நடுகல் இதழ் 15

து நடுகல் இதழ் 15 பற்றிய மதிப்புரையோ விமர்சனமோ அல்ல. அதை  வாசித்த வாசகனின் வெகு சுருக்கமான வாசிப்பனுபவம் அவ்வளவே.   இதழ் 15 என் கைகளுக்குக் கிட்டியும் வாசிக்காமல் நீண்டநாட்கள் ஆறப்போடப்பட்டுவிட்டது. இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. தலையங்கத்திலிருந்து வாசிக்கத்தொடங்கி, பிழை திருத்தும் வேலை ஆசிரியர் வா.மு. கோமுவின் தலையில் வந்து விடிவது, இன்பாக்ஸ்களில் துண்டு துக்கடா கவிதைக் குதறல்கள் போன்றவற்றை வாசிக்க நேர்ந்தபோது, இந்த மனிதரின் இதழ் வெளியீட்டில் உள்ள ஈடுபாடு கண்டு பிரமித்தேன். தலையங்கத்துக்கு அடுத்து வந்த அனைத்துமே  சரசரவென்று கடந்து போயின. எழுத்துப்பிழைகள், குறை கவிதைகள் பற்றிய அங்கலாய்ப்பு ஏற்படுத்திய சுவாரசியம் தவிர வேறு எதுவும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.

வாஸ்தோவின் நீண்ட தலைப்பிட்ட கதை ஒன்று முதல்வனே, வனே என்ற பழைய கம்பியூட்டர் கிராபிக்ஸ் பாடல் ஒன்றை நினைவுபடுத்தியது. நல்ல ஒரு சிற்றிலக்கிய இதழுக்கு உகந்த தலைப்புதான். ஆனால் தலைப்பே எழுத்துப்பிழையுடன் 'தொப்பூள்' என்று தொடங்கி ஆச்சர்யம் அளிக்கிறது  (ஒருவேளை ஏதாவது 'குறி' யீடாக இருக்குமோ?!)

"வெளிச்சத்தில் நிற்பவர்கள்தான் வேடதாரிகள். நான் இருளில் வாழ்பவன்" - என்னும் நனவோடைச் சொற்றொடர், ஒரு காவியத்தன்மையுடன் கூடிய வார் டிராமா படங்களில் வரும் வசனம் போல் ஈர்த்தது.

சுஜித் லெனின் எழுத்துக்கும் அதிலுள்ள நுண்தன்மைக்கும் கொஞ்சம் பழக வேண்டும். பிறகுதான் மதிப்புரை எழுதவேண்டும்.

இதழ் மொத்தத்துக்கும் வெகுவாக ஈர்த்தது இரண்டு அம்சங்கள். ஒன்று கீரனூர் ஜாகீர்ராஜாவின் ஆர். ஷண்முக சுந்தரம் பற்றிய கட்டுரை. மற்றும் மதன் ராமலிங்கத்தின் சிறுகதை.

ஆர். ஷண்முக சுந்தரத்தையும் கரிசல் காட்டு இலக்கியம் என்கிற ஒரு ப்ராண்டை நிறுவிய கி. ரா வையும் ஒப்பு நோக்கிய விதம், கீரனூர் ஜாகீர்ராஜா எவ்வளவு நுணுக்கமான வாசகர் என்பது விளங்கியது. இக்கட்டுரையில் இவர் தொகுத்திருக்கும் விஷயங்களில் கீழ்க்காண்பவை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

நூறு ஆண்டுகளுக்கு முன், கொங்கு மண்டலத்தில் பிறந்த ஒருவர், பெருவணிகமயமாகாத ஒரு பகுதியின், நமக்கு பரிச்சயமில்லா ஒரு காலத்தின் நடுப்பகுதியிலிருந்து, அச்சூழலின் இதயப்பகுதியிலிருந்து புனைவுகளை எழுதி, மொழியையும், வாழ்வியலையும் ஆவணப்படுத்துகிறார்.

* நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வேறொரு மொழியைத் தேடிக் கற்க முனைந்ததையும், தமிழக உருது முஸ்லிம்கள் ஹிந்தி-உருது () ஹிந்துஸ்தானி மற்றும் ஃபார்ஸி மொழிக்களஞ்சியமாக விளங்கினர் என்பது இக்காலத்தில் வெறும் ஒருவரித் தகவல்!

* நாகம்மாள் என்னும் நாவலை வாசித்து அதிலிருந்து கொங்கு வட்டார வழக்குகளைத் தொகுத்து ஒரு அகராதி வழங்கலாம் என்னும் யோசனை நல்குகிறார். (எனக்கும் எப்போதாவது ஊர் ஊராகத் திரிந்து கொங்குப்பகுதி மக்களைப் பேட்டிக்கண்டு இவற்றை ஆவணப்படுத்தவேண்டுமென்பது கனவு. ஆனால், நான் இதில் இறங்குவதற்குள் ஏகதேசம் ஆட்கள் மண்ணுக்குள் போய்விடுவார்கள் என்பது உறுதி, நான் உட்பட.)

 இதே இதழில் வந்திருக்கும் ஆர். ஷண்முகசுந்தரத்தின் சிறுகதை, அது எழுதப்பட்ட காலத்தில், வாசிப்பில்  புதுமையை ரசித்தவர்களுக்கு ரசித்திருக்கும்.

 ராஜேஷ் வைரபாண்டியனின் அறல், அருமை. ஆர்வத்தைக்கிளறிவிட்டு சஸ்பென்ஸ் உடைக்கும் யுக்தி, நன்றாகக் கையாண்டிருக்கிறார்

 கு. ஜெயப்ரகாஷின் நல்ல பாம்பும் திட்டமிட்டலுடன் கூடிய  பின்னலுடன் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சுருதி ஏற்றிக்கொண்டேபோய் இறுதியில் "கர்மா இஸ் பிட்ச்" கதையிறுதி! அதிகம் இழுக்காமல் ஒரு குறுங்கதையின் கூர்மையுடன் முடிகிறது. இது போன்ற கதைகள் தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டும் வாசிக்கப்பட்டுக்கொண்டும்  இருக்கவேண்டும்.

 கவிதை வாசிப்பில் பயிற்சியோ தேர்ச்சியோ இல்லை. ஆனாலும் விஜி பழனிச்சாமி கவிதை உள்ளிழுக்கிறது.

 ஆனால் -

 "கை  அசைத்து  விடை பெரும் போது என் கடைசி புன்னகையை எடுத்துக்கொண்டாய்"  ('பெருமில்' உள்ள '' கரத்தை கவனிக்க)

 அடக்கடவுளே! கவிதைகள் எழுதுபவபர்களுக்கும் இதே பிரச்சனையா? எவ்வளவு அழகான வரிகள்! ஆனால் எழுத்துப்பிழைகள்தான் துருத்திக்கொண்டு கண்களில் படுகிறது. கையசைத்து என்பது ஒற்றை வார்த்தைதானே? விடைபெறும்போது என்பதுவும் எழுதுகையில் ஒரே வார்த்தைதானே? சமீப காலங்களில், வார்த்தைகள் - எழுதுகையில் எதற்குத் துண்டாடப்படுகின்றன என்பது கொஞ்சமும் விளங்கவில்லை. எழுதுவதற்கு கூகிள் மொழிபெயர்ப்பானைப் பயன்படுத்தும்போது, எழுத்துபிழைகள் வர வாய்ப்புள்ளது. ஆனால் வார்த்தைகளைத் துண்டாடும் பிழை கூகிளுடையது அல்ல என்பது மட்டும் நிச்சயம்.

 "கையசைத்து விடைபெறும்போது, என் கடைசி புன்னகையை எடுத்துக்கொண்டாய்!"

 "தடதடத்து கரும்புகையைக் கக்கியபடி என் முன்னே வந்து நின்றது ரயில்"

 ஒற்றுக்களும் பல இடங்களில் இல்லை. த், க், ச், ப் போன்றவற்றை சரியான இடத்தில் ஒற்றெழுத்தாகப் போடுவது பற்றியும், எவற்றை ஒரே வார்த்தையாக எழுதவேண்டும் என்பது பற்றியும் தட்டச்சுப் பொறி வாயிலாக எழுதுவோர் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நலம்.

 "மனநல  விடுதியில் அடைபட்டுக்" - இதுவரை அருமை. ஆனால் பின்வருவதில் ஒரு துண்டு (dicing of a single word into pieces again)

 "கொண்டு இருக்கும் கவிதை எழுதுபவளின் மன கணங்கள்". ஐயோ அத்தனை அழகுணர்வும் போய்விட்டதே?

 "மனநல விடுதியில் அடைபட்டுக் கொண்டிருக்கும் கவிதை எழுதுபவளின் மனக்கணங்கள்"

 என்றல்லவா வந்திருக்கவேண்டும்? இதை ஒரு குறையாகச் சொல்லாமல், என்போன்ற ஒரு சராசரி வாசகனுக்கு, அதுவும் கவிதை வாசிப்பில் சற்றும் ஆர்வமே இல்லாத ஒரு நபருக்கு, வெறும் எழுத்துப்பிழைகள் காரணமாகவா ஆர்வமற்றுப்போகக் காரணமாக வேண்டும்? ஒரு கவிதையின் நயம் மற்றும் லயம் கெடவேண்டும்?

 *நீலக் கடலை

 *வயிற்றைப் போல

 போன்ற திருத்தங்கள் வரவேண்டிய இடங்கள் மேலும் சில உதாரணங்கள்.

அடுத்தது இந்த இதழில் என்றில்லை சிறுகதைகளில் பொதுவாகவே தமிழ் எழுத்தில் ஆசிரியர்களின் தற்குறிப்பேற்ற அணி அல்லது குறிப்பே இல்லாத "தற்கருத்து அணி" துலக்கமாக வெளிப்படுவது என்போன்ற சோம்பேறி வாசகனுக்கு ஒருவித சோர்வை அளிக்கிறது. இதழ் நெடுக பல கதாசிரியர்கள் "சீரும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே" ரேஞ்சுக்கு ஏதாவது ஒரு கருத்தைக் கூறி நேரேட்டிவ் மற்றும் பிளாட்டை நிறுவ முயற்சிக்கிறார்கள். அது ஓரளவு பயனும் அளிக்கிறது. தமிழில் எழுதப்படும் பெரும்பாலான கதைகள் பிளாட்டை வளர்க்கும் முயற்சியில் திராபையாக பக்கங்களை நிறைக்கின்றன.

 உதாரணம் -

 "மாந்தர்கள் யாக்கை நிலையாமை பற்றிய முழு அறிவை அடையாதவராகவே இருக்கின்றனர், கற்புநெறி, மதம், இனம் மொழி போன்றவற்றில் அமிழ்ந்து..." (சும்மா சாம்பிள்தான்) என்று சம்பந்தமில்லாமல் ஒரு சில வரிகளை  குழப்பமாக எழுதி இறுதி ட்விஸ்ட் வைப்பதில் முனைப்பு செலுத்துகிறார்கள். சரி ஒரு சராசரி வாசகனாக எனக்கேன் வம்பு? இதையெல்லாம் கேள்வி கேட்பது விமர்சிப்பதெல்லாம் உயர்பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆசான்களின் வேலை. ஆனால் அவர்களோ  பிளே ஸ்டேஷன் ஒன் ...டூ த்ரீ என்று அவற்றுக்கு தீம் எழுதிக்கொண்டு திரிகையில், நாம்தான் ஏதாவது புலம்பவேண்டும்.

 விஜயராகவனின் மொழிபெயர்ப்புக் கதை ஒரு அறிவியல் புனைவு மற்றும் அதற்கான இயல்பாக ஒரு இறுதித்திருப்பம் என்று ஒரு நல்ல வாசிப்புதான். இவரது மொழிச் சரளம் வியக்கவைக்கிறது. உலகின் பல கண்டுபிடிப்புகள் அறிவியல் புனைவுகளால் உந்தப்பட்டு நிகழ்த்தப்பட்டவையே என்று கூறுவார்கள். கடந்த காலங்களில், 1960 களில் ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சித் தொடரால் உந்தப்பட்டு வீடியோ கான்ஃபரன்ஸிங் போன்ற தொழில் நுட்பங்கள் வளர்ச்சி அடைந்தன. ஸ்டான்லி குப்ரிக்கின் 1968 இல் வெளிவந்த 2001: A Space Space Odyssey திரைப்படத்தில் -பேட், கான்ஃபரன்ஸிங், சர்வதேச விண்வெளி மையம், செயற்கை நுண்ணறிவு போன்றவை காண்பிக்கப்பட்டன. அதிலிருந்து பல பத்தாண்டுகள் இடையறாது ஆராய்ச்சி செய்து பல தொழில்நுப்பங்களை உருவாக்கினர். தொழில் நுட்பம் என்பது பரிணாம வளர்ச்சி அடைவதற்கு மூங்கிலின் வேர் ஆண்டுக்கணக்கில் எடுத்துக்கொள்வதுபோல், ஒன்றுமே நிகழாதது போல் இருக்கும் ஆனால் திடீரென்று ஒரு பெரும் யுகப்புரட்சி நடக்கும்.

 இவ்வளவு ஏன்? நடுகல்லில் வெளிவந்த என்னுடைய கதைத்தொகுப்பு ஒன்றில் உள்ள குறுங்கதை ஒன்று முதலில் என் வலைப்பூவில் வெளியானது சென்ற ஆண்டு பெப்ருவரி மாதம். அதில் ஒரு Writing Bot,  ஒரு பின் நவீனத்துவவாதியின் பாணியில் மதிப்புரை எழுதும். அக்குறுங்கதையை எவரேனும் அது எழுதப்பட்ட கையோடு வாசித்திருந்தால், மிகைக் கற்பனை என்றுதான் நினைத்திருக்கக்கூடும். ஆனால் அதே ஆண்டின் நவம்பரில் சாட் ஜிபிடி தொழில்நுட்பம் வந்து இன்று சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. கதைகள் NFT யாக வெளியாவது பற்றி எழுதியிருந்தேன். அதை வாசித்துவிட்டு ஒரு எழுத்தாளர் அதை நிஜமாகவே செய்து காண்பித்துவிட்டார்.  

  மதன் ராமலிங்கம் அவர்களின் சிறுகதையும் நல்ல ஒரு முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். ஒரு முறை இவருடன் மணிக்கணக்கில் ஃபோனில் உரையாடியிருக்கிறேன். இவரில் இருக்கும் வாசிப்பு ஆர்வம், குறிப்பாக மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் மீதான ஆர்வம் என்னை மிரட்சியடையவைத்தது. வெறும் புத்தகங்கள்  இருந்தால் போதும், சோறும் நீரும் அதற்கடுத்ததுதான் என்பது போல் ஒரு வாழ்க்கை வாழ்கிறார். என் நினைவு சரியாக இருக்குமானால், இவர் தன்னுடைய 15ம் அகவை வரை கர்நாடகாவின் ஏதோ ஒரு பகுதியில் வளர்ந்து அதற்குப் பிறகு ஊர் திரும்பியவர்அந்த  வயதுதான் ஒருவருடைய மொழித்திறன் வரையறுக்கப்படும் வயது. அவ்வயதில் வேறு ஒரு ஊரில் வாழ்ந்துவிட்டு, தமிழில் இந்தளவு வாசிப்பு மற்றும் எழுத்தில் முனைப்புடனிருப்பது என்பது  பேராச்சர்யம் அளிக்கிறது. இவர் தொடர்ந்து எழுதவேண்டும். இயல்பான கொங்கு மண் சார்ந்த கதைகள் மற்றும் அதில் அங்கதச்சுவையுடன் எழுதுவதற்கான Wittiness இவரிடம் உள்ளது. there is something in store. வாசிப்பதற்கு நாங்கள் தயார்.

 இறுதியாக மேலும் சில பிரித்தல் பிழைகள்:

 * சொல வடை  - சொலவடை

*இறுதியாக தான் இருக்கும் = இறுதியாகத்தான் இருக்கும் () இறுதியாகத்தானிருக்கும்

 *உணர்வீர்கள் தானே? - இதழ் நெடுக இந்த 'தானே' பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ஏறக்குறைய  எல்லா தானேக்களும் தனித் தானேக்களாக துருத்திக்கொண்டு நிற்கின்றன.

 *புன்னகையை பெற = புன்னகையைப் பெற

 குடி நீர் வரி  - குடிநீர் வரி

 சில எழுத்துப்பிழைகள்:

 * Common Sence - Common Sense

 எறும்பு ஊற - எறும்பு எதில் ஊறுகிறதுவாஸப் ட்ரெண்டி ஓட்காவிலா? (எறும்பூர)

நடுகல் போன்ற இதழ்களில் பங்கேற்போர் அனைவரும் இதுபோன்ற பிழைகளுக்குப் பொறுப்பேற்கவேண்டும். பெரிய பதிப்பகங்களின் இதற்கென்றே ஆள் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ப்லாக்கில் கிறுக்குவதையெல்லாம் கூட நேரம் கிடைக்கும்போது பட்டி, டிங்கரிங் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு இதழ் என்று வந்துவிட்டால், அது எந்த வடிவில் வெளியானாலும் அது காலத்தின் Repository யாகிறது. இதில் இழைக்கப்படும் பிழைகள் வரலாற்றுப் பிழைகளாகும். சிறிது சிறிதாக எழுத்து மொழியே சிதைந்து போவதற்கும் கூட வழிவகுக்கும்.

Comments

  1. நடுகல் பற்றிய உங்கள் வாசிப்பனுபவத்திற்கு நன்றிகள். நீங்கள் சுட்டிக்காட்டும் பிழைகளை அடுத்து வரும் இதழில் கவனத்தில் வைத்துக்கொள்கிறோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience