காந்த்தாரா
கடந்த இரு வாரங்களில் அடுத்தடுத்து
வியக்கத்தக்க தற்செயல் சம்பவங்கள். அவைகளில் வெகு சுவாரஸ்யமான ஒன்று
பஞ்சுர்லி. எங்கள் கொங்கு மண்டல துணிச்சல்
எழுத்தாளர் வாமு. கோமு அவர்கள் நடத்தும்
நடுகல் இலக்கிய இதழில் வெளிவந்த கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. அதில் சத்தியப்பெருமாள் பாலுச்சாமி என்பவர் எழுதும் கட்டுரைகளும் கதைகளும் மரணக்காட்டு காட்டுகின்றன. ஆனால் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் வெளியே முகநூலில் வேறு ரூபம் காட்டுகிறார்.
அது அவரது சுதந்திரம், அதில் நான் தலையிடமுடியாது. சத்தியப்பெருமாள்
பாலுச்சாமி மற்றும் அவரது ஆக்கங்கள் பற்றித் தனியே ஒரு மதிப்புரை எழுதவேண்டும்.
அவை பிறகு.
சில மாதங்களுக்கு முன் வெளியான நடுகல் இதழில் முக்கியமான ஒரு கட்டுரை ஒன்றின் தலைப்பு அது. தலைப்பை வாசித்துவிட்டு ரொம்ப இலக்கிய இதழ்த்தனமாக இருக்கிறதே, ஏதாவது டச்சு இலக்கியத்திலிருந்து மொழி பெயர்த்த சிறு கதையின் தலைப்பாக இருக்கக்கூடும் என்று உள்ளே சென்று பார்த்தால், அற்புதம்! நான் மேற்சொன்ன தற்செயல் நிகழவிருக்கிறது என்று அப்போது தெரியவில்லை.
கான்ட்டாரா, கண்டாரா, கண்டார என்று ஆளாளுக்கு வாய்க்கு வந்தவிதமாக உச்சரிப்பதும், எழுதுவதுமாக பாராட்டுவதுமாக இருக்க, அட என்னதான்டா இது என்று தேடிப்பார்த்து, எழுத்துக்கூட்டி கன்னட லிபியில் வாசித்தால், அடக் காந்த்தாரா! காந்த்தாரா என்றால் அரபியில் பாலமாம். வடமொழியில் பிறப்பு மற்றும் இறப்பின் முடிவிலா சுழற்சியாம். கன்னடத்தில் அடர்ந்த காடு என்று பொருளாம்.
இங்கு நடுகல் இதழ் கட்டுரையில், பெயரின் வேர்ச்சொல் எப்படியெல்லாம் தமிழிலிருந்து மருவி இறுதியில் துளுவில் பஞ்சுர்லி என்று மாறியது என்று சத்தியப்பெருமாள் பாலுச்சாமி எட்டிமாலஜி ஆராய்ச்சி வேறு முயற்சித்திருந்தார். சரியாக நான் இக்கட்டுரையை வாசித்துமுடித்து பஞ்சுர்லி மற்றும் அதன் கலாச்சாரப் பின்புலத்தைத் தெரிந்துகொள்வதற்கும், காந்த்தாரா படத்தின் விமர்சனத்தை வாசிப்பதற்கும் சரியாக இருந்தது. அவ்வளவுதான் படம் பார்க்கத் தயாராகிவிட்டேன். இதுதான் வாசிப்பதில் உள்ள நன்மை என்று தெரியவைத்தது ச. பெ. பா வின் கட்டுரை. ஏனென்றால் அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தவனுக்கு, ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று நல்கிய அனுகூலம் எவ்வளவு உவப்பாக இருக்கிறது?
இங்கு AMC என்று ஒரு தியேட்டர் நெட்ஒர்க் இருக்கிறது. சீட்டுக்கள் சொகுசாக இருக்கும் ஆனால் சவுண்டு சொம்பை மாதிரி இருக்கும், திரைகள் சிறிதாக இருக்கும். Milford 16 என்று ஒன்று இருக்கிறது, போக வர நாற்பது மைல்கள். XD சவுண்டு சில்லு எழுப்பும், முக்கியமாக இந்தியப்படங்களுக்கு இண்டெர்வெல் விடுவார்கள். ஆனால் சீட்டு அடாசு. யாரோ ஒருவர் நம்மூரில் அரசுப்பேருந்தில் முன் சீட் பெண்களிடம் காலை விட்டு நோண்டுவது போல் இடைவேளை வரை என் 'ஸீட்' ஐத் தேய்த்துக்கொண்டே இருந்தார்கள். இடைவேளையில் ஒரு ட்விஸ்ட், பின் ஸீட் பெண் மொபைலை என் காலுக்கடியில் போட்டுவிட்டு அதை எடுக்கும் முயற்சியில் இடைவேளை வரை என் சூத்தில் எட்டி எட்டி உதைத்துக்கொண்டிருந்திருக்கிறது. இதுவே AMC யாக இருந்திருந்தால், என் 'ஸீட்'டில் கடப்பாரையையே விட்டுக் குத்தியிருந்தாலும் தெரிந்திருக்காது. அந்தளவு திக்ஸ்கின்ட் அவை.
பேசாமல் நம்மூரில் கூப்பிடுவது போல் "ஸ்ஸ்...ப்ரோ அந்த ஃபோன எடுத்துகுடுங்க ப்ரோ" என்றிருந்தால் மேட்டர் ஓவர். நாம் பாட்டுக்கு சிவனே என்றோ நாராயணா என்றோ சூத்தைப் பொத்திக்கொண்டு யார் வம்புக்கும் போகாமல் நம் வேலையைப் பார்த்துக்கொண்டு போனாலும் நம் ஸீட்டை நோண்டுவதில் அத்தனை ஆர்வம் சிலருக்கு.
என் வாழ்க்கையில் உயிரே போனாலும் நான் கன்னடப்படத்தை மட்டும் பார்க்கவே மாட்டேன் என்ற என் சங்கல்பத்தை மாற்றியது ராஜ். பி ஷெட்டி. எங்கள் தலைவர் ப்லாகில் எழுதியதைப் படித்துவிட்டு, கருட கமனா ரிஷப வாஹனா பார்க்கலாம் என்று நெட்ஃப்ளிக்சிலும் அமேஸானிலும் தேடி, படம் கிடைக்காமல், வாழ்க்கையில் முதல் முதலாக நான் பார்த்த முழு நீளக் கன்னடப்படம், ஒந்து மொட்டைய கதே. அடுத்த சில நாட்களுக்குள் எப்படியோ கருட கமனா.
அப்படத்தைப் பார்த்த கையோடு, தலைவருக்கு காட்டமாக ஒரு கடிதம் எழுதினேன். இது உண்மையில் கன்னடப்படமே அல்ல, இது ஒரு துளு படம். கன்னடத்தின் தோளில் ஏறிப்பயணிக்கிறது அவ்வளவுதான் என்று. ஏனென்றால் அவர் இது கன்னடப்படத்தின் பெரும் பாய்ச்சல் என்று எழுதியிருந்தார். துளுவில் வெளியிட்டால், துளுநாட்டைத் தாண்டி பார்வையாளர்கள் கிடைப்பது கடினம் அதனால் கன்னடவழி துளு நாட்டின் கலாச்சாரம் தாங்கிய படங்கள் வருகின்றன என்பது என் கட்சி.
எது எப்படியோ, இதோ இப்போது காந்த்தாரா. இந்த ராஜ் பி ஷெட்டியும் ரிஷப் ஷெட்டியும் அடங்க மாட்டார்கள் போலிருக்கிறது. அநியாயம் செய்கிறார்கள். க. க. ரி. வாவில் மங்களூரு நகரம் என்றால், இங்கு துளுநாட்டில் எங்கோ உள்ள காட்டுப்பகுதி. கதை என்று பார்த்தால், எளியவர்களை வலியவன் அமுக்குவது. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் போர், அதிகார வர்க்கத்துக்கும் பூமி புத்திரர்களும் நடக்கும் யுத்தம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
அதே கதை. மசாலாதான், கமர்ஷியல்தான். பேராசை, வன்மம், சதி, திகில், கிராமத்துக் காதல் எந்தப்பூச்சும் இல்லாமல் அப்படியே ராவாக!, மண்ணாசை, சாதி வெறி. எல்லாமும் அதே அதே. ஆனால் அதை ஒரு பொதிச்சலில் கட்டியிருக்கிறார்கள் பாருங்கள்! ரிஷப் ஷெட்டி அங்கு க. க. ரி. வாவில் நடிப்பில் அடக்கி வாசித்து அண்டர் ப்ளே செய்திருப்பார். அதில் இவரது சகா ராஜ்.பி ஷெட்டி அதகளம் செய்தது மாதிரி எழுநூறு மடங்கு எட்டி அடித்திருக்கிறார். நாட்டார்கதையையும் சமகாலக்கதையையும், மண்ணின் மணத்தையும், கலாச்சாரத்தையும், கம்பளாவையும், பஞ்சுர்லி என்னும் துளுநாட்டு நாட்டார் தெய்வத்தையும், 'பூத கொல' வையும், செண்டையையும், நடுநிசி மங்களூர்க் காடுகளையும், நீர் வீழ்ச்சியையும், பாக்கு மட்டையில் மட்ட அரிசிச் சோறும், மீன் சாறும் என்று அரை லிட்டர் பட்டச் சாராயத்துடன் தலை வாழை இலையில் விருந்து வைத்து ரசித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
காட்சிக்குக் காட்சி, ப்ரேமுக்குப் ப்ரேம் ரிஷப் ஷெட்டி ஸ்க்ரீனில் இல்லாத நேரத்திலும் இருப்பை உணரவைக்கிறார். கால இயந்திரத்தில் ஏறி அப்படியே 90 களுக்குக்கூட்டிச் சென்று, இரண்டரை மணி நேரங்கள் மறக்கடித்து அனுப்புகிறார்.
படத்தில் எந்த இடத்திலும் வழவழ கொழ கொழவென இழுத்துக்கொண்டிருப்பதில்லை. எல்லாமே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு, அதிரடி, சரவெடி, அப்படியே 90களின் மைனர்கள் கிராமத்தில் செய்யும் அத்தனை சேட்டைகளையும் செய்கிறார். தாயின் வகுப்புத்தோழன்தான் முக்கியமான மைனர் பார்ட்னர், ஷேக்காளி, காதலியை எடுத்த எடுப்பில் இடுப்பில் கிள்ளி வம்பிழுத்து கரக்ட் பண்ணுகிறார், எலும்புத்துண்டு போடும் முதலாளியுடன் சரிசமமாக சரக்கடிக்கிறார், அவர் நள்ளிரவில் தோட்டத்திற்கு சென்று "நீர் பாய்ச்சிக்" கொண்டிருக்கும்போது எந்தச் சுளிப்பும் இல்லாமல் விளக்கு பிடித்துக் கொண்டு காத்திருக்கிறார். புதிதாக வந்து கெடுபிடி காட்டும் வனத்துறை அதிகாரியை அப்பாவித்தனம் கலந்த ஆச்சர்யக்கோபத்துடன், நம்பவே முடியாத, ஏற்றுக்கொள்ளவே இயலாத வியப்புடன் அலட்சியத்துடன் மோதுகிறார். அவர் சிகை, பல், பாடி லாங்குவேஜ் என்று ஒவ்வொன்றும் நடிக்கின்றன. வசனங்கள் குந்தாபுரா டயலக்டில் இருப்பதால் விளங்கிக்கொள்வது கொஞ்சம் கடினம். அப்பகுதி கன்னடம் சாதாரணமாகவே துளு மாதிரி இருக்கும். பேசப்படுவது துளுவா கன்னடமா என்று பல இடங்களில் குழம்பும். படம் போகும் சுவாரஸ்யத்துக்கு காதுகள் தானாகக் கூர்மையாகி கிரகித்துக் கொள்ளத் தொடங்கிவிடுகின்றன. கிஷோர் மட்டும் கதைப்படி வேறு இடத்திலிருந்து மாற்றலாகி புதிதாக வருகிறார். மைசூரு கன்னடம் பேசுகிறார். அது மட்டும் மெனக்கெடல் இல்லாமல் இலகுவாகப் புரிகிறது. க்ரே ஷேட் அருமையாகக் காட்டுகிறார். இருவர் மோதுமிடங்களில் லேசாக ஐயப்பனும் கோஷியும் ரெஃபரன்ஸ் கொடுத்து ரகளை பண்ணுகிறார் இசை இயக்குனர்.
நேட்டிவிட்டி நேட்டிவிட்டி நேட்டிவிட்டி 100% நேட்டிவிட்டி ஆனால் பிரம்மாண்டம். படத்தின் கலர் க்ரேடிங்கும், திமிரிசையும் இது வரை இந்திய சினிமாவில் யாரும் காண்பிக்காதவை. ஒரு புறம் பின்னணி இசை பித்துப்பிடிக்க வைக்கிறதென்றால், 'சிங்கார சிரியே' என்னும் பாடலில் உள்ள பீட்டுகள் அப்படியே சிந்தாமல் சிதறாமல் தொன்னூறுகளில் கொண்டு சேர்த்து, நாஸ்டால்ஜியா பைத்தியங்களுக்கு நெய்யொழுக வாயில் அல்வாவைத் திகட்டத் திகட்ட ஊட்டியிருக்கிறது. வராக ரூபம் என்னும் பாடலில் மெட்டலையும் கர்னாடிக்கையும் ஃபியூஷன் போட்டு இசைக்கலவரம் செய்திருக்கிறார் பி. அஜ்னீஷ் லோகந்த் என்பவர். ஸார், இதெல்லாம் வேற்று கிரஹ கிரியேட்டிவிட்டி ஸார். அந்த இரண்டு பாடல்களுக்கான இணைப்பையும் இங்கு கொடுத்திருக்கிறேன். இனி ஒரு மாதத்திற்கு இவைகள்தான் எனக்கு. ஹெட்ஸெட்ஸோ அல்லது நல்லதொரு இசை கேட்பு உபகாரணமோ இல்லாமல் இருந்தால் தயவு செய்து இவைகளைக் கேட்பதைத் தள்ளிப்போடுங்கள்.
குருவாவை யார் போட்டனர் என்பதை சில்லம் அடித்துக்கொண்டே அனுமானம் செய்யும் இடத்தில், எபிக் மாதிரி எடுத்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. எப்டிங்க யோசிச்சீங்க? எப்படி எடுத்தீங்க? அதர்மத் தலைவரின் அள்ளக்கை ஒருவர், குடித்துவிட்டுப் பேசும் குடிப்பேச்சு உலகத்திலேயே இம்மாதிரி ரியல் குடி நடிப்பைப் பார்த்தது கிடையாது. அல்லது அவர் நிஜமாகவே அந்த இரு காட்சிகளிலும் ஃபுல் டைட்டாக இருந்திருக்கவேண்டும்.
கடைசியில் அதர்மமும் தர்மமும் மோதிக்கொள்ளும் இடத்தில் பழைய படங்களில் வில்லன்
கேங்குடன் ஹீரோ கேங் மோதும்போது, லூஸ் மோகன், ஓமக்குச்சி
நரசிம்மன் போன்றவர்கள் காமெடி ஃபைட் போடுவதுபோல் சில ஷாட்டுகள் எடுத்திருப்பார்கள்,
அது பரவாயில்லை கொஞ்ச நேரமே வருவதால்
இம்மாதிரி வெகு சில நெளியும்
இடங்களைப் பொறுத்துக்கொள்ளலாம். ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு கமர்ஷியல் ஃபிளிக்.
எப்படிப்பார்த்தாலும் ஒரு புது தர
நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதைப் பாராட்டியே தீரவேண்டும்.
உச்சகட்டக் காட்சி பத்து நிமிடங்கள் நீள்கின்றன! ரிஷப், சந்தேகமே இல்லாமல் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் நீங்கள்தான். ரோமக்கால்கள் குத்திட்டு தண்டுவடம் ஜில்லிடும் நடிப்பு. இது நடிப்பாக இருக்க வாய்ப்பே இல்லை. அந்த ஒரு நொடி நான் துளு நாட்டைச் சேர்ந்தவனாக உணர்ந்தேன். ராயல் சல்யூட்! எண்ட் க்ரெடிட் வருவதற்கு முன் வராக ரூபம் பாடல் வரும்போது பூத கொலா வேடம் தரித்து முகம் முழுதும் வர்ணம் பூசி, அதையும் மீறி அக்கண்களில் நீ காட்டும் சாந்த சொரூபம் இருக்கிறதே?! சல்யூட் சல்யூட் சல்யூட் சல்யூட் சல்யூட்!!!!!!
இம்மாதிரி ஒரு கமர்ஷியல் படத்திற்கு இதற்கு முன் ஆஸ்கர் கொடுக்கப்பட்டிருக்கிறதா?
Comments
Post a Comment