சாவியின் ஆவியும் கவுண்டமணியின் கேர்ள் ஃப்ரெண்ட்டும்

துவரை போட்ட பதிவுகள் அனைத்துமே உட்கார்ந்தால்  ஒரே சிட்டிங்கில் பரபரவென அடித்து ஒரு மாதிரி தேறி வந்ததுமே மேலோட்டமாக ஒரு மேய் மேய்ந்துவிட்டு அப்படியே பதிவேற்றியிருந்தேன். ஒரு சிலவற்றை சில நிமிடங்கள் கழித்து கொஞ்சம் லேசாகச் செப்பனிட்டதும் உண்டு. ஆனால் சென்ற அமெரிக்க தீபாவளியும் த்ரிநாரீ நர்த்தனாவும் என்ற பதிவை மட்டும் ரொம்ப நேரத்திற்கு திரும்பிப் பார்க்க மனமே வரவில்லை. எழுதி முடித்தபிறகு கழிவிரக்கம் காரணமாக கிட்டத்தட்ட அழுதே விட்டேன். பின்னே?

பிள்ளையார் சுழி போட்ட அடுத்த நொடியே  ராஜி வந்து என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய் என்று ரொம்ப ஆர்வமாக சிரித்துக்கொண்டே கேட்க, நானும் ரொம்ப வெள்ளந்தியாக டாபிக் இன்னதுதான் என்று காது வரை இளித்துக்கொண்டே சொல்லித்தொலைத்து விட்டேன். பொறி வைத்துப்பிடித்துவிட்டாள் கெரகம். ஒரு அக்ஷரம் தமிழ் தெரியாவிட்டாலும் நான் என்னவெல்லாம்  எழுதுவேன் எப்படியெல்லாம்  எழுதுவேன் என்று என் மூஞ்சியைப் பார்த்ததுமே எப்படித்தான் கண்டு பிடிக்கிறாளோ தெரியவில்லை. அறவே எழுதக்கூடாது. உன்னால் எங்களையும்  ஜட்ஜ் பண்ணுவார்கள், outcast பண்ணிவிடுவார்கள் என்று ஒரே அடம். இத்தனைக்கும் தொடக்கத்தில் என்னிடத்தில் ஆர்வமிகுதியால் லிங்க் வாங்கி தன் தோழிமார்களுக்கு எம்புருஷன் என்னமோ எழுதராம்பாரு என்று ஓரிருமுறை அனுப்பியதோடு சரி. மறுமுனையில் இருந்து எந்த சவுண்டும் இல்லை. பிழைத்தோம் என்று தொடரமென்றால் விதி யாரை விட்டது? எப்படியோ மூக்கு வேர்த்துவிட்டது அவளுக்கு. 

கவுண்டமணி ஒரு படத்தில், செந்தில் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக இரு கைகளையும் பரத்தி  டான்ஸ் ஆடிக்கொண்டே தன் கேர்ள் ஃபிரண்டின் க்ளீவேஜை மறைப்பார் அல்லவா அந்த மாதிரி எனக்கும் கணினித்திரைக்கும் இடையில் புகுந்து எக்காரணத்தைக் கொண்டும் எழுதக்கூடாது என்று திரையை மறைத்தது  மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட விரலை முறுக்குமளவு போய் விட்டாள். ரொம்ப மன்றாடி கேட்டுக்கொண்டு சில சத்தியங்களைச் செய்த பிறகுதான் எழுதவே அனுமதித்தாள். அதன் பின்னரும்கூட நீ எழுதியதை மரியாதையாக நீயாக மொழி பெயர்த்து வரி வரியாக விளக்கு, ஒரு வேளை  நானாகத்  தமிழ் தெரிந்த தோழிகள் மூலம் கேட்டறிந்துகொண்டுவிட்டால் தொலைத்து விடுவேன் என்று ஒரே ஓரியாட்டம், ரச்சு!

எப்படியோ ஒரு வழியாக முடித்துப் பதிவிட்டபிறகு நண்பர் ஸ்ரீனிக்கு பகிர்ந்துவிட்டு, முதலிலேயே இவளிடம் வாங்கிய டோஸ் காரணத்தினால் அவர் போன் அடித்தபோது அல்லுவிட்டுவிட்டது எடுக்க தைரியமில்லை. காரை ஓட்டிக் கொண்டு வரும்போது  ஸ்ரீனியின் போன் வரவே, எதோ பஞ்சாயத்து போலிருக்கிறது அவ்வளவுதான் கதை இன்றோடு ப்ளாக் ஐ ஊற்றி மூடிவிட வேண்டியதுதான் என்று முடிவு கட்டிவிட்டேன். வழக்கமாக வண்டி ஓட்டும்போது கடும் கண்டிப்பு காட்டுபவள், ப்ளூடூத் போட்டுப் பேசினாலும் முறைப்பவள், இம்முறை நான் வேண்டுமானால் போனை  எடுத்து காதில் வைக்கவா என்றாள். நாமாக எதற்கு அனாவசியமாக மூக்கு வேர்க்க விடவேண்டும் என்று, இல்லை வீட்டில் போய் பேசிக்கொள்கிறேன் என்று சமாளித்துவிட்டேன். ஒருவேளை டேட்டனிலிருந்து வண்டி போட்டுகொண்டு ஆள் அம்புடன் பஞ்சாயத்து செய்யவந்தாலும் வீட்டில் கொஞ்சம் சூடு குறைந்தபிறகு நடந்தால் நலம் என்று எண்ணிக்கொண்டேன்.    

சிறிதுநேரத்தில் போனில் வந்த ஸ்ரீனி-

"நெம்ப நல்லா இருந்ச்சுங், அந்தகாலத்துல சைக்கிள்ல வந்து ஆனந்த விகடன் போடுவாங்கல்லங், அதுல படுச்ச மார அதே மாரிக் கிருந்துச்சுங்" 

என்று சொல்லவும்தான் சொரேலென்று என் மண்டையில் ஷாக் அடித்தது. 

மீண்டும் எடுத்துப் படித்துப்பார்த்தால், ஒரு காலத்தில் சாவி என்று ஒருவர் வாஷிங்டனில் திருமணம் என்ற ஒரு அதியுன்னத காயடி, ப்ச் அட அப்படியா சொன்னேன்? சாரி காமெடி தொடர்கதை எழுதியிருந்தார் அல்லவா அதே பாணியில் இருந்தது. எதோ அவர் ஆவிதான் என்னுள் புகுந்து எழுதியதுபோல். இப்படியெல்லாம் மொன்னை எழுத்து எழுத்துவதற்காகவா நான் ப்ளாக் தொடங்கியிருக்கிறேன்? இந்தமாதிரி  பல் பிடுங்கிய பாம்பு போல் மொக்கை எழுத்து  எழுதிக்கொண்டிருந்தால்... பாருங்கள் பல் பிடுங்கிய பாம்பு, ஆடு திருடிய கள்ளன்! இம்மாதிரி தொக்கு உவமான உவமேயங்களுடன், கட்டு செட்டாக  எழுதிக்கொண்டிருந்தால், நான் எப்போது பிறழ்வெழுத்து ரேஞ்சுக்கெல்லாம் போவது? பதிவிட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே இந்த இடம் சரியில்லை கொஞ்சம் மாத்திக்குங்க என்று வேறு ஜென்ட்டில் மிரட்டல் ஒன்று வந்தது. அட அது கூடப் பெரிய விஷயமில்லை, தமிழே தெரியாமல் ஒருத்தி என்னுள் எரிந்துகொண்டிருக்கும்  எழுத்துக் கணலில் கழுநீரை லிட்டர் லிட்டராகக் கழுவி ஊற்றுகிறாளே அதை நினைத்தால்தான் ஆற்றாமையால் என் நெஞ்சம் ஒருமுறை விம்மித்தனிகிறது.

ஒரு இளம் எழுத்தாளன் கொஞ்சம் தட்டுத்தடுமாறி  எழுதத்தொடங்குவதற்கு முன்பே இப்படியா எட்டி அவன் மென்னியைப்பிடிப்பது? மறுபடியம் பாருங்கள் எழுத வந்ததை நேரடியான எழுத வராமல் மென்னியை என்று பூசி மெழுகிக்கொண்டு, கால் நடுங்கிக்கொண்டு. மறுபடி கால்! அய்யகோ என் நிலைமை யாருக்குமே வரக்கூடாது தெய்வமே.  

-ப்ரஸன்னா

Comments

  1. நீ தைரியமாக எழுது பிரசன்னா...raji தானே பார்த்துக்கலாம்...சிறிது செப்பனிட்டு இலை மறை காயக....எழுது..நீதான் தைரியமான ஆளச்சேனு...வடிவேலு dialogue எதுக்கோ...தேவையில்லாம mind la ஓடுது....அத்த உடு நீ என்ன எழுதனும்னு தோணுதோ...அத்த எழது...

    கார்த்திக்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience