பைபோலார் ஒரு சாபக்கேடு
"மனநலமும் இன்றைய சவால்களும்" இன் #8 ம் பகுதி
சென்ற பகுதியில் நான் எழுதிய வசை வார்த்தைகள் மிகக்குறைவு. அவைகளெல்லாம் வெறும் மாதிரிகள் மட்டுமே. அதைவிடக் கடும் வசைகளையும் மனம் மற்றும் உடல் ரீதியிலான சித்தரவதைகளை உடனிருந்து அனுபவிக்கும் குடும்பத்தினர் பலரை நான் பார்த்திருக்கிறேன். நோயாளியின் வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன். சூழ்நிலையைப் பொறுத்து, இடங்களைப் பொறுத்து, கிராமம், நகரம், குக்கிராமம், பெருநகரம் மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் Bipolar Disorder நோயின் தீவிரத்தைப் பொறுத்து வார்த்தைகளோ அல்லது அது வெளிப்படும் விதங்களோ மாறுபடும். Bipolar இல் Maniac மற்றும் Depression என்று மாறி மாறி வரும் என்று தொடரின் ஆரம்பத்திலேயே பார்த்தோம். ஆனால் அறுதியிட்டுக் கூறவியலாத கால அளவில் இரண்டுமே நீடிக்கும். பலர் பெரும்பாலும் Maniac இலும், வெகு குறைந்த காலம் Depression இலும் என்றோ அல்லது அதற்கு நேர்மாறாக பெரும்பாலும் Depression இல் மட்டுமே உழன்றுகொண்டிருக்கும் ஆட்கள் கூட உண்டு. இதில் இரண்டாம் பிரிவினருக்கு திடீரென்று உற்சாகம் தொற்றிக்கொண்டு, மளமளவென வேலைகள் செய்வர். திடீரென்று நடுநிசியில் எழுந்துகொண்டு, வீட்டைத்துடைத்து சுத்தம் செய்துவிட்டு, குளித்துவிட்டு தேவாரம் திருவாசகமெல்லாம் பாடுவர். இன்றிலிருந்து நான் மாறிவிட்டேன், இனி வாழ்வில் எல்லாம் சுகமே என்பர்.
"எண்ணி ஆறே மாசத்துல பணக்காரன் ஆகறேன் பாரு. அடையார்ல ஒரு ஃபிளாட், கோயமுத்தூருல அவுட்ஸ்கிர்ட்ல நாலு ஏக்கரா நெலம், அம்பது பவுன் தங்கம், பேங்குல பத்துகோடி பணம். எழுதி வச்சிக்க, செஞ்சு காமிக்கறனா இல்லியா பாரு."
என்று சொல்லிக்கொண்டிருந்துவிட்டு, அடுத்த ஒரே வாரத்தில் வேலை பார்க்குமிடத்தில் சண்டை போட்டுகொண்டு வேலையை விட்டுவிடுவர்.
ஒரு வேளை பிசினஸ் செய்துகொண்டிருந்தால், ஒழுங்காகப் போய்க்கொண்டிருக்கும் பிஸினஸை சர்வநாசம் செய்வர். இவர்களெல்லாம் பெரும்பாலும் சுயம்புவாய் தொழில் கற்றுக்கொண்டு முன்னேறியவர்களாக இல்லாமல், பரம்பரை பரம்பரையாக சுயதொழில் புரியும் குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருப்பர். நகைநட்டு, நிலம்நீச்சு என்று ஏதாவது இருந்தால் அதை அடமானம் வைத்துக் கடன் வாங்கி, எவனாவது சதுரங்கவேட்டைக்காரனிடம் போய் மொத்தமாக ஏமாந்துவிட்டு உடனிருப்பவர்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து நிறுத்துவர்.
"ஐயோ இவனை வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரிலியே, இவன உட்டுடுப் போகவும் மனசே இல்ல, பாவமா இருக்கு, ஏன் இப்புடியெல்லாம் பண்றான்னு தெரிலியே. ஆத்தா, ஏதாவது அற்புதம் பண்ணு, உனக்காக காசு முடிஞ்சு வெச்சுருக்கேன். எப்புடியாவது இவுனுக்கு புத்தி குடு, இவம்மனச மாத்து, திருத்து. உன்னைய வேண்டாத நாளே இல்ல, நீதான் கண்ணத் தொறக்கணும்"
ம்ம்ஹூம் எதற்கும் பலன் இருக்காது.
நாம் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டு எதையுமே உணராமல், முட்டாள்களாக இருந்துகொண்டு எல்லாவற்றையும் தெய்வத்தின் தலைமேல் போட்டால், தெய்வம் என்ன செய்யும்?
"நீ மொதோ கண்ணத்தொற நாயே. அறிவில்ல? இத்தனை வருஷமா தொடர்ந்து நடக்குது உனக்கு புத்தியில்ல? புரியல? இங்க ஏதோ ஒன்னு தப்பா நடக்குதுன்னு புரியல? நீ மொதோ ஒரு அடி எடுத்து வச்சா, நான் முப்பத்திரண்டு அடி எடுத்து வைப்பேன்"
என்று சொல்லுமா சொல்லாதா?
பல வீடுகளில் அனுதினமும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று கொலை மிரட்டல், அல்லது தனியாகத் தற்கொலை மிரட்டல், நள்ளிரவில் வீட்டை விட்டு ஓடிப்போதல், வேறு யாரோ ஒருவன் அல்லது ஒருத்தி செய்த பிழைக்குப் பிணையாக ஒரு மாத நிம்மதியை வீட்டில் உள்ளோரிடம் காணிக்கையாகக் கோரல், எவர் சொல்லுக்கும் கட்டுப்படாமை, எகிறி எகிறி அடிதடி, அடங்க மறுத்து உச்ச ஸ்தாயில் கூச்சல், மற்றும் அச்சில் ஏற்ற முடியாத வித விதமான கெட்ட வார்த்தைகள். சமாதானமாக எது சொல்லவந்தாலும், அதிலிருந்து ஒரு பொறியைப்பிடித்துக்கொண்டு அங்கிருந்து புதிது புதிதாகப் பல இழைகளைத் தொடங்கி புராணக்கதைகளில் வருவது போல் முடிவற்ற சண்டை சண்டை சண்டை, அழுகை அழுகை அழுகை அழுகை, நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம் நரகம். நிம்மதி என்றால் என்ன என்று கேட்டு ஏங்க வைக்கும் உடனிருப்பவர்களை.
யாராவது அறிவுரை சொல்லவந்தால், முடிந்தது கதை.
"நீ சாவுடா நாயே, கட்டுன பொண்டாட்டிய அடக்கி வெக்ய வக்கில்ல, எனக்கு புத்திமதி சொல்ல வந்துட்ட?"
அதிலிருந்து இவளுடைய எதிரிப்பட்டியலில் மேற்படி அறிவுரை ஆசாமி சேர்வதெல்லாம் சரி, ஆனால் அந்தக்கணத்திலிருந்து அந்தக்குடும்பமே இவர்கள் எவருடனும் முகம் கொடுத்துப்பேசாது, ஒதுக்க ஆரம்பிக்கும். அவர்களுக்கு என்ன மயிரா தெரியும் Bipolar Maniac பற்றி?
அட உடனிருப்பவர்களே லூசுத்தனமாக, மெண்டல் பிரச்சனையெல்லாம் ஒரு மயிறுமில்ல ஒடம்பு பூரா வெஷம், வன்மம், கொழுப்பு, திமிரு என்றே கு. கூ தனமாகப் பேசிக்கொண்டிருப்பர். உண்மையில் பலர், பிரச்சனை தெரிந்தும், சம்பந்தப்பட்ட நபர் எப்படியாவது இயற்கையாக மண்டையைபோட்டால் போதும், நான்கு நாட்கள் அழுதுவிட்டு, கருமாதி செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்னும் மனநிலைமைக்கு வந்துவிடுவர்.
எதற்கெடுத்தாலும், எப்போது ஃபோன் செய்தாலும் -
"இப்ப கொஞ்சம் நெலம செரில, தப்பா நெனெச்சுக்காதீங்க, அப்பறம் பேசறேன்" என்று பயந்து பம்மி நழுவுவர்.
உடனிருப்பவர்களுக்கு தெனாலி கமலை விட அதிக பயங்கள் பிடித்து ஆட்டும். சிரிக்க பயம், அழ பயம், யாருடனாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஆளின் அல்லது அதே பெயர்போல் ஒலிக்கும் இன்னோர் ஆசாமியின் பெயரைச்சொல்ல பயம். ஏனென்றால், எதிரிப்பட்டியலில் உள்ள ஆளின் பெயரைச்சொல்லிவிட்டால், அதை சம்பந்தப்பட்ட நபர் கேட்க நேரிட்டால், அடுத்த ஒரு வாரத்துக்கு உயிரோடிருக்கும்போதே தர்ப்பணம் செய்து பிண்டம் வைக்கப்படும்.
ஆண்களில் டிப்ரெஷன் என்பது புறவயமான வெளிப்பாடாகவும் பெண்களில் அது மிகவும் அகமையமாகவும் இருக்கும் என்று பார்த்தோம். ஆனால் Bipolar Disorder இல், ஆண்களில் பெண்களில் என்று இரு பாலருமே புறவயமாகவே வெளிப்படுத்துவர். நோயின் தீவிரத்தன்மையைப்பொறுத்து அது எந்தளவு வெளிப்படுமென்பதும், யாரிடம் வெளிப்படுத்துவர் என்பதும் மாறுபடுமென்றாலும், புறவய வெளிப்பாடு என்பது தின்னம்.
இந்த மொத்தத் தொடரே, மனநோய்களின் வெளிப்பாடு (manifestation), அவைகளின் உட்கூறுகள், நோய்வாய்ப்பட்டிருப்பவரின் சில பாங்குகள், மற்றும் மனநோயின் பொதுவான வெளிக்கூறுககளைப்பற்றியும் ஒரு துரிதப் பரிட்சயத்தை ஏற்படுத்துவதற்கேயாகும்.
மேற்கத்திய நாடுகளில் எந்த ஒரு உடல் அல்லது மனரீதியான குறைபாடுகளைக்கண்டும் எவரும் நடுங்கி ஒடுங்கிவிடுவதில்லை, அங்கு சமூகத்தில் பெரும்பாலும் அவைகளுக்கான எந்த எதிர்வினையுமற்ற ஏற்பு உண்டு. தற்காப்புக்கலை, இசை, நடனம், உடற்பயிற்சி என்று எந்தப் பயிற்சி வகுப்புக்குச் சென்றாலும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட அல்லது வேறேதோ விதத்தில் சவாலுக்குட்பட்ட குழந்தைகளைப் பார்க்க முடிகிறது. கை, கால் என்று எதிலும் உணர்ச்சியே இல்லாமல் சொந்தமாக ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஐந்து நிமிடங்கள், வாய் பேசாது, ஓரிரு சப்தங்கள் மட்டும் தொண்டையிலிருந்து வெளிப்படும், கண்களால் சில சைகைகள், உடலில் உயிர் மட்டும் இருக்கும், பத்தடி நகர ஒரு மணிநேரம், இங்கு நடக்கும் அனைத்து சமூக நிகழ்வுகளிலும் இம்மாதிரி குறைந்தது நான்கைந்து குழந்தைகளை அல்லது இளைஞர்களை அல்லது இளைஞிகளை இங்கு வெகு இயல்பாகக் காணமுடியும். சற்கரநாற்காலிதான் உலகம். சார்ந்தவர்கள் ஒரு முகச்சுளிப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, இவர்களை அரவணைத்துச் செல்கிறார்கள். பெரிய அளவில் வசதியோ வருமானமோ இல்லாதவரும் கூடக் கைவிடுவதில்லை, சிறப்புக் குழந்தைகளையோ, மன நலக்குறைபாடுள்ளவரையோ முன்னிட்டு சமூகத்தை யாரும் சபிப்பதில்லை. பிச்சையெடுப்பதில்லை. அரசாங்கமும் ஓரளவு உதவி புரிகிறது. தன்னை வருத்திக்கொண்டு உழைக்கிறார்கள், உள்ளதை, வருவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். நமக்கு விதிக்கப்பட்டது இவ்வளவுதான் என்று நினைத்து ஒடுங்கிவிடுவதில்லை, ஒரு சவாலாக அவைகளை எந்த முகச்சுளிப்போ, அலுப்போ இல்லாமல் எதிர்கொள்கிறார்கள் . சமூகம் என்ன நினைக்கும், என்ன சொல்லும் அல்லது அப்படி ஒரு கோணமிருக்கிறது என்றே தெரியாதது மாதிரி வாழ்கிறார்கள். இவர்களுக்கு Purpose of life என்கிற ஒரு கருத்துப்படிவத்தை ஏதோ ஒரு விதத்தில் மெதுமெதுவாக விதைத்துவிடுகிறார்கள். ஆச்சர்யிக்கத்தக்க வகையில், அது எங்கனம் எப்படி விதைக்கப்படுகிறது, எவ்வாறு, எப்போது பயிற்றுவிக்கப்படுகிறது என்றே நம்மால் அதை விளங்கிக்கொள்ளவியலவில்லை.
இந்தியர்கள் போல் யாரும் சுயநலமாகச் சிந்திப்பதில்லை. அதற்காகப் பொதுநலம் என்கிற பெயரில் வெறுமனே சமூக வலைத்தளங்களில் வந்து அரை 'Shiba Inu' கூடப் பெறாத கருத்தைக் கக்கிவிட்டுச் செல்வதில்லை. அத்தனை ஆன்மீகமும், கலாச்சாரங்களையும், தத்துவங்களையும், மதிப்பீடுகளையும், ஞானிகளையும் அவதார புருஷர்களையும் கொண்டுள்ள, எதிர்க் கருத்தியல்களையும் அரவணைத்துச் செல்கிற திறன்களை ஒரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நம் தேசத்தில், இன்று ஒரு தனி மனிதன் தன் சக மனிதனை எவ்வாறு மதிக்கிறான்?
ஒரு பேருந்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் ஏறுவாரானால், அவரை கண்களில் எந்தச்சலனமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது. இறங்கி உதவுபவரை "ஸீன் போடறான்" என்று கொஞ்சமும் கூச்சநாச்சமே இல்லாமல் விமர்சிக்க முடிகிறது. ரயிலில் பிச்சையெடுக்கும் கண் தெரியாத நபரைக் காணும் நம்மால் -
"கண்ணுதான இல்ல, கையும் காலும் நல்லாத்தான இருக்கு, எதுக்கு பிச்ச எடுக்கற?" என்று கேட்காமல் இருக்கத்தெரியவில்லை.
கால்கள் இழந்தவரையும், கைகள் இல்லாதவரையும் திருடினான் என்று கட்டிவைத்துச் சித்திரவதை செய்கின்ற, காதலிக்கவில்லை என்று கழுத்தை அறுத்துக் கொலை செய்கிற, முகத்தில் அமிலத்தை வீசியடிக்கும் தனி நபர்களாக இருக்கிறோம்.
எந்நேரமும் மனதுக்குள் சதித்திட்டம் தீட்டுகிறோம், சிறு சிறு விஷயங்களில் கூட சூழ்ச்சிக்கோட்பாடு ரீதியாகச் சிந்திக்கிறோம். மற்றவர்களுடன் எப்போதுமே ஒரு கணக்கீட்டுடனேயே பழகுகிறோம். ஆதாயமில்லாதோருடன் பழகுவதையே தவிர்க்கிறோம். உலகிலுள்ள எல்லா சில்லறைத்தனங்களையும் நம்மிடம் வைத்துக்கொண்டு, நாக்கு மீது பல்லைப்போட்டு மற்றவரைப் பேசுகிறோம், பழிக்கிறோம்.
இப்படி இருக்கும் கேடுகெட்ட ஒரு உலகில், பைபோலார் போன்ற சிக்கலான ஒரு மன நோய் பற்றிய புரிதலா வரும்?
Bipolar என்பதெல்லாம் இங்கு சர்வ சாதாரணம். சம்பந்தப்பட்டவரே அதைப் புரிந்துகொண்டு, அதை வென்றெடுக்க முடியாது ஆனால் அது இருப்பதே தெரியாமல், அதனுடன் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாழப் பழகிக்கொள்ளலாம் என்று தெரிந்துகொண்டு சமூக நீரோட்டத்துடன் சுமுகமாகக் கலந்துவிடுகின்றனர். அதையும் தாண்டி சில முற்றிய கேஸ்கள், துப்பாக்கியை எடுத்துக் கொண்டு பள்ளியில் சென்று சுடுகின்றன, அவைகளைப் பற்றி இங்கு பேசவில்லை, என்றால் பைபோலார்கள் அதெல்லாம் செய்யாது, பைபோலார்கள் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் கைமா போட்டு ரசிக்கும் பேய்.
மேற்குலக பைபோலார், சாதாரண கண்ணாடி, நெட்டைச்செருப்பு போட்டுக்கொண்டு, அதை எதிர்கொள்ளும் ஆற்றலையும் பயிற்சியின்மூலம் பெறுகிறது.
மேற்குலகில் உலகின் எவ்விதமான அங்கஹீனங்கள் இருந்தாலும், வாயே பேசமுடியாமல் வாழ்க்கை முழுதும் சற்கர நாற்காலி வைத்துக்கொண்டு, The Brief History Of Time எழுதுகிறது.
மேற்குலகில் Paul Alexander என்னும் ஆள், நுரையீரல் என்னும் உறுப்பே இல்லாமல், மூச்சுவிடமுடியாமல், இரும்பால் செய்யப்பட்ட வென்டிலேட்டருள் சென்று படுத்துக்கொண்டு அதற்குள் மூச்சுவிடக்கற்றுக்கொண்டு, 70 வருடங்கள் வாயில் பிரெஷை வைத்துக்கொண்டு ஓவியங்கள் வரைந்தான். தன் சுய சரிதையைத் தானே வாயில் Stylus வைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் தட்டச்சு செய்தான். கீழே உள்ள வீடியோவை தயவு செய்து க்ளிக் செய்து பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=xowUq7JgFeQ&t=3s
இதே அலெக்சாண்டர் இங்கு பிறந்திருந்தால், கல்லால் அடித்துக் கொன்றிருப்பார்கள், அல்லது தூற்றியே கொன்றிருப்பார்கள்.
ரேப் விக்டிமையே குடும்ப கவுரவம் கருதித் தூக்கில் தொங்கவிடும் சமூகம் நம் சமூகம், காசுக்காக நரபலி கொடுக்கும் சமூகம், கூன், குருடு, செவிடு, நொண்டி, ஏழை, சாதி என்று எதை முன்னிட்டும் அவமானம் செய்து மகிழும் சமூகம். குருட்டு அதிர்ஷ்ட்டம் தருகிறது, கோ இன்சிடென்ட்டலாக ஏதோ நன்மை ஏற்படுகிறது என்று போலி பாபாக்களை ஏற்றுக்கொண்டு, சுயலாபத்துக்காக அத்தகைய பாபாக்களை, போலிகளைக் கண்களை மூடிக்கொண்டு நம்பும் சமூகம், நேர்மையின் பக்கம், உண்மையின் பக்கம் நிற்காத சமூகம், Bipolar-ஐ யா எளிதில் ஏற்றுக்கொள்ளும்?
மேற்குலகில் பைபோலார் என்பது சாதாரண சளிக்காய்ச்சல் என்றால், கிழக்குலகில் பைபோலார் என்பது பேய். பெரும்பேய், பரம்பரையையே அழிக்கும் பேய். அதுவுமே கூட அப்படி ஒன்று இருக்கிறது என்று ஓரளவு புரிந்துகொள்ள முடிபவர்களுக்கு. மற்றவர்களுக்கு?
அப்படி ஒன்று இருக்கிறது என்பதே தெரியாதவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தொடரின் இப்பகுதியில் போதுமான அளவு எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
இதைப்பற்றி எழுதுவதற்கு வேறு ஏதாவது இருக்கிறதா? Light at the end of tunnel என்பதை நான் நம்புகிறேன். நீங்கள் நம்புகிறீர்களா?
(தொடரும்)
Comments
Post a Comment