Skip to main content

ஆப்பன்ஹைமர்

"படம் எப்டி இருக்கு?"

"வேர்ர்ர லெவல், வெரீ தானோங்"

"படத்துல தலைவர எப்டி மாஸா காமிச்சிருக்காங்களா?

"தலைவா... தலைவா... வேர்ர்ர லெவல் தலைவா... ப்ரோ நீங்க போயி பட்த்த பாருங்க ப்ரோ...நீங்க வேஸ்ட்டு ப்ரோ"

"சம்பவம் செஞ்சிட்டாரு. எழுபத்தி ரெண்டு வயசுல சம்பவம் செஞ்சிட்டாரு (மதுரைப் பக்கம் வச்சி செஞ்சிட்டாரு etc.,). வேர்ர்ர லெவல் தலைவா."

"அனி ப்ரோ சூப்பர் தலைவா, வேர்ர்ர லெவல்.... கூஸ் பம்ப்ஸ் தலைவா, பாருங்க ப்ரோ பாடோங் முஞ்ஜி ஒன் அவர் ஆவுது இன்னு கூடோங் கூஸ் பம்ப்ஸ் ஆவுது பாரு ப்ரோ"

இதைப் பார்த்ததற்கே எனக்கும் கூஸ் பம்ப்ஸ் ஏறத்தொடங்க, மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்று படம் எடுத்தது போல் குஞ்ஞில் விதிர்த்த கூஸ்பம்ப்ஸ் என்று ஒரு டார்க் காமெடி படம் எடுக்க கதை ஒன்று மனதில் உருவாகத்தொடங்கியது. (இது புதுசு  - டார்க் காமெடியாமாம்) டார்க் காமெடி என்றால் சைக்கோ வில்லன்,  சுய  விரலையோ வேறு எதையோ வெட்டி ரத்தம் சொட்டிக்கொண்டிருக்கும்போது, இன்னாடா இது, மண்புழு மாத்ரிக்து? என்று சொல்லிக்கொண்டே, அதை மீன் தொட்டியில் வீசிவிட்டு சிரிக்க வேண்டும்.

இங்கு எல்லாமே, வெரீ தானோங் வேர்ரா லெவல்தான்.

"தலைவா...தலைவா...தலைவா...தலைவா...தலைவா...கொலா மாஸ் தலைவா...பிஜிஎம் வேர்ர்ர லெவல் ப்ரோ. ஃபர்ஸ்ட் ஆஃப் வேர்ர்ர லெவல் ப்ரோ. செகண்ட் ஆஃப் வேர்ர்ர லெவல் ப்ரோ. க்ளைமாக்ஸ் வேர்ர்ர லெவல் ப்ரோ....கூஸ் பம்ப்ஸ் வேர்ர்ர லெவல் ப்ரோ."

என்று யுவதிகள் ஆண்டிகள் உட்பட இங்கு யாரும் அடித்தொண்டையில் அலறவில்லை. ஆண்கள் யாரும்  குறியில் குளவி கொட்டிய நரி மாதிரி தலீவர் பெயர் சொன்னதும் ஹூ ஹூ என்று ஊளையிடவில்லை. ஏனென்றால் படத்தின் பெயர் ஆப்பன்ஹைமர், இடம் யூஎஸ்.

படம்: எம் மகளின் பள்ளியில் அறிவியல் வகுப்பில் உள்ள நிஜ ஆப்பன்ஹைமர் போஸ்டர். பட போஸ்டர் அல்ல


அவர் என்னைப்போல் ஒரு மாதிரி ஆஃப் பீட், அதே சமயம் எனக்கு நேரெதிர் அதீத புத்திசாலியான, எப்போதாவது அரிதாக சந்திக்க நேரும் மராத்தி நண்பர். குறைந்தது ஒரு ஆள் உடன் அமர்ந்து பார்ப்பதற்காக வேண்டுமே என்று நினைத்து என் ரேடாரில் அலைவரிசை ஒத்துவருபர் என்பதால், ஃபோன் செய்து கேட்கலாம் என்று நினைப்பதற்குள்,  பார்பி படம் பார்க்கவைப்பதற்காக அவரவர் வாரிசுகளை தியேட்டரில் விட்டுவிட்டு வெளியேறிக் கலையும் நிமித்தம் நிகழ்ந்த சந்திப்பில், பார்த்து விட்டாகிவிட்டதே - என்று சொன்னார். உடனே, அங்கிருந்தவாறே, பேசிக்கொண்டே இன்னொரு முறை ஆப்பன்ஹைமர் காணும் எண்ணமுண்டா என்று வினவியவாறே மொபைலில் எனக்கு மட்டும் மாலை நான்கரைக்கு ஏ.எம்.சியில் கடைசி வரிசையில் இருந்த ஒற்றை இருக்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.

ஏழு வருடங்களுக்கு முன் ப்ளூ டூத் சேரன் என்பவரை அறிமுகப்படுத்தி பெரும் குற்றத்தைத் இழைத்துவிட்டிருந்த வேறு ஒரு நண்பர் நான்கு ஆண்டுகள், தன் இரு குழந்தைகளை இந்தியாவுக்கு பாட்டி வளர்ப்பில் அனுப்பி வைத்துவிட்டு, கலிஃபோர்னியா சென்று  இருந்துவிட்டு மீண்டும் இரண்டாம் இன்னிங்சில் மேலும் ஹனிமூனிருந்து தொடங்கி, முதல் முறை ஒன்று அடுத்தது இரட்டை என்று பல்கிப்பெருகி,   மறுபடி அதே இடம், அதே அருகாமை என்று பத்து மைல் தள்ளியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்துவிட்டிருக்கிறார். சென்ற முறை அவர் ஒஹையோவில் இருந்தபோது, ஒரு முறை ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, அதைக் கொண்டாடும் விதமாக  மறுவெளியீடு செய்யப்பட்டபோது, நான் அவரிடம்  நாமிருவரும் இணைந்து படம் பார்க்கச் செல்லலாமா என்று கேட்டதற்கு, விக்கிப்பீடியாவில் அரைகுறையாக படம் பற்றி மேய்ந்துவிட்டு,  

"டிராமா, டிராமா...வெறும் டிராமா" 

என்று படத்தை மறுதலித்துவிட்டார். இவர்தான் Apocalypse  Now என்னும் அற்புதமான படத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததுமட்டுமின்றி, மார்லன் ப்ரெண்டோவைப் பற்றி என்னிடம் சிலாகித்ததையும் வைத்து, தவறாக எண்ணிவிட்டேன். ப்ளூ டூத் சேரனை இன்டெலிஜென்ட்டான திரை விமர்சகர் என்று எனக்கு அறிமுகம் செய்துவைத்த கணத்தில்தான் ஆள் லும்பன் என்று தெரிந்தது (ஆனாலும் அரை லும்பன்தான்). ஆங்கிலக் கட்டுரைகளில் திரைப்படங்களில் சராசரவென வெகு வேகமாக நகரும் நிகழ்வுகளை  High drama என்றும் குறிப்பிடுவார்கள். அதை அரைகுறையாக வாசித்துவிட்டு, படம் சும்மா ஹைப்பு, டிராமா என்று மறுதலித்துவிட்டார்.எவ்வளவு நல்ல எதார்த்த சினிமா எடுத்தாலும், அது அனைத்துமே Script செய்யப்படுபவைதான். அந்த அடிப்படையில் அவைகள் டிராமாக்கள்தாம். திரைப்படங்கள் Feature Film வகையினைச் சேர்ந்தவை. அப்படி டிராமா இல்லாமல் எடுக்கவேண்டுமானால், டாக்குமெண்டரி எனப்படும் ஆவணப்படம்தான் எடுக்கவேண்டும். உண்மையில் ஆவணப்படங்களுமே 100% scripted டிராமாக்கள்தான்.

திரைப்படங்களில் செறிவான உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்துவதென்பது  ஒரு கலை. பார்வையாளனை முதலில் திரை மொழி, மற்றும் காட்சிகள் மூலம் கட்டிப்போட்டுவிட்டு, கண்கட்டுவித்தை மூலமாக, திரைமொழி இயலுக்கு  நேரெதிர் வடிவமான உரையாடல்களினூடாக கதையை பார்வையாளனின் மூளையில் சிறிது சிறிதாகச் செலுத்துவது ஒரு ஆபத்தான வித்தை. ஸ்பீல்பெர்க் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்டில் அதை அருமையாகச் செய்திருப்பார். சொல்லலொனாத் துயரங்கள் நிறைந்த வரலாற்றின் மிக மோசமான அப்பகுதியினை, இந்தக்காலத்தில் எடுப்பதாக இருந்தால் "Shadows of Redemption: A Tale of Resilience" என்று பெயரிட்டு முடிவிலா எபிசோடுகளாக வெப்சீரீஸ் எடுக்கவேண்டிய நிகழ்வு. Holocaust இன் பல துயர்மிகு அம்சங்களையும் மனிதாபிமானம் கொண்ட ஷிண்ட்லெர் என்னும் ஜெர்மானியனின் கையறு நிலையிலும் யூதர்களைக் காக்க முயற்சிக்கும் பின்புலத்தில் நடக்கும் துயரங்களையும் ஸ்பீல்பெர்க் ஒரு திரைப்படமாக அதன் இறுதிவடிவத்தை அளித்தபோது, அது மூன்று மணி பதினைந்து மணித்துளிகளாக இருந்தது. அதற்குப்  பல வருடங்களுக்குப் பிறகு DTH இல் அதன் நான்கு மணி இருபது நிமிட uncut version காணக் கிடைத்தது. பார்த்து முடித்துவிட்டு, மூன்று வாரங்கள் கழித்து அதன் பாதிப்பு என்னை மெதுமெதுவாகத் தாக்கத்தொடங்க, அலுவலகத்துக்கு சனி ஞாயிறு உட்பட நான்கு நாட்கள் செல்லாமல் படுக்கையில் சுருண்டு கிடந்தேன்.

அப்படிப்பட்ட ஒரு படத்தை ப்ளூடூத் சேரன் ரசிகரான அன்பர் காரி உமிழ்ந்தது மட்டுமல்ல, நான் தொடர்ந்து ஏழு வருடங்கள் ப்ளூடூத் சேரனின் திரை  விமரிசனங்களைப் பார்ப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டது மட்டுமின்றி,  அப்பெருங்குற்றத்தின் உச்சமாக  ஆப்பன்ஹைமர்  திரைப்படத்தைப் போய் - 

"என்னத்த எடுத்து வச்சிருக்காய்ங்ய. பூராப்படமும் சலசலன்னு பேசிக்கிட்டே இருக்காய்ங்ய. ஜப்பான்ல பாம் போட்டதைக்கூட காட்ட மாட்றாய்ங்ய" 

என்று அவர் "தெருப்பொறுக்கி  அறிவுஜீவித்தன" விமர்சனம் செய்வதை நான் காணநேரும் துர்பாக்கிய நிலைக்கும் வித்திட்டார். இதுநாள் வரை அறிவுஜீவி என்று நான் எண்ணிக்கொண்டிருந்த நான்கு வருடம் தொலைந்து போன  அவர் ஒரு லும்பர் என்பது அப்போதுதான் மெதுவாக விளங்கியது. இம்மாதிரி பல விஷயங்களில் நான் ட்யூப்லைட்தான். அதனால்தான் ஆப்பன்ஹைமர் பார்த்துவிட்டு சாவகாசமாக எழுதுகிறேன்.

அணு ஆயுதத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஜூலியஸ் ராபர்ட் ஆப்பன்ஹைமர் என்பவரைப் பற்றிய எழுநூற்றுச்சொச்சம் பக்கங்கள் கொண்ட  American Prometheus என்னும் வாழ்க்கை வரலாற்றுப்  புத்தகத்திலிருக்கும் சாராம்சத்தை வைத்துக்கொண்டு நோலான் உருவாக்கிய படம்.

படம் மொத்தமும் Aftermath எனப்படும் அணு குண்டு போடப்பட்டதன் பின்விளைவுகள் ஆப்பன்ஹைமரின் வாழ்க்கையில், அவரது மனநிலையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியது. நோலனுக்கு கைவந்த கலையான நான் லீனியர் உத்தி, அதில் விரியும் காட்சிகள், அவர் எதிர்கொள்ளும் விசாரணை என்று போகிறது. முன்பெல்லாம் ஆங்கிலப்படங்கள் நேரடியாக ஆங்கிலத்தில்தான் திரையரங்குகளில் வெளிவரும், டப்பிங்கெல்லாம் பிறகுதான் வந்தது. அப்போதெல்லாம் படங்களில் வரும் ஆங்கிலத்தில் எஸ், நோ, கம், கோ, ஃபக் மற்றும் ஷிட் போன்றவை தவிர வேறு ஒன்றுமே புரியாது. இதில் கடைசி இரு கலைச்சொற்கள் நான் பின்னாளில் கற்றுக்கொண்டவை. என்னுடைய வொக்காபுலரியானது மதர் ஃபக்கர், ஆஸ்ஹோல், சன் ஆஃப் எ பிட்ச் என்று மேற்கொண்டு விரிவடைந்தது.   தொண்ணூறுகளில் AXN, ஸ்டார் மூவீஸ் போன்றவற்றில் ஆங்கிலப்படத்துக்கு ஆங்கிலத்திலேயே கீழே சப் டைட்டில் ஓடும். அவற்றைப் படித்து ஆங்கிலம் புரியத்தொடங்கியது. இங்கு வந்த புதிதிலும்  இங்கிருப்பவர்களுடன் பேசும்போது சப்டைட்டில் இல்லா ஆங்கிலப் படம் பார்த்தது போல் இருந்தது. பிறகு காலப்போக்கில் சரியாகிவிட்டது. இப்படத்தைப் பார்த்தபோது மறுபடி பழைய நியாபகம் வந்தது, தொண்ணூறுகளில் ஊர்களில் ஆங்கிலத்திரைப்படம் பார்க்கும் போது ஒன்றுமே புரியாதல்லவா? அதே போல் ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் இதில் வரும் பின்னணி இசை Overpowering ங்காக இருப்பதால். டிபிகல் நோலன் படப்பிரச்சனை. பின்னணி இசை வசனத்தை மீறி திமிறிக்கொண்டு ஒலிக்கிறது. சாதாரணக்காட்சிகளுக்கும் கூட கிலியை உருவாக்கும் அதிரிசை, What is ensuing என்பதைச் சொல்வதற்கான உத்தி போலும். வசனத்தை மீறிக்கொண்டு வருவதற்கான காரணம் - பார்வையாளனை மெனக்கெட்டு இன்னும் காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு  கேள் என்று சொல்வதற்கான தந்திரமான இருக்கலாம். ஆனால் அது வேலை செய்யத்தான் செய்கிறது. முழுக் கவனமும் திரையில் மற்றும் உரையாடலில் குவிய வைக்கிறது.

படம் முழுவதுமே ஆப்பன்ஹைமர் ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பு வேலைகளைக் கைவிடவேண்டும், அணுகுண்டு போட்டது போட்டாகிவிட்டது, இனி அணு சக்தியை பயன்படுத்துவதில் உலகளவில் ஒரு கட்டுப்பாடு வேண்டும், அதில் நாம் கையொப்பமிடவேண்டும் என்றெல்லாம் பேசத்தொடங்கிய காரணத்தால், வேறு ஒருவரால் சதிவலை பின்னப்பட்டு, சந்தேகத்துக்குட்படுத்தப்பட்டு ஒரு சிறப்பு கமிட்டியின் மூலம் விசாரிக்கப்படுகிறார். ஜெர்மனியில் ஆய்வுக்காகச் சென்றிருந்த போது அவரது இடது சாய்வுத்தன்மையுடன் இருந்தது, அவரது மனைவியின் கம்யூனிஸ்ட் பின்புலம் போன்றவை துருவப்படுகின்றன. விசாரணை என்று வரும்போது, அவர்கள் எதை வேண்டுமானாலும் சந்தேகப்படலாம், விசாராணைக்குட்படுபவர் தன்னுடைய ஒவ்வொரு செயலுக்குமான விளக்கத்தையும் அளித்தாகவேண்டும், எந்தத் தனிநபர் சார்ந்த ரகசியமும் சந்தி சிரிக்கவேண்டும் என்பது அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாடே போற்றும் அறிவியலாளர் ஒருவருக்கு இதை விட கொடூரமான ஒரு உளவியல் சித்தரவதை வேறு ஒன்று இருக்க முடியாது. உண்மையில் அவரை அதட்டி வைக்கமட்டுமே விசாரணைக்குட்படுத்தப்படுவதாக  வருகிறது.

உதாரணத்திற்கு விசாரணைக்குட்படும் ஆப்பன்ஹைமரின் மனைவியை அதே அறையில் வைத்துக்கொண்டே கம்யூனிஸ்ட் பின்புலம் கொண்ட அவரது பழைய காதலியுடனான உறவு பற்றிய குறுக்குக்கேள்விகள் மற்றும் ஆப்பன்ஹைமரின் விவரணைகளின்போது, விசாரணைக்குழுவின் கண்முன்னே அதே அறையில் இருவரும் நிர்வாணமாகப் புணர்வதைப் போல் அவர் மனைவியின் பார்வையில் தெரிவதைபோல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது இலக்கியத்தன்மை கொண்டது. ஜீன் டட்லாக் (Jean Tatlock, அமெரிக்காவில் ஜீன்தான், ழானெல்லாம் கிடையாது) என்னும் அவரது காதலி ஒரு சைக்யாட்ரிஸ்ட், அவரே மனச்சோர்வு நோய் காரணமாக தற்கொலை செய்துகொள்வது ஒரு துயர் முரண்.

நன்கு இசை அறிந்தவர்கள் அது என்ன வித இசைக்கோவை என்று ஆராய்ச்சி செய்து எழுதலாம் என்னுமளவு மிரட்சியாக பின்னணி இசை கண்டபடி கட்டுக்கடங்காமல் அலைகிறது. சோதனைகுண்டுச் சத்தம் ஓய்ந்தபின் பெரும் பிரளயம் நிகழ்ந்து முடித்த துயரத்தில் அமிழ்ந்து அடங்கி பிறகு கேலரியில் பார்வையாளர்களின் வெற்றிகூச்சலுடன் கால் தட்டல் சத்தம் கேட்கும்போது மீண்டு வருகிறது. இசை தரும் கிலியுணர்வுடன் சிலியன் மர்ஃபியின் மருண்ட கண்கள் உண்மையான ஆப்பன்ஹைமரின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. படம் மொத்தமுமே நாடகத்தன்மை கொண்டதுதான்.

படத்தில் பல இடங்களில் இது அளவுக்கதிகமாகவே இருக்கிறது . சில உதாரணங்கள் -

1. நீல்ஸ் போரை (Neils Bohr) ஆப்பிளில் பொட்டாசியம் சயனைடு ஏற்றி வைத்து கொல்லப் பார்ப்பது, பிறகு அதை அவர் கடிக்கும் தருவாயில், பிடுங்கி குப்பைக்கூடையில் போடுவது.

2. இரண்டாம் உலகப்போரில் யுத்தத் செயலாளராக இருக்கும் ஹென்றி ஸ்டிம்ஸன் இன்னின்ன தேதிகளில் குண்டு போட வேண்டாம், மற்றும் Kyoto விலும் அதன் கலாச்சார முக்கியத்துவம் காரணமாக மற்றும் நானும் என் பெண்டாட்டியும்  அங்கு ஒரு முறை தேனிலவுக்காகச் சென்று வந்ததாலும் போட வேண்டாம் என்று சொல்வது.

 3. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நாசகார அணுகுண்டு வீசப்பட்டு அதன் பின்விளைவுகளைக் கண்ட ஆப்பன்ஹைமர்  ஜனாதிபதி ட்ரூமேன்ஐச் சந்தித்து பேசும்போது, என் கைகளில் ரத்தக்கறை பட்டுவிட்டதுபோல் உணர்கிறேன் என்று சொன்னதும், இந்த அழுமூஞ்சிப்பயலை இனிமேல் என்னிடம் அனுப்பாதீங்கடா என்று அவர் முதுகுக்குப் பின் சொன்னது போன்ற காட்சிகள் போன்றவை.

 இதில் ட்ரூமேனும் ஸ்டிம்ஸனும் கிட்டத்தட்ட சாடிஸ்ட்டுகள் மற்றும் கேரிகேச்சர்கள் போல் காண்பிக்கப்படுகிறார்கள். நேரடியாக வில்லிஃபை பண்ணப்படுகிறார்கள். அவர்கள் நிஜத்திலும் ஒரு வேளை அப்படியே இருந்திருக்கலாம் எவர் கண்டார்? ஆனால் அதை இப்படி துருத்திக்கொண்டு தெரியுமாறு எடுத்திருக்க வேண்டியதில்லை. ஆனால் இன்னொரு வகையில் பார்க்கும்போது இப்படியெல்லாம் செய்வதைத் விடுத்து இது போன்ற உட்கருத்தைக்கொண்ட படத்தை மூன்றரை மணிக்குள் அடக்குவது என்பது கடினம் என்றே தோன்றுகிறது. வெப் ஸீரீஸ் உருவாக்கலாம் ஆனால், வெப் சீரீஸ்களில் வரும் சுவாரசியமான காட்சிகள், திருப்பங்களுக்கான மெடீரியல் அல்ல இது. அறிவியலும் முட்டியை முறுக்கிக் காண்பிக்கும் அழிவு சக்திகளும் எதையும் சிந்திக்காமல் அரைக்கிறுக்குத் தன்மையுடன் அதே நேரம், அதிதீவிர இலக்குநோக்குத் தன்மையுடன் ஒன்றை உருவாக்கினால், அந்த முயற்சி வெற்றியடையக் காரணமாக இருந்தவன் மனசாட்சி உள்ளவனாக இருந்தால் என்ன நடக்கும்? அவனை அதிகாரம் என்ன செய்யும்? அதுதான் படம்.

 தொழில்நுட்பரீதியாக சிறிது பிசிறு தட்டிய இடங்கள் என்று எடுத்துக்கொண்டால், ட்ரினிட்டி டெஸ்ட் காட்சியில் க்ராஃபிக் கவுன்ட் டவுன் காண்பிக்கப்படும் இடத்தில், அந்த கவுன்ட் டவுன் மெஷினில் வரும் எண்கள் கண்களை நெருடுகின்றன. அவ்வளவு நேர்த்தியான டிஜிட்டல் டிஸ்ப்பிளே நாற்பதுகளில் இருந்ததா என்று தெரியவில்லை. வால்வுகள் மற்றும் பல்புகள் வைத்து 7 செக்மென்ட் டிஸ்பிலேக்கள் இருந்தன ஆனால் ஒரு டிஜிட்டுக்கான எலக்ரிக்கல் சர்க்யூட்டே ஒரு 10 க்கு பத்து அறை அளவு இருக்கும். இன்னொன்று அதில் காட்டப்படும் கண்ட்ரோல் பேனல்கள் ஏதோ அமேஸான் ஏ.டபிள்யூ.எஸ் சர்வர்கள் போன்று இருக்கின்றன. நாற்பதுகள், ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளின் நுணுக்கங்களை  மிகுந்த நேர்த்தியுடன் திரையில் கொணர்ந்த நோலன், இந்த ஒரு விஷயத்தில் சிறு பிழை விட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. பகவத் கீதை பற்றிய சர்ச்சைகள் தேவையில்லாதவை என்று தோன்றுகிறது. ஆப்பன்ஹைமரின் விடியோ ஒன்றில் அவர் கீதையைக் குறிப்பிட்டு, அதில் விஸ்வருபம் எடுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் -  

"உலகங்களை அழிக்கப் புறப்பட்ட யாமே மரணமுமாய் ஆகினோம்" 

என்று குறிப்பிடுவதாகச் சொல்கிறார். அதன் உண்மையான பொழிப்பில் 

"காலமும் யாமே ஆகினோம், காலம் அனைத்தையும் அழிக்கவும் ஆக்கவும் வல்லது" 

என்றும் வருகிறது. ஆனால் உட்பொருளிலோ - 

"பார்த்தா, குற்ற உணர்வு காரணமாக நீ உன் பகைவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டால்  மட்டும் அவர்கள் சாஸ்வதமாக இப்புவியில் இருந்துவிடவா போகிறார்கள்? அவர்களும் காலத்தால் அழிவார்கள்தானே?  ஆகவே, மரணமும் யாம்தான், ஜனனமும் யாம்தான். அனைத்தையும் எம் மேல் விட்டுவிட்டு, அம்பை எடுத்து நாணைப்பூட்டி தொடு கணைகளை" 

 என்று அர்ஜுனனை  கடமையைச் செய்யக் கோருவது போலவும் பொழிப்பு உள்ளது. அது வேறு பிரச்சனை. இன்டர்நெட் என்று ஒன்று இல்லாத காலத்தில், எப்படித்தான் ஆப்பன்ஹைமர் சமஸ்க்ரிதத்தைத் தேடிக் கற்றாரோ? இங்கு அந்த சர்ச்சைக்குரிய காட்சி வெட்டப்படவில்லை. ஹாலந்து செல்லும் ஒரு காட்சியில் சரளமாக டச் மொழியில் விரிவுரையாற்றுகிறார். இன்றைக்கு என்பது தொண்ணூறு வருடங்களுக்கு முன்பாக இருந்தாலும், அன்றைக்கும் ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணிகள்தானே? அதற்குள் எந்தத் தொழில்நுட்ப முன்னேற்றமும் இல்லாத காலத்தில், ஒரு முழு நேர இயற்பியலாளனாக இருந்து கொண்டு, ஆராய்ச்சிகள் செய்துகொண்டு, மொழிகளிலும் வாசிப்பிலும் தத்துவங்களிலும் கூட கவனம் செலுத்தியிருப்பது உண்மையில் ஆச்சர்யம் அளிக்கிறது.

 ஒரு இடத்தில் அவரை prima donna என்று விளிக்கிறார் சக ஆராய்ச்சியாளர் ஒருவர். இதிலிருந்து ஆப்பன்ஹெய்மர் தான் தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும் என்பதற்காகவே கோட்பாட்டு இயற்பியலாளராக இருந்து சோதனை இயற்பியலாளராக மெதுமெதுவாக மாறுகிறாரா அல்லது தேசப்பற்று காரணமாகவா என்று தெரியவில்லை. 

எது எப்படியிருந்தாலும், அழிவைத் தலைமை தாங்குவதற்கான சிவப்புக்கம்பள வரவேற்பாகவே இருந்தாலும், இப்படி ஒரு அழைப்பு வரும்போது ஆப்பன்ஹைமர் போன்ற ஒருவருக்கு அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி ஏதும் இருந்திருக்க வாய்ப்பில்லை.  இயல்பாகவே இடதுசாரிச் சித்தாந்தங்களில் சாய்வு ஏற்பட்டாலும், அவர் மீது களங்கம் சுமத்தப்பட்டபோது, ஐன்ஸ்ட்டீன் எப்படி நாட்ஸி ஜெர்மனியிலிருந்து தப்பி ஓடினாரோ அதே போல் அவர் அமெரிக்காவிலிருந்து தப்பி ஓடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, நேரு இந்தியக்குடியுரிமை வழங்கத்தயாராக இருந்தும் அதை தேசப்பற்று காரணமாக மறுதலித்துவிட்டதாகச் சொல்வதுண்டு. ஒரே நபர் இடதுசாரியாகவும் அதே நேரத்தில் தேசப்பற்றாளராகவும் இருக்கமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். எந்தக்கொள்கையிலுமே பிடிப்பில்லாத ஒருவன் இப்படித்தான் இருப்பான் இவ்வுலகில் எதையுமே Binary Opposition இல் அடைப்பது இயற்கைக்கு மாறானது என்றும் தோன்றுகிறது. கொள்கைகளை விட ஒவ்வொரு தனி மனிதனின் இருத்தலியல் நெருக்கடிதான் (Existential Crisis)  மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பதற்குக் காரணமோ? என்று நான் சில சமயங்களில் வியப்பதுண்டு. இதில் வரும் Metaphor களில் ஒன்று, அணுக்கருப்பிளவின் மூலம் ஏற்படும் தொடர்விளைவுதான் அணுசக்தியாக மாற்றப்பட்டு அணுகுண்டாக மாறுகிறது, அதே போல் அணு ஆயுதங்கள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் தொடர்விளைவும் அதன் மூலம் ஏற்படும் அழிவும் ஆப்பன்ஹைமருக்கு தீங்கனவாகத் தொடர்கிறது. 

 சில கொசுறுத் தகவல்கள், விவரணைகள் மற்றும் வியாக்யானங்கள்:

 1. ஆப்பன்ஹைமர் வடிவமைத்த லிட்டில் பாய் அணு குண்டு ஒரு துப்பாக்கி வடிவமைப்பினைக்கொண்டது. மிக எளிதான வடிவமைப்பு. Nuclear Fission முறையில் செயல்படும். ஒரு குடுவைக்குள் அதன் மையப்பகுதியில் பீரங்கிக்குழாயை ஒத்த அமைப்பு. ராணுவப்பட்டறையில் வெகு நேர்த்தியான மெஷினிங்குடன் போர் (Bore) செய்யப்பட்ட நீண்ட இரும்புக்குழல். அதன் ஒரு முனையில் இருபத்தைந்து கிலோ யுரேனியம் 235 மற்றோரு முனையில் அதைவிட இன்னும் கொஞ்சம் அதிகம் யுரேனியம் 235. பெரிய யுரேனியத் துண்டை துப்பாக்கி வெடிமருந்து மூலம் வெடிக்கச்செய்து எப்படி துப்பாக்கிக் குழாயில் குண்டு வெளிப்படுமோ அதே போல் வெளிப்படச்செய்து,  குழலின் மறுமுனையில் உள்ள இன்னொரு யுரேனியம் துண்டின்மீது பெரும் அழுத்தத்துடன் சென்று மோதச்செய்வது. அடிக்கிற அடியில் யுரேனியம் அணுக்களில் உட்கருவில் ஏற்கனவே முண்டியடித்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டுள்ள உள்ள நியூட்ரான்கள் வேறு வழியின்றி அணுக்கருவை விட்டு வெளியேறி மற்றொரு அணுக்கருவினுள் புகுந்து புறப்பட்டு அதைப்பிளந்துவிடும். அதிலிருந்து வெளியேறிய நியூட்ரான்கள் மேலும் சில அணுக்கருக்களை, அவைகளிலிருந்து தறிகெட்டோடும் தறுதலை நியூட்ரான்கள் அடுத்தது, அடுத்தது  என்று தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திப் பிளந்து அனைத்து உட்கருக்களுக்குள்ளிருக்கும் ஆற்றலும் ஒரே நேரத்தில் வெளிப்பட்டு பிரளயம் நிகழ்கிறது. கம்பியூட்டர் திரையில் தெரியும் முற்றுப்புள்ளி அளவுள்ள ஒரு துகளுக்குள் அறுநூறு செக்டில்லியன் அணுக்கள் உள்ளன. அதாவது அறுநூறு பில்லியன் ட்ரில்லியன்கள். ஒரு பில்லியன் என்பது நூறு கோடி, ஆயிரம் பில்லியன்கள் கொண்டது ஒரு ட்ரில்லியன்! அணுக்கருக்குள் நேர் மின்னூட்டம் கொண்ட ப்ரோட்டான்களும் மின்னூட்டமற்ற நியூட்ரான்களும்  நியூக்ளியஸுக்குள் அளவற்ற ஆற்றலால் பிணைக்கப்பட்டிருக்கும், அதனால்தான் ஒரு நியூட்ரானை அணுக்கருக்குள்ளிருந்து வெளியேற்றி நெட்டித்தள்ளும்போது, அதை அங்கு அதுவரை பிடித்து வைத்திருந்த கட்டுக்கடங்காத ஆற்றல் வெளிப்படுகிறது. ஃபேட்மேன் என்பது (Fat Man) வேறு வகை சனியன். இதில் யுரேனியம் 235 க்கு பதில் ப்ளூட்டோனியம் 240. லிட்டில் பாயில் அறுபது கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்றால் இங்கு அதைவிட பத்து மடங்கு குறைவான, ஒரு ஸ்நோபவுலிங் பந்தளவே உள்ள ப்ளூட்டோனியம், அதைச்சுற்றி அழுத்தம், பிறகு டிஎன்டி மற்றும் ஆர்டீஎக்ஸ் போன்ற கேடுகெட்ட உலகைச் சுடுகாடாக்க வந்த வெடிப்பொருள்கள். வெடிப்பொருள்களை வெடிக்கச் செய்யும்போது அது  உந்தித்தள்ளும் அதிர்ச்சி அலைகள் ஏற்படுத்தும் உள்நோக்கிய வெடிப்பு, ப்ளூட்டோனியத்துக்கருகில் வைக்கப்பட்டிருக்கும் பொலோனியம் மற்றும் பெரிலியம் ஆகியவற்றைக் கலக்க, அதன் பக்க விளைவாக அவ்வேதிவிளைவின் காரணமாக வெளிப்படும் நியூட்ரான்கள்...பழையபடி அதே கதை.

2. ஜூலை 16, 1945 இல் அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் ட்ரினிட்டி டெஸ்ட் நடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக 1945, ஆகஸ்ட் 6 ம் தேதி ஹிரோஷிமாவின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. ஜப்பான் அரசர் ஹிரோஹித்தோ சரணடைய மறுத்ததும், மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நாகசாகியின் மீது Fat man நாசகார குண்டைப் போட்டதும்தான், இரண்டு லட்சம் உயிர்களைப் பலி கொடுத்து,  அலறிக்கொண்டே நிபந்தனையின்றி சரணடைந்தது ஜப்பான். உலகப்போர் உடனடியாக நின்று, அது வரை ஆட்டம் போட்ட அத்தனை நாடுகளும் கப்சிப்பென்று அடங்கின.  

3. ஜப்பானின் மீதான உலக மக்களின் அனுதாபமோ, அப்போதுதான் புதிதாகத் தோன்றியிருந்த ஐக்கியநாடுகள் சபையின் அணு ஆயுத விலக்களுக்கான அறைகூவலோ, அமெரிக்காவின் காதுகளில் விழவே இல்லை. அமேரிக்கா தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளைச் செய்துகொண்டுதான் இருந்தது. சோவியத் ரஷ்யாவும், வேகத்தை அதிகப்படுத்தியது. 1949 இல் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாம் அணுசக்தி நாடு என்னும் சாதனையை (!) நிகழ்த்திக்காட்டியது. அதுவரை நிலத்துக்கடியில் வேர் விட்டு வளர்ந்துகொண்டிருந்த இரு நாடுகளுக்கிடையேயான பனிப்போர்  இப்புள்ளியிலிருந்துதான் முதன் முதலாக துளிர் விட்டு வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.

4. பனிப்போர் வலுக்கத்தொடங்கிய 1952 காலகட்டத்தில் அணுக்கருபிளவு (Nuclear Fission ) மூலம் அழிவு சக்தியை சாதித்துகாட்டியிருந்த அமெரிக்கா, முதன்முதலாக அணுக்கரு இணைவின் (Nuclear Fusion) மூலம் உலகின் முதன்முதல் ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக சோதனை செய்து, பனிப்போரை மேலும் முற்றச்செய்தது. அமெரிக்காவின் முதன் முதல் சோதனை ஹைட்ரஜன் குண்டு ஹிரோஷிமாவில் விழுந்ததைவிட ஆயிரம் மடங்கு பெரியது. அதன் வெப்பச்சலனக் கதிர்வீச்சு அலை சோதனை தளத்திலிருந்து முப்பது மைல்கள் தள்ளியிருந்த ஆராய்ச்சியாளர்களால்  சுரீரென்று உணரப்பட்டதாம். ஹிரோஷிமாவின் மீது வீசப்பட்ட குண்டு பத்து கிலோ டன்கள் ஆற்றல் கொண்டது என்றால், சோவியத் ரஷ்யா சோதித்த முதல் ஹைட்ரஜன் குண்டு பதினைந்து மெகா டன்கள்!

5. எதற்கும் அசராத சோவியத் ரஷ்யா, எத்தனுக்கு எத்தன் எவன்டா? அது அண்ணன் குருஷ்சேவ் ஆர்ட்டர் செய்த ஐம்பத்தேழு மெகா டன் தெர்மோ நியூக்ளியர் குண்டுடா என்று சொல்லிக்கொண்டு நான்கே குண்டுகளில் உலகை உருக்கி ஊதித் தள்ளிவிடும் அளவு பெரிய சோதனைக்குண்டை வெடித்தது. ஹிரோஹிமாவில் போட்ட பொடிப்பயலைவிட மூவாயிரத்து எண்ணூறு மடங்கு பெரியது. தெர்மோ நியூக்ளியர் ரியாக்ஷன் எந்தளவு கொடூரமானது என்றால், சூரியனில் ஒவ்வொரு நொடியும் நடப்பதும் தெர்மோ நியூக்ளியர் ரியாக்ஷன்தான். உண்மையில் நம் சூரியனே இன்னும் முழுவதும் வெடித்து அடங்காத ஒரு ஹைப்பர் மெகா ஹைட்ரஜன் குண்டுதான். ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் குண்டு வெளியேற்றும் வெப்பம் சூரியனின் மையப்பகுதி வெப்பத்தை விட ஏழு மடங்கு அதிகம். குண்டை எடுத்து போர்விமானத்துக்கு உள்ளே வைக்க இடம் கிடையாது, எனவே விமானத்துக்கு வெளியே, தற்கொலைப் படை ஆள் மாதிரி பெல்ட் வைத்து அதன் அடி வயிற்றில்தான் இப்பெரும் பேயைக் கட்டிக்கொண்டு பறக்க வேண்டிய கட்டாயம். குண்டை வீசச்சென்ற விமானிகளுக்கு உயிரோடு ஊர் திரும்பும் வாய்ப்பு ஐம்பது சதவிகிதம்தான் என்று சொல்லப்பட்டது, ஏனென்றால் வீசிவிட்டு விமானத்தின் மூக்கை ஊர் நோக்கித்  திருப்பும் நேரத்துக்குள் சாம்பல் உட்பட அனைத்தும் பஸ்பமாகி ஆவியாகுமளவு தெர்மோ நியூக்ளியர் விளைவு சடுதியானதும் ஆபத்தானதும் ஆகும். 1961, அக்டோபர் 30, குண்டு வீசிச் சோதிக்குமிடமான ஆர்டிக் பிரதேசத்திலிருக்கும் ஆளரவமற்ற பனிப் பாலைத்தீவான Novaya Zemlya நோக்கிப் பறந்தது சோவியத் ரஷ்ய விமானப்படை. அப்படியே வீசினால் ஐம்பது சதவீதம் அல்ல 0.0001 சதவிகிதம்கூட உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதால், பாராசூட்டில் கட்டி வீச முடிவு செய்யப்பட்டது. பாராசூட்டின் எடை மட்டும் ஒரு டன், அதாவது ஆயிரம் கிலோ! அவ்வாறு வீசினால்தான், அது ஆடி அசைந்து இறங்குவதற்குள் "பின்னம்வால்" பிடறியடிக்க வெகுதூரம் பறந்தோடிச்சென்றுவிடலாம், அது தரையைத் தொடுவதற்கு நான்கரை கிலோமீட்டர்கள் இருக்கும்போது வெடிக்குமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் வீசிவிட்டுத் தரையிறங்கும் வழியில், அறுபது மைல்கள் தள்ளிப்பறந்துகொண்டிருந்த விமானம் ஹைட்ரஜன் குண்டு ஏற்படுத்திய அதிர்வலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மூவாயிரம் அடி நோஸ் டைவ் அடிக்கத்தொடங்கியது. பிறகு ஒரு வழியாகச் சமாளித்து மீண்டெழுந்து பழைய ஆல்டிட்யூடைப் பிடிப்பதற்கு வெகுநேரம் பிடித்தது. குண்டு விழுந்த நாற்பது கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு சிற்றெறும்பின் உணர்கொம்பளவுள்ள துரும்புகூட செதில் செதிலாக அணுக்கருவின் ஆயிரம் கூறுகளாகச் சிதைக்கப்பட்டது. ஆர்டிக் பெருங்கடலைத் தாண்டி, வெகுதூரத்தில் அக்கரையில் உள்ள நோர்வே, ஸ்வீடன் நாடுகளில் உள்ள  நகரங்களில், கட்டிடங்களின் கண்ணாடிகள் சில்லுசில்லாகச் சிதறின.  அதற்கு முன் நடந்த சில சோதனைகளில், சோதனை நடந்த இடத்திலிருந்து இருநூறு மைல்கள் தொலைவில் உள்ள சோவியத் பகுதியில் இருந்த சிறுநகரம் ஒன்று உருக்குலைந்து போனது. கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. பலருக்கு அணுக்கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டு இறக்கும் தருவாய்க்குச் சென்றனர். அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்படுவது வெறும் தோலோ, முடியோ மட்டுமல்ல, அது உள்ளுறுப்புக்களையும் ஊடுருவிச்சென்று தாக்கக்கூடியது. டி. என். ஏக்களையும் கூடத் தாக்கிச் சிதைத்துவிடும் வல்லமை கொண்டது.  டி. என். ஏ பாதிப்படைந்தால், அதற்கடுத்துப் பிறக்கும் நான்கு தலைமுறைகள் பிறழ்வுடன்தான் பிறக்கும். இதற்கு சோவியத் ரஷ்யா சூட்டிய பெயர் ஜ்ஸார்  போம்பா (Tzar Bomba). ஜ்ஸார் என்றால் பேரரசன்.  அரசனுக்கரசன் பேரரசன் என்பது போல், அணுகுண்டுகளுக்கெல்லாம் பேரரசன்! என்ன ஒரு பேரழிவு வெறி?  

6. இதைத்தொடர்ந்து உலக வல்லரசுகளெல்லாம் அணுச்சோதனை கோதாவில் எவன்டா தாதா? என்று கேட்டுக்கொண்டே குதித்தன, அதற்கடுத்த இருபது வருடங்களுக்குள், இங்கிலாந்து, ஃபிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் நடத்திய அணுச்சோதனையில் மட்டும் ஐநூறுக்கும் மேட்பட்ட மெகா டன்கள் அணு ஆற்றலையும் அளவிடமுடியாத அணுக்கதிர்வீச்சையும் ஏற்படுத்தினர். அதைத் தொடர்ந்தும் அணுச்சோதனைகள்  நின்றபாடில்லை. ஆப்பன்ஹைமர் பயந்து நடுங்கியது இதற்காகத்தான். அதே சமயம் அமெரிக்கா யாரை அஞ்சி அணுகுண்டு தயாரித்தார்களோ, அவர்கள் அஞ்சியதற்கிணங்க அவர்களது பரம எதிரி சோவியத் ரஷ்யாவும் உலகமே நடுநடுங்கி டவுசரில் ஒன்றுக்கு விடுமளவு பெரிய சோதனையை நடத்திக் காட்டி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது.

7. வல்லரசுகள் என்னதான் முட்டியை முறுக்கிக்காட்டினாலும், அணு ஆயுதம் என்று வரும்போது அடியை மட்டும் கொடுத்துவிட்டு, தப்பித்துச் சென்று பாதாள லோகத்தில் ஒளிந்துகொள்ளவெல்லாம்  முடியாது. முதலில் யார் சிவப்புப் பொத்தானை அழுத்தத்தினாலும் அடுத்த கணமே மொத்த உலகும் சர்வ நாசம். பிறகு மீண்டும் க்ருதா யுகத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். எவ்வளவு அடி வாங்கினாலும் அண்ணல் காந்தியடிகள் மாதிரி அடியை வாங்கிக்கொண்டு சத்தியாகிரகத்தில் உட்கார்ந்துகொள்வதுதான் சரி. எழும்பி அடி, திரும்பி அடி என்பதெல்லாம் சினிமாவுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம், நிஜ வாழ்க்கைக்கும் சரி, அணு ஆற்றல் விஷயத்திலும் சரி வன்முறை என்பது எந்த வடிவில் வந்தாலும் அது ஆக்கவளத்துக்கு வழிகோலவே செய்யாது. 

 வலியோன் எவனொருவன் எதிர்வினையில்லா எளியோனைச்  சீண்டினாலும் அவன் காலத்திற்கும் கர்மாவுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும். இது மட்டும் சத்தியம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Jawan - An Inimitable Experience

L et me lay it out straight before you get duped by the title and jump into reading with high hopes. This isn't your typical movie review. Every time I scribble about a flick, the way I've been doing in Tamil, it ain't your fancy-pants review; it's more about spilling the beans on what it's like sitting through them. It's about asking yourself, 'Was it a total pain in the ass?' or that elation when you finally drain the main vein at the nearest pee point after pounding a few mugs of draught beer right before a non-stop haul from NJ to SJ in a stormy night. I will get to that later; that's the high point of this post, which I am saving for the end.  Besides boredom, it takes valor, courage, and an immense sense of sacrifice to throw the money at this half-brewed moonshine cocktail and waste time in haste out of compulsion. Compulsion because it wasn't a single anal canal that was 'force sat' on movie hall recliners to go through this Guant...

பூமராங்

இ ந்த லா ஆஃப் அட்ராக்ஷன் , Law of attaction என்று ஒன்று உண்டு. 2006 இல் "தி ஸீக்ரெட்" என்னும் பெயரில் வந்து பெரும் ஹிட் அடித்த ஒரு ஆவணப் படம்.   இதற்கான தோற்றம் என்று பார்த்தால் , அப்படம் வெளியான ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அதற்கான ஆதார கச்சாப் பொருள் விவேகானந்தர் மூலம் அமெரிக்கா சென்றடைந்துவிட்டது. 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த அரை நூற்றாண்டுகள் , போர் , பஞ்சம் மற்றும் பட்டினி. அதில் சாமானிய மனிதர்களுக்கு புத்தகங்கள் மற்றும் வாசிப்பு என்பது இன்றைய மதிப்பின் அடிப்படையில் ஃபீனிக்ஸ் மாலில் செக்யூரிட்டி வேலையில் இருந்துகொண்டு தீபாவளி போனஸில் லேண்ட் ரோவர் கார் வாங்க ஆசைப்படுவது போன்றது. அதனால் இது போன்ற புத்தகங்கள் நூலகங்களின் ஏதோ ஒரு மூலையில் சீந்துவாறற்று உறங்கிக்கொண்டிருந்தன.   ஐம்பதுகளில் அறுபதுகளிலும் உலகம் முழுக்க புது வசந்தம் பிறக்க ஆரம்பித்துவிட்டது. பழைய போர்கள் முடிவுற்றன , அதிகாரத்தின் ருசி கண்ட பூனைகள் புதிய   போர்களைத் தொடங்கின . புதுப்புது சிந்தனைகளும் , பெண்ணியமும் (மேற்கில் , குறிப்பாக அமெரிக்காவில்) , ...

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

கிரிக்கெட் என்னும் பொறுக்கிகளின் விளையாட்டு ---------------------------------------------------------------------------------- https://nadukal.in/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%95/ இந்திய தேசமும் கிரிக்கெட் என்னும் பெருங்கேடும் ----------------------------------------------------------------------------------  https://nadukal.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/?fbclid=IwAR04jW47K9HhTt8D8pP-oz0CfOPiNmyrbAyi28oL1RxmoZk81h15DujTn1A