கு கதைகள் தலைக்குள் இருக்கின்றன. இதுவரை நான் தொடங்கியவையே மூன்றோ நான்கோ ப்ராஜெக்ட்டுகள் அவைகள் வேண்டுமானால் எந்தச் சந்தடியும் இல்லாமல் நத்தை வேகத்தில் முடிக்கப்பட்டு நேரடியாக கிண்டிலில் போடப்படலாம். பதினோரு மாதங்களாக  என்னை இம்மாதிரிச் சேட்டைகள் செய்ய அனுமதித்துப் பொறுத்துக்கொண்ட என் மனைவிக்கு  நன்றிகள். திடீரென்று எழுத ஆரம்பித்தேன், ஆரம்பிக்கும்போதே தெரியும் அதனால் பெரிய எதிர்பார்ப்புக்கள் என்னிடம் எனக்கே இருந்ததில்லை. திடீரென்று தொடங்கினேன். தீடீரென்று நிறுத்திக் கொள்ளவும் செய்கிறேன். தொடங்கியதற்கு ஏதேனும் காரணமிருக்கலாம். நிறுத்துவதற்கு? தெரியவில்லை.

மற்றபடி எழுத்து-வாசிப்புலகில் வேலைகள், பொறுப்புகள் மற்றும் பல வாழ்க்கைச் சிக்கல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து வாசித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும், பதிப்பித்துக்கொண்டும் மொழிபெயர்ப்பு போன்ற வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு பெரிய சல்யூட்.

Catch you on the rebound Or maybe not...

Comments

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

Jawan - An Inimitable Experience