கதையின் முன் மற்றும் பின் கதைகள்

ன்னுடைய குருவைத் தேடு சிறுகதை முயற்சியைப் படித்துவிட்டு நெடுநாட்கள் நான் மெசேஜ் போட்டால் ப்ளூ டிக் மட்டும் வரும்; நெடுநாள் நண்பன்- அல்ல நண்பர், போன் செய்துவிட்டார். நண்பர் என்று சொல்வதற்குக் காரணம் இளவயது ஊர் நண்பன் அல்ல, பிற்கால நண்பர், என்னிலும் இளையவர். நான் பிளாக் ஆரம்பித்த புதிதில் கட்டை விரல் உயர்த்திய எமோஜி ஒன்று வந்திருந்தது அதற்குப் பிறகு சில மாதங்களாக  ஒன்றும் இல்லை. கலிபோர்னியாவில் பே ஏரியாவில் இருக்கிறார். வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. வாழ்க்கையின் பல இன்னல்களைக் கடந்து தற்போது மிக நல்ல நிலையில் உள்ளார். முதலில் ஜீ, என்னாச்சு ஜீ என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஜீ போட்டு பேசக்கூடிய டைப் ஆட்களில் வெகு சிலரில் ஒருவர். நானும் என்னாச்சு என்று கேட்டேன். இல்ல எங்க போனீங்க ஏன் இப்புடியெல்லாம் பண்றாங்க எனக்கும் அப்புடிதான் ஒருத்தன் என்று  ஆரம்பித்து அவருக்கு சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றைச் சொன்னார்.                

உண்மையில் அவர் எனக்கு நிஜத்தில் நடந்த ஒரு விஷயத்தைத்தான் கதை என்கிற பெயரில் எழுதியிருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அப்படியாக இருந்தால் நான் அனுபவக்குறிப்பாக எழுதியிருக்க மாட்டேனா? ஒரு வகையில் அவரது ரியாக்ஷன் கூட எனக்குக் கிடைத்த பாராட்டு போலத்தான். அவருக்கு ஆன்மீக நாட்டமெல்லாம் வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. சில புத்தகங்கள், உபநிஷத்துக்களைப் பற்றிய வீடியோக்களையெல்லாம் சென்ற வருடம் பகிர்ந்திருக்கிறார். இதில் உள்ள குரு மேட்டரை கெட்டியாகப்பிடித்துக்கொண்டு ஆம் குரு வேண்டும் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு குரு தேவை என்று சொல்லி சில விளக்கங்களைச் சொன்னார். அவருடைய spiritual orientation பற்றி நெடுநேரம் பேசினார். இக்கதையில் எதோ ஒரு take away இருக்கிறது என்று சொன்னார் (அட நீதிக்கதையெல்லாம் எழுத வருகிறது பார் உனக்கு என்று உள்ளுக்குள் வியந்தேன்!). அப்படியெல்லாம் எழுதுவதாக இருந்தால் என் சுய சரிதையைத்தான் எழுதவேண்டும் அது உப்பு சப்பற்றது அதில் எழுதுவதற்கு ஒரு வெங்காயமும் கிடையாது. இது ஒருவருடைய கதை கிடையாது வேண்டுமானால் ஒரு சிலருடைய கதை என்று சொல்லலாம். பல்வேறு சிறு சிறு நிகழ்வுகள், நகைப்புக்குரிய அபத்தங்கள், உளவியல் பிரச்சனைகள் எல்லாவற்றையும் கலந்தது. ஓரிரு சொந்த அனுபவங்களும் கூட அதில் கலந்திருக்கலாம். இக்கதையைப் பொறுத்த வரை ஓரிரு நேரடியான நிஜ நிகழ்வுகள் உள்ளன. உதாரணத்திற்கு விபாஸனாவைச் சொல்லலாம். சொல்லப்படும் பின்புலம் மற்றும் இடங்கள் மட்டும் வேறு வேறு. நான் விளக்கியவுடன் ஓரளவு புரிந்துகொண்டார் பிறகு தன் வாழ்வில் நடந்த வேறொரு சம்பவத்தைக் குறிப்பிட்டு அதை ஒரு சிறு கதையாக எழுத முடியுமா என்றார். அதை நீங்கள்தான் எழுத வேண்டும், இரண்டு விஷயங்கள் - ஒன்று இதைச் சரியாகப் பேசி விளக்க முடியாது பிளாகில் எழுதுகிறேன். இரண்டாவது பிளாகில் போடுவதற்கு அடுத்த மெடீரியல் கிடைத்துவிட்டது என்றேன்.  அவர் என்னிடம் எழுதச்சொல்வது என்பது அவர் உண்ட உணவை என்னிடம் ஜீரணிக்கச் சொல்வதற்கொப்பானது. alchemy மாதிரியான விஷயம், எங்கு எப்படி ப்ராசஸ் ஆனது என்று கண்டுபிடித்துவிடுவதோ, தனித்தனியாகப் பிரித்தோவிடமுடியாது. ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பகுத்தால் அரைக் காசுக்கு உதவாது. 

என் நெருங்கிய நண்பர்கள் அனைவருமே புடம் போட்ட தங்கங்கள், என்றுமே என் அன்புக்கும் நன்றிகளுக்கும் உரித்தானவர்கள். என் முதல் ப்ளாக்கிலிருந்து இன்று வரை நான் எழுதும் அனைத்தையும் தொடர்ந்து படித்துக்கொண்டு வருவது மட்டுமல்ல எனக்காக Genuine ஆக மகிழ்ச்சியடைபவர்களும் நன்கு உற்சாகப்படுத்துபவர்களும் கூட. ஒருவன் Brutally honest என்னும் அளவுக்கு ஃபீட்பேக் கொடுப்பான் எதுவுமே ஒற்றை வரியில் To the point மற்றும் Precise ஆக இருக்கும். எதையுமே ஒதுக்க முடியாது. இன்னொருவனுக்கு நான் எழுதும் சிலவற்றை Stomach பண்ண முடியாது நேரடியாகச் சொல்லாமல் நெளிவான். பிடித்தவற்றைப் பாராட்டுவான் - ஒற்றைவரி, தம்ப்ஸப் அல்லது சில சமயங்களில் கமெண்ட்டுகள். இன்னொருவன் இது வரை எதையும் குறை கூறவில்லை. வரிவரியாகச் சிலாகித்து ஃபீட்பேக் கொடுப்பான், ஊக்கப் படுத்துவதற்காக இருக்கலாம். நானும் வம்படியாக வலுக்கட்டாயமாகப் பிடித்து உலுப்பியெல்லாம் படிக்க வைத்திருக்கிறேன். எல்லாம் நான் அவர்களிடம் எடுத்துக்கொள்ளும் உரிமைதான். அனைவருமே நல்ல வாசிப்பாளர்கள். இம்மாதிரி மேலும் சிலர். 

என்னால் கோர்வையாய் ஒரு முப்பது நொடிகள் கூடப் பேச முடியாது. எழுதுவது என்பது கொஞ்சம் வேகக் குறைவான வேலை என்பதால் கூட இதனை நான் எடுத்துக்கொண்டிருக்கலாம். ஒரு விதத்தில் கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த applied cognitive skill என்று சொல்லலாம். ஆதாரமாக மொழிமீதான ஆர்வத்தையும் ஆளுமையையும் வேறு ஒரு வடிவத்தில் வெளிப்படுத்துவதுதான் எழுத்து. அது சுவாரசியமாக  இருந்தால்தான் யாருமே அதைப் படிப்பார்கள். இல்லாவிட்டால் இதை ஒரு Brain dump ஆக உபயோகித்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். நான் இதில் இறங்கியதற்கு இன்னோர் காரணமும் உண்டு. 

Starting But Not Finishing Behavior என்பார்கள். பல விஷயங்கள் தொடங்கிய வேகத்திலேயே கைவிடப்பட்டுவிட்டன. ஒரு வேளை சிறு வயதில் ADHD இருந்திருக்கலாம் அல்லது இப்போதும் சில உளவியல் கோளாறுகள் இருக்கலாம். முடிந்த அளவு எதையாவது எழுதுவதன் மூலம் இக்குறைபாடுகளை எதிர்த்துப் போராடலாம் என்று நினைத்தேன். ஒரு வேளை தீர்க்க முடியாத underlying issues இருந்தால் வாழ்நாள் இருக்கும் வரை எதையாவது முயன்று கொண்டே இருக்கலாம் என்றிருக்கிறேன். முயன்ற திருப்தியாவது மிஞ்சும். இதை வாசித்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

-ப்ரஸன்னா

Comments

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15