கிரிக்கெட் என்னும் பொறுக்கிகளின் விளையாட்டு
நா ற்பது மற்றும் ஐம்பதுகளில் வினூ மன்கட், விஜய் ஹஜ்ஸாரே, அறுபதுகளில் வெங்கட்ராகவன், சந்திரசேகர் பிறகு எழுபதுகளில் கவாஸ்கர், குண்டப்பா; என்றெல்லாம் பழம் புராணக்கதைகள் கேட்டும், லேசாக விவரம் தெரிய ஆரம்பித்ததும் எண்பதுகளில் கபில்தேவ், அஜ்ஸாருதீன், சாஸ்திரி, ஸ்ரீகாந்த், மஞ்ரேக்கர். தொன்னூறுகளில் சச்சின், திராவிட், பிறகு ஷேவாக், யுவராஜ், தோனி, ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி என்று கால ஓட்டத்தில் மாறிக்கொண்டே செல்லும் கிரிக்கெட்டன்களை நினைவுகூரும்போது மட்டையான்கள் பற்றித்தான் எப்போதும் நினைவு வருகிறது. கபில்தேவ் என்னும் பந்தோனைத் தவிர வேறு எந்தப் பந்தாண்டியும் நினைவுக்கு வருவதில்லை. காரணம் இந்தியப் பந்தாண்டி எவனும் அனல் பறக்கும் பந்து வீச்சை வீசியதில்லை. பெயர் வாங்கிய அனைவரும் சுழல் அல்லது மாங்காய் உருட்டுதான். எரப்பள்ளி ப்ரஸன்னா, ரோஜர் பின்னி போன்றோர்கள் பெயரெல்லாம் இவ்விஷயத்தில் அடிபடும். கொஞ்சம் கொஞ்சமாக விவரம் தெரிந்து கையில் பிடித்து மட்டையை ஆடப் பழகியபோது, வெங்சர்க்கார், கிர்மானி, சேத்தன் ஷர்மாவெல்லாம் வீட்டுக்கு அனுப்பப்பட்டு, புதிய தலைமுறை கட்டை மாயாவிகளான மஞ்சுரேக்கர், ரவி ஸாஸ்த்ரி...